னநல சிகிச்சை மையத்தில் உள்ள பழுப்பு நிற படுக்கையின் மீது படுத்திருக்கிறேன். ஆழ்ந்த, இருண்ட நினைவுகளுக்குள் நான் செல்கிறேன். தேநீர் அருந்தியபடி, எனக்கு பழக்கமில்லாத ஒரு ஓவிய அறையில் அமர்ந்திருக்கிறேன். என் முன்னே இருக்கும் மேசையில் என்னுடைய செய்தியாளர் குறிப்பேடு இருக்கிறது. அந்த வீடு பழையாதாக இருப்பினும் மிகவும் சுத்தமாக இருக்கிறது.

இதோ ஒரு ஓவியத்தில், இந்துக்களின் கடவுளான கணேசனுக்கு முன்னால் ஒரு சிறிய பலிபீடம் இருக்கின்றது. இந்து பயங்கரவாத – மேலாதிக்க அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சங்க்-ன் முக்கியத் தலைவர்களான தீனதயாள் உபாத்யாயா மற்றும் அத்வானி ஆகியோரின் படங்களும் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளன.

நான் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழில் நகரமான தாத்ரிக்கு அருகில் உள்ள பிஷாதா என்ற கிராமத்தில் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

கொடும்குற்றம் செய்த பின்னரும் தண்டனையை அனுபவிக்காத குற்றவாளியை நான் பேட்டி எடுக்க வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? நான் ஒரு முசுலீம் என்பதையும் இந்து வன்முறைக் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட 52 வயதான முகமது அக்லக்கின் பெயரின் ஒரு பகுதியே என்னுடைய பெயர் என்பதையும் அவர் நன்கு அறிவார்.

செப்டம்பர் 28, 2015 ஆம் நாள் அந்த கும்பல் படுகொலை நடைபெற்ற சில மாதங்கள் கழித்து அவரை நான் சந்திக்க வந்திருக்கிறேன். முகமது அக்லக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள வீட்டில்தான் அமர்ந்திருக்கிறேன். அவருடனும் அவரைச் சுற்றியுள்ள சகக் கூட்டாளிகளிடனும் என்னுடைய உரையாடலை தொடங்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.


படிக்க : நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்


ஏன் எதற்காக அக்லக் கொல்லப்பட்டார் என்ற என்னுடைய கேள்விகளுக்கு சிறிது நேரம் மவுனத்திற்குப் பின்னர் அவர் பேசத் தொடங்குகிறார். “அக்லக் ஒரு பசுப் படுகொலையாளன். இந்துக்கள் புனிதமாகக் கருதி வழிபடும் விலங்கான பசுவினை கொன்றார். முசுலீம்களிடமிருந்து இந்துக்கள் எப்படி தங்கள் புனிதப் பசுவை மீட்க முடியும் என்பதற்கு இது ஒரு எதுத்துக்காட்டு. அக்லக்கின் செயல்கள் ஒரு தேச விரோதச் செயல்கள் என்பதை மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்” என்றார்.

அந்த சமயம் என்னுள் அட்ரனலின் சுரப்பி மிகவும் வேகமாக சுரக்கிறது. ஆபத்தினை என்னுடைய மூளை உணர்வதற்குள் உடல் முழுக்க அச்சுரப்பி பாய்கிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற உள்ளுணர்வு என்னை தட்டியெழுப்புகிறது. நான் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேட்டியிலேயே மீண்டும் கவனம் செலுத்துகின்றேன்.

என்னிடம் முகமது அக்லக் கும்பல் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை செல்போனில் இருந்து போட்டுக் காட்டிய படியே சொல்கிறான் “எங்கள் இரத்தம் கொதிக்கிறது”. டிசம்பர் மாத கடுங்குளிரிலும் என் உடல் வியர்த்துக் கொட்டுகின்றது. இசுலாமியர்களினுடைய எதிரிகளின் மத்தியில் நான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்.

என்னுடைய எவ்வித உணர்ச்சியையும் காட்ட முடியாமல் எவ்வித உதவியற்றவனாக இங்கே வீற்றிருக்கிறேன். என்னைப் பாதுகாக்க வேண்டி, உதடுகளை இருக்க மூடிக் கொள்கிறேன். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பினும் கூட நான் ஒரு முசுலீம் என்ற உணர்வினை அழித்துவிட்டு மிகவும் குறைவாகவே பேசுகிறேன்.

குற்ற உணர்வு என்னை பிடித்தாட்டுகிறது. ஆனாலும் நான் அவன் வீட்டில் அவனோடு பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த பயங்கர சிந்தனை என்னை சிந்திக்க விடாமல் செய்கிறது.

அவனுக்கு மட்டுமல்ல எனது இரத்தமும் கொதித்துக் கொண்டு இருக்கின்றது. நான் சத்தமாக அலற வேண்டும் எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் நான் மிகவும் அமைதியாக அங்கே அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

நான் அங்கிருந்து கிளம்பிச் செல்லும்போது, என் பின்னால் உரக்கச் சிரிப்பதும், ஏமாற்றப்பட்ட நிருபராக அதுவும் சுன்னத செய்யப்பட்டவராக என்னை இகழ்வதும் தேச விரோதி, பாகிஸ்தான்காரான் போன்ற வசைச்சொல்கள் கேட்பது போன்ற நிகழ்வுகள் என்னுள் வந்து போகின்றன.

மாட்டுக்கறியின் பெயரால் கொல்லப்பட்ட அக்லாக் (உள்படம்)

அந்த நாளில் நான் அடைந்த உணர்ச்சிவசப் படுதலுக்கு நீண்ட நாள் கழித்து, ஏறத்தாழ 3 ஆண்டுகள் கழித்து மருத்துவரின் சிகிச்சையின்போதும் அதே நினைவுகளால் வந்தடைந்தேன். நான் எவ்வித ஆதரவுமற்றவன் என்ற எண்ணம் என்னை ஆழ்ந்த அச்சத்தில் மூழ்கடிக்கிறது.

குறிக்கோளை அடைவதற்காக மரபுகளை அழித்தொழிக்கும் பத்திரிகையியல் துறையினை தெரிவு செய்தேன் என்தற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னுடைய அடையாளத்துக்கும் என்னுடைய சமூகத்துக்கும் நான் துரோகம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

இந்த சிகிச்சையளிக்கும் நேரமானது, இந்தியாவில் நானும் எனது மக்களும் தினம் தினம் எந்த அளவுக்கு வெறுப்புணர்வை எதிர்கொள்கிறோம் என்பதை முதன்முறையாக தெளிவாக படம் பிடித்துக் காட்டியது. எனது அறிவினை முழுவதும் இழந்துவிட்டேன். என் இதயம் மிகவும் கனத்துப் போய்விட்டது.

அந்த நாள் படுக்கையில் தூக்கம் வரும் வரை அழுது கொண்டே இருந்தேன். கனவில், நான் இந்து வன்முறைக் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறேன். அவர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறேன். இரவு முழுவதும் அக்கனவு நீண்டது. அன்றிலிருந்து துக்கமும் அச்சமும் எனை ஆழ்த்திக் கொண்டே இருந்தன.

மோடியின் இந்தியாவில் முசுலீம்கள் வாழ்வது இனி கனவு தான்

மனநல சிகிச்சையாளரிடம் 35 வயதான நான் வர வேண்டிய அவசியம் என்ன? பத்திரிகைத் துறையும் முசுலீம் என்ற அடையாளத்தை வைத்து என்னை கணக்கிடுவது என்ற அணுகுமுறையும் தான் என்னை மிகவும் சேதமடைய வைத்து இருக்கின்றன.

நாட்டில் பலராலும் வரவேற்கப்படக் கூடிய நாளிதழ்களில் ஒன்றானதாகவும் முற்போக்கானதாகவும் கருதப்படும் தி இந்து ஆங்கில இதழிலின் டெல்லி பிரதேச பிரிவின் செய்தியாளராக -செய்தி எழுதுபவராக- 2012 முதல் 2018 வரை ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன்.

நான் பணியாற்றிய காலத்தில் முக்கியமாக டெல்லி மற்றும் வட இந்தியாவில் ஏற்பட்ட மத மோதல்கள் மற்றும் மதவாதம் பரவுவது தொடர்பான வேலைகளை மேற்கொண்டேன். இடது மற்றும் முற்போக்கு கருத்துக்களை முன்னிலைக்கு கொண்டு வந்து செய்தியாக்கும் முசுலீம் நபராக அப்பிரிவில் நான் மட்டுமே இருந்தேன். இந்துமத வெறி வன்முறை தொடர்பாக நான் எழுதிய கட்டுரையால் தி இந்து நாளிதழானது வலது சாரிகளால் இந்து விரோதி என்று முத்திரைக்குத்தப்பட்டது.

அக்கட்டுரைக்காக இந்தியாவின் பல பகுதிகளுக்கு நான் நேரில் செல்ல வேண்டியதாக இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரிலிருந்து ஏற்பட்ட வகுப்பு மோதல்கள், அவை முன்னெப்போதும் இல்லாமல் இப்போது முன்னிலை வந்துள்ளதை டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிளிலிலேயே சென்று உணர்ந்தேன்.

ஆனால், இதை ஆங்கில ஊடகங்கள் பொருட்படுத்துவதே இல்லை. இந்துத்துவா என்பது சாதாரணமானது என்றும் அது இந்து மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கூறுகின்றன.

வலதுசாரி கும்பலுக்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த எலைட் மனிதரான நரேந்திர மோடி 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது கிடைத்தார். அதற்கு பிறகு வலதுசாரி தொடர்பான சிந்தனைகளில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டது. இது ஏதோ திடீரென கிடைத்துவிடவில்லை. பல பத்தாண்டுகளாக அவர்கள் பொறுமையாக உறுதியான ஆழமான வலைப்பின்னல்களை உருவாக்கினார்கள். அதன்மூலமே இந்த அறுவடையை சாதித்தார்கள். தேர்தலானது அவர்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டியது அவ்வளவே.

களத்தில் மக்களை நேரடியாக சந்தித்து எப்படிப்பட்ட செயல்பாடுகளை வலதுசாரியினர் மேற்கொள்கிறார்கள் என்பதை அறிய நான் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டுக்கு இடமாற்றம் பெற முடிவெடுத்தேன்.

நான் சார்ந்துள்ள இசுலாமிற்கு எதிரான பயங்கரவாத சிந்தனை கொண்ட கும்பலைச் சேர்த்து இசுலாமிய மக்களின் மீது கலவரங்களை நடத்த வேண்டும் என்ற நபர்களை சந்தித்து பேட்டி எடுத்தேன். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நான் ஒரு இசுலாமியன் என்பதை ஒரு போதும் மறைக்கவே இல்லை.

இந்த பயங்கரவாத தலைவர்கள் என்னை அழைக்கும்போது “ஜி”யை சேர்த்தே அழைத்தார்கள். பேட்டியின் முடிவில் அவர்களின் இதழ்களில் புன்னகை அரும்புகின்றது. வகுப்புவாத களத்துக்கு அப்பால், என்னை அவர்கள் பத்திரிகையாளராகவே பார்த்தார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் முகமூடிகள் தேவையில்லாததால், ஆனால் இந்த அணுகுமுறைகள் எல்லாம் மாறிவிட்டன. 2015 மே முதல் 2018 டிசம்பர் வரையில் ஏறத்தாழ 44 பேர் பசு தொடர்பாக வன்முறையால் இந்தியா முழுவதும் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போது என்னுடைய பழைய தொடர்புகளை சந்திப்பதற்கே மிகவும் அச்சமாக இருக்கின்றது. அவர்களில் பலர் முசுலீம்களை தாக்குவது கொல்வது மற்றும் முசுலீம்களின் புனிதத்தை அழிக்கின்ற வேலைகளை செய்வதால் அவர்களை தொடர்பு கொள்ள என்னால் இயலவில்லை.

நண்பர்கள் என்னுடைய அடையாளங்களை மறைத்துக் கொள்ளும்படி கூறினாரகள். என்னுடைய சுயவிபரங்களை மறைக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் மோடியின் இந்தியாவில் மிகவும் தீவிரமான அச்சத்தில் உள்ளேன்.

ஏன் என்னுடைய முசுலீம் பெயர் கூட வன்முறைக் கும்பலால் தாக்கப்படுவதற்கு காரணமாகலாம். ஒரு முசுலீம் பத்திரிகையாளர் இப்படி ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது ஆச்சரியமான ஒன்றாகக் கூட இருக்கலாம்.

நீங்கள் இன்று கொல்லப்படுவீர்கள் என்ற தகவல் கிடைக்குமாயின் என்ன நடக்கும்? அன்றைய நாள் முழுவதும் பயம், வலி, அதிர்ச்சி, கோபம் என அனைத்துமே பிடித்தாட்டும். அது ஒரு பயங்கரமான அனுபவம். அந்த அனுபவமானது கைப்பிடி இல்லாத கத்தியைப் போல இரு பக்கமும் கூரானது, அச்சமயத்தில் நான் ஆதரவற்றவனாக உணர்வேன்.

