மத்தியப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர்கள் எழுதிய புத்தகங்களைப் பாடத்திட்டத்தில் இணைக்க அம்மாநில காவி அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் எழுதப்பட்ட 88 புத்தகங்களை வாங்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு மத்தியப்பிரதேச உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்காக, ஒவ்வொரு கல்லூரியிலும் “பாரதிய ஞான பரம்பரா பிரகோஷ்தா” (இந்திய அறிவுப் பாரம்பரியக் கலம்) என்ற ஒரு வடிவத்தை அமைக்கக் கல்லூரி நிர்வாகங்களுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
“உயர்கல்வி அமைப்பில் இந்திய அறிவு முறையின் மரபுகளைச் சேர்ப்பது” என்ற பெயரில் புராணக் குப்பைகளைப் பாடத்திட்டங்களில் சேர்க்க வழிவகுத்த தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த உத்தரவின் அடிப்படையில் சுரேஷ் சோனி, அதுல் கோதாரி, தீனாநாத் பத்திரா, தேவேந்திர ராவ் தேஷ்முக், இந்துமதி கத்தாரே, கைலாஷ் விஸ்வகர்மா, கணேஷ்தத் சர்மா, சதிச்சந்திர மிட்டல், சந்தீப் வாஸ்லேகர், பி.ஜி.உன்கல்கர், வி.கே.ஜி. பிரசாத் சர்மா, ஹரிசங்கர் சர்மா, பஜ்ரங்லால் குப்தா, ராகேஷ் பாட்டியா, வாசுதேவ் சரண் அகர்வால் உள்ளிட்ட பல காவி பயங்கரவாதிகளின் புத்தகங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன.
மத்தியப்பிரதேச பா.ஜ.க. அரசின் இவ்வுத்தரவின் மூலம், மாணவர்கள் மத்தியில் காவி பயங்கரவாத கருத்துக்கள் திணிக்கப்படும். இதனை “பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் பா.ஜ.க-வின் முயற்சி” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பயங்கரவாதிகள் எழுதிய புத்தகங்களை மாணவர்களின் பாடத்திட்டத்தில் திணிக்கும் முயற்சியானது மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்-கான அடியாள் படையாக மாற்றும் பேரபாயம் மிக்கதாகும். பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை எதிர்க்கும் பாசிச எதிர்ப்புச் சக்திகள் காவிக் குப்பைகளைத் திணிக்கும் இச்செயல்பாடுகளை எதிர்த்துக் களமிறங்க வேண்டியது உடனடித்தேவையாகும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube