த்திரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத் மாவட்டம் லோனி நகரில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ‘வந்தே மாதரம்’ என முழக்கமிடாததால் வயதான முஸ்லிம் ஒருவரை ஐந்து காவிக் குண்டர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

படிக்க :
♦ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
♦ மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !

கடந்த ஜூன் 5-ஆம் தேதி லோனி நகரில் வழக்கம்போல் மசூதிக்கு தொழுகை செய்ய சென்றுள்ளார் அப்துல் சமாத். தாக்குதல் நடத்திய இந்து மதவெறியர்கள், அப்துல் சமாத்தை ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் கடத்திச் சென்று அருகில் இருந்த ஒரு அறைக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு சமாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர் இந்து மதவெறியர்கள். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிடு என்று கூறி, உருட்டுக்கட்டைகளை கொண்டு தாக்கும் காட்சியை காணொலியில் பார்க்கலாம்.

வீடியோவில் இரண்டு நபர்கள் சமாத் மீது தாக்குதல் நடத்துவது தெரிகிறது. ஒருவர் கருப்பு சட்டை மற்றொருவர் நீல சட்டை அணிந்துள்ளார்.

“நான் ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தேன். வழியில் இரண்டு நபர்கள் ஆட்டோவில் ஏறினார்கள். அவர்கள் என்னை அருகில் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று, என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கினார்கள். ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘வந்தே மாதரம்’ என கோஷமிட சொன்னார்கள். என் தொலைப்பேசியை திருடிக்கொண்டார்கள். என் கைக்கடிகாரத்தை உடைத்துவிட்டார்கள்.” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் அப்துல் சமாத்.

மேலும், “அவர்கள் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்கள். ஏற்கனவே அவர்கள் முஸ்லிம் நபர்களை தாக்கிய வீடியோக்களை எனக்கு காட்டி அச்சுறுத்தினார்கள். நான் ஏற்கனவே முஸ்லிம்கள் பல பேரை கொன்றுள்ளேன் என்று பெருமையாக கூறிக்கொண்டார்கள்” என்றார்.

சமாத் மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள், சமாதின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். கத்தியால் சமாத்தின் தாடியை அறுத்துள்ளனர். சமாத் ஒரு பாகிஸ்தான் உளவாளி என்று அவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் சமாத் அளித்த புகாரின் பெயரில், போலீசு வழக்கு பதிவுசெய்து ஒரு காவி குண்டர் பிரவேஷ் குஜ்ஜார்-ஐ கைது செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடி வருவதாக கூறியுள்ளது போலீசு.

இந்தச் சம்பவம் குறித்து போலீசு, வேறு விதமாக கதையைத் திருப்பிவிட்டுள்ளது. அந்த முதியவரின் கடையின் வாடிக்கையாளர்கள், அவரிடம் வாங்கிய பொருளில் அதிருப்தி கொண்டு தான் அவரைத் தாக்கினர் என்றும் அவரைத் தாக்கியவர்களில் முசுலீம்களும் இருந்தனர் என்றும் கதையை மாற்றியுள்ளது. இந்தச் சம்பவத்தை தடுக்க வந்த ஒரு இசுலாமியரின் மீதும் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது மோடி அரசு.

ஆனால், இந்தக் கிரிமினல் கும்பலின் இந்த கேடுகெட்ட நடவடிக்கையை, பொது வெளியில் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள், தி வயர், ஆல்ட் நியூஸ் உள்ளிட்ட இணையதளங்கள், டிவிட்டர் தளம் ஆகியோரின் மீது நேற்று நள்ளிரவே புகார்களைப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கைகளை அவர்கள் பேரில் பதிவு செய்திருக்கிறது யோகி அரசு. பொது அமைதியைக் கெடுக்க முயற்சிப்பதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு, உத்திரப்பிரதேசம் ஒரு இராமராஜ்ஜியமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதில், முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பாஜக நடத்திய பல்வேறு கலவரங்களில் முக்கியமானது முசாபர்நகர் கலவரம். அது போலவே அடுத்ததாக வரவிருக்கும் 2022 தேர்தலுக்கு இப்போதே களத்தை தயார் செய்கிறது யோகி கும்பல்.

படிக்க :
♦ மும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் !
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

கொரோனா தடுப்புப் பணிகளில் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாத பொறுக்கி சாமியாரின் ஆட்சியின் மீது மக்கள் மிகப்பெரும் அதிருப்தியாக இருக்கையில், தற்போதே தமது இந்துத்துவ முனைவாக்கத்திற்கான வேலைகளை செய்யத் துவங்கியிருக்கிறது யோகி கும்பல்.

பாஜக-வின் தேர்தல் வியூகத்தின் அடிப்படையான மதக் கலவரம் செய்யும் உத்தியை தொடர்ந்து அம்பலப்படுத்தி, மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது மட்டுமே அடுத்த தேர்தல் வரையிலான காலகட்டத்திற்கு கலவரங்களில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். இத்தகைய பிரச்சாரத்தை அங்கிருக்கும் விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும், முற்போக்காளர்களும் முன்னெடுக்கும்போது, சங்க பரிவாரக் கும்பல், உத்தரப் பிரதேசத்தில் இருந்து துடைத்தெறியப்படுவது உறுதி !


சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire, Times now news

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க