முசுலீம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கொலைகள் என எதையும் தடுக்க முடியாத நான் பத்திரிகையாளர் பொறுப்பை துறந்தேன். ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புரிகின்றது. ஒரு முசுலீம் பத்திரிகையாளர் நல்ல குறிக்கோள்களுடனும் கூர்நோக்காளராகவும் நீடிக்க வாய்ப்பில்லை.

மோடியின் இந்தியாவின் நாங்கள் குறிவைக்கப் பட்டிருக்கிறோம். நான் உறுதியாகச் சொல்கிறேன் அந்த பயங்கரம் நிறைந்த கதையில் நாங்கள் ஒரு அங்கமாகப் போகிறோம். இந்த விளைவானது என் மனநிலையில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியது, பின்னரே நான் தெளிவடைந்தேன்.

மனிதப் பன்றிகளும் புனிதப் பசுக்களும்

கடந்த நான்காண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் கும்பல் படுகொலைகளால் கொல்லப்பட்ட பலரில் அக்லாக்-ன் செய்தியே எனது முதல் கும்பல் படுகொலை செய்தி சேகரிப்பாகும்.

இந்து விழிப்புணர்வு’-ன் நம்பிக்கையை பெறுவதற்கு நான் வாரக்கணக்கில் அவர்களோடு நேரத்தை கழித்திருக்கிறேன். அவர்கள் அசாதாரணமான கொலையாளிகள் அல்ல. உண்மையை சொல்லப்போனால் அவர்கள் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் எதிர்காலமே இல்லாதவர்கள்.

நான் அவர்களோடு உணவருந்தி இருக்கிறேன். அவர்களின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து இருக்கிறேன். அவர்கள் சமூகமயமாக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களால் தாக்கப்பட்ட முசுலீம்களைப் பற்றி கேலி செய்யும்போது அவர்கள் கண்களைக் கூட இமைப்பதில்லை. நான் இப்போதும் பாதுகாக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.


படிக்க : கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி


ஷாமிலி என்ற கிராமத்தில் வசிக்கும் விவேக் பிரேமியை நான் 2015 கோடையில் சந்தித்தேன். அதன் பிறகே அவன் மூலம் எனக்கு தொடர்பு கொள்ள பலர் கிடைத்தனர். பொது இடத்தில் 22 வயதான முகமது ரியாஸ் என்பவரை கடுமையாகத் தாக்கினான் என்பதற்காக பிரேமி கைது செய்யப்பட்டிருந்தான்.

நான் சந்தித்த போது பிரேமி 22 வயதை நெருங்கிக் கொண்டு இருந்தான். அவன் ரியாசை அடித்ததை திட்டமிட்டு வீடியோ எடுத்திருந்தான். அந்த வீடியோ ஒரு நிமிடம் 24 வினாடிகள் கொண்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில், ரியாசை கடுமையாகத் தாக்குகிறான் பிரேமி. ரியாசின் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதைக் கூட பொருட்படுத்தாமல் தன்னுடைய பெல்ட்டால் கடுமையாக விளாசுகிறான்.

அந்த வீடியோ முழுவதும் அவனின் முகம் மற்றும் நடவடிக்கைகள் தெளிவாக வரும்படி வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. அவனின் கண்களில் முசுலீம் வெறுப்பை நான் உற்று கவனித்தேன்.

பிரேமி என்றால் இந்தியில் காதலர் என்று அர்த்தமாம். அந்த வீடியோ அவனை உள்ளூரில் பிரபலமாக்கியது. வாட்ஸ் அஃப் மூலம் அந்த வீடியோ பலரையும் சென்றடைந்ததால் அவன் விரைவிலேயே பஜ்ரங் தள் அமைப்பின் முக்கிய உள்ளூர் தலைவரானான்.

முசுலீம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது, காதல் ஜோடிகளைப் பிரிப்பது, மாடு வெட்டுபவர்களை தாக்குவது என்பதே அவர்களின் ஒரே நோக்கம்.

(தொடரும்…)

முகமது அலி (இந்து மேலாதிக்கம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.)

India’s transformation under Narendra Modi என்ற புத்தகத்தை எழுதி வருகிறார்.
thebaffler.com என்ற தளத்தில் The Scream என்ற தலைப்பில் வெளியான ஆங்கில கட்டுரை

தமிழாக்கம் : மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க