டிச.6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் : அயோத்தியில் அராஜக வெறியாட்டம் போட்ட காவி பயங்கரவாதிகள்!

மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.

1992 டிசம்பரில் இந்து மதவெறியர்களால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த சட்டவிரோத கரசேவை-க்கு இன்று வரை யாரும் தண்டிக்கப்படவில்லை. 2019-ஆம் ஆண்டில் ‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கே நிலம் சொந்தம்’ என்ற ஓர் அநீதி தீர்ப்பை வழங்கி கரசேவை புரிந்த அனைவரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அதை தொடர்ந்து தற்போது ராமர் கோயிலை கட்டுவதற்கு களமிறங்கிவிட்டது இந்துமதவெறி கும்பல். அதை தொடர்ந்து காசி மதுரா, கியான்வாபி, தாஜ்மஹால் என அவர்களின் அடுத்தக்கட்ட இலக்குகள் கரசேவைக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நாடுமுழுவதும் பல்வேறு கலவரங்களை அரங்கேற்றினார்கள் இந்து மதவெறி பாசிஸ்டுகள். 2002-ல் குஜராத் கலவரத்தை அறங்கேற்றி குஜராத் மாடல் தான் இந்துராஷ்டிரம் என்று கொக்கரித்தார்கள். 2014-ல் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்திய ஆட்சியை பிடித்த பிறகு, வட இந்தியாவில் உ.பி; தென்னிந்தியாவில் கர்நாடக உட்பட ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட சங் பரிவார கும்பல் நாடுமுழுவதும் தனது அடிதளத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்துமதவெறியர்களின் கரசேவையை அம்பலப்படுத்தி எமது புதிய ஜனநாயகம் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டது. அதனை தற்போது பதிவிடுகிறோம்.

– வினவு

0-0-0

அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!

அயோத்தி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.

பாபர் மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.

ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.

பாபர் மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!

படிக்க : சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

இந்து மதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்க தள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.

பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவது ஒரு மத நம்பிக்கையை நிறைவேற்றுவது என்பதெல்லாம் பாமர ராம பக்தர்களைத் திரட்டுவதற்க்காகச் செய்த பிரச்சாரம்தான்! “இசுலாமிய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்; இந்துமதத் துறவிகள் கொல்லப்பட்டனர்; இந்த தேசிய அவமானத்தின் சின்னமாக விளங்குவதுதான் பாபர் மசூதி; அதை அகற்றி ராமன் பிறந்த பூமியில் ராமனுக்குக் கோவில் கட்டுவது அன்று நேர்ந்த அவமானங்களுக்குப் பழிவாங்குவது, இந்துக்களின் கௌரவத்தை நிலை நாட்டுவது” என்கிற விளக்கங்கள் கூட இந்துமதவெறி பாசிஸ்டுகள் தமது “இந்து ராஷ்டிரம்” என்கிற அரசியல்பேராசைக்கு மதச் சாயம் பூசுபவைதான்.

“இராமன் ஒரு மதத்தின் கடவுள் மட்டுமல்ல; தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போலியான மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இந்துத்துவம், இராமராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் அடிப்படையிலான தேசியத்தை நிர்மானிப்பது எங்கள் நோக்கம்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.

ஆகவே, பாபர் மசூதியை இடித்த சம்பவம் உண்மையில் அரசியல் அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைப் போன்றது. பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் ஆதாயம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேர்தல்களையும் ஒரு வழியாக இந்துமதவெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நீதி-நிர்வாக-அரசியல் அமைப்புமுறை எதன் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துவிட்டார்கள். மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.

இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அயோத்தி நாசவேலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜக வெறியாட்டத்தில் இப்போதைய, உடனடித் தாக்குதல் இலக்கு என்னவோ இசுலாமிய சமுதாயத்தினர்தான்! ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கெதிராக அவர்கள் தமது தாக்குதலைத் திருப்பிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்றைய சம்பவங்கள் அதற்கான எச்சரிக்கை – முன்னறிவிப்புதான்!

