CAA, NRC, NPR -க்கு எதிராக திருவண்ணாமலையில் திரண்ட மக்கள் !
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றின் பேராபத்துகளைப் புரிய வைப்பதற்காகவும், இவற்றை எதிர்த்துப் போராடுவதன் அவசியம் குறித்து விளக்குவதற்காகவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சு.கண்ணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் இராம. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் துரை பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் ஜோதி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஞானவேல், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநிலப் பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் பொன். சேகர் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ஐ. சேகர் நன்றி கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டு இந்திய மக்கள் மிகப் பெறும் துயரங்களை சந்தித்து வரும் வேளையில் அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரானப் போராட்டம்.
படிக்க:
♦ CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming
♦ அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள், இரயில்வே உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, நீட் போன்ற தேர்வுகள் மூலம் உயர் கல்வி உரிமை பறிப்பு, புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி முறையை புகுத்துதல், இந்தி – சஸ்கிருதத் திணிப்பு, தேசிய இன ஒடுக்குமுறை, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு மூலம் பார்ப்பன மேலாதிக்கம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிப்பு, காஷ்மீருக்கான 370 சிறப்புத் தகுதி நீக்கம், அயோத்தி பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்களுக்கு அநீதி என அடுக்கடுக்கான மக்கள் விரோதச் செயல்களை மோடி-அமித்ஷா கும்பல் நேரடியாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் அரங்கேற்றி வருகிறது.
தற்பொழுது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள், பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்போர் என பலரையும் குடியுரிமையற்றவர்களாக்கி அவர்களை முகாம்களில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்தியாவில் வாழுகிற மக்கள் – அவர்கள் அகதிகளாக இருந்தாலும் சமமாக நடத்தப்பட்ட வேண்டும்; அவர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறு. ஆனால் இதற்கு மாறாக ஒருசாராரை ஏற்றுக் கொள்வதும் மற்றொரு சாராரை ஒதுக்குவதும் இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 14, 17 மற்றும் 21 ஆகியவற்றிற்கு எதிரானது; பாரபட்சமானது; தீண்டாமை நோக்குடையது.
பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுதற்காகவும், தங்களது அகண்ட பாரதம்-இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றுவதற்காகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். அதன் ஒரு பகுதிதான் மோடி-அமித்ஷா கும்பல் நடைமுறைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி இவற்றை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைவர்கள் பேசினார்கள்.
ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்கள் மூலம் இக்கருத்தரங்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் திருவண்ணாமலை மக்களிடையே CAA, NRC, NPR குறித்து ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்வத்தோடு பலரும் கலந்து கொண்ட அரங்கு நிறைந்த இக்கருத்தரங்கம் திருவண்ணாமலை மக்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை.