பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட சதிக் குற்றவாளிகளை விடுவித்து வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, வேறுவிதமாக, அதாவது குற்றவாளிகளைத் தண்டித்து வழங்கப்பட்டிருக்க வாய்ப்புண்டா? அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அத்தீர்ப்பை உ.பி. மாநிலத்தை ஆளும் ஆதித்யநாத் அரசோ அல்லது மத்திய மோடி அரசோ பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தியிருக்குமா?

இவ்வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை ஏமாற்றமளிக்கிறது என்றும், துரோகத்தனமானது என்றும் விமர்சித்துவரும் அனைத்துத் தரப்பினரும் இந்தக் கேள்விகளையும் சேர்த்தே இந்தப் பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் அரசு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது என்பதையும் தாண்டி, ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவா கருத்துக்கள் இந்திய சமூகத்திலும் அரசுக் கட்டமைப்பிலும் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய சனாதன இந்தியாவில் நாம் வாழ்ந்து வருகிறோம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இப்புதிய இந்தியாவின் இன்னுமொரு உதாரணம்.

“சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் தரப்படவில்லை” என்று மட்டும் கூறி அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை இத்தீர்ப்பு விடுதலை செய்யவில்லை. பாபர் மசூதியை இடிக்க கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்த கரசேவகர்களை இராம பக்தர்களாகவும், சதிக் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட அத்வானி, அசோக் சிங்கால் உள்ளிட்ட குற்றவாளிகளை மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்த புனிதர்களாகவும் காட்டியிருக்கிறது, இத்தீர்ப்பு. வாங்கிய காசுக்கு மேல் இத்தீர்ப்பு கூவியிருப்பதற்குக் காரணம், பாபர் மசூதி, ராமர் கோவில், இராமஜென்ம பூமி இயக்கம் ஆகியவற்றை இத்தீர்ப்பு இந்துத்துவா கண்ணோட்டத்தின்படி அணுகியிருப்பதுதான்.

வெளிப்படையாகவே அரங்கேறிய சதிகள்

பாபர் மசூதி இடித்துத் தள்ளப்படுவதற்கு முதல் நாள் அத்வானி உள்ளிட்டோர் வினய் கத்தியார் வீட்டிலிருந்த ஓர் அறையில் கூடி மசூதியை இடிக்கச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டைப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறித் தள்ளுபடி செய்திருக்கிறது, சி.பி.ஐ. நீதிமன்றம். பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்ற அந்தச் சதி அந்த ஒருநாளில்தான் தீட்டப்பட்டு அரங்கேற்றப்பட்டதா என்பதுதான் இப்பிரச்சினையில் பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வி.

1949-ல் இந்து மதவெறிக் கும்பலால் உள்ளூர் அளவில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சதி 1980-90 ஆம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.-ஆல் நாடு தழுவியதாக மாற்றப்பட்டது. பாபர் மசூதியை இந்துக்களின் அவமானச் சின்னமாகச் சித்தரித்து, அதனால் அதனை இடித்து ராமர் கோவிலை அங்குதான் கட்ட வேண்டும் – “மந்திர் வஹி(ம்) பனாயேங்கே” என்ற இந்து மதவெறி முழக்கத்தை வெளிப்படையாக முன்வைத்து ரத யாத்திரைகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்களை அப்பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் நடத்தி வந்ததை யாராலும் மறுக்க முடியுமா?

1980-களின் இறுதியில் அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதைக் கட்சித் தீர்மானமாக இயற்றியது, பா.ஜ.க. அதனைத் தொடர்ந்து அத்வானி தலைமையில் குஜராத்-சோமநாதர் ஆலயத்தில் தொடங்கி உ.பி.யின் அயோத்தியில் முடிவடையும் ரத யாத்திரை நடத்தப்பட்டது. அந்த யாத்திரையின்போது, “நான் அமைதிக்காக யாத்திரை நடத்தவில்லை” எனக் கூறி, முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிட்டார், அவர். அத்வானியின் ரத யாத்திரை நூற்றுக்கணக்கான முஸ்லிம் பிணங்களின் மீது ஏறித்தான் முன்னேறிச் சென்றது.

ராமர் கோவிலைக் கட்டுவதற்காக நாடெங்கிலிமிருந்து செங்கலைப் பெற்றுக் கொண்டுவருவது என்ற போர்வையில் பாபர் மசூதிக்கு எதிரான வரலாற்றுத் திரிபுகளும், முசுலிம் எதிர்ப்பும் இந்தியாவெங்கும் பிரச்சாரமாக எடுத்துச் செல்லப்பட்டது. 1990-ம் ஆண்டு அயோத்தியில் கரசேவை என்ற பெயரில் நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு ஒத்திகை முஸ்லிம் எதிர்ப்பு இந்து மதவெறிக் கலவரத்தில் முடிந்தது. அக்கலவரம் நடந்துமுடிந்த இரண்டாம் ஆண்டே – 1992, டிசம்பர் 6 அன்று ராமஜென்ம பூமியில் அடையாள கரசேவை நடத்தப் போகிறோம் என உச்சநீதி மன்றத்திலும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலிலும் வாக்குறுதி கொடுத்துவிட்டு, மறுபுறம் நானூறு ஆண்டுகள் பழமையான அம்மசூதியைச் சதித்தனமாக இடித்துத் தள்ளியதோடு, அவ்வளாகத்தினுள் சட்டவிரோதமாகத் தற்காலிக ராமர் கோவிலையும் கட்டி முடித்தது, ஆர்.எஸ்.எஸ்.

பாபர் மசூதியின் முதல் மாடம் மதியம் 2.55-க்கும், இரண்டாவது மாடம் அடுத்த இருபதாவது நிமிடத்தில் – 3.15-க்கும், மூன்றாவது மாடம் 4.50-க்கும் இடித்துத் தள்ளப்பட்டு, அந்த இடிபாடுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து மண்ணாலான ஒரு மேடை உருவாக்கப்பட்டு, அதில் தற்காலிக ராமர் கோவிலும் அமைக்கப்பட்டது. ஒரே நாளில், ஒரு குறுகிய நேரத்திற்குள் நடந்துமுடிந்த இவையெல்லாம் திட்டமிடப்படாமல், தன்னெழுச்சியாக நடைபெற்றிருக்க முடியுமா? பயிற்சி அளிக்கப்பட்டு ஆயுதங்களோடு இறக்கிவிடப்பட்ட கரசேவகர்கள் அல்லாமல், திடீரென உணர்ச்சிவசப்பட்டுப் போன அராஜக கும்பலாலா இதனைச் செய்து முடித்திருக்க முடியும்?

படிக்க :
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

அடையாள கரசேவையை நடத்துவதற்கும் கரசேவையின்போது பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடுவதற்கும் ஆயிரக்கணக்கான இந்து மதவெறியர்களைக் கரசேவகர்கள் என்ற பெயரில் திரட்டி வரவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அவ்வாறு திரட்டப்பட்ட கரசேவகர்கள் சூடம், சாம்பிராணி, சப்பளாகட்டையோடு வரவில்லை; ஒரு கட்டிடத்தை இடித்துத் தள்ளுவதற்குத் தேவையான கடப்பாரை, மண்வெட்டி, வடக்கயிறு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்தனர். மசூதியை இடித்துத் தள்ளவேண்டும் என்ற வெறியோடும் திட்டத்தோடும் திரட்டிக் கொண்டுவரப்பட்ட அக்கும்பலை மேலும் உசுப்பேற்றி உரையாற்றினார், அத்வானி.

மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாக பஜ்ரங் தள் தலைவர் வினய் கத்தியாரைச் சந்தித்து கரசேவைக்கான ஏற்பாடுகள் குறித்துக் கேட்ட ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், அச்சந்திப்பு குறித்து லக்னோ சி.பி.ஐ நீதிமன்றத்திலும், லிபரான் கமிசனிலும் சாட்சியம் அளித்திருக்கிறார். அச்சாட்சியத்தில், “பாபர் மசூதியின் கட்டிட அமைப்பை ஆய்வு செய்துவிட்டதாகவும், அம்மசூதியை ஓரிரு மணி நேரத்திற்குள் இடித்துத் தள்ளுவதற்குரிய சிறப்புக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அக்குழுக்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழுக்கள் தற்கொலைப் படையாகச் செயல்படவும் தயங்காது” என்றும் வினய் கத்தியார் தன்னிடம் தெரிவித்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார், வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன். மசூதி திட்டமிட்ட வகையில் இடிக்கப்பட்டதை, “டிசம்பர் 6, 1992” எனும் தலைப்பில் கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார், அவர். (ஃபிரண்ட்லைன், டிசம்பர் 6, 2019)

மசூதி திட்டமிட்ட வகையில் தொழில்நுட்ப நேர்த்தியோடு இடித்துத் தள்ளப்படுவதைப் பத்திரிகையாளர்கள் எவ்விதத்திலும் பதிவு செய்துவிடக் கூடாது என்ற நோக்கில், மசூதி இடிக்கப்படுவது தொடங்கியவுடனேயே பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களைப் பத்திரிகையாளர் மாடத்திலிருந்து கரசேவகர்கள் துரத்தியடித்ததையும், குறிப்பாக, மசூதி இடிக்கப்படுவது தொடர்பாகப் புகைப்பட சாட்சியங்கள் இருந்துவிடக் கூடாது என்ற திட்டத்தோடு, பத்திரிகையாளர்களின் புகைப்படக் கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டதையும் அக்கட்டுரையில் விவரித்திருக்கிறார், வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்.

அத்வானி அயோத்திக்குள் நுழைந்த டிசம்பர் 5 அன்றும், மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்றும், அவரின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரியாக (கல்யாண் சிங் அரசால்) நியமிக்கப்பட்டிருந்தவர் அஞ்சு குப்தா. பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் மட்டும்தான், இப்படுபாதகச் செயல் குறித்து சாட்சியம் அளித்த ஒரே அதிகாரி. அவர் லிபரான் கமிசனில் அளித்த சாட்சியத்தில், “அயோத்தியில் திரண்டிருந்த கரசேவகர்கள் மத்தியில் அத்வானி இந்து மதவெறியைத் தூண்டிவிடும்படி உரையாற்றினர். மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானியோ அல்லது மேடையிலிருந்த மற்ற தலைவர்களோ அதனைத் தடுக்க முயலவில்லை. மாறாக, மசூதி இடிக்கப்பட்டவுடன், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்” என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

”தயாரிப்புகளுடன்” காத்திருக்கும் கர சேவகர்கள்

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலிடம் வாக்குறுதி அளித்த கையோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கல்யாண் சிங், “கோவிலைக் கட்டுவதற்குத்தான் தடை இருக்கிறதேயொழிய, மசூதியை இடிப்பதற்கு அல்ல” என எகத்தாளமாக பேட்டி அளித்தார். முதலமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாதென எழுத்துப்பூர்வ உத்தரவை அளித்து, ஆர்.எஸ்.எஸ். கும்பல் எவ்விதமான தடையும் இன்றி, உ.பி.மாநில போலிசு பாதுகாப்போடு மசூதியை இடிப்பதை உத்தரவாதப்படுத்தினார் அவர்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த உமா பாரதி, வினய் கத்தியார், ஆச்சார்யா தர்மேந்திரா உள்ளிட்ட 23 பேரிடம் இரகசிய நேர்காணல் (sting operation) நடத்திய கோப்ரா போஸ்ட் என்ற இணைய இதழ், “கரசேவகர்களுள் 38 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குக் கட்டிடத்தின் மீது ஏறுதல், கோடரி, கடப்பாரை போன்ற ஆயுதங்களைக் கொண்டு கட்டிடங்களை இடித்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்கேஜ் எனுமிடத்தில் அளிக்கப்பட்டதையும், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இப்பயிற்சி நடத்தப்பட்டதையும், பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மசூதியை இடிக்க முடியாவிட்டால், டைனமேட்டைப் பயன்படுத்தி மசூதியைத் தரைமட்டமாக்கும் தனித் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததையும்” உள்ளிட்டு, இச்சதி தொடர்பான பல உண்மைகளை அந்த 23 பேரும் தமது நிருபர்களிடம் பகிர்ந்துகொண்டதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

இந்த சாட்சியங்கள் அனைத்தையும் எந்தவொரு விசாரணை அமைப்பும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இன்றி, இவை அனைத்தும் பத்திரிகை செய்திகள், புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகள் மற்றும் நேரடிச் சாட்சியங்கள் வழியாகப் பொதுவெளியில் காணக் கிடைக்கின்றன.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட லிபரான் கமிசன், இந்தச் சாட்சியங்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியதோடு, ராமஜென்ம பூமி இயக்கத்தை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் திரட்டிய நிதி ஆதாரங்களை ஆராய்ந்தும் சதிக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதோடு, அத்வானி மட்டுமின்றி, “மிதவாதி” வாஜ்பாயியிக்கும் இச்சதியில் தொடர்புண்டு என அறிக்கை அளித்தது.

“மசூதியை இடிப்பது தொடர்பான சதியைத் தீட்டியவர்கள் ஒரு சிறு கும்பலாக இருக்கலாம். ஆனால், அச்சதித் திட்டம் அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது” எனக் குறிப்பிட்டது, லிபரான் கமிசன்.

அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் வினய் கத்தியார் வீட்டில் சந்தித்ததையும் தாண்டி இத்துணை சாட்சியங்கள் இருந்தும் சதிக் குற்றச்சாட்டு நிராகரிக்கப்படுகிறது எனில், இந்திய நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் நேர்மை, நடுநிலைத்தன்மை பற்றிக் கூறப்படுவதெல்லாம் அண்டப்புளுகு தவிர வேறல்ல. இந்த அண்டப்புளுகிற்கு இந்தத் தீர்ப்பு முதல் உதாரணமும் அல்ல, இறுதி உதாரணமாக அமையப் போவதுமில்லை.

தீர்ப்பா, ஆர்.எஸ்.எஸ். அறிக்கையா?

இருபத்து ஆண்டுகளுக்கு முன்பு புனையப்பட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரணை தொடங்கிய நிலையிலேயே ஒப்புக்குச் சப்பாணியாக மாற்றும் சதிகள் நீதிமன்றம், சி.பி.ஐ. ஆகியவற்றின் மூலமே அரங்கேற்றப்பட்டன. குறிப்பாக, விசாரணையின் ஒரு கட்டத்தில், வாஜ்பாயி இந்தியப் பிரதமராகவும் அத்வானி உள்துறை அமைச்சராகவும் இருந்த சமயத்தில், அத்வானி உள்ளிட்டோர் மீதான சதிக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. அத்வானி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். ரேபரேலி நீதிமன்றம், லக்னோ நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எனப் பந்தாடப்பட்டுக் கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் மூன்றாண்டுகளுக்கு முன்புதான் சதிக் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதை உறுதிப்படுத்திய உச்சநீதி மன்றம், வழக்கைத் தினந்தோறும் விசாரிக்க வேண்டும், நீதிபதியை மாற்றக் கூடாது, இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்தது.

உச்சநீதி மன்றத்தின் இத்தலையீடு காரணமாகத் தாமதமானாலும் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களின் நெஞ்சில் கடப்பாரையை இறக்கியிருக்கிறது, சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு.  குறிப்பாக, “ராமர் கோவிலைக் கட்டுவதற்காக பாபர் மசூதி வளாகமே குழந்தை ராமரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, மசூதி இடிப்பு வழக்கு பொருளற்றதாகிவிட்டது” எனக் கூறி வந்த இந்து மதவெறிக் கும்பலின் கருத்தை ஆமோதிக்கும் வண்ணம், குற்றவாளிகளுக்கு எதிரான ஒவ்வொரு சாட்சியத்தையும் நொண்டிச் சாக்குகளைக் கூறி நிராகரித்திருக்கிறது, சி.பி.ஐ. நீதிமன்றம்.   

“மசூதி இடிப்பு குறித்த பத்திரிகை செய்திகளின் நகலைத் தாக்கல் செய்த சி.பி.ஐ., அவற்றின் அசல் பதிப்புகளைத் தாக்கல் செய்யவில்லை.”

“மசூதி இடிப்பு தொடர்பான புகைப்படங்களையும், வீடியோ ஒளிப்படங்களையும் தாக்கல் செய்த சி.பி.ஐ., அவற்றின் நெகட்டிவ்களைத் தாக்கல் செய்யவில்லை.”

“வீடியோ ஒலிப்படப் பேழைகளில் பதிவாகியிருக்கும் காட்சிகள் தெளிவாக இல்லை.”

“தலைவர்கள் கரசேவகர்களை மசூதியை இடிக்கும்படித் தூண்டிவிட்டு உரையாற்றினார்கள் எனக் கூறப்பட்டாலும், பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் திரண்டிருந்த நிலையில், தூசு மண்டலம்  எழும்பியிருந்த சூழ்நிலையில் யார், எதைப் பேசினார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. குரல் பரிசோதனையும் ஒத்துப் போகவில்லை.”

“பத்திரிகை செய்திகள், வீடியோ ஒலிப்படப் பேழைகள் எனப் பல ஆதாரங்கள் தரப்பட்டாலும், எந்தவொரு ஆதாரமும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒரு தனி அறையில் கூடி சதித் திட்டம் தீட்டினார்கள் என்பதை நிரூபிக்கவில்லை.”

“பத்திரிகையாளர்களுக்குத் தனி மேடை அமைத்து, அவர்களை அழைத்துச் சென்று அமரவைத்தது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான். குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்கள் மசூதியை இடிக்கச் சதித் திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இப்படி நடந்துகொண்டிருப்பார்களா?” – எனச் சதிக் குற்றவாளிகளின் வக்கீலாக வாதாடியிருக்கிறார், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ்.

தீர்ப்பை விமர்சிக்கலாம், எனினும், தீர்ப்பிற்கு, அதனை வழங்கிய நீதிபதிகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், நீதிபதி எஸ்.கே.யாதவ் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு குற்றவாளிகளை விடுவித்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மட்டுமின்றி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் காவிக் கண் கொண்டுதான் அணுகியிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு அத்தீர்ப்பிலேயே ஆதாரங்கள் உள்ளன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வு என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் கருத்து. இந்தக் கருத்தையே பிரதிபலித்திருக்கும் இத்தீர்ப்பு, “கரசேவகர்களிடையே இருந்த ஒரு அராஜகக் கும்பல் திடீரெனக் கிளர்ச்சியில் இறங்கி மசூதியை இடித்துவிட்டதாக”க் குறிப்பிடுவதோடு, “இந்த அராஜக கரசேவகர்கள் இராம பக்தர்கள் அல்ல; அவர்கள் இராம பக்தர்களாக இருந்திருந்தால் அசோக் சிங்காலின் பேச்சுக்குக் கட்டுப்பட்டிருப்பார்கள்” எனக் கூறி, சதிக் குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்களைப் புனிதர்களாக்குகிறது.

“பாபர் மசூதி வழிபாட்டுத் தலமல்ல; அதுவொரு சர்ச்சைக்குரிய கட்டிடம்” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் கருத்து. இதனை வழிமொழியும்விதமாக இத்தீர்ப்பு, “தொழுகை நடத்துவது கைவிடப்பட்டதால், மத வழிபாட்டுத் தலத்தை இடித்த குற்றம் நிகழவில்லை” எனக் குறிப்பிடுகிறது. மூளையும் மனதும் காவிமயமானவர்களால் மட்டும்தான் இப்படிக் குறிப்பிட்டுத் தீர்ப்பு எழுத முடியும்.

ஆர்.எஸ்.எஸ்.இன் கைத்தடிகளாக நீதிமன்றங்கள்

“சுதந்திர” இந்தியாவில் பாபர் மசூதியைக் கைப்பற்றிக்கொள்ளும் தமது சதித் திட்டத்தை, அம்மசூதியினுள் கள்ளத்தனமாக குழந்தை ராமர் சிலையை வைத்ததன் மூலம் தொடங்கி வைத்தது, இந்து மதவெறிக் கும்பல். அச்சதித் திட்டத்திற்குத் துணையாகச் செயல்பட்டவர் அன்றைய ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கே.கே.கே.நாயர். கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை மசூதியிலிருந்து அகற்றுவதற்கு முட்டுக்கட்டையாகச் செயல்பட்ட அவர், நிர்வாக ஆணையொன்றை வெளியிட்டு பாபர் மசூதி வளாகத்தை ஜப்தி செய்து, அதன் மூலம் மசூதியைக் கோவிலாக்கினார்.

இதனைத் தொடர்ந்து 1950-ல் இந்து மகா சபையின் ஃபைசாபாத் செயலராக இருந்து கோபால் சிங் விஷாரத், “மசூதியினுள் வைக்கப்பட்ட ராமர் சிலை வழிபடத் தன்னை அனுமதிக்க வேண்டுமென்றும், பிரதிவாதிகள் (அரசும், முசுலிம்களும்) ராமர் சிலையை அகற்ற முடியாதவாறு நிலையான தடையாணை பிறப்பிக்க வேண்டுமென்றும்” கோரி ஃபைசாபாத் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் விஷாரத்துக்குச் சாதகமாக இடைக்கால உத்தரவு பிறப்பித்தது, அந்நீதிமன்றம்.

1986-ல் ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றம் பாபர் மசூதி வளாகம் தொடர்பான உரிமையியல் வழக்கில் அளித்த உத்தரவொன்றைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுதான், அன்றைய ராஜீவ் காந்தி அரசு அதுவரை எந்தவொரு தரப்பும் வழிபாடு நடத்த அனுமதியின்றிப் பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதி வளாகத்தை இந்துக்கள் வழிபாடு நடத்துவதற்காகத் திறந்துவிட்டது.

ஜனநாயக, முற்போக்கு இயக்கங்கள் ஊர்வலங்கள் நடத்த முனைந்தால், அதனைக் காயடிக்கும் விதத்தில் பாரதூரமான நிபந்தனைகளை விதிக்கத் தயங்காத நீதிமன்றங்கள், கோவிலை அங்கேயே கட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல் நடத்திய ரத யாத்திரைகளையும், செங்கல் யாத்திரைகளையும், கரசேவைகளையும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி அனுமதித்து வந்தன.

படிக்க :
♦ பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
♦ பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !

டிசம்பர் 6 அன்று கரசேவைக்கு அப்பால் வேறு விபரீதங்களும் நடக்கலாம் என்ற உளவுத் தகவலை இராணுவ உளவுத் துறை உள்ளிட்டுப் பல்வேறு உளவு அமைப்புகளும் அரசுக்குத் தெரிவித்த பிறகும், அக்கரசேவையை நடத்த அனுமதி அளித்த உச்சநீதி மன்றம், தனது உத்தரவை ரத்துசெய்ய முன்வரவில்லை. நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரசு அரசும் கரசேவைக்குத் தடைவிதிக்க முன்வரவில்லை.

பாபர் மசூதியை இடிக்கும் சதித் திட்டத்தோடு நடத்தப்பட்ட கரசேவையைத் தடுக்கவில்லை என்பதோடு, பாபர் மசூதியை இடித்த பிறகு, அங்கு சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தற்காலிக ராமர் கோவிலுக்குச் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்து, அக்கோவிலில் வழிபாடு நடத்தவும் அனுமதி அளித்தது உச்சநீதி மன்றம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, “இந்தியா சுதந்திரமடைந்த சமயத்தில் எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எந்தெந்த மதத்தினருக்குச் சொந்தமாக இருந்ததோ அதனை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது” என்ற வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.  எனினும், ஆர்.எஸ்.எஸ். கும்பல் சட்டவிரோதமாக உரிமை பாராட்டி வந்த பாபர் மசூதி வளாகத்திற்கு அச்சட்டத்திலிருந்து விலக்கு அளித்து சலுகை காட்டப்பட்டது. அச்சட்டத்திற்கு மட்டுமின்றி, இந்தச் சலுகைக்கும் சேர்த்தே உச்சநீதி மன்றம் ஒப்பதலை அளித்தது.

பாபர் மசூதி வளாக நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்நடவடிக்கை சரியா, தவறா எனத் தீர்ப்புக் கூறுவதற்கு அப்பாலும் சென்று, “இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதற்கும் தொழுகை நடத்துவதற்கும் மசூதி என்பது அவசியமான ஒன்றல்ல. முஸ்லிம்கள் திறந்தவெளியில்கூட தொழுகை நடத்தலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிட்டது உச்சநீதி மன்றம். பாபர் மசூதி வழிபாட்டுத் தலமல்ல என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரச்சாரத்திற்கு இந்தத் தீர்ப்பு ஜாக்கியாகப் பயன்பட்டு முட்டுக் கொடுத்தது.

கட்டப்படவிருக்கும் ராமர் கோவிலுக்கான தூண்களை பரிசோதனையிடும் “சாமியார்”.

இந்து மத உணர்வைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது குறித்த நடந்த வழக்கொன்றில், ஆர்.எஸ்.எஸ்.இன் கருத்தை நேரடியாகவேப் பிரதிபலிக்கும் வகையில், “இந்துத்துவா அல்லது இந்துயிசம் என்பது மதம் என்ற குறுகிய பொருள் கொண்டதல்ல, அது இந்திய வாழ்க்கை முறை” எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது, உச்சநீதி மன்றம்.

இவை அனைத்திற்கும் உச்சமாக பாபர் மசூதி நில உரிமை வழக்கில் பாபர் மசூதியின் மைய மாடத்தின் கீழ்தான் ராமன் பிறந்தான் என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் பொய்ப் பிரச்சாரத்தையே இந்துக்களின் நம்பிக்கையாகத் திரித்து, அதன் அடிப்படையில் அவ்வளாக நிலம் முழுவதையும் குழந்தை ராமருக்கு பட்டா போட்டுக் கொடுத்து, அங்கு கோவிலையும் கட்டச் சொல்லித் தீர்ப்பளித்தது, உச்சநீதி மன்றம்.

அழும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் கதையாக அத்தீர்ப்பில், “வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதமான செயல்” என்றொரு கருத்தைக் கூறியிருந்தது உச்சநீதி மன்றம்.  மசூதியின் மீதான உரிமை முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டாலும், மசூதியை இடித்த வழக்கிலாவது அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றொரு நம்பிக்கை அக்கருத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்துவந்த நீதிபதி எஸ்.கே.யாதவ் இந்த நம்பிக்கைக்குத் துரோகமிழைத்திருப்பதோடு, சதிக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்தார்கள் என்றும்; பாபர் மசூதியில் தொழுகை நடத்தப்படவில்லை என்பதால் வழிபாட்டுத் தலத்தை இடித்த குற்றம் நிகழவில்லை என்றும் தீர்ப்பில் கூறி, ஆர்.எஸ்.எஸ்.-இன் ராமஜென்ம பூமி இயக்கத்தை நியாயப்படுத்திவிட்டது.

*^*^*

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களிடம் வழிவழியாக வந்த நம்பிக்கையுமல்ல; மசூதியை இடித்துவிட்டு அந்த வளாகத்தில்தான் கோவிலைக் கட்ட வேண்டும் என்பது பாமர இந்துக்களின் கோரிக்கையுமல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் திட்டங்களுள் ஒன்று.

