மும்பை தானே பகுதியில் முசுலீம் இளைஞர், திங்கள்கிழமை அதிகாலையில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். ஓலா கார் ஓட்டுநரான அந்த இளைஞரை கடுமையாகத் தாக்கிய அந்த கும்பல், ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இருபத்தைந்து வயதான ஃபைசல் உஸ்மான் கான், ஓலா கார் ஓட்டுநராக உள்ளார். மாவக் கல்யான் மருத்துவமனையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்த ஃபைசலின் கார் நள்ளிரவு 3 மணியளவில் பழுதாகி நின்றது.

ஃபைசல் உஸ்மான் கான் (படம் : நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்)

“பார்க்கிங் லைட்டை போட்டுவிட்டு காரை இயக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது, மூன்று நபர்கள் காரின் கண்ணாடியை தட்ட ஆரம்பித்தனர். அவர்கள் மூவரும் குடித்திருந்தனர். நடு சாலையில் ஏன் வண்டியை நிறுத்தினாய் என கேட்டனர்” என்கிற ஃபைசல், பதிலை சொல்வதற்குள் காரின் சாவியை பிடிங்கிக்கொண்டு காரிலிருந்து தன்னையும் பயணிகளை வெளியே இழுத்துள்ளனர். வெளியே வந்தவர்களை தவறாக பேசியதோடு, அடிக்கவும் செய்துள்ளனர்.

“அவர்கள் வயரால் என்னை தாக்கத் தொடங்கியபோது, ‘யா அல்லா’ என வலி தாங்க முடியாமல் கத்தினேன். இதைக் கேட்டதும் ’உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்’ என்றனர்” என போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார் ஃபைசல்.

படிக்க:
கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ?
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

தன்னை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சியதாகவும் அவர்கள் பொருட்படுத்தவே இல்லை என்றும் தெரிவிக்கும் ஃபைசல், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். மயங்கி விழுந்த அவர், விழித்தெழுந்தபோது அவருடைய போனை அந்த கும்பல் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

தன்னை தாக்கியவர்கள் வந்த வண்டி எண்ணை குறித்து வைத்திருந்ததால், அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளது போலீசு. அவர்கள் மீது மத நம்பிக்கையை புண்படுத்துதல், திருட்டு ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வண்டியை ஓட்டி வந்த ஜெய்தீப் முந்தே (26), உடன் வந்த மங்கேஷ் முந்தே (30), சுனில் சூர்யவன்சி (22) ஆகிய மூவரும் அகசான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என சொல்கிறது போலீசு.

“கும்பல் வன்முறைகளை செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் பார்த்திருக்கிறேன். இது எனக்கும் நடந்துள்ளது எனக்கு பயத்தைக் கொடுக்கிறது” என்கிறார் ஃபைசல்.

சிறுபான்மையினர் மீது நடக்கும் கும்பல் வன்முறையின் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொல்வது சமீபத்தில் அதிகரித்துவருகிறது. கடந்த ஏழு நாட்களில் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்பல் தாக்குதலுக்கு உள்ள தப்ரேஸ் அன்சாரியும், கொல்கத்தாவில் மதராசாவில் பணியாற்றும் ஆசிரியர் ஹபீஸ் முகமதுவும் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட கட்டாயப்படுத்தப்பட்டனர். அன்சாரி கடுமையாக தாக்கப்பட்டு இறந்தே போனார். ஹபீஸ் தாக்கப்பட்டு, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டார்.


அனிதா
செய்தி ஆதாரம்: த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க