ஜெர்மனியின் ஆரிய – நாஜிக்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பின்பற்றிய தந்திரங்கள் பலவும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளில் காணமுடிகிறது. தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது; தேசிய கௌரவத்தை நிலைநாட்டுவது; தேசிய ஒருமைப்பாட்டை காப்பது; நாட்டின் இழிநிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட (யூத) சமுதாயத்தினர் மீது பழிபோட்டு அவர்களைக் கொன்று குவிப்பது; நாட்டின் வரலாற்றையே திரித்துப் புரட்டி மத-இன ரீதியில் நாட்டையே பிளவுபடுத்துவது – ஆகிய அதே தந்திரங்களை இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பின்பற்றுகிறார்கள்.

இப்போது பாபர் மசூதியை இடித்து ராமன் கோவிலைக் கட்டியதைப் போல காசியில் உள்ள மசூதியை இடித்துக் காசி விசுவநாதன் கோவிலையும், மதுரா மசூதியை இடித்து கிருஷ்ணன் கோவிலையும் கட்டும் திட்டத்தை நிறைவேற்றி அடுத்தடுத்து இசுலாமிய மதத்தினருக்கு ஆத்திரமூட்டுவது; சொல்லப்படும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து இசுலாமிய மதவாத – தீவிரவாத அமைப்புகளில் தஞ்சமடையும்படியும் எதிர் தாக்குதல் தொடுக்கும் படியும் இசுலாமியர்களைத் தள்ளுவது; அதற்கு எதிராக இந்து மதவெறியை நியாயப்படுத்துவதுடன் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்தி மதவெறி – வகுப்புவாதக் கலவரங்களை மூட்டி இரத்த ஆறு ஓடச் செய்து பார்ப்பன-பனியா சாதிய ஆதிக்க அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் அமைப்பது – இதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அரசியல் பாதையாக உள்ளது.

முதலாவதாக, இவர்கள் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல; இரண்டாவதாக, தேசிய நலன்கள் எதுவும் இவர்களது குறிக்கோளாக இல்லை.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி, பஜரங் தள், சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்த இந்து மதவெறி பாசிச அமைப்புகள் அனைத்திற்கும் தலைமையேற்று வழி நடத்துபவர்கள் பெரும் தரகு அதிகார முதலாளிகளின் குடும்பத்தினர். தொழில்முறை அரசியல்வாதிகளாகவும், சாமியார்களாகவும், முன்னாள் அதிகாரிகளாகவும் உள்ள பார்ப்பன – பனியா சாதியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இந்தச் சாதிகளும் அமைப்புகளும் நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் எனச்சொல்லப்படும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை ஒரு போதும் இந்துக்களாகவும் சமமான சமூக – மத உரிமை உடையவர்களாவும் நடத்தியதே கிடையாது. சதி முதலிய பெண்ண்டிமைத்தனமும், பார்ப்பனிய சநாதன வருணாசிரம – சாதிய தர்மமுமே இந்தக் கும்பலின் கண்ணோட்டமாக உள்ளது.

இந்து ராஷ்டிரம் எத்தகையாத இருக்கும் என்பதை இந்து மதவெறி பாசிஸ்டுகள் இப்போதே நிரூபித்துவிட்டார்கள். பத்திகையாளர்கள் மீதான தாக்குதலும் நாடு முழுவதும் சிறுமான்மையினர் உயிரோடு எரிப்புதும் சான்றுகளாக விளங்குகின்றன. ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் உண்மை என்று எழுதவும் பேசவும் முடியும்; அதுதான் இராமராஜ்ஜியத்தில் கருத்துச் சுதந்திரம். சிறுபான்மையினருக்கு சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்படும் என்று காட்டி விட்டார்கள்.

அது மட்டுமல்ல, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவி தங்களது ஆதிக்கம், சுரண்டல் நலன்களைத் தக்க வைத்துக் கொள்ள, நீடித்துக் கொள்ள தரகு அதிகார முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களும் பழைய – புதிய நிலப் பிரபுக்களும் ஊட்டி வளர்த்து வருகின்ற நச்சுப் பாம்புகளே இந்த பார்ப்பன – பனியா அமைப்புகள்.

ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறு அடகு வைக்கும் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாராக் கொள்கைகளால், உழைக்கும் மக்கள் என்றும் இல்லாத அளவு சுரண்டலுக்கும், விலையேற்றத்திற்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பாக அவதிப்பட்டு வருகின்றனர். மதவெறியைத் தூண்டி இப்பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பி அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்து கொள்ளும் பாதையில் தள்ளிவிடுவது; இதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியங்கள், தரகு அதிகாரமுதலாளிகள் பழைய – புதிய நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இதுதான் இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் உடனடி நோக்கமாகும்.

இதுவரை தேசவிரோத – பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி நியாயமான தேசிய இன, ஜனநாயக உணர்வுடைய சக்திகளை அடக்கி ஒடுக்கும்படி கோரி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தது இந்த பார்ப்பன – பனியா பாசிச கும்பல். இப்போது இந்த நாட்டின் நீதி – நிர்வாகம், அரசியல் அமைப்பு, சட்டத்திட்டங்கள், மரபு – நியதிகள் எதையுமே மதியாத தமது வெறிச் செயல்கள் மூலம் இவர்கள் தாம் உண்மையான வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், தேசதுரோகிகள், பிரிவினைவாதிகள், சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், வகுப்புவாதிகள் என்று நாட்டுக்குத் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டு விட்டனர்.

பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் மதவெறிப் படுகொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் இசுலாமிய மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இந்து – இசுலாமிய மக்களிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு – ஒருமைப்பாட்டின் மீது திரிசூலத்தைப் பாய்ச்சி அவநம்பிக்கையையும், பிளவையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வரை மசூதியை இடிக்க மாட்டார்கள்; பிரச்சினையை உயிருள்ளதாக இழுத்தடித்து அரசியல் ஆதாயம் அடைய முயலுவார்கள் என்றுதான் நாம் உட்பட அரசியல் நோக்கர்கள் கருதினோம். இந்த முறையும் மசூதியை முற்றாக இடித்துவிடக் கூடாது; தடைகளை மீறி மசூதியை இடிக்கும்போது மத்திய போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தும்; கணிசமான கரவேகர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; அவர்களுக்குத் தியாகிப் பட்டங்கட்டி, மீண்டும் அஸ்திகலச ஊர்வலங்கள் நடத்த அனுதாப அலையைக் கிளப்பி ஆதாயம் அடையலாம் என்பதுதான் ஒரு பிரிவினரது நோக்கம். ஆனால் பா.ஜ.க ஆளும் நான்கு மாநிலங்களிலும் லஞ்ச ஊழல் பதவிச் சண்டையிலும் கோஷடித் தகராறிலும் சிக்கியதால் அதன் ‘தூய்மை’ வேடம் கலைந்து அம்பலப்பட்டுப்போனது. அதோடு சமசரப் பேச்சு, நீதிமன்ற முடிவு ஆகிய எதையாவது ஏற்கும்படியான நிர்பந்தம் அதிகரித்து வருவதைக் கண்டார்கள். எனவே முந்திக் கொண்டு தமது சதித் திட்டத்தை அமலாக்கிவிட்டார்கள்.

ஆதிக்கத்தை கைப்பற்றவும், அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைச் செய்வது குற்றமல்ல என்று இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் மூதாதையர்களும் ஆசான்களுமான மனுவும், கௌடில்யனும் போதித்தார்கள். அதையே அவர்களின் சந்ததியினர் இப்போது கடைப்பிடித்துள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கையும், நீதியையும் வழுவாது கடைப்படிப்போம் என்று வாக்களித்து, நாட்டையும் மக்களையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். வேறெதையும் விட இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காவது தண்டிக்கப்பட வேண்டிய இல்லை, இல்லை பழிவாங்கப்பட வேண்டிய கொடிய எதிரிகளாக இவர்களை நாடும் மக்களும் கருத வேண்டும்.

புதிய ஜனநாயகம், ஜனவரி – 1993

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க