பாபர் மசூதியைக் கைப்பற்றும் தனது சதித் திட்டத்தை 1949-இல் தொடங்கிய இந்து மதவெறிக் கும்பல் 1992-இல் அம்மசூதியைச் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியது. அன்று தொடங்கி இன்று வரையில் உச்சநீதி மன்றம், அலகாபாத் உயர்நீதி மன்றம், ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆகியவை இப்பிரச்சினையில் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குச் சாதகமாவே அமைந்துள்ளன. அதாவது, ராமர் கோவில் என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் அரசியல் திட்டத்தைச் சட்டபூர்வமாக நிறைவேற்றிக் கொடுக்கும் கைக்கூலிகளாக இந்நீதிமன்றங்கள் செயல்பட்டிருப்பதை அத்தீர்ப்புகள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

இதுவொருபுறமிருக்க, பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்திய லிபரான் கமிசன் அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவுமில்லை; சதி குறித்த அக்கமிசனின் முடிவுகள் செயல்படுத்தப்படவுமில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு சிவசேனா-பா.ஜ.க. கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட மும்பய்க் கலவரம் தொடர்பான சிறீகிருஷ்ணா கமிசனின் முடிவுகளும் செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில், மசூதி இடிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் நியாயம் கிடைத்துவிடும் என நம்புவதற்கு இடமுண்டா?

பொருளாதார மந்தத்தாலும், இம்மந்தத்தை கரோனா நோய்த் தொற்று தீவிரப்படுத்தியதாலும் வாழ்க்கையை இழந்து நிற்கும் உழைக்கும் மக்கள் மோடி அரசு மீது கடுமையான அதிருப்தியையும் வெறுப்பையும் உமிழ்ந்துவரும் வேளையில்; வேளாண் விளைபொருள் சட்டத் திருத்தங்களை எதிர்த்து விவசாயிகளும், தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்களை எதிர்த்துத் தொழிலாளி வர்க்கமும் போராடி வரும் வேளையில்; இப்போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணத்தில், இத்தீர்ப்பு வெளிவந்திருப்பது ஆர்.எஸ்.எஸ்.-க்கு இரண்டு வழிகளில் அரசியல் இலாபம் தரத்தக்கதாக அமைந்துவிட்டது.

பாபர் மசூதியை இடிக்கும் நோக்கில் தமது தலைவர்கள் சதியில் ஈடுபடவில்லை எனத் தங்களைப் புனிதர்களாகக் காட்டிக்கொள்ள இத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுவதையும் தாண்டி, இத்தீர்ப்பு தந்திருக்கும் தெம்பில், தைரியத்தில் தமது அடுத்த திட்டமான கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்கும் நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

அரசியல் சாசனப் பிரிவு 370 ரத்து, சிவில் விவகாரமான முத்தலாக் மணமுறிவை கிரிமினல் குற்றமாக்கியிருப்பது, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்கெனவே மதரீதியான மோதல்களைத் தூண்டிவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு இத்தீர்ப்பு கிருஷ்ண ஜென்ம பூமி பிரச்சினையைத் தங்கத் தாம்பளத்தில் தூக்கிக் கொடுத்திருக்கிறது.

தமது வாழ்வாதாரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள ஒன்றுபட்ட, சமரசமற்ற போராட்டங்களில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய மக்களை, மதரீதியாகப் பிளவுபடுத்துவதற்கான பொன்னான வாய்ப்பை ஆர்.எஸ்.எஸ்.-க்கு வழங்கியிருப்பதுதான் இத்தீர்ப்பின் மிகப்பெரும் அபாயமாகும்.

அறிவு

1 மறுமொழி

  1. பாபர் மசூதி இடிப்பு எனும் இழி இந்துத்துவ அரசியலை மிகத்துல்லியமாக புரிந்து கொள்ளும்படி எழுதியிருக்கும் கட்டுரையாளர் அறிவு அவர்களுக்கு பாராட்டுக்கள்… இந்தியமக்களின் கரங்கள் ஒன்றினையும் போது… கரசேவைகள் ஒழிக்கப்படும்…கரசேவர்களோடு சேர்த்து….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க