கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !

இளைஞர்கள், மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து காவிக் குண்டர்களாக மாற்றுவதன் மூலம், முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கலவரங்களை நடத்தி வருகிறது பஜரங் தள்.

2
ர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடகு மாவட்டம். இம்மாவட்டத்தின் பொன்னம்பேட்டை எனும் கிராமத்தில் பஜ்ரங் தளம் என்ற இந்து மதவெறி அமைப்பு ஒரு வார “ஆயுதப் பயிற்சி” முகாமை நடத்தியுள்ளது.
பொன்னம்பேட்டை சாய் சங்கரா பள்ளியில் நிறைவடைந்த எட்டு நாள் ‘சௌர்ய பிரஷிக்ஷனா வர்கா பயிற்சியை பாஜகவின்எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள்  பார்வையிட்டனர். இப்பயிற்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் பயிற்சி பெற்றனர்.
இந்த ஆயுதப் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு திரிசூலம், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இளைஞர்கள் துப்பாக்கியால் சுடுவது, திரிசூலம் வழங்கப்படுவது போன்ற படங்கள் உள்ளது. இவை சமூகவலைதளங்களில் உலவி வருன்றன. இந்த பயிற்சி முகாமிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
“நாங்கள் கொடுக்கும் திரிசூலம் வெறும் 5.5 அங்குலம் தான் இருக்கும். கூர்மையாக இருக்காது. இது ஒரு ஆயுதமாக கருத முடியாது. ஆனால் மத அடையாளமாக கருதப்படுகிறது” என்று பஜ்ரங் தளத்தின் தெற்கு கர்நாடகா அமைப்பாளர் ரகு சக்லேஷ்பூர் கூறினார். “நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பயிற்சிகளை நடத்துகிறோம், ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பயிற்சி நடக்கவில்லை” என்று சக்லேஷ்பூர் கூறினார்.
படிக்க :
♦ ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!
♦ பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
சாய் சங்கரா பள்ளி தாளாளர் ஜாரு கணபதி கூறுகையில், ”பள்ளி வளாகம் கடந்த 10 ஆண்டுகளாக பிரசிக்ஷனா வர்க (ஆயுதப்) பயிற்சிக்கு பயன்படுத்தப் படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், பயிற்சி நடத்த, அமைப்பாளர்களுக்கு (பஜ்ரங் தளத்திற்கு) இடம் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பிற ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், இப்பள்ளியில் தேசிய அளவிலான பயிற்சியும் அளிக்கப்பட்டது,” என்று கூறினார்.
“ஒவ்வொரு ஆண்டும் முகாமை நடத்தி பயிற்சி அளித்து வருகிறோம். இதேபோன்ற முகாம் 2019-ல் சித்ரதுர்காவிலும் நடந்தது. எங்கள் நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்கும் ‘திரிசூல தீக்சே’ என்ற பெயரின் கீழ் நாங்கள் திரிசூலங்களை இளைஞர்களிடம் கொடுக்கிறோம்” என்று பஜ்ரங் தள் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
பஜ்ரங் தள் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் ஒரு குண்டர்படை அமைப்பு. இதன் செயல்பாடுகள் அனைத்து முஸ்லீம், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலாகவே இருந்து வருகிறது. ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம் மக்கள் இறைச்சி விற்க தடை, ஹலால் ஜிகாத், லவ் ஜிகாத் என தொடர்ந்து கலவரங்களை செய்ய முயற்சித்து வருகிறது. கிருத்துமஸ் தினத்தன்று தேவாலையங்கள் மீது தாக்குதல் தொடுத்தது இந்த குண்டர்படை அமைப்புதான்.
சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் பிரச்சினையை கிளப்பியப்போது பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த பூஜா என்ற இளம் பெண் ஹிஜாப் அணியும் முஸ்லீம் மக்களை சிவாஜியின் வாளால் வெட்டவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். இதே போல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளின் உள்ள இளைஞர்களை தங்கள் இந்துமதவெறி கருத்துகளுக்கு ஆட்படுத்தி வருகிறது பஜ்ரங் தள்.
இளைஞர்கள், மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து காவிக் குண்டர்களாக மாற்றுவதன் மூலம், பஜரங் தள் தனக்கு தேவையான குண்டர்களை தயார்படுத்தி முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கலவரங்களை நடத்தியது; நடத்தி வருகிறது; நடத்த எத்தனிக்கிறது.
பஜ்ரங் தள் போன்ற இந்துமதவெறி அமைப்புகள், மாணவர்கள் – இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து மதவெறியர்களாக மாற்ற முயற்சிக்கும் பயிற்சி முகாம்களை உழைக்கும் மக்கள் ஒன்று கூடி தடுத்து நிறுத்தி வேண்டும்.

சந்துரு

2 மறுமொழிகள்

  1. இது போன்று இடதுசாரிகளோ, தலீத்களோ, முஸ்லீம்களோ ஆயுத பயிற்சி எடுத்தால் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது என தினமணி, தினமலர், தமிழ் இந்து 10 பக்கத்திற்கும் செய்தி வெளியிட்டிருக்கும்.

  2. பொதுத்துறை, இயற்கை வளங்கள் என மொத்த நாட்டை சூறையாடும் பார்ப்பன, பனியா கும்பல் போலீசு பாதுகாப்பை தாண்டி ஒரு பாதுகாப்பு கும்பலை தயார் செய்கிறது. இலங்கை போல பாதிக்கப்பட்ட மக்கள் தாக்கிடக்கூடாது என்றும் எதிர்ப்பவர்களை கொல்லவும் இது போன்று செய்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க