நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்

பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கிற ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்திற்கு இந்நூல் பயன்படும்.

ரே நாடு, ஒரே மொழி, ஒரே கார்டு, ஒரே வரி, ஒரே சட்டம், ஒரே கல்வி” என தங்களது நீண்ட நாள் இலக்கான இந்துராஷ்டிரத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிசக் கும்பல்.

ஒருபுறம் மாநில உரிமைகள், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது; கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு இந்த நாட்டையே தாரை வார்ப்பதால் மக்கள் சொல்லொணா துயரத்தில் தவிக்கிறார்கள். எந்த மக்கள் காவி-கார்ப்பரேட் பாசிசத்தால் பாதிக்கப்படுகிறார்களோ அதே மக்களை இந்துமத வெறியூட்டியும், ஆதிக்கசாதி வெறியூட்டியும் அப்பாவி இஸ்லாமியர்கள், கிறித்துவர்களுக்கு எதிராக முனைவாக்கம் செய்கிறது காவி கும்பல்.

இச்சூழலில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவாரங்களைச் சித்தாந்த ரீதியாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களிடமிருந்து காவிக் கும்பலை அந்நியப்படுத்த வேண்டியது முற்போக்கு – ஜனநாயக – புரட்சிகர சக்திகளின் அவசர அவசிய கடமையாகி இருக்கிறது. வரலாற்றாசிரியர்களும், முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களும் சங்கப் பரிவார அமைப்புகள் குறித்து எழுதியும் பேசியும் வருகின்றனர், அவற்றையெல்லாம் மக்களிடையே பரப்புவது தேவையாக உள்ளது.

படிக்க : பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

அந்த வரிசையில், கன்னட இலக்கியவாதிகளில் முதன்மையானவரும், பத்மஸ்ரீ, சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தேவனூர மகாதேவா கன்னடத்தில் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்து, “ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்” என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் கொண்டுவந்துள்ளது.

40 பக்கங்களையும் ஐந்து தலைப்புகளையும் கொண்டிருக்கிற இச்சிறுநூல், ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தத்தையும், அதன் செயல்பாடுகளையும் பற்றிய சுருக்கமான விமர்சனப் பார்வையை வாசகர்களுக்கு எளிதான மொழியில் வழங்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம், அதன் இலக்கு மற்றும் சுதந்திரம், கடவுள், சிறுபான்மையினர் இடம், அரசமைப்புச் சட்டம், ஒன்றிய அரசு குறித்த ஆர்.எஸ்.எஸ்-இன் பார்வை ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளான கோல்வால்கர் மற்றும் வி.டி.சாவர்க்கர் ஆகியோர் எழுதிய பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி எழுதப்பட்டிருக்கிறது.

மேலும், மோடி அரசு கொண்டுவரும் ஒவ்வொரு சட்டங்களும் ஆர்.எஸ்.எஸ்-இன் இறுதி இலக்கான இந்துராஷ்டிரத்தை நோக்கிச் செல்வதற்கான படிக்கட்டுகளாய் இருக்கின்றன என்பதை நடைமுறையோடு உணர்த்துகிறது. இந்துராஷ்டிரம் என்பது வேறல்ல; ஈராயிரம் ஆண்டுகளாய் நம்மை அடிமைப்படுத்திய, மனுநீதியை சட்டமாகக் கொண்டு நிறுவப்படும் நால்வருண சாதியக் கட்டமைப்பே என்று நிறுவுகிறது இந்நூல்.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் – கொள்கை – இலக்கு பற்றியும், ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை நடைமுறையில் நிறைவேற்றுகிற சாரதிதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பதையும் இந்நூலைப் படிக்கும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள, “…நாட்டின் பிரதமருக்கு தனித்திறமை இருந்திருந்தால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும், வேலையின்மை குறைந்திருக்கும், வெளிநாட்டுக் கடன்கள் குறைந்திருக்கும்…” போன்ற கருத்துகள்; இந்தக் கட்டமைப்பின் மீதான மாயை; தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தைப் பற்றிய புரிதலின்மை போன்றவற்றைத் தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ் பற்றி ஆரம்பநிலையில் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் பயனளிக்கும். பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கிற ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்திற்கு இந்நூல் பயன்படும்.

பூங்குழலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க