உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை

தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதும் விசாரணையில்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பதும் உமர் காலித்தின் வழக்கில் துன்பம் தரும் அம்சமாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய உமர் காலித்தையும் அவருடன் கைதான மற்றவர்களையும் விடுவிக்கக் கோரி வரலாற்றாய்வாளர்கள், கல்வியாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 160 பேர் கையெழுத்திட்டு ஜனவரி 30 அன்று கோரிக்கை மனு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் அமிதவ் கோஷ். நஷ்ரூதின் ஷா, ரோமிலா தாப்பர், ஹர்ஷ் மந்தர் ஆகியோரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் தமிழாக்கம்:

ன்று, ஜனவரி 30, 2025; வரலாற்றாசிரியரும் செயற்பாட்டாளருமான உமர் காலித் 1,600 நாட்கள் டெல்லியின் திகர் சிறையிலிருந்து வருகிறார். இந்நிகழ்வும் இந்துத்துவ வெறியனால் கொலை செய்யப்பட்ட காந்தியின் 77வது நினைவு நாளும் ஒருசேர வருகிறது. இந்த ஒத்திசைவை நாளை நாங்கள் அறியாமல் இல்லை. இது கவனிக்கப்படாமல் கடந்து செல்வதைப் பார்க்கவும் விரும்பவில்லை.

காந்தியைக் கொன்ற சக்திகள் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர் என்று உமர் காலித் தான் கைதாவதற்கு முன்னர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தான் அவரும் மற்றவர்களும் போராடினர்.

“மகாத்மா காந்தியின் மதிப்பை அவர்கள் அழித்துவிட்டனர். இந்தியாவின் மக்கள் அவர்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியாவைப் பிரிக்கப் பார்க்கின்றனர். இந்தியாவின் மக்கள் நாட்டை ஒற்றுமைப்படுத்தத் தயாராகவுள்ளனர்” என்று உமர் கூறினார்,

உமரும் மற்றவர்களும் ஆள்தூக்கி சட்டமான சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாகப் பிணையில்லாமலும் விசாரணையில்லாமலும் சிறையிலிருந்து வருகின்றனர். கலவரத்திற்கான காரணமாகவோ அல்லது அதைத் தூண்டியதற்காகவோ அவர்கள் சிறையில் இல்லை, மாறாக அமைதி மற்றும் நீதிக்காக நின்றதற்காகவும் அநியாய சட்டங்களுக்கெதிராக வன்முறையற்ற முறையில் வாதாடியதற்காகவும் தான் சிறையில் உள்ளனர்.

இது உமர் காலித்தை பற்றியது மட்டுமல்ல.

இந்த விசயம் எங்களுக்கு வலியைக் கொடுக்கிறது. உதாரணமாக, உமர் காலித்தின் தோழர் குல்ஃபிஷா ஃபத்திமா சிறையிலிருந்து எழுதிய கவிதை, “அமைதியான சுவர்கள்”. சிறந்த இளம் செயற்பாட்டாளர், எம்.பி.ஏ பட்டதாரி, வரலாற்று ஆர்வலர். ஆனால், குல்ஃபிஷா 5 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையைச்  சிறையில் கழித்து வருகிறார்.

அதேபோல், மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வலியுறுத்தியதற்காகவா காலித் சைஃபி (Khalid Saifi) சிறையில் இருக்கிறார் என்று ஒருவர் ஆச்சரியப்படும் வகையில் நிலைமைகள் உள்ளன. ஷர்ஜீல் இமாம், சிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் மாணவ செயற்பாட்டாளர். இந்த கொடூர ஆட்சியை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் அறிந்திருந்தாலும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை; அதுவும் அவர் கைதாகி ஒரு மாதத்திற்குப் பிறகு நடந்த கலவரத்திற்காக.

மீரான் ஹைதர், அதர் கான், ஷிஃபா உர் ரஹ்மன் என இந்த பட்டியல் நீள்கிறது. வேட்டையாடும் ஆட்சி இந்த சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தான் கொண்டு வந்துள்ளது. இதன்பிறகு ஆட்சிக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை இது குறிவைத்தது, குறிப்பாக அவர்கள் இஸ்லாமியர்கள் என்றால்!

பிப்ரவரி 2020ல் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக உமர் காலித் செப்டம்பர் 13, 2020ல் ஊபா சட்டத்தின் கீழ் கைதாகினார். இந்த கலவரத்தால் பல உயிர்களையும் உடைமைகளையும் மக்கள் இழந்தனர். இந்த கொடூரத்தில் 53 பேர் உயிரிழந்தனர், அதில் 38 பேர் இஸ்லாமியர்களாவர். இருப்பினும், கலவரத்தைத் தூண்டியவர்களைக் குறிவைப்பதற்குப் பதிலாக அரசு அமைதியான வழியில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களையும் போராட்டக்காரர்களையும் குறிவைத்தது.

உமர் காலித், பன்மைத்துவம், மதச்சார்பின்மை, அரசியலமைப்பின் மதிப்புகள் ஆகியவற்றை அற்புதமாக எடுத்துரைப்பதன் மூலம் அறியப்பட்டவர். ஆனால், கலவரத்தைத் தூண்டியதாக அருவருக்கத்தக்க வகையில் திரித்து பொய்யாக அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

உண்மையில் அவர் கூறியது; “நாங்கள் கலவரத்திற்கு கலவரத்தின் மூலம் வினையாற்றுபவர்கள் இல்லை; நாங்கள் வெறுப்பிற்கு வெறுப்பின் மூலமாகப் பதிலளிப்பவர்கள் இல்லை; நாங்கள் அன்பின் மூலமாகப் பதிலளிப்போம். அவர்கள் நம்மை லத்தியைக் கொண்டு அடித்தால், நாம் மூவர்ணக் கொடியை உயர்த்துவோம்; அவர்கள் நம்மை குண்டுகளால் சுட்டால், நாம் அரசியலமைப்பை நமது கரங்களில் ஏந்துவோம்” ஆனால், தற்போது மிகவும் வஞ்சகமான பொய்யைக் கொண்டும்  திரித்தும் உமர் காலித்தை அதிகாரிகள் சித்தரிக்கின்றனர்.

தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதும் விசாரணையில்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பதும் உமர் காலித்தின் வழக்கில் துன்பம் தரும் அம்சமாகும். 2021-இல் உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மூன்று பேருக்குப் பிணை வழங்கும்போது அரசு தரப்பின் வாதங்களைக் கூர்ந்து கவனித்துக் கூறியவை: “நாம் (கருத்தை) வெளிப்படுத்துவதற்காகக் கட்டுப்படுத்தப்படுகிறோம். எதிர்க் கருத்தைக் கேட்டால் பதற்றமடைகிறது அரசு. அரசமைப்பு வழங்கியுள்ள போராடும் உரிமைக்கும் பயங்கரவாத நடவடிக்கைக்கும் இடையேயுள்ள கோடு அரசின் பார்வையில் மங்கலாகி வருகிறது. இந்த எண்ணம் தொடர்ந்தால் அது ஜனநாயகத்திற்கு ஊறாக முடியும்”.

ஆனாலும் பிணை எளிதாக வழங்க முடியாத ஊபாவில் தொடர்ந்து வழக்குகளை அரசு பதிவு செய்கிறது. இதுபோன்ற சட்டங்கள், நீதித்துறையின் தாமதங்கள் போன்றவை தனிநபர்களை எந்தவித விசாரணையுமின்றி, குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமலேயே சிறையில் வைத்துத் தண்டிக்கும் நிலையை உருவாக்கிவிடுகின்றன.

உமரைப் புத்திசாலியான கருணைகொண்ட இளைஞன். வரலாற்று ஆசிரியராகவும் விமர்சனப் பார்வையும் உடையவர். இந்த எதேச்சதிகார ஆட்சியால் அவர் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு முத்திரை  குத்தப்பட்டதைக் கண்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.

உமரும் மற்ற செயற்பாட்டாளர்களும் விடுதலை அடைவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். சமத்துவமான உலகத்தைப் படைக்க அவர்களால் பங்களிப்பு செலுத்த முடியும்.

உமரையும் அவருடன் சக செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்.

தனக்கு அடிபணியாதவர்களை ஒடுக்குவதற்காக மோடி அரசால் கொண்டு வரப்பட்டதுதான் ஊபா என்னும் கருப்புச் சட்டம். இதனைப் பயன்படுத்தி ஸ்டான் சுவாமி, சாய் பாபா போன்றவர்களை கொன்றழித்தது பாசிச பா.ஜ.க அரசு. இதிலிருந்து உமர் காலித்தையும் மற்றவர்களை மீட்க விரும்பும் ஜனநாயக சக்திகள் கையெழுத்திட்டு கோரிக்கை வைக்கும் அதேவேளையில் ஊபா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை ரத்து செய்யும் மக்கள் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. ஜனநாயக சக்திகள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான உரிமையும் பாதுகாப்பையும் வழங்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


செய்தி ஆதாரம்: தி வயர்
மொழிபெயர்ப்பு: ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க