மத்துவ சமூக அமைப்பை இந்த மண்ணில் மலர்விக்க, எண்ணற்ற புரட்சிப் போராளிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அரச பயங்கரவாதத்தின் கொடும் கரங்களால் என்கவுண்டர் என்ற பெயரில் துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் ஏந்தி, சிறைக் கொட்டடியில் சித்திரவதைக்கு ஆளாகி வீர மரணத்தை தழுவியுள்ளனர்.
ஈடு இணையற்ற அந்த மாவீரர்களின் கடந்தகால தியாக வரலாற்றை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. சொந்த வாழ்க்கையின் சுக போகங்களை உதறித் தள்ளிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உரிமை முழக்கமிட்டு, குரலற்ற மக்களின் குரலாய் களமாடிய மாவீரன், ஆதிக்க சக்திகளை குலைநடுங்க வைத்த போராளி, அடிமை விலங்கு ஒடிக்க ஆர்த்தெழுந்து போராடிய அடலேறு, தமது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த உண்மையான பொதுவுடமை புரட்சியாளர் தோழர் வர்கீஸ்.
போலீசுத்துறை உயர் அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால், உத்தரவால் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களை சுட்டுக் கொன்ற போலீஸ் ராமச்சந்திரன் நாயர் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் “நான் நிகழ்த்திய மோதல் கொலை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
படிக்க :
நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
மக்களுக்காக போராடிய ஒரு மாவீரனை சுட்டுக்கொல்ல நேர்ந்தது குறித்து ராமச்சந்திரன் நாயரின் மனசாட்சி அவரை உலுக்குகிறது. வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால், சொந்த வாழ்க்கையின் மீதுள்ள நாட்டத்தால் இத்தனை ஆண்டுகாலம் மூடிமறைத்த உண்மைகளை ராமச்சந்திரன் நாயரால் வெகு காலம் மறைத்து வைக்க முடியவில்லை.
1970 பிப்ரவரி 18-ம் தேதி மாலையில் நடந்த இந்த அக்கிரம கொடுங்கோன்மை பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் ராமச்சந்திரன் நாயர் அளித்த பிறகுதான் 30 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் நிகழ்ந்த உண்மைகளை உலகம் அறிந்து கொண்டது. என்னை கொலை செய்ய வைத்தார்கள். நான் அதை செய்ய நேர்ந்தது. இந்த பாரத்தை 30 ஆண்டுகளாக நான் சுமந்து திரிந்தேன். இந்த உண்மையை வெளி உலகிற்கு சொல்லியாக வேண்டும் என்று ராமச்சந்திரன் நாயரின் ஆற்றாமையும் குற்ற உணர்வும் இந்த வாக்குமூலத்தை அளிக்க வைத்துள்ளது.
வசந்தத்தின் இடிமுழக்கம் நக்சல்பாரி எழுச்சியின் விளைவாக மேற்கு வங்கத்தில் உருக்கொண்ட புரட்சிப்புயல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் சூறாவளி போல் சுழன்று அடித்தது. கேரளத்தில் புரட்சிகர இயக்கம் உருப்பெற்று வளர்ந்த வரலாற்றை இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
போலீசால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வர்கீஸ்
வயநாடு என்பது ஆதிவாசி மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதி. கேரள வரலாற்றில் பழசி ராஜாவின் படைப்பிரிவுகளில் அங்கம் வகித்தவர்கள் குரும்பர் போன்ற ஆதிவாசிகள் தான்; ஆனால் அந்த உழைக்கும் மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை. அனைத்து நிலங்களும், வளங்களும் ஜமீன்தார்களுக்கும், குத்தகை கம்பெனிகளுக்கும் வந்தேறிய நிலப்பிரபுக்களுக்கும் தனி உரிமையாக இருந்தது.
ஆதிவாசி மக்களை கால்நடைகளைக் போல் அறுவடைக் காலம் முடிந்ததும் அவர்களை சந்தைக்கு கொண்டு போய் விற்பனை செய்வார்கள். ஆதிவாசிகளை விற்பனை செய்யும் ஒரு அடிமை சந்தை இருந்தது. உயிரும் உணர்வும் உள்ள அந்த எளிய மக்களை பண்ட  மாற்று முறையில் ஆதிவாசி அடிமைகளை விற்பனை செய்யும்முறை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது.
அடிமை வர்க்கத்தினர் தங்களது விடியலுக்கு நக்சல்பாரி புரட்சி பாதையை அவர்கள் தேர்வு செய்தது பற்றி யார் எப்படி குறை சொல்ல முடியும்? ஆதிவாசி மக்களுக்கு தோழர் வர்கீஸ் மகானாக தென்பட்டார், தங்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க வந்த பெருமகனாக ஆராதனை செய்தனர். புரட்சியின் நோக்கங்களை உயிரை விட மேலாகவும்  சொந்த விருப்பு வெறுப்புகளை விட மக்களின் விருப்பங்களை உயர்வாகவும் மதித்து செயல்பட்ட ஒரு மாபெரும் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களை தனது கையால் சுட்டுக்கொன்ற வேதனை போலீஸ் ராமச்சந்திரன் நாயர்-ஐ வாட்டுகிறது.
1971-ம் ஆண்டு நக்சல்பாரி புரட்சியாளர்களின் அனல் தெறிக்கும் செயல்பாட்டு களமாக மேற்கு வங்கம் விளங்கியது. கொல்கத்தா நகர் முழுக்க ஆயுதம் தாங்கிய போலீசுப்படை நிறைந்திருந்தது. ஏராளமானோர் போலீசுத்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். காங்கிரஸ் கருங்காலி கும்பல் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் துடிப்பான இளைஞர்கள் அடுக்கடுக்காக கைது செய்யப்பட்டனர். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பெற்றோர்களின் எதிரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். குரூரமான விசாரணைகளுக்கு பிறகு ஏராளமான இளைஞர்களை கொன்றுவிட்டனர்.
1972-ம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில் சாரு மஜூம்தார் போலீசுத்துறையின் பிடியில் அகப்பட்டார். அந்த மெலிந்த உடலும் அந்த கம்பீரமும் என் மனதில் பதிந்து போனது. ஒருநாள் அந்த வீர மகனை கொன்றதாக எங்களுக்குத் தெரியவந்தது. அந்தப் பூதவுடலை பார்க்கவும் எங்களை அனுமதிக்கவில்லை. விஷம் செலுத்தி அந்த வீர மகனை கொன்றதாக பிறகு தெரியவந்தது. மார்க்சிஸ்ட் கட்சியும் மேற்கு வங்கத்தை ஆண்டுகொண்டிருந்த முதலாளித்துவ கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று தனது அனுபவங்களை இந்த நூலில் ராமச்சந்திரன் நாயர் பதிவு செய்துள்ளார்.
சிவராமன் என்கின்ற கருங்காலி தோழர் வர்கீஸ் அவர்களை நம்பவைத்து காட்டிக்கொடுத்துவிடுகிறான். “மேற்கு வங்கத்துக்கு போய் அங்கு நடக்கிற போராட்டங்களில் கலந்துவிட்டு திரும்பி வந்தபிறகு இயக்கத்தை சீர்படுத்தி போராட்டத்தை தொடரலாம் என்று திட்டம் போட்டு இருந்தேன். இன்று இரவு வண்டி ஏறனும் என்று முடிவு செய்து இருந்தேன். சிவராமன் எங்களுக்கு பணம் தர வேண்டி இருக்கு அவனிடம் பணம் கேட்டு இருந்தேன். வேலைக்குப் போய்விட்டு வந்து தரேன் அதுவரைக்கும் வேணும்னா படுத்துக்கங்கன்னு சொல்லி கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு போனான். இப்படி சதி வேலை செய்வான் நான் எதிர்பார்க்கவில்லை” என்று தோழர் வர்க்கீஸ் சொன்னதை இந்நூலில் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகிறார்.
“உங்களில் ஒருத்தர் தான் என்னைக் கொல்ல போறீங்க. நான் சொன்னதை மறந்துடாதீங்க. எனக்கு முழக்கம் போடுவதற்கான வாய்ப்பை தர வேண்டும். தேவையே இல்லாம எதுக்கு சார் பொழுதை போகிறீர்கள், நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிற விஷயம் உங்களுக்கும் தெரியும், நீங்கள் என்னை கொலை செய்து விடுவீர்கள் என்ற உண்மை எனக்கும் தெரியும். இந்த ஒருவருக்கு பதிலாக ஆயிரம் ஆயிரம் வர்கீஸ் உருவாகுவார்கள். இந்தக் காலக் கட்டத்தில் தவிர்க்க முடியாத தேவை இதுதான்.” என்று போலீசிடம் கூறுகிறார் வர்க்கீஸ்
டி.ஐ.ஜி. விஜயன் அவன்கிட்ட எதையும் கேட்க வேண்டாம், விட்டுவிடலாம் என சொல்வது கேட்டது. இவனைக் கொன்று விடுவதாக முடிவு பண்ணியிருக்கோம் உங்களில் யார் இவனை சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள்? யாரும் எதுவும் பேசவில்லை தயாராக இருப்பவர்கள் கை தூக்குங்க மற்ற 3 பேர்களும் தயங்கிக் கொண்டே கைகளை தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன். உன்னால் முடியாதா என்று என்னைப் பார்த்து கேள்வி கேட்டார்.
இவனை நாங்க உயிரோட அல்லவா பிடிச்சோம்; இவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை; இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும் என்றேன் நான். “அதை முடிவு பண்றது? நீயா?” டி.எஸ்.பி. லட்சுமணா சொன்னார். “இதை நீதான் செய்யணும் இல்லேன்னா நக்சலைட்டுகள் நடந்த மோதலில் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.” கடுமையான சொற்களைக் கேட்டதும் நான் நடுங்கிப்போனேன் அந்த ஒரு நிமிடம் நான் கோழை ஆனேன்; நானே கொன்னுடுறேன் குரல் உயர்த்தி சொன்னேன்.
அந்த மாவீரனுக்கு மனதால் விடைகொடுத்து நாவால் சூ என ஓசை எழுப்பினேன். துப்பாக்கியின் விசையை சுண்டினேன் குண்டு சீறிப் பாய்ந்தது மிகச்சரியாக இடதுபுற நெஞ்சில் குண்டு பாய்ந்த ஓசையைக் கடந்து வர்கீஸ் இடமிருந்து சத்தம் முழங்கியது மாவோ ஐக்கியம் ஜிந்தாபாத்! புரட்சி வெல்லட்டும்!
அந்த இடியோசை போன்ற முழக்கத்தை கேட்ட போலீசுத்துறையினர் இந்த இடத்திலிருந்து சற்று பின்வாங்கினார்கள். எனது 34 வருட போலீசுத்துறை வாழ்க்கையில் இதுபோல் அஞ்சாநெஞ்சம் கொண்ட வீரனை நான் சந்தித்ததே இல்ல. அந்த மாவீரனின் இறுதி நிமிடங்கள் பற்றி எழுதுவதற்கு, ஆறாம் வகுப்பு படித்த எனக்கு வார்த்தைகள் இல்லை.” இவ்வாறுதான் மரணத்தை வென்ற அந்த மாவீரனை பற்றி போலீஸ் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகிறார். ஈடு இணையற்ற அந்த வீரத் தியாகியின், அந்த இளம் புரட்சியாளரின் வீரமரணத்தை எண்ணிப் பார்க்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது.
எனது வாழ்க்கையில் முதன் முதலாக நான் செய்த ஒரே ஒரு நல்ல விஷயம் தோழர் வர்கீஸ் அவர்களைக் கொலை செய்த பாதகச் செயல் குறித்த உண்மையை வெளி உலகிற்கு தெரிவித்தது தான். 33 வருடங்கள் காக்கி சீருடையில் வாழ்ந்த ராமச்சந்திரன் நாயர் போலீசுத்துறையின் அட்டூழியங்கள் – அநியாயங்கள் – காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை வெளிப்படையாக சொல்கிறார்.
படிக்க :
தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இன்றுவரை போலீசுத்துறை ஆளும் வர்க்கத்தின் ஏவல் துறையாக, ஈவு இரக்கமற்ற கூலிப்படையாக, கொடுங்கோலர்களாக அதன் தன்மை மாறாமல் இன்றுவரை செயல்பட்டு வருகிறது. நிகழ்காலத்தில் நடைபெற்று வரும் மோதல் கொலைகளும் சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் லாக்கப் மரணங்களும், நாகாலாந்தில் அப்பாவி பொதுமக்கள் 14 பேரை சுட்டுக்கொன்ற நிகழ்கால கொடூரமும் இரத்த சாட்சிகளாக நம் கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நூலில்தான் போலீசுத்துறையில் பணியாற்றியபோது கிடைத்த பல்வேறு அனுபவங்களை உள்ளதை உள்ளபடியே ராமச்சந்திரன் நாயர் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். குளச்சல் யூசுப் சிறப்பான முறையில் தமிழ் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
மக்களுக்காக உழைத்தவர்களின் மரணம் மலையை விட கனமானது என்றார் மாவோ. ஈடு இணையற்ற இளம் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களின் நினைவு யுகம் யுகமாக நிலைத்திருக்கும். அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போராட்டக்களத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த பொதுவுடமைப் போராளிகளின் தியாகமும் வீரமும் சமத்துவ சமூக அமைப்புக்கு போராடும் அனைவருக்கும் உரமூட்டும் உத்வேகம் அளிக்கும். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வை சொல்லும் இந்த நூல் நிகழ்கால போராட்டத்திற்கும் அவசியமானதாகும். சமூக மாற்றத்தை நேசிக்கும் இளம் தலைமுறையினர்  அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நூல்.
நூல் ஆசிரியர் : ராமச்சந்திரன் நாயர்
தமிழாக்கம் : குளச்சல் யூசுப்
வெளியீடு : களம் வெளியீடு
8, மருத்துவமனை சாலை, சின்ன போரூர்
சென்னை – 600116
விலை : 160
நூல் அறிமுகம் : எஸ்.காமராஜ்

1 மறுமொழி

  1. ஒரு நூலை விமர்சிப்பதில் பல வகைகளை பார்த்திருக்கிறோம்.தோழர் வர்கீஸ் பற்றிய நூலுக்கான விமர்சனம் நிச்சயமாக தனித்துவமாக விளங்குகிறது.சுட்ட போலீசுகாரர் எப்படி அவரது உணர்வை வெளிப்படுத்தியிருப்பார் என அறிய முடியவில்லை.என்றாலும் தோழர் காமராஜின் விமர்சனம் வர்கீஸின் படுகொலையை அப்படியே நமது உள்ளத்திற்குள் கடத்தி கொண்டுவந்துவிடுகிறார்.நெஞ்சம் பதறுகிறது.விமர்சனம் படித்ததும் கொஞ்ச நேரம் உறைந்து போனேன்.ஒரு என்கவுண்டரின் உள்ளும் புறமும் என்ன நடந்தது என்பதை உணர வைத்திருக்கிறார் விமர்சனம் மூலமாக.நன்றி தோழரே….உங்களின் மொழிநடை எப்போதும் போல கிளர்ச்சிக்கொள்ள வைக்கிறது.வாழ்த்துகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க