வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!

அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பிஎச்.டி மாணவரான ஷர்ஜீல் இமாம் (Sharjeel Imam) சிறையில் அடைக்கப்பட்டு,  இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.

CAA/NRC சட்டமானது -அமல்படுத்தப்பட்டால் பெரும் எண்ணிக்கையிலான இந்த நாட்டின் முஸ்லீம் குடிமக்களை நாடற்றவர்களாக ஆக்கிவிடும் என்ற செய்தி தான் ஷர்ஜீல் இமாமை, CAA/NRC சட்டத்திற்கு எதிரான போரட்டக்களத்திற்கு உள்ளே அழைத்து வந்தது.

CAA/NRC சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது ஜனவரி 16, 2020 அன்று அவர் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் போலீசு ஷர்ஜீல் இமாம் மீது ஜனவரி 26, 2020 அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு (ஜனவரி 28 அன்று), டெல்லியில் பதியப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக அவர் தனது வழக்கறிஞருடன் சரணடையச் சென்றபோது டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்குப் பதியப்பட்டது; டெல்லி கலவர வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால் இமாம் எந்த வழக்கிலும் தண்டனை பெறாமல் நான்கு ஆண்டுகளாக சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார். 2019 டிசம்பரில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்கு அருகே நடந்த வன்முறை தொடர்பான இரண்டு வழக்குகளிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான எட்டு வழக்குகளில், அவர் ஐந்தில் ஜாமீன் பெற்றுள்ளார், அவர் மீதான UAPA வழக்கு மட்டுமே இன்னும் மீதமுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் அவர் தொடுத்த ஜாமீன் மனுக்கள் டெல்லியின் பல்வேறு நீதிமன்றங்களில் திட்டமிட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

அவர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் இமாமின் ஜாமீன் மனுவை 46 முறை பட்டியலிட்டுள்ளது; ஆனால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. தற்போது எஃப்ஐஆர் 59/2020 இன் கீழான டெல்லி கலவர வழக்கு பிப்ரவரி 22 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இருந்தாலும் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படாமல் இருக்கிறது.


படிக்க: CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !


இமாம் மீது UAPA சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பிரிவின்படி அதிகபட்ச தண்டனையே 7 ஆண்டுகள் தான்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் அஹ்மத் இப்ராஹிம் கூறுகையில் “அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்த ஜாமீன் மனுவும் நிலுவையில் இருக்கக்கூடாது. அந்த நபர் ஜாமீனுக்குத் தகுதியானவர் இல்லை என்றால், அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டால், அந்த நபர் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சென்று நீதிக்கான போராட்டத்தை தொடர முடியும். ஆனால் இரண்டு ஆண்டுகளாக இமாமின் ஜாமீன் மனுவை நிலுவையில் வைத்திருப்பது குற்றவியல் நீதித்துறையின் செயல்முறைக்கு முரணானது,” என்றார்.

மேலும்” இந்த தாமதமானது அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் உள்ளது. அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் நீதித்துறை இயங்குகிறது. இந்தியாவில் இது முதல்முறையாக நடக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதேதான் நடக்கிறது. டெல்லி கலவர வழக்குகளில் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் விசாரணை இரண்டு ஆண்டுகளில் 46 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டே நடத்தப்படும் அரசியல் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

CAA/NRC சட்டமானது மக்கள் போரட்டங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், CAA/NRC சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை நீதித்துறையின் துணைகொண்டு பாசிச கும்பல் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது.

கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம் பாசிச கும்பலுக்கு வேண்டப்பட்ட அடிவருடியாக இருந்திருந்தால், அர்னாப் கோஸ்வாமிக்கு விடுமுறை தினத்தன்று கூடி விசாரித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைப் போல், இவருக்கும் ஜாமீன் வழங்கியிருக்கும். ஆனால் இவரோ பாசிஸ்டுகளின் தாக்குதலை எதிர்த்தல்லவா போராடியிருக்கிறார்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க