மகாலத்தில் அரிதினும் அரிதாகவே இந்திய உழைக்கும் வர்க்கத்தைப் பற்றி, அதிலும் குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிய ஆய்வுகள் வந்துள்ளன. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த காலத்தில், இந்திய விவசாய வர்க்கத்தைப் பற்றியும் விதர்பா விவசாயிகள் குறித்தும் பி.சாய்நாத்தின் ஆய்வுகள் முதன்மையானவையாக இருந்துள்ளன. விவசாயம் தொடர்பாகவும், பழங்குடி மக்கள் தொடர்பாகவும் அவர்களது வாழ்வு சூறையாடப்படுவது தொடர்பாகவும் பெருநகரமயமாக்கத்தின் விளைவாக உருவாகியிருக்கும் கோடிக்கணக்கான உதிரித் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களது நிலைமைகள் குறித்தும் அவ்வப்போது சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

ஆளும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நிலைமை, அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது சமூகத்தின் 99 சதவிகிதமான உழைக்கும் வர்க்கங்கள் குறித்து வந்த இந்த ஆய்வுகள் மிகமிகக் குறைவானவையே.

இருப்பினும், உழைக்கும் வர்க்கத்தின் பிற பிரிவுகளான இந்த வர்க்கங்கள் குறித்து வந்த அளவிற்குக் கூட தொழிலாளி வர்க்கம் தொடர்பாக ஆய்வுகள் வெளிவந்ததில்லை என்பதுதான் அவலமான எதார்த்த நிலைமையாகும். அமைப்புசார்ந்த தொழிற்சங்கங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தும், தொழிலாளி வர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அமைப்பாக்குவதில் கிடைத்த அனுபவங்கள் குறித்த ஆய்வுகள் மிகமிகக் குறைவாக வெளிவந்திருப்பது, மார்க்சிய, கம்யூனிச இயக்கங்கள் திசைவிலகிச் செல்லும் போக்கினை நமக்கு உணர்த்துகின்றன.

தேர்தல் அரசியல் வரம்பிற்குள் இருக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அவ்வப்போது அடிப்படை உழைக்கும் வர்க்கப் பிரிவினர் மத்தியில் செயல்பட்டாலும் அவர்களை அரசியல்படுத்தும் போராட்டம் மிகக் குறைவே. பொதுத்துறைகள் தனியார்மயத்திற்கு எதிராகப் போராடுகின்ற அல்லது பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்ற ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அப்போராட்டங்களில் ஈடுபட்டதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தொழிற்சங்கங்களே மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் அவலநிலைமையை நாம் பரவலாகக் காண்கிறோம்.

இன்னொருபுறம், ‘அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது’ என்று கருதிக்கொண்டு, தான் அன்றாடம் சந்திக்கின்ற தொழிலாளர்கள் குறித்துகூட அக்கறை கொள்ளாத மனோபாவம் சிறிய இயக்கங்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துகிறது.


படிக்க : நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்


இவை எதுவாக இருந்தாலும் மேற்கண்ட நிலைமைகள் மார்க்சிய இயக்கங்கள் அடிப்படை உழைக்கும் வர்க்கங்களிடமிருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன.

எம்மை உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக இதழ்களும், இயக்கங்களும் இவ்வர்க்கங்கள் மத்தியில் மேற்கொண்ட பணிகள், இவ்வர்க்கங்களை அமைப்பாக்குவது தொடர்பாகப் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், மேற்கொண்ட ஆய்வுகள் சொற்பமானவையே என்பது சுயபரிசீலனைக்கு உரியவையாகும்.

***

சத்தீஷ்கர் மாநிலத்தின் சங்கர் குஹா நியோகி, மும்பையின் தத்தா சமந்த் போன்ற மாபெரும் தொழிற்சங்கத் தலைவர்களை இன்று இந்தியாவில் எந்த மூலையிலும் பார்க்க இயலவில்லை. நீண்டகாலமாக தொழிற்சங்க இயக்கத்தில் இருக்கும் இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, என்.ஜி.ஓ.க்கள் தொழிலாளர் வர்க்கத்தை முனைமழுங்கச் செய்துவந்தன. இன்று, அந்த இடத்தை பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இவை இரண்டும் தொழிலாளர் வர்க்கத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தை நிரந்தர அடிமைத்தனத்தில் வீழ்த்தும் ஆபத்தானவை.

மற்றொருபுறம், விவசாயப் பண்ணைகளில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள், செங்கற் சூளைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பல்வேறு வகையான பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள், ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், மால்கள், துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஓலா, உபேர் போன்றவற்றின் வாகன ஓட்டுனர்கள், ஃபிலிப்கார்ட், அமேசான், ஸ்வக்கி, செமேட்டோ போன்றவற்றில் பணிபுரியும் டெலிவரி பாய்கள், நகராட்சி, மாநகராட்சிகளின் துப்புரவுத் தொழிலாளர்கள், நகர வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், மருத்துவ செவிலியர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் அமைப்பாக்கப்படாமல் சிதறிக்கிடக்கின்றனர்.

இப்பிரிவினரை அமைப்பாக்கும் சிரமமான பணியைக் கண்டு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டிருப்பவர்களாகக் கருதப்படுபவர்களே அஞ்சுகின்றனர்.

இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றால் அவர்கள்பால் உள்ளூர் தொழிலாளர்கள் மத்தியில் சிறு முதலாளிகள் உருவாக்கியிருக்கும் அச்சம் தனிவகையானது. வர்க்கப் பார்வையை மறுத்து முன்வைக்கப்படும் மத, மொழி, இனவாத அரசியலுக்கு இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை நிலைமையைப் பயன்படுத்தப்படுகிறது. இத்தொழிலாளர்களை அமைப்பாக்கத் தவிர்ப்பதன் மூலம், வர்க்க ஒற்றுமையைப் பேசுகின்ற தொழிற்சங்கங்கள் கூட, இந்தத் தொழிலாளர்களுக்கு அந்நியமாவதும், இதன் வாயிலாக வர்க்க வேறுபாடு நிலைநிறுத்தப்படுவதும் நடக்கிறது. இந்த வெற்றிடத்தைத்தான் சங்கப் பரிவாரங்கள் கைப்பற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. அதிகாரத்தைக் கையிலெடுக்கும் ஒரு வர்க்கம், அடியாள் படையாக்கப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் முறியடித்து தொழிலாளர் வர்க்கப் பிரிவினரை அமைப்பாக்கி அரசியல் அதிகாரத்தை நோக்கி உயர்த்துவதற்கு இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் அதன் தன்மை, அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனை அமைப்பாக்குவதற்குரிய வாய்ப்புகள், அதில் கிடைத்த அனுபவங்கள் போன்றவை குறித்து விரிவான பரிசீலனை அவசியமாக இருக்கிறது.

***

மும்பையைச் சேர்ந்த, “அரசியல் பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி அலகு” என்ற ஆய்வு மையத்தின் சார்பாக ஆங்கிலத்தில் கொண்டுவரப்பட்ட “இந்திய உழைக்கும் வர்க்கமும் அதன் எதிர்காலமும்” என்ற நூலை “அலைகள் வெளியீட்டகம்” தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்திருப்பது, மேலே குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றுவதற்கான, குறிப்பிடத்தக்க, முக்கியத்துவமுடைய பணியாகும்.

 

உலகம் பன்முகமாக இருந்தாலும் நாமறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே காண்கிறோம். இன்று நாம் காணும் உலகத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களின் உற்பத்தி உறவுகளின் நீட்சியின் காரணமாக நிலவும் வர்க்க வேறுபாடுகளுடன் ஏகபோக முதலாளித்துவக் காலகட்டம், காலனியாதிக்க, நவீன காலனியாதிக்கக் காலகட்டங்களைக் கடந்து இன்றைய மறுகாலனியாக்கக் காலகட்டம் நிலவுகின்ற சூழலில், வர்க்க வேறுபாடுகள் மென்மேலும் சிக்கலான வகையில் வளர்ந்தும் கூர்மையடைந்தும் வருகின்றன.

‘சுரண்டுபவர்கள் – சுரண்டப்படுபவர்கள்’ என்ற இரு பிரிவுகளில், அதிலும் குறிப்பாக ‘முதலாளி – தொழிலாளி’ என்ற இரு பெரும் வர்க்க முரண்பாடுகளில் ‘தொழிலாளி வர்க்கம்’ என்ற ஒரு கூறை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் அதன் நிலைமை குறித்து விரிவாகப் பரிசீலித்திருக்கிறது, இந்நூல்.

அன்றாடம் அல்லலுறும் இந்த வர்க்கம் குறித்து குட்டிமுதலாளிய பிரிவினர் இன்றைக்கும் ஒரு அசட்டைப்போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் உருவான அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் உற்பத்தி முறை போன்றவை காரணமாக, அற்ப ஊதியத்திற்கு எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாமல், பணிப்பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்யும் இந்த தினக்கூலித் தொழிலாளர்கள், நவீன கொத்தடிமைகளாகக் காட்சியளிக்கின்றனர்.

ஒரே வார்ப்பான தன்மையில் தொழிலாளர் வர்க்கத்தை எளிதில் வகைப்படுத்திவிட முடியாத நிலைமை இன்று நிலவுகிறது. இது இந்த வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளை அமைப்பாக்குவதிலும் பிரதிபலிக்கிறது. பாட்டாளி வர்க்கம் குறித்த மார்க்ஸின் வரையறை, ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் தன்மை, இந்தியாவில் பாட்டாளி வர்க்கத்தின் தன்மை குறித்து ஒரு தொகுப்பான சித்திரத்தை இந்நூல் வழங்குவது மற்றொருமொரு சிறப்பாகும்.


படிக்க : பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்


பல்வேறு வகைகளாகப் பிரிந்து கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்க வேண்டும்; பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கம் என்ற உணர்வைப் பெறுவதற்கு அதனை அமைப்பாக்கும் இந்த நடவடிக்கைதான் முதல்படி. அதற்கு உதவும் வகையில், பாட்டாளி வர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், உரிமைகளை அடைவதற்கான போராட்டங்கள், அனுபவங்கள் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். மேலும், பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கும் அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கம் என்ற வகையில், அதனை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதற்குமானக் கடமையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சியவாதிகளுக்கே உரிய இந்தக் கடமையை மேற்கொள்ள இந்த நூல் பெரும் உந்துதலை வழங்குகிறது. அமைப்பாக உள்ள தொழிலாளர்கள், தோழர்கள் தங்களது வட்டங்களில் இந்த நூல் மீதான விவாதங்கள், வகுப்புகளை நடத்துவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை அமைப்பாக்கும் முதன்மையான கடமையை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற வேண்டும்!

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

அலைகள் வெளியீட்டகம்
எண்: 5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
கைபேசி: 9841775112
விலை: ரூ.330.00