ரசியப் புரட்சி நீடூழி வாழ்க!

ம்மண்ணில் ஒரு சொர்க்கத்தைப் படைக்க
உடல் உயிர் பொருள் அத்தனையும் இழந்து
உற்றார் உறவினரின்
இழி சொற்கள் சுமந்து

சாதியை ஒழித்து
சரித்திரம் படைக்க
வர்க்கம் ஒழித்து நல்வாழ்வைப்படைக்க
தன்னல வாழ்வை இழந்து
கேலிப் பேச்சுக்களை
வேள்வியிலிட்டு
புலம்பல்களைப்
புறக்கடையில் வீசி

புரட்சிகர இலட்சியத்தைக்
கருவாய் சுமந்து திரியும்
தோழர்களே

தாயின் கருவோ பத்து மாதங்கள்
புரட்சிகரக் கருவோ பல பத்தாண்டுகள்

ஏனென்றால்
நீ சுமப்பது
மனிதக் கருவல்ல

புரட்சியின் கரு!

ஆயிரமாண்டுகளாய்
ஏற்றத்தாழ்வையும்
சுரண்டலையும்
ஆதிக்கத்தையும்
வேரறுக்கும் கரு!

இலட்சியத்தில் உறுதியில்லாதவரைக்
கரு தங்காது

இலட்சியத்தைத்
தவறவிட்டால்
கரு கலையும்

இந்த சுகமான சுமை
உலகில் வேறெங்கேயும் கிடைக்காது!

பிழைக்கத் தெரியாதவர்
விளக்கத் தெரியாதவர்
எத்தனையோ தூற்றல்கள்

போலீஸ்
அரசு
துரோகிகள்
எதிரிகள்
நுகர்வு வெறி
பிற்போக்குக் குடும்பம்
இலட்சியப் பாதையில் எத்தனை கற்கள்?

நேற்று வரை
இலட்சியத்தின்
தலைவர்களாக
இருந்தவர்கள்
இதோ
தன்னலம் மிகுத்து
தரித்திரம் படைக்க
நம்மை ஊசியாய் குத்துகிறார்கள்

இந்தப் புரட்சிகர புலம்பல்வாதிகளை குப்பையில் போடுவோம்
இவர்கள் காலாவதியான
பாடாவதிகள்

ஒரு புரட்சிகர கட்சி
இல்லாமல்
வேதனைகளும் சோதனைகளும்
இல்லாமல்
துக்கங்களும்
துயரங்களும் இல்லாமல்

தடைக்கற்களும் தடுப்பரண்களும் இல்லாமல்
ஒருபோதும் புரட்சியும் இல்லை
புரட்சிகர வாழ்வும் இல்லை
தோழரே!

நெருக்கடிகளே
தலைவர்களை உருவாக்கும்
நெருக்கடிகளே ஊசலாட்டவாதிகளை
ஓடவும் வைக்கும்

இயக்க வேலை செய்யாது
இங்கிதம் பேசும்
பவிசுக்காரரை நடுக்கம்
கொள்ளவும் வைக்கும்

துப்பாக்கி குண்டுக்குப் பயப்படாதவர்கள் கூட
தன் தவறுகள்
வெளிப்பட நேரும்போது அஞ்சுகிறார்கள்
புலம்புகிறார்கள்
துரோகமிழைக்கிறார்கள்

நினைவில் வை
தோழரே

நேற்று செய்த
சாதனைகள்
மகத்தானவை தான்

இன்று நீ
புரட்சிகர இயக்கத்தில்
இலட்சியத்தில்
ஒழுக்கத்தில்
இல்லையெனில்
நீ செய்த சாதனைகளும்
நீ பட்ட வேதனைகளும்
உனக்குச் சொந்தமாய்
இருக்கப் போவதில்லை

புரட்சியை விட
புரட்சிகர வாழ்வில்
புரட்சிகர இயக்கத்தில்
இறுதிவரை
நீடித்திருப்பது கடினம்

எளிதான வாழ்வு தான் வேண்டும் என்றால்
நீ எலியாகக் கூட வாழ முடியாது

தெரியுமா உனக்கு
நாய் கூட
தனக்காக
மட்டும் வாழ்வதில்லை

தனக்காக வாழும் தன்னலவாதிகளின் கருத்துகளை ஒருபோதும் காதில் ஏற்றாதே
காலில் போடு!

புரட்சியின் நாயகனே
மக்களுக்காக
புரட்சிக்காக
வாழ்வதைவிடப்
பெருமை ஏது?

புரட்சிகர உலகை
உருவாக்கத் தன்னை அர்ப்பணித்து வாழும் அனைத்து தோழர்களுக்கும்
புரட்சி நாள் வாழ்த்துக்கள்.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க