தமிழ்நாடெங்கும் நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் | புகைப்படம் – செய்தி

108வது "நவம்பர் 7" ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் குறித்த செய்தியையும் புகைப்படங்களையும் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

மிழ்நாடெங்கும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக உழைக்கும் மக்களின் திருவிழாவான “நவம்பர் 7” ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாடப்பட்டது.

புரட்சி நாள் கொண்டாட்டம் குறித்த செய்தியையும் புகைப்படங்களையும் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

***

சென்னை – காஞ்சிபுரம்

நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள் வாழ்க வாழ்க!

முதலாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்க அரசை அமைத்த புரட்சி நாளை நமக்கான நாளாக உயர்த்தி பிடிப்போம்!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழுவின், இணைப்பு சங்கமான டி .ஐ மெட்டல் ஃபார்மிக் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் மு. சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ப.சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நமது நாட்டில் நிலவி வரும் ஆர் .எஸ். எஸ்- பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்க அரசை  நிறுவுவதற்கு தொழிலாளி வர்க்கம் அணிதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

சங்கத்தின் பொருளாளர் தோழர் .மகேஷ் குமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்
டி ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.

***

பட்டாபிராம்:

நவம்பர் 7: ரஷ்ய சோசலிச புரட்சி நாள் விழா!

அன்பார்ந்த தோழர்களே,

ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை முன்னிட்டு எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக, பட்டாபிராம் பகுதியில் அரங்க கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு இணைச் செயலாளர், தோழர் லெட்சுமணன் தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பிறகு தனது தலைமை உரையில் ரஷ்ய புரட்சி எப்படி நடந்தது, புரட்சிக்கு பின் அங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன, தற்போது நமது நாட்டின் சூழல் ஆகியவற்றைச் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.

இளம் தோழர்கள் உரைகளுக்கு  இடையிடையே அமைப்பின் பாடல்களைப் பாடினார்கள்.

மேலும் ரஷ்ய புரட்சி நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும், ஏன் கலந்து கொள்ள  வேண்டும் என்பது குறித்து கிளை/இணைப்பு சங்க தோழர்கள் சிறு உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா. சிவா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் ரஷ்ய புரட்சிக்கு பின் அங்கு நிலவிய சமூக சூழல்கள், அங்கு ஏற்பட்ட மாற்றங்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு, நமது நாட்டில் இன்று எவ்வாறு அடக்குமுறைகள், சுரண்டல்கள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது என்பதையும், அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் தங்களுடைய லாபத்திற்காக நாட்டின் உழைக்கும் மக்களையும், தொழிலாளர்களையும் எந்த அளவிற்கு ஒட்டச் சுரண்ட முடியுமோ அந்த அளவுக்குச் சுரண்டுவதையும், ஒடுக்கப்படுவதையும், மக்கள் போராட்டங்களின் மூலம் மாற்ற முடியும் என்பதையும், மக்கள் எழுச்சியை உருவாக்கி மாற்றுப் பொருளாதார கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் இதற்குத் தீர்வு காண முடியும் என்பதையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதன் மூலம் இந்த சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதையும் விளக்கமாகப் பேசி முடித்தார்.

குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது, கலை நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர்கள்  பாடல், கவிதைகள், திருக்குறள் பாடியும், படித்தும் காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு. பொருளாளர் தோழர் பா. சக்திவேல் நன்றியுரையாற்றினார். கூட்டம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவுற்றது.

தகவல்
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

***

ஓட்டேரி:

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் விழா!

தெருமுனை பிரச்சாரம், சென்னை

மக்கள் அதிகாரம் சார்பாக ஓட்டேரி பகுதியில் மக்கள் மத்தியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

***

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பகுதியில் 7. 11. 2024 மாலை 5 மணிக்கு 108வது இரஷ்ய சோசலிச புரட்சி நாள் அரங்கு கூட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) ஆக்சிஸ் இந்தியா கிளை மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தினை ஆக்சிஸ் இந்தியா கிளை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் V.சங்கர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். முதல் நிகழ்ச்சியாக ஹரி அதிரடி தாரை தப்பட்டை குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தலைமை உரையில் ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் தோல்வியும் கம்யூனிசத்தின் வெற்றி சாத்தியமாக்கப்படக் காரணம்; முதலாளித்துவம் உருவாகி 200, 300 ஆண்டுகள் சாதிக்காததை 50 ஆண்டுகளில் ரஷ்யப் புரட்சி சாதித்தது, முதலாளித்துவ கொள்கை இன்றுவரை சோசலிச ரஷ்யா நிகழ்த்தி காட்டிய சாதனையில் ஒரு சதவீதம் கூட நிறைவேற்ற முடியாமல் தோல்வியுற்றே இருக்கிறது. முதலாளித்துவ அரசுகள் கார்ப்பரேட் சேவையை முன்னிறுத்தி மக்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. தற்போதைய உதாரணம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் அரசு நிலைப்பாட்டைக் காண்க. இன்றைய இந்திய அரசு அம்பானி அதானிகளுக்காக நாட்டையே கொள்ளையடித்து வருகிறது. இந்த நடவடிக்கையைத் தான் பாசிசம் என்கிறோம். இந்த கொள்ளை கும்பலுக்கு எதிராகவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! என்கிறோம்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் தோழர் ஜமால் அவர்கள் பாசிசம் என்பது ஏதோ இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இன்று பாலஸ்தீன காசா பகுதியில் பாசிச இஸ்ரேல் இனவெறி போரை நானூறு நாட்களாக நடத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள் நோயாளிகள் மட்டுமல்ல மருத்துவமனைகளையும் குறிவைத்து ஒட்டுமொத்த காசாவையும் தரைமட்டமாக்கியுள்ளது. சொந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடக்கூடிய ஹமாஸ் இயக்கத்தினையும் அதன் தலைவர்களையும் கொன்று பாலஸ்தீனத்தையும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய நாடுகளின் மீதும் போர் தொடுத்து வருகிறது, இஸ்ரேல். அரபு நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் இதற்குத் துணையாக நின்று தனது ஆதிக்கத்தை நிறுவ முயற்சி செய்கின்றன. எதிர்ப்பவர்கள் மீது தீவிரவாதி முத்திரை குத்தி பல பொய்யான தகவல்களைப் பரப்பிவருகின்றன ஏகாதிபத்திய நாடுகள். ஐநா சபை வரை கண்டனங்கள் தெரிவித்தும் இஸ்ரேல் போரை நிறுத்த முன்வரவில்லை தற்போது வரை லெபனான், ஈராக் நாடுகள் மீது போர் தொடுத்து வருகிறது பாசிச இஸ்ரேல். இத்தனை ஆண்டுக் காலம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பக்கமே இந்தியா நின்றது. தற்போது மோடி அரசோ இஸ்ரேலை ஆதரிக்கிறது. இதைக் கண்டிக்கும் விதமாகத் தனது சிறப்புரை நிகழ்த்தினார்.

காஞ்சி இலக்கிய வட்டத்தைச் சார்ந்த தோழர்.இளங்கவி அவர்கள் நமக்கான தலைவர்கள் யார்? என்பதையும் மார்க்ஸ் ஏன் தேவை? லெனின் ஏன் தேவை? என்பதை ரத்தின சுருக்கமாகப் பேசி உரையை நிறைவு செய்தார். வேலூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் சுந்தர் அவர்கள் தொழிலாளர்கள் தற்போது பல பிரிவுகளாக காண்ட்ராக்ட், அப்பரண்டீஸ், ட்ரைனி, நிரந்தர தொழிலாளி என வகைப்படுத்தப்பட்டு சட்ட திருத்தம் என்ற பெயரில் மீண்டும் நவீன கொத்தடிமைதனம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தொழிலாளி வர்க்கமாக நாம் ஒன்றிணையாமல் நம்முடைய வர்க்கம் விடுதலை அடையாது என்பதைக் குறிப்பிட்டு நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்களுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

நவம்பர் தின சிறப்பு உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இணை செயலாளர் தோழர் சரவணன் அவர்கள் பாசிசம் என்பது ஏதோ அமைதியான முறையில் மக்களுக்கான சேவை செய்யக்கூடியதோ மக்களுக்கான ஒரு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதாகவோ நாம் நினைக்க முடியாது. பாசிசம் என்பது வரலாறு நெடுகிலும் ஒரு இன அழிப்பு போரை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. முசோலி, ஹிட்லரிலிருந்து மோடி வரை. இந்தியாவை இந்துராஷ்டரமாக்கும் ஆர். எஸ். எஸ்-பாஜக கும்பலின் கனவை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார் மோடி.

1970 இல் குடிநீர் கிணற்றில் மலத்தை அள்ளி வீசிய சாதியக் கொடுமைகள் இன்றும் வேங்கை வயலில் குடிநீர் நீர் தேக்க தொட்டியிலும் மலத்தை வீசியது வரை தொடர்கிறது. கட்சிகள் எல்லாம் மாறிவிட்டன காட்சிகள் இன்னும் மாறவில்லை. சாதியக் கொடுமை தீண்டாமையை கடைப்பிடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் கையில் தான் இன்று நாடு இருக்கிறது இவர்கள் சாதி தீண்டாமை இன அழிப்பே இவர்களின் கொள்கை. மக்களை ஒன்றிணைய விடாமல் தடுத்து அதானி அம்பானிக்கு சேவை செய்கின்றனர்.

பாசிசமா, பாயாசமா எனப் புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய் பேசுகிறார். தனது ரசிகர்களாக இளைஞர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு கட்சியை ஆரம்பித்து சினிமாவில் இருந்து மீண்டும் ஒரு தலைவனை உருவாக்க வேண்டும். அவன் மக்களுக்கு ஏதாவது செய்ய மாட்டானா என்று மக்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி பொய்யான நம்பிக்கையை இந்த அமைப்பு முறைக்குள்ளேயே உருவாக்கி இதுதான் சரியான பாதை என ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமக்கு அது தேவை இல்லை. இன்று நமக்கான மாற்றதிதிட்டம் என்ன? ஏழுபதுஆண்டு காலம் ரஷ்யாவில் நிகழ்த்திக் காட்டிய அந்த மாற்றுத் திட்டம் தேவை. அந்த பொருளாதார கட்டமைப்பு தேவை. அந்த வீரம் செறிந்த ராணுவம் தேவை, பெண்களுக்கான உரிமை தேவை, சகோதரத்துவம், சமத்துவம் தேவை, அப்பேர்பட்ட ஒரு அரசு கட்டமைப்பை நாம் உருவாக்க புதிய ஜனநாயக குடியரசைக் கட்டியமைக்க வேண்டும். பிற அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஒன்று இணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு நிறுவுவோம் எனக் கூறி தனது சிறப்புரை நிறைவு செய்தார்.

தோழர்கள். ஜோதி, கௌதமி, ஜீவிதா, மகாலட்சுமி, கிளாரா ஆகியோர் புரட்சிகர பாடலில் மூலம் கூடியிருந்த அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள்.

சிறப்பு விருந்தினர் ஓமியோபதி மருத்துவர் தோழர் பாலமுருகன் அவர்கள் குழந்தைகளுக்கான வளர்ப்பு முறை, உணவுப் பழக்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் மீது ஆதிக்கம் குறித்து உரையாற்றினார். பெண்கள் மீதான பாலியல் வன்முறை பெண்களின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. “குட் டச் ,பேட் டச்” சொல்லிக் கொடுப்பதை விட “டோன்ட் டச்” என்று சொல்லிக் கொடுப்பதே சரியானது. அதுதான் நாளைய பெண் சமுகத்திற்குப் பாதுகாப்பை ஏற்படுத்தும். மருத்துவத்தில் கார்ப்பரேட்மயம் நாம் என்ன மருத்து எடுக்க வேண்டும் என்பதையும் கார்ப்பரேட் நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தித் தீர்மானிக்கிறது. மருந்துகளை விட நோய்கள் அதிகரித்து வருகிறது. ரெடிமேடு உணவு பழக்கவழக்கங்களே நோய்களை உருவாக்குகிறது. இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும் என்றால் அரசிடம் அதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆகவே நாம் எதிர்காலத்துக்கான வழியை உருவாக்கிக் கொள்ள வேண்டியது நமது கடமை என உரையாற்றினார்.

நவம்பர் விழாவில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தோழர். திலகவதி மக்கள் அதிகாரம் அவர்கள் தொகுத்து வழங்கினார் பாடல், கவிதைகள், ஓவியம் பெண்கள் மீதான பாலில் வன்கொடுமை நெசவுத்தொழில் பற்றிய கவிதைகள் என அரங்கமே மகிழும் அழகில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதி நிகழ்ச்சியாக வாலிபால், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் சதுரங்க போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகளும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியை NMD பகுதியில் நடத்திக் கொடுத்த இளைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் அப்பகுதி இளைஞர்களுக்கான நினைவு கோப்பை, கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது.

ஆக்சிஸ் இந்தியா கிளை சங்க பொருளாளர். தோழர் சௌந்தரராஜன் அவர்கள் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் அனைத்து குழந்தைகளும் அமைதியாகக் கவனித்ததைக் குறிப்பிட்டு குழந்தைகள் அவர்கள் வயதுக்கு ஒத்தவர்களின் கருத்துகளையும் விரும்பி கேட்கிறார்கள் எனக் குறிப்பிட்டுக் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறப்பு விருந்தினர்களுக்குப் புத்தக பரிசளிப்புடன் இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பாடல் பாடப்பட்டு இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சிஸ் இந்தியா கிளைச் சங்கம்.

***

திருவாரூர்:

நவம்பர் 7 -2024 ரஷ்ய சோசலிச புரட்சி நாளை முன்னிட்டு திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் காலை 10 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கொடி ஏற்றப்பட்டது. மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத் அவர்கள் கொடி ஏற்றினார். மாவட்ட பொருளாளர் தோழர் முரளி அவர்கள் நவம்பர் புரட்சி அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.  இறுதியாக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின் அவர்கள் நன்றி தெரிவித்தார். கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

***

வேலூர்

“நவம்பர் 7” ரஷ்ய சோசலிச புரட்சி நாளை முன்னிட்டு, வேலூர் அடுக்கம்பாறை தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் வேலூர் மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் உரையாற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கி கூட்டம் முடிக்கப்பட்டது.

***

ஓசூர்

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் நவம்பர் 7 புரட்சி நாள் முன்னிட்டு ஆலைவாயிலில் கொடியேற்றி உரையாற்றினார் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன்.

***

கடலூர்:

நவம்பர்-7 ரஷ்ய புரட்சி நாள் விழா

மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சார்பில் பாலியில் கிராமத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்விற்கு அப்பகுதி தோழர் வினாயகம் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் தோழர் மணிபாலன், தோழர் கார்த்திகேயன், தோழர் ராமலிங்கம், தோழர் சுப்ரமணியன், CPM வார்டு உறுப்பினர் பாலிகிராம், தோழர் மணிக்குமார் பாலி கிராமம், தோழர் விஜயன் தா.வ.க கொள்கைப்பரப்புசெயலாளர் புதுவை, தோழர் சாந்தகுமார் தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம் ஆகியோர் ரஷ்ய புரட்சியின் முக்கியத்துவம், அதன் சாதனைகள், ரஷ்ய புரட்சி உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம், உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும்  உழைக்கும் மக்களுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் அது ஏற்படுத்திய நன்மைகள், ஹிட்லரின் பாசிச அபாயத்திலிருந்து இருந்து உலகைப் பாதுகாத்தது.

இன்று உலகம் முழுக்க பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதும் உலகப் போருக்கான சூழல் உருவாகி இருப்பதும் இந்தியாவில் மோடி அமித்ஷா தலைமையிலான அர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அதானி – அம்பானி பாசிசத்தை விழ்த்தி பாசிச  எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைக்க இந்த மகத்தான ரஷ்ய புரட்சி நாளில் உறுதி ஏற்போம்! என்ற அடிப்படையில் தோழர்கள் உரையாற்றி உறுதியேற்றனர்.

இறுதியாக கபடி, வாலிபால் மற்றும் ஒவியம் போட்டிகளில் கலந்து கொண்ட  மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தோழர் பஞ்சநாதன் நன்றியுரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்,
7200112838.

***

மதுரை:

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் விழா!

தெருமுனை கூட்டம், மதுரை.

மதுரையில் ரஷ்ய சோசலிச புரட்சி நாளான்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ரஷ்ய புரட்சியின் சிறப்புகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தின் அபாயம் மற்றும் அதை வீழ்த்த வேண்டிய தேவை குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மதுரை – அரங்கக் கூட்டம்

காலை 11:00 மணிக்கு ஆரம்பித்த நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாள் விழா “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படத்துடன் ஆரம்பமானது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் சங்கர் தலைமை தாங்கினார்.

இளம் தோழர்  சிவா அவர்களின் கவிதை வாசிப்புக்குப் பின் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தோழர் ரவி பாசிச மோடி அரசின் தோல்வி முகத்தையும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

அடுத்ததாக மாணவர் ஹரிஷ் சுற்றுச்சூழல் பேரழிவும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கமும் அதைத் தீர்ப்பதற்கான போராட்டம் கார்ப்பரேட்டுக்கு எதிரானதாகத்தான் இருக்கும் என உறுதிப்படக் கூறி முடித்தார்.

அடுத்ததாகப் பேசிய மக்கள் அதிகாரத்தின் தோழர் கின்சன் வேண்டும் ஜனநாயகம் என்ற முழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தியும் அது எப்படி வந்தது என்பதையும் விவரித்தார்.

மீண்டும் மாணவர் சிவா எழுச்சிகரமாக கவிதை பாடினார்.

அதன் பிறகு மக்கள் அதிகாரத்தின் தோழர் நாகராஜ் அவர்கள் டோல்கேட் போராட்ட அனுபவம் குறித்துப் பேசினார்.

அதன் பின் பேசிய மாணவர் நெல்சன் விஜயின் அரசியலை அம்பலப்படுத்தி பாசிஸ்டுகளுக்கு எப்படி காவடி தூக்கக் கூடிய நபராக இருக்கிறார் என்பதை அம்பலப்படுத்தி விரிவாகப் பேசினார். இது தோழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு மதிய இடைவேளைக்குப் பிறகு மக்களினுடைய பல போராட்டங்களையும் தொகுப்பான வீடியோவாக தோழர்கள் மத்தியில் காணொளி வாயிலாக காட்டப்பட்டது.

அதன் பிறகு பேசிய  மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் உமா அவர்கள் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையை பல்வேறு உதாரணங்களோடு குறிப்பிட்டுப் பேசினார்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு என்ற மாற்றத்தைப் பற்றி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் பேசினார்.

இறுதியாகப் பேசிய தோழர் சிவகாமு கம்யூனிசமே வெல்லும் என்ற தலைப்பில் ரஷ்ய புரட்சியின் வரலாற்றைக் குறிப்பிட்டு விரிவாகப் பேசினார்.

உற்சாகமாக நடைபெற்று இந்தக்  கூட்டம்  மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.

இறுதியாக  நன்றி உரையுடன் கூட்டம் முடிவடைந்தது.

***

நெல்லை :

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்!
இந்த உலகின் திசைவழி இடது தான் என வலதை அலற வைத்த ரஷ்ய புரட்சி நாள் நவம்பர் 7. இந்நாள் உழைக்கும் வர்க்கத்தாலும், அவர் தம் பிரதிநிதிகளாலும் நெஞ்சில் ஏந்தப்பட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. அதன் வழியில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக தூத்துக்குடி பகுதியில் ரஷ்ய புரட்சி நாள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. இதில் பகுதிவாழ் மக்களும், சிறுவர் சிறுமியர்களும், தோழர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் தங்களது குடும்பங்களோடும் கலந்து கொண்டனர். இது குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டு இம்மண்ணில் ரஷ்யப் புரட்சியை நினைவு கூர்வதில் உண்மையான பங்களிப்பை செலுத்தியது.

சிறுவர்கள், சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன்பின் சிறுவர், சிறுமியர்கள் திருக்குறள் உரைத்தல், நாடகம், பாரதிதாசன் கவிதை பாடுதல், தமிழ், ஆங்கிலப் பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்கு தோழர் அ.சார்லஸ், சமத்துவ வழக்கறிஞர் அணி , வி.சி.க, தோழர் சிலுவை பாக்கியம், தோழர் சந்தூரு உள்ளிட்ட தோழர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். அதன் பின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை கண்டு ரசித்தனர்.
ரஷ்யப் புரட்சி பற்றியும், தற்போதைய பாசிச சூழலில் இம்மண்ணிற்கு புரட்சி ஏன் அவசியம் என்பது பற்றியும், பாசிசத்தை வீழ்த்த மாற்று கட்டமைப்பு தேவை என்பது குறித்தும், தோழர் செல்வம் தலைமை உரையிலும், தோழர் தமிழ் சிறப்புரையிலும் பேசினர். இறுதியாக மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க