டெல்லியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடச் சொல்லி கிறித்துவ பாதிரியார் ஒருவரை அடித்து துன்புறுத்தியுள்ளது இந்துமதவெறி கும்பல்.
தெற்கு டெல்லியின் ஃபதேபுரி பெர்ரி பகுதியில் பிப்ரவரி 25 அன்று இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பாதிரியார் கெலோம் டெட் சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு இது குறித்து மைதான் கார்ஹி போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிப்ரவரி 27 அன்று மாலையே தங்களுக்கு புகார் கிடைத்ததாக போலீசு கூறியுள்ளதென்றாலும் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்படவில்லை. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்ற செய்தி, ஊடகங்களில் வெளியான ஒருநாள் கழித்தே டெல்லி போலீசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
படிக்க :
உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!
அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை
“புகாரின் அடிப்படையில் 365, 323, 341, 34 ஆகிய பிரிவுகளின்கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்” என்று கமிஷனர் ஹர்ஷ வர்தன் கூறினார்.
பிப்ரவரி 25-ம் தேதி தனது நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் தன்னைத் துன்புறுத்தியதாகவும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் பாதிரியார் டெட் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
எனது கைப்பையை அவர்கள் பறித்துக் கொண்டார்கள். அதில் இருந்த பைபிளை எடுத்து கிழிக்க முயன்றனர். கட்டாய மதமாற்றம் செய்வதாக என் மீது குற்றம் சாட்டினார்கள். அவர்கள் என்னை மைதன் கார்ஹி போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, என்னை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக தங்கள் காரில் ஏற்றிச் சென்றனர். மேலும், என் கை கால்களை உடைத்து விடுவதாகவும் மிரட்டினர்.
இந்த சம்பவத்தின் வீடியோவை ஸ்க்ரோல்.இன் பத்திரிகையாளர் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். அதில் பாதிரியார் டெட், ஃப்தேபுரி பெர்ரி பகுதியின் ஓர் சாலையோரத்தில் இருந்த டிவைடர் கம்பிகளில் கட்டிவைக்கப்பட்டு ஒரு இந்துமதவெறி கும்பலால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை காணலாம்.

“ஃபதேபூர் பகுதிக்கு என்னை அழைத்துச் சென்று என்னை சாலையோரமாக கட்டிவைத்து மீண்டும் குத்தவும் உதைக்கவும் தொடங்கினர். அவர்கள் என் தலை, மார்பு, வயிற்றுப்பகுதிகளில் தாக்கினார்கள்; என் மூக்கு, வாயிலிருந்து இரத்தம் வழிந்தது. அந்த இடத்தில் சுமார் 100 பேருக்கு மேல் பொதுமக்கள் இருந்தனர். ஆனால், யாரும் என்னை மீட்க வரவில்லை. பள்ளியிலிருந்து திருப்பிக் கொண்டிருந்த மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடும் படியும், என்னை தாக்கும் படியும் தூண்டிவிட்டனர். இச்சம்பவம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது” என்று பாதிரியார் டெட் குற்றம் சாட்டினார்.
டெட் தனது கைகளில் இருந்த கயிறுகள் தளர்ந்த பிறகு எப்படியோ தப்பித்துவிட்டதாக கூறினார்.
“நான் என் உயிரைக் காப்பாற்ற ஓடி ஒளிந்து கொள்ள முயன்றேன். ஆனால் அவர்கள் என்னைப் பிடித்தார்கள். நான் உதவி பெற ஒரு வீட்டிற்குச் சென்றேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை. எப்படியோ சமாளித்து ஒரு காருக்குள் ஏறி அங்கேயே ஒளிந்து கொண்டேன்” என்று கூறினார்.
படிக்க :
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
கடந்த 18 ஆண்டுகளாக தெற்கு டெல்லியின் அசோலாவில் வசிக்கும் முப்பத்தைந்து வயதான டெட், டெல்லியில் உள்ள சஞ்சய் காலனியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு அறியப்படாத குழுவால் குறிவைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
கிருத்துவ – முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாடுமுழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹிஜாப், ஆசான் போன்ற மத அடிப்படையிலான நம்பிக்கைகளை காரணம் காட்டி மத கலவரங்களை திட்டமிட்டும் உருவாக்க முயன்று வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைமையிலான இந்துமதவெறி அமைப்புகளின் திட்டத்தில், பாதிரியார் டெட் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவங்கள் போல் இன்னும் பல சம்பவங்கள் அரங்கேறும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க