பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
000
கேள்வி: 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. தலைவர் ஜே.பி நட்டா, “ஆரம்பக்கட்டத்தில் நாங்கள் திறன் குறைவாக சிறியவர்களாக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்-இன் தேவை இருந்தது. ஆனால், தற்போது நாங்கள் வளர்ந்து விட்டோம். எங்களால் சுயமாக இயங்க முடியும்” என்று பேசியிருந்தார். தேர்தல் முடிவுக்குப்பிறகு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ஒரு உண்மையான சேவகருக்கு அகங்காரம் இருக்காது…தேர்தல் பிரச்சாரத்தில் நல்லொழுக்கம் பேணப்படவில்லை” போன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார். இவை அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு இடையில் முரண்பாடுகள் முற்றுவதை காட்டுகின்றன. ஆனால், இந்த முரண்பாடு பா.ஜ.க.-விற்கு எந்தளவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்? ஒருவேளை மோடிக்கு மாற்றாக ஒருவரை தேர்ந்தெடுக்க ஆர்.எஸ்.எஸ். தயாராகிவிட்டதா?
உண்மையில், ஆர்.எஸ்.எஸ்-க்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் முரண்பாடு முற்றுகிறது என்பது ஊதிபெருக்கப்பட்ட விசயம். அதற்காக, ஆர்.எஸ்.எஸ்-பாஜ.க-விற்கு இடையில் முரண்பாடு இல்லையென்றும் அர்த்தமில்லை. சொந்த கட்சிக்குள்ளேயே அடியறுப்பு வேலை செய்துவரும் மோடி-அமித்ஷா கும்பலுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான அதிகார மோதல்கள், மோடி தன்னை ஆர்.எஸ்.எஸ்-க்கு மேலாக முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பது போன்றவை முரண்பாடுகளுக்கான சில கரணங்கள். இம்முறை தேர்தலின்போது பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சார்ந்தவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருந்தது அம்முரண்பாட்டை வெளிக்காட்டியது.
ஆனால், பா.ஜ.க-விற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு, மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு ஏதோ திடீரென்று ஏற்பட்டது அல்ல. அத்வானி, வாஜ்பாய் என ஒவ்வொருவர் காலக்கட்டத்திலும் பா.ஜ.க-விற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு வெவ்வேறு அளவுகளில் இருந்ததுபோல், மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு குஜராத் முதலமைச்சராக இருந்த போதிலிருந்தே தொடர்ந்து நீடித்துவரும் பிரச்சினை என “ஆர்.எஸ்.எஸ் ஓர் அச்சுறுத்தல்” என்ற புத்தகத்தில் ஏ.ஜி.நூரானி குறிப்பிட்டு காட்டுகிறார்.
அத்தகைய முரண்பாடுகள் இருந்தபோதும், 2014-இல் குஜராத் படுகொலை நாயகனாக இருந்த மோடியை முன்னிறுத்தினால்தான் தன்னுடைய இந்துராஷ்டிர கனவை நோக்கி நகர முடியும் என்று உணர்ந்த ஆர்.எஸ்.எஸ். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. மோடியும் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இந்துராஷ்டிரத்திற்கான பல்வேறு அடிக்கட்டுமானங்களை இந்த பத்தாண்டுகளில் உருவாக்கியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்த பத்தாண்டுகளில் வெகுவாக வளர்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இலக்கான காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோவில் திறப்பு போன்றவற்றை மோடி அரங்கேற்றியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக நாடுமுழுவதும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது, மோடிக் கும்பல்.
எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்கும் மோடிக் கும்பலுக்கும் இடையிலான முரண்பாடு என்பது இந்துராஷ்டிரத்தை படைக்கவேண்டும் என்பதிலிருந்து எழுகிறது. இம்முரண்பாடு காரணமாக, “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-விற்கு நெருக்கடியை உண்டாக்கப்போகிறது, மோடிக்கு ஆப்பு வைக்கப் போகிறது” என்று பேசுவதெல்லாம் அபத்தனமானது.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube