107-வது ரஷ்ய சோசலிச புரட்சி நாள் அரங்கக் கூட்டம் மதுரையில் நவம்பர் 7 அன்று காலை 11.00 மணியளவில் தொடங்கியது. ம.க.இ.க-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராமலிங்கம் தலைமையை முன்மொழிய தோழர். மதன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தோழர். மதன் தலைமை உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதில், ரஷ்ய புரட்சியின் சாதனைகளையும் இன்று மோடி கும்பலின் கார்ப்ரேட் திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டம் பற்றியும் வலியுறுத்தி தலைமை உரையாற்றினார்.
தலைமை உரையை அடுத்து, போர் வேண்டாம் என்ற தலைப்பில் தோழர். ரகு கவிதை வாசித்தார். கவிதை உணர்வுபூர்வமாக இருந்தது.
இதனையடுத்து, தோழர். கலையரசன் தொழிலாளர் வர்க்கமும் – தொழிலாளர் கட்சியும் என்ற ஸ்டாலின் நூல் குறித்து புத்தக அறிமுகம் செய்து வைத்தார். பாட்டாளி வர்க்க கட்சியின் உறுப்பினர் எவ்வாறு கட்சியின் கோட்பாடுகள், செயல் தந்திரம், திட்டம் என்பதை ஏற்றுக் கொள்பவராக மட்டுமல்லாமல் நடைமுறையில் செயல்படுபடக் கூடியவராகவும் இருப்பதன் அவசியத்தை பற்றிப் பேசினார். இவ்வாறு ஒரு பாட்டாளி வர்க்க கட்சியை கட்டி அமைத்ததால்தான் ரஷ்யாவில் புரட்சியை நடத்த முடிந்தது ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்த முடிந்தது. அவ்வாறு பாட்டாளி வர்க்க கட்சியை கட்டி அமைப்போம் என்று கூறி முடித்தார்.
இதன் பிறகு, விடியல் கலைக்குழுவின் தோழர் புவனா ”சனாதனம் ஒழிப்போம்” பாடல் பாடினார்.
பகத்சிங்கும் புரட்சிகர தோழர்களும் என்ற புத்தகத்தை நூல் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார் தோழர். அஐய். சுரண்டல்களுக்கு எதிராக பகத்சிங் இறுதி வரை போராடினார். ஆனால், இன்று பிஜேபி பகத்சிங்கை தன்வசப்படுத்த பார்க்கிறது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இதன்பிறகு “எங்கள் வலிகள் உங்களுக்கு புரியவில்லையா” என்ற பாடலை தோழர் புவனா பாடினார்.
இதனையடுத்து விடியல் கலைக்குழுவின் “உலகத்தில் ஒரு நாள்” என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது.
பாசிச கும்பலின் தோல்வி முகம் குறித்து தோழர்.கதிர் விளக்கினார். அதில், உலகம் முழுவதும் பாசிச கட்சிகள் ஆட்சியை பிடித்து வருகின்றன, இந்தியாவில் அது காவி – கார்ப்ரேட் பாசிசமாக உள்ளது. இந்த குறிப்பான காலக்கட்டத்தில் பாசிச பாஜக கும்பல் அரசியல் ரீதியாக தோல்வி முகத்தில் உள்ளது. டிசம்பர் 2019 தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக சாகின்பாக் போராட்டம், மூன்று வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஆகியன பாஜகவின் தோல்வி முகத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தன. மணிப்பூர் கலவரம், உதயநிதியின் சனாதனம் குறித்த உரை, பீகாரின் ஜாதி வாரி கணக்கெடுப்பு என ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தோல்வி முகத்திற்கான அடுத்தடுத்த சான்றுகள். தோல்வி முகத்தை தூக்கி நிறுத்துவதற்காக தான் சந்திராயன்-3, ஜி-20 பிரச்சாரங்களும், மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு போன்றவையும். இந்த தோல்வி முகத்தை அம்பலப்படுத்த இந்தியா கூட்டணியின் வக்கற்ற நிலையையும் பாட்டாளி வர்க்க கட்சியின் தற்போதைய அரசியல் கடமையும் இணைத்துப் பேசி முடித்தார்.
இதன் பிறகு விடியல் கலைக்குழு தோழர் புவனா அவர்கள் “Ban BJP Ban RSS” பாடலைப் பாடினார்.
இப்பாடலை அடுத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழுத் தோழர்.ரவி அவர்கள் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரைப் பற்றியும் இதற்கெல்லாம் ரஷ்யா போன்ற சோசலிச புரட்சி தான் தீர்வு என்றும் பேசினார்.
மேலும், அவர் ”இஸ்ரேலின் காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. கேரளாவில் தமிழ்நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் வீரியமான போராட்டங்களை கட்டி அமைத்திருந்தால் இன்னும் அதிகமாக செய்தியினை கொண்டு சேர்த்திருக்க முடியும். மோடி இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசினார். இஸ்ரேல் உலகம் முழுக்க பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.போர் நடைபெற்ற உடனே இணையத்திற்கு தடை மின்சாரம் துண்டிப்பு என செய்தி வருகிறது. போர் குற்றவாளி, மருத்துவமனை மீது குண்டு வீசும் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகின்றன ஊடகங்கள். ஏகாதிபத்தியங்கள் இருக்கும் வரை போர் இருக்கும்; ரஷ்யாவில் அமைதியை கொண்டு வந்தது ரஷ்ய புரட்சி” என்று கூறி முடித்தார்.
இதன்பிறகு விடியல் கலைக்குழுவின் சுற்றி வளைக்குது பாசிச படை என்ற பாடலை தோழர் புவனா பாடினார்.
தோழர் ஜீவா நன்றி உரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவுற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube