பாசிச மோடி – அமித் ஷா கும்பல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் கண்டனங்களை பதிவுசெய்தும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றன.
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருந்து வருகின்றனர். இஸ்லாமிய கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் பெரும் எதிர்ப்பு வராது என்று எண்ணி பாசிசக் கும்பல் நேற்று (11.03.2024) உள்துறை அமைச்சகம் மூலமாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேரளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனங்களை பதிவுசெய்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் சார்பாக நேற்று(11.03.2024) குடியுரிமை திருத்தச் சட்ட நகலை எரித்துப் போராட்டம் நடைபெற்றது. அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் மற்றும் 30 அமைப்புகள் கவுகாத்தி, கம்ரூப், பார்பேட்டா மற்றும் திப்ருகர் ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கவுகாத்தியில் உள்ள காட்டன் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர் சி.ஏ.ஏ-வை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இன்று(12.03.2024) காலை AJYCP அமைப்பின் சார்பாக மோடி மற்றும் அமித்ஷாவின் உருவ பொம்மைகளையும், சட்ட நகலையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், கல்லூரிகளிலும் போராட்டம் வலுப்பெற்றதையடுத்து அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படிக்க: சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!
ஜாமியா பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் (Muslim Students Federation (MSF)) மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தற்காலிக துணைவேந்தர் ஏக் பால் ஹிசைன், “பல்கலைக்கழகத்திற்குள் போராட்டம் நடத்த அனுமதி இல்லை; மீறி நடத்தினால் நடவடிக்கை எடுப்போம்” என மிரட்டல் விடுத்துள்ளார். மாணவர்களின் எதிர்ப்பை ஒடுக்க பல்கலைக்கழகத்திற்குள் போலீசு குவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா மாநில கோழிக்கோடு மாவட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சி.ஏ.ஏ-க்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை நடத்திவந்த டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் இம்முறை போராட்டம் ஏதுவும் நடந்துவிடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மிரட்டல் விடுத்திருக்கிறது. டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் 43 இடங்களில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிப்புகள் போலீசு குவிப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பின் மூலம் இந்துராஷ்டத்திற்கான மன்னனாக முடி சூட்டிக்கொண்ட மோடி, தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தனது தோல்விமுகத்தை மறைத்து இஸ்லாமிய மக்களை ஒடுக்குவதற்காக, இந்துமுனைவாக்கத்தை மிக தீவிரமாக அமல்படுத்தி வருகிறார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்களின் தீரமிக்க போராட்டமானது பாசிசக் கும்பலின் தோல்விமுகத்தை வெளிச்சம்போட்டு காட்ட துவங்கியிருக்கிறது.
பாபு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube