ரு வர்க்கம் ஒரு குறிப்பிட்ட சமூக – பொருளாதார உற்பத்தி முறையில் உருவாகி, திடப்படுகிறது; அந்த உற்பத்திமுறை மாறும்போது அவ்வர்க்கமும் சிதைந்து, அழிகிறது; உருமாற்றம் அடைகிறது. தூய வர்க்கம், வர்க்கக்குழு என்பது எப்போதும் கிடையாது. காரணம் ஒருவர்க்கம் வட்டார, சாதி, மத, இன்னும் பல பண்பாட்டு அடையாளங்களைத் தாங்கி நிற்கவே செய்கிறது. வாழ்நிலைக்கான போராட்டத்தின் ஊடே தன் வர்க்கத்தின் சக உறுப்பினர்களையும், வர்க்க உணர்வையும் ஒரு தனி மனிதன் அடைகிறான். அதுவரை வட்டார, சாதி, மத இன்னும் பல பண்பாட்டு அடையாளங்களையே ‘தான்’ என்று அறிகிறான். இச்சிக்கலான நிலையை உணர்ந்து கொண்டாலன்றி சமூகமாற்ற இயக்கங்கள் எதிர்கொள்ளும் சமூகநிலைக்கு முகம் கொடுக்க இயலாது. மேற்கண்ட புரிதல் தேவையை இச்சிறுநூல் முன்னெடுத்துச் செல்கிறது. அந்த வகையில் மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது. இந்நூலுடன் “வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்”‘ என்ற சிறு நூலையும் சேர்ந்து வாசிப்பது நற்பலனைத் தரும். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

நவீன கால ஐரோப்பா இரண்டு விதமான அரசியல்களை நமக்குப் பரிச்சயப்படுத்தியது. முதலாவது, பூர்ஷ்வா (முதலாளிய) தாராளவாத அரசியல். தேசிய அரசு, அரசியல் சட்டம், அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், தேர்தல், நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றை நிறுவனக்கூறுகளாகக் கொண்ட அரசியல் இது. தனிச்சொத்துரிமை, தனிமனிதன், மனித உரிமைகள் ஆகியவை இந்த வகையான அரசியல் கோட்பாட்டில் மையமான இடம் வகிக்கின்றன. இரண்டாவது, மார்க்சிய வர்க்க அரசியல். சமூகம் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பது மார்க்சிய அரசியலின் கோட்பாடு. சுரண்டும் வர்க்கம் ஆளும் வர்க்கமாகவும், சுரண்டப்படும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் உள்ளன. எனவே வர்க்க முரண்பாடுகள் அரசியலாக வெளிப்படுகின்றன. தொழிற்சங்கங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், அவற்றோடு அரசியல் போராட்டங்கள், உழைக்கும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஆகியவை வர்க்க அரசியலின் கூறுகள்.

இவை இரண்டிலும் நேரடியாகச் சேராதது அடையாள அரசியல். தேசம், சாதி, மதம், மொழி, பிரதேசம், பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலை அடையாள அரசியல் என்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில், இன்னும் விரிவாக, மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடையாள அரசியல் கடந்த இரு நூற்றாண்டுகளில் வலுவான ஒன்றாக இடம்பெறுகிறது.

அடையாள அரசியலின் பண்புகள்

அடையாள அரசியல் என்பது பின்னை நவீனத்துவச் சூழலில் உருவான ஒருவகை அரசியல் என்று சில மேற்கத்திய சிந்தனையாளர்கள் எழுதி வருகின்றனர். மேலைநாடுகளின் நவீன அரசியல் லட்சியங்கள் பொய்த்துப் போன பின்னர், உலக அளவில் சோசலிசத்திலும் நெருக்கடிகள் எற்பட்ட பின்னர் அடையாள அரசியல் முன்னுக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சமீப காலங்களின் அடையாள அரசியல் தீவிரப்பட்டு வருவதற்கும் அது கோட்பாட்டு ஆதரவைப் பெற்றமைக்கும் மேலே குறிப்பிட்ட சூழல்கள் காரணமாக இருக்கலாம். ஆயின் ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில், காலனியச் சூழல்களில், 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஓர் அரசியல் நடந்து வந்திருக்கிறது.

படிக்க:
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்

முதலாளியத்திற்கு முந்திய பழங்குடிச் சமூகங்களின் சமூகப் பிரிவுகளையும் சமூகத்திரட்சி முறைகளையும் கொண்டு இவ்வகை அரசியல் தன்னை வடிவமைத்து வந்துள்ளது. இந்தியச் சூழல்களில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதற்கொண்டு, இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் போன்ற மதத்திரட்சிகளும், தமிழ்ச் சூழல்களில், வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கம், கால்ட்வெல்லின் திராவிடம் பற்றிய கருத்தாக்கத்திற்குப் பிறகான அச்சு நூல்கள் பதிப்பு இயக்கம், அயோத்திதாச பண்டிதரின் பூர்வ பௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம் பின்னர் பெரியாரின் நுழைவு தனித்தமிழ், தமிழிசை இயக்கங்கள், திராவிட அரசியல் கட்சிகள், இன்று பழங்குடிகள் என நீண்ட நெடிய ஓர் அரசியலைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். இவை காலனிய ஆட்சியின் பிரித்தாளும் உத்திகளால் உருவாக்கப்பட்டவை என்ற ஒரு கருத்து உள்ளது. ஆட்சியாளர்கள் பிரித்தாண்டனர் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பிரித்தாள முடியாதபடி நாம் ஒன்றுபட்டு வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதும் வரலாற்றுரீதியாகத் தவறான கற்பிதம்.

இந்துத்துவச் சிந்தனையாளர்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னால், இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு முன்னர் இந்தியா ஒரு பொற்கால வாழ்வை வாழ்ந்து வந்ததாக எழுதுவதுண்டு. இது போன்ற ஒற்றைப்படையான மதிப்பீடுகளைக் கடந்து இந்திய சமூகத்தை நாம் அணுகிச் செல்லுவதே சரியாக இருக்கும். எனவே ஆட்சியாளர்கள் பிரித்தாளுவதற்கான சமூக அடிப்படைகள் நமது சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவாதம், அடையாள இயக்கங்களின் வரலாற்றுரீதியான சமூக அடிப்படைகளை நோக்கி நம்மை இட்டுச் செல்லவேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் பழஞ்சமுக அமைப்புகளிலிருந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களும் உட்காலனியக் கூறுகளும் அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன என்றே இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. (நூலிலிருந்து 5-7)

Identity-Politics-Slider… அடையாள அரசியலார் இந்தியச் சூழல்களிலும் சர்வதேசச் சூழல்களிலும் மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை குறித்து முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளை மனதில் இருத்தி இங்கு பேசமுனைவோம்.

வர்க்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கம், அது மக்கட் கூட்டங்களிடையிலான பொருளாதாரச் சுரண்டலை (Exploitation) மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுகிறது. அது சாதிரீதியான, நிற அடிப்படையிலான அல்லது இன அடிப்படையிலான, பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் (Oppressions) கணக்கில் கொள்ளுவது கிடையாது என்பது அடையாள அரசியல் நம்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். சுரண்டல் என்பது, பொருளாதாரச் சுரண்டல் என்பது மார்க்சியத்தின் மிக வலுவான ஒரு கருத்தாக்கம். (நூலிலிருந்து பக்.12)

… இந்தியா போன்ற ஒரு பழைய சமூகத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர அசைவுகளின்றித் தேங்கிக்கிடந்த சமூகத்தில், சனநாயகப் புரட்சியின் செயல்பாடுகள் மிக வன்முறையாக நிகழ்த்தப்படவேண்டி வரலாம். எடுத்துக்காட்டாக சாதி ஒழிப்பு என்ற இலக்கு சோசலிசம் என்ற இலக்கை விட கடுமையானதாகக் கூட அமையலாம். இதற்குப் பொருள் வன்முறையை நாம் தூண்டிவிடப் போகிறோம் என்பதல்ல, இங்குள்ள சாதி மேலாக்கம் சாதி ஒழிப்பு என்ற இலக்கை மிகத் தீவிரமாக எதிர்த்தே தீரும். எனில் கம்யூனிஸ்டுகள் அதனை எதிர்கொண்டே தீரவேண்டும். இந்திய சனநாயகப் புரட்சி சாதாரணமானதாக இருக்கப்போவதில்லை.

உலகமயமாக்கச் சூழல்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட கிராமப்புறப் பாட்டாளிகள், தேசிய இனங்கள், சமயச் சிறுபான்மையினர், கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள், பெண்கள் எனப் பலவகைப்பட்ட மானுடக் கூட்டங்களின் சனநாயக உரிமைகள் மிகக் கொடூரமாகப் பறிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் இம்மக்களின் வாழ்வுரிமைகளுக்கான பிரச்சினைகளைக் முந்திச் சென்று கையிலெடுக்கத் தயங்கினால், அவர்கள் தன்னிச்சையான, தம்மளவிலான இயக்கங்களைக் கட்டமைப்பார்கள். போராட்டங்களை வடிவமைப்பார்கள். இம்மாதிரியான நிலைமைகளை இன்று இந்தியாவில், தமிழ்ச் சூழல்களில் முன்னெப்போதுமில்லாத அளவில் மிக அதிகமாகச் சந்திக்கிறோம். சனநாயகப் புரட்சி பற்றி நம்மிடையிலான கூடுதலான வெளிப்படையான விவாதங்களும் நடைமுறை அரசியலுமே இச்சூழல்களில் நமக்குத் தேவைப்படுகின்றன. (நூலிலிருந்து பக்.21-22)

நூல் : மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 22
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க