கழிவறை இருக்கை – நூல் அறிமுகம்:

சிக்கு உணவும், வேட்கைக்கு தண்ணீரும், கண்ணுக்கு உறக்கமும் கட்டாயம் தேவை என்பது போலவே பாலியல் உறவான கலவியும் இருபாலருக்கும் அடிப்படையான தேவை. ஆனால் பெரும்பாலும் உடலுறவின்போது ஆண் மட்டுமே முழுமை அடைகிறான். பெண்ணைப் பற்றி அவன் சிந்திப்பதில்லை என்பதை விட அறியாமையிலேயே இருக்கிறான். பெண்களும் இதனைப் பற்றி ஆண்களிடம் கூறுவதில்லை. இதனால் ஆண் கொடுக்கப்படுபவனாகவும், பெண் ஏற்கப்படுபவளாகவும் இருக்கிறாள்.  இதற்கு காரணம் கற்பு, ஒழுக்கம், பத்தினி, குடும்ப குத்துவிளக்கு என்று பெண்ணை பேச விடாமல் செய்ததுதான்.

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணை தன் உடைமையாகவும், போகப் பொருளாகவும் பார்ப்பதன் விளைவாகவே பெண்களுக்கு எதிரான பல பிரச்சினைகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. கற்பு என்றால் என்ன? அது எங்கு இருக்கிறது? அப்படி கற்பு என்ற ஒன்று இருந்தால் ஏன் அது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டும்? அந்த கற்பை ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

காமம் என்ற வார்த்தை ஏன் பேசக் கூடாத வார்த்தையாக உள்ளது? காமத்தை பற்றி ஏன் பொதுவெளியில் யாரும் பேசுவதில்லை? காதலும் காமமும் ஏன் குழப்பிக் கொள்ளப்படுகிறது? காதல் எப்படிப்பட்டது? பாலியல் கல்வி ஏன் அவசியம்? காமத்தில் உச்சம் என்றால் என்ன? சுய இன்பம் சரியா? தவறா?

இப்புத்தகம் காதல், காமம், சுய இன்பம், திருமணம், நட்பு, ரகசியம், ஆண் அகந்தை, பாலியல் கல்வி, சமூக கட்டமைப்புகள், நல்லுறவிற்கான சில விதிமுறைகள், காதல் மற்றும் காமம் குறித்தான கட்டுக் கதைகள் போன்ற அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியவைகளை 32 கட்டுரைகளாக தொகுத்துள்ளது.

படிக்க : இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்! வெளியீடு

காமம் என்ற வார்த்தை தகாத வார்த்தை அல்ல. காமம் தான் மனிதர்களை உலகிற்கு அளித்துள்ளது. காமத்தில் இருந்து பிறந்தவை எல்லாம் புனிதமானவை என்றால், காமம் மட்டும் எப்படி அசுத்தமாக முடியும். காமம் குறித்த உரையாடல்கள் வெளிப்படையாக இருக்குமேயானால் நம் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் வன்புணர்வுகளை, பாலியல் தொந்தரவுகளை குறைக்கவும் வருங்கால சந்ததியினரை இம்மாதிரியான உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளிலிருந்து காக்கவும் முடியும்.

மாற்றங்கள் சிறிது சிறிதாக அடைந்து வந்தாலும் இச்சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே உள்ளது. பெண்ணை ஒரு பொருளாக, தன்னுடைய உடமையாகவே பார்க்கின்றனர். பெரிய பெரிய கவிஞர்களும், புலவர்களும் பெண்களை பூ, நிலம், ஆறு, நிலவு போன்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அவளை ஒரு உடைமை என்றே வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு ஒப்பிடுவதால் நம்மை அறியாமலே நமக்குள் பெண்ணே ஒரு பொருளாக பார்க்கும் எண்ணம் தோன்றிவிடுகிறது.

காமத்தை பற்றி பொதுவெளியில் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஆண் காமத்தை பற்றி பேசினால் பெரிதாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் பெண் காமத்தை பற்றி பேசினால் (சாதாரணமான அடிப்படை விஷயமாக இருந்தால் கூட) அவளுக்கு நடத்தை கெட்டவள் என்று பட்டம் சூட்டப்படுகிறது. மேலும் அவள்  யாருடன் வேண்டுமானாலும் படுக்கைக்கு செல்வாள் என்ற எண்ணம் வந்து விடுகிறது.பெண்களின் நடத்தையில் தான் குடும்ப மானம், கௌரவம் உள்ளது. ஆனால் ஆண் என்ன செய்தாலும் இந்த மானம், கௌரவத்திற்கு குறைவு ஏற்படுவதில்லை.

நம்மில் எத்தனை பேர் காமத்தை பற்றி பேச தயாராக உள்ளோம்? காமம் குறித்தான கல்வி பதின்ம பருவ குழந்தைகளுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. இல்லையேல் காமத்தை பற்றிய புரிதல் இல்லாமல் காமத்தை தவறாக புரிந்து கொள்ளும் சாத்தியம் உண்டு. சில பிள்ளைகள் எப்படியாவது மற்றோருக்கு தெரியாமல் ஓரளவிற்கு புத்தகம் படித்தோ, நண்பர்களுடன் பேசியோ, நீலப்படங்கள் பார்த்தோ, இல்லை இன்னும் கொஞ்சம் தைரியம் இருக்கும் பிள்ளைகள் நேரடியாக கலவியில் ஈடுபட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.

பெருவாரியான ஆண்களுக்கு படுக்கையில் பெண் என்பவள் தன்னை போல் உணர்வுகள் கொண்ட ஒரு இணையர் இல்லை. அவனுக்கு தன் விந்துவை உந்தித் தள்ள ஒரு துவாரம் வேண்டும். அதற்காகவே தன் காதலியோ, மனைவியோ பிறவி எடுத்து காத்திருப்பதாக ஒரு எண்ணம். ஆக அவனை பொறுத்தவரை அவன் அமர்ந்து விந்துவை வெளியேற்ற அவள் ஒரு கழிவறை இருக்கை மட்டுமே!

ஓர் ஆண் தன் வேலை முடிந்ததும் களைப்பாகி திரும்பப் படுத்து உறங்க ஆரம்பிக்கும் வேலையில்தான் ஒரு பெண்ணிற்கு கிளர்ச்சியே தொடங்குகிறது. ஆனால் அப்பெண் தனக்கு முழுமை அடையவில்லை என்று கூறினால் ஆணின் கௌரவம் குறைந்துவிட்டதாக எண்ணிவிடுவான். மேலும் அவன் தன் மனைவியை வேறொருவருடன் தொடர்பில் உள்ளால் என்று சந்தேகப்படுவான். ஏக்கத்துடன் படுத்து உறங்குவதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை.  இதுதான் ஒரு பெண்ணிற்கு உடலுறவை பொருத்தவரை இந்தத் திருமணம் கொடுக்கும் பரிசு.

காமம் காதலின் உச்சத்தின் வெளிப்பாடாக இருந்தால் தான் அது காமத்திற்கு அழகும் கூட. காமம் என்பது கரைபுரண்டோடும் காதலின் விளைவே! அதுவே காதலின் உச்சகட்ட வெளிப்பாடு‌. காமத்தின் தேவை உடல் ரீதியான கிளர்ச்சியை விட, உணர்வுபூர்வமாகவும், உள்ள ரீதியாகவும் கிளர்ச்சி அடைவதிலேயே அதிகமாக உள்ளது என்று Alain de Botton தன் How To Think More About Sex என்ற நூலில் தெளிவாக கூறியுள்ளார்.

காமத்தில் உச்சம் என்ற நிலை உள்ளது. அது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதால் நிகழ்கிறது. இந்த உச்சநிலையை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அடைகிறார்கள். பெண்கள் பெரும்பாலும் உச்சம் அடைவதில்லை‌. பெண்களுக்கும் உச்சம் உண்டு என்று அறியாமல் உள்ளனர். அறிந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் உச்சத்தை அடைகின்றனர் ஆண்கள். சில பெண்களும் இந்த உச்சம் பற்றி அறியாமல் உள்ளனர். இப்படி பெண்களின் உடலுறவின் தேவையான உச்சத்தை பற்றி அறியாமலோ அல்லது அறிந்தும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் ஆண்களாலேயே திருமணம் தாண்டிய உறவுகளில் பல பெண்கள் ஈடுபடுகிறார்கள்.

நட்பை அடித்தளமாக கொள்ளாத எந்த காதலும் (அன்பும்)
மணல்மேல் எழுப்பிய மாளிகை போன்றது
-Ella Wheeler Wicox

படிக்க : பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

நட்பின் அழகே நாம் ஒரு நண்பரை நமக்கே நமக்கானவராக நம் உடமையாக சொந்தம் கொண்டாட மாட்டோம் என்பதே. அவர்களை தனி ஒரு மனிதராக நாம் மதிப்போம். ஆனால் ஒரு கணவன் – மனைவி உறவிலோ, காதலர்கள் உறவிலோ இது பொதுவாக சாத்தியப்படுவதில்லை. நட்பு நம்மை சிறைப்படுத்துவதில்லை, நம்மை விடுதலைப்படுத்துகிறது. நம் மீது எதையும் திணிப்பதில்லை. எனக்கு மட்டுமே நீ என வசனம் பேசுவதில்லை. ஏன், நட்பு நிலைக்க வேண்டும் என்று கூட திணிப்பதில்லை.

நட்பே அடித்தளமாகட்டும் எந்த வகையான உறவு முறையாக இருப்பினும்: காதலர்கள், இணையர்கள், பெற்றோர் – பிள்ளைகள், ஆசிரியர் – மாணவர்கள், உடன் பிறந்தவர்கள், எதுவாக இருப்பினும்.

நம் சமுதாயம் ஒழுக்கம், பாதுகாப்பு என்ற பெயரில் ஏனோ ஆணையும் பெண்ணையும் பிரித்து வைக்கும் முயற்சியே மேற்கொண்டு இருக்கிறது. ஏன் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை நிறுவ வேண்டும்? ஏன் இருவருக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பிக் கொண்டிருக்கிறது? இந்த தடுப்புச் சுவரானது இருவருக்கும் இடையே ஒருவரைப் பற்றி இன்னொருத்தருக்கான ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த ஆர்வமானது எதிர்பாலினத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் நிறைய திருட்டுத்தனங்களை செய்யத் தூண்டுகிறது. இயற்கையாக இருபாலரும் ஒருவருடன் ஒருவர் பழகி கலந்து வாழும் சூழ்நிலை இருந்தால் இம்மாதிரியான மனக் குழப்பங்கள் வராதிருக்கும்.

நமக்கு திருமணம் ஆகி குடும்பம் என்று ஆகிவிட்டால் நாம் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்கிறோம். வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளை பெறுதலிலே ஒருவரின் கடமையாகாது. ஒரு குடும்பத்தை உருவாக்க பெண்ணுக்கு ஒரு ஆணும், ஆணுக்கு ஒரு பெண்ணும் தேவையாக உள்ளனர். திருமணம் என்பது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடும் இரு தனி மனிதர்களின் சேர்க்கை ஆகும். திருமணம் என்பது ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தி உரிமை கொண்டாடுவதற்கான களம் இல்லை.

என் இணையர் மகிழ்வாக இருக்க வேண்டுமெனில் நான் மகிழ்வாக இருக்க வேண்டும். நான் மகிழ்வாக இருக்க வேண்டுமெனில் என் இணையர் மகிழ்வாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒரே கூரையின் கீழ் ஒருவர் மகிழ்வாக இல்லாத போது இன்னொருவர் மட்டும் எப்படி இன்பமாக இருக்க இயலும்?
திருமணங்களில் மேலோட்டமான விஷயங்களான சடங்குகள், தாலி போன்றவையே மனித உணர்வுகளை விட அதிகமாக மதிக்கப்படுகின்றன.

அன்பு என்பது அடுத்தவருக்கான சுதந்திரத்தை கொடுத்து, அவரது வாழ்வை அவர் விருப்பப்படி வாழ செய்வது ஆகும். மற்றவரை உடும்பு போல் பற்றி கொள்ளலாகாது.

கணவன் மனைவி என்பவர் வாழ்க்கை முழுவதும் நண்பர்களாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும். நட்பு என்பது தம்பதியினர் இடையே நல்ல உறவை ஏற்படுத்தும். உடலுறவு என்பது உடலுறதியானது தான் என்றாலும், அதை முழுமையாக அனுபவிக்க அது மனத்தில் இருந்து தொடங்க வேண்டும். காமம் என்பது உடல் மற்றும் மனத்தின் சேர்க்கையால் உண்டாகும். நம் சமுதாயத்தில் காமம் என்பது இன்றளவும் உடல் ரீதியான ஒன்றாக மட்டுமே கருதப்படுகிறது.

காதல் மற்றும் காமம் குறித்து நம்மிடையில் பல கட்டுக் (கற்பனை) கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அவை:

1. ஒருவரின் சமுதாய நிலை, அவரின் உருவத் தோற்றம், அழகு இதை வைத்துத் தான் காதல் வருவதாக!
காதல் என்பது இது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அது எப்படி? ஏன்? ஒருவரிடம் தோன்றுகிறது என்பதை ஆராயவோ தெளிவுபடுத்துவோ இயலாது. யாரையும் காதலிக்க வைக்க இயலாது. அது ஒரு உணர்வு அது தானாக தோன்ற வேண்டும்.

2. ஒருவர் நம்மீது சொந்தம் கொண்டாடவில்லையெனில், நம் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை எனில் அவருக்கு நம் மீது அன்பு இல்லை என்று அர்த்தம். உயிரற்ற பொருட்களைத் தான் சொந்தம் கொண்டாட முடியும். உயிருள்ள மனிதர்களை தனி மனிதர்களாக அவருக்கான இடத்தை நாம் அபகரிக்காமல் சுதந்திரமாக இருக்க விடுதலே உண்மையான அன்பாகும்.

3. பெண்ணுடலின் சில பாகங்கள் வெளிப்படும் போது ஆணுக்கு தூண்டுதலை விளைவிக்கும். பெண்ணிற்கு அப்படி ஆணின் உடல் பாகங்கள் வெளிப்படுகையில் தோன்றாது. பெண் பார்வையால் தூண்டப்பட மாட்டாள்.
இது தவறான கருத்து. பெண்ணும் ஒரு மனிதப் பிறவி தானே, அவளுக்கும் உணர்வுகள் உள்ளது. எல்லாம் நம் மூளையில் தான் உள்ளது. இரு பாலருக்கும் மூளை உண்டு தானே?

ஒரு நாள் கூட நகர்வதில்லை எங்காவது ஒரு பாலியல் வன்முறையாவது நடந்த செய்தி கண்ணில் படாமலோ, காதில் கேட்காமலோ. இதில் கொடுமையிலும் கொடுமை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள். இப்படிப்பட்ட வக்கிர செயல்கள் நடப்பதற்கு யார் முக்கிய பொறுப்பு? நாம் தான். தனி மனிதர்களாகவும், மொத்தச் சமூகமாகவும் காரணம். இங்கு காம உணர்வுகளுக்கான சரியான வடிகால்களும் இல்லை, இதற்கான புரிதலும் இல்லை. அதைப்பற்றி யாரும் கண்டு கொள்வதுமில்லை. காமம் பற்றி 12,13 வயதில் புரிதலை ஏற்படுத்தாதது பெற்றோர்களின் தவறே!

ஒரு குழந்தை சாதாரணமாக விளையாடும் போது அடிபட்டால் பெற்றோரிடம் அழுது கொண்டு ஓடி வருவது தானே இயற்கை. ஏன் பாலியல் தொந்தரவுகள் மட்டும் பெற்றோரிடம் குழந்தைகளால் சொல்லப்படுவதில்லை என யாராவது சிந்திக்கிறோமா? குழந்தைகள் சொல்லை நாம் நம்ப மாட்டோம் என அவற்றிற்கு தோன்றி விடுவதே காரணம்.

சிறுவயதிலிருந்தே இரு பாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் (தனித்தனியாக அமர வைக்கும் பள்ளிகளை தவிர்க்கவும்) படிக்க வைப்பதால் இயற்கையான சினேக உணர்வுடன் மற்ற பாலருடன் பழகும் தன்மையை ஏற்படுத்தி விடலாம். ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதித்து வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவும் நம் குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தன் அம்மாவையும், மனைவியையும், சகோதரிகளையும், மகளையும் மதித்து வாழும் ஒரு அப்பா இருக்கும் வீட்டிலும், தன் சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் இழக்கத் தயாரில்லாத ஒரு அம்மா இருக்கும் வீட்டிலும் ஒரு ஆண் பிள்ளை, பெண்களை மதித்தே வளர்வான்.

மொத்தத்தில் இந்தச் சமூகம் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக மாறிவிடாது.  தற்போதைய ஆணாