சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!

இன்று, (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவது இதன் உடனடி இலக்காகும்.

மிகவும் பரபரப்பான சூழலில், சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில், நேற்று மாலை 5.00 மணியளவில் சி.ஏ.ஏ (குடிமக்கள் சட்டத்திருத்தம்) நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது. எத்தனை நாட்களுக்குள் குடியுரிமையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கால அவகாசம் குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் ரமலான் நோன்பு தொடங்கிய நாளில், அவர்கள் மீது காவிக் கும்பல் தாக்குதல்களைத் கட்டவிழ்த்து விடுவதற்கு ஏதுவாக மோடிக்கும்பல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இஸ்லாமியர்கள் மட்டுமின்றி நாட்டின் கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்துகின்ற, மோடி-அமித்ஷா கும்பலின் ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகும். காஸா முனையில் பாலஸ்தீன அகதிகள் மீது குண்டு மழை பொழிகின்ற, இசுரேலின் இரத்த வெறிக்கு நிகரான நடவடிக்கையாகும்.

இன்று (12-03-2024), மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவதே இதன் உடனடி இலக்காகும்.

எனினும் சி.ஏ.ஏ. நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்திருக்கும் நடவடிக்கை என்பது, வெறும் திசைத்திருப்பும் நடவடிக்கை மட்டுமல்ல. இதை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வகையில் நடைமுறைப்படுத்தி, இந்துமுனைவாக்கத்தை மிகத் தீவிரமாகக் கொண்டு செல்லும் முயற்சியுமாகும். ”வளர்ச்சி நாயகன்” என தென்னிந்தியாவிலும் ”இந்துராஷ்டிரம்” என்று வட இந்தியாவிலும் முன்வைத்து நகர்த்திவரும் முழக்கங்கள் அனைத்தும் தோல்வியடைந்து, விரக்தியின் விளிம்பில் இருக்கும் கோழைகளின் நடவடிக்கையுமாகும்.


படிக்க: வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!


நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என அமித்ஷா முன்பு தெரிவித்திருந்ததை இப்போது நடைமுறைப்படுத்தியிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். எனினும், இந்நடவடிக்கையை அவ்வளவு எளிமைப்படுத்திவிட முடியாது.

ஏனெனில், இதுபோன்ற பல நடவடிக்கைகளை மக்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் ஏவுவதற்கு திட்டமிட்டுள்ள இப்பாசிச கும்பல், தனக்கு தேவையான சமயங்களில் ஒவ்வொரு நடவடிக்கையாக கட்டவிழ்த்துவிடுகிறது. அமைப்பு ரீதியாக திரட்டப்படாமல், இடிந்துபோன நசிந்துபோன சட்ட வழிமுறைகள் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, மக்கள் போராட்டக் களத்திற்கு வந்துவிடக் கூடாது எனக் கருதுகின்ற எதிர்க்கட்சிகளால் பிளவுப்படுத்தப்பட்டுள்ள மக்கள், இவற்றை எதிர்கொள்ள இயலாமல் திண்டாடுவதை மோடி-அமித்ஷா கும்பல் எதிர்ப்பார்க்கிறது.

எனினும், மோடி-அமித்ஷா கும்பலின் இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் உலகச் செய்தியாவதை மோடி-அமித்ஷா கும்பலால் தடுக்க முடியவில்லை. இது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதை உலகமே எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் தருணமாகும். இந்தியாவில் எது நடந்தாலும் இப்போது உலகச் செய்தியாகும் நிலையில் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுதற்கு முன்னதாக தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது; தேர்தல் அதிகாரி அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்தது; தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் கெடுவித்தித்தது போன்றவை அனைத்தும் உலகச் செய்தியாக பல கோடி மக்களால் கவனிக்கப்படுகின்றது.

தற்போது, இந்த நெருக்கடியான சூழலில், அதாவது எஸ்.பி.ஐ. வங்கி இன்று (12-03-2024) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கெடுவிதிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில், சி.ஏ.ஏ. நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக அறிவித்ததானது மிகவும் தீவிர கவனத்தைப் பெற்றுவிட்டது.

மோடி-அமித்ஷா கும்பலின் அண்மைகால உலக நடவடிக்கைகளை கவனித்திருப்பவர்களுக்கு இதன் விளைவுகளை புரிந்துகொள்ள முடியும்.


படிக்க: CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !


மிக சில நாட்களுக்கு முன்னதாக, மார்ச் 7-ஆம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜப்பானுக்குச் சென்றிருந்தார். இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமான நீண்டகால நட்பு மற்றும் பலவகையில் உறவு கொண்டுள்ள நாடான ஜப்பானிடம் நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவில் அரசியல் நிலைத்தத் தன்மை இருப்பதாகவும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு இது நீடிக்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்தியாவில் இராமர் கோவில் கட்டப்பட்டதை அடுத்து, ”இது இந்து நாடு” என்ற கருத்தை நிலைநாட்ட முயன்றது மோடி கும்பல். இதற்கு இசுலாமிய நாடுகளில் பலவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில் அபுதாபியில் இந்து கோவிலை திறந்துவைத்தது; ஆப்கானுக்குச் சென்று தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது என இந்திய அரசு இசுலாமிய தேசங்களுடன் நெருக்கத்தை உருவாக்கி அம்பானிக்கும் அதானிக்கும் தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நாட்டில் அமைதி நிலவுகிறது, ஸ்திரத்தன்மை நிலவுகிறது என இக்கும்பல் தொடர்ந்து கட்டமைத்துவரும் பிம்பத்தை தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை என்பதையேக் காட்டுகின்றன. இந்தியாவில் அமைதி நிலவவில்லை என்று உலக நாடுகள் முகம் சுளிக்கத் தொடங்குவதை மோடி-அமித்ஷா கும்பலால் தடுக்க முடியாது.


படிக்க: CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !


அதேபோல், பசு வளையப் பகுதியில் இருக்கும் சங்கிகளின் பிரச்சாரத்தால் பீடிக்கப்பட்ட, இந்துமதவெறிக்கு பலியான மக்கள் வேண்டுமென்றால், மோடியை தேசிய நாயகனாகக் கருதி அவருக்கே வாக்களிக்க தயாராக இருக்கலாம். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றால், மோடி-அமித்ஷா போட்ட வட்டத்திற்குள் நின்று களமாடலாம். ஆனால், உழைக்கும் மக்களுக்கு அது நரகத்திற்கு ஒப்பானதாகும்.

அதனால்தான், விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு நிற்கின்றனர்; இப்போது இசுலாமிய மக்கள் வீதிக்கு வந்துள்ளனர்; அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் போராட்டக் களத்தில் திரள தொடங்கியிருக்கிறார்கள்.

தனது தோல்வி முகம் என்பது படுதோல்வியை நோக்கிச் சென்றாலும் தனது அதிகார பலத்தைக் கொண்டு தக்க வைத்துக்கொண்டு வந்தது மோடி-அமித்ஷா கும்பல். இப்போது தோல்வி பயத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது.

கட்டாயம் இந்துமுனைவாக்கம் வெற்றிப்பெறாது, எனினும், அதிகார வர்க்க பலம், பண பலம் இரண்டும் இணைந்திருப்பதால்தான், மோடி-அமித்ஷா கும்பலால் இவ்வளவு உறுதியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது. இன்னமும் அதன் பலம் குறைந்துவிடவில்லை, ஆனால் மக்கள் போராட்டங்கள் அதனை விட்டுவைக்கவும் போவதில்லை!


தங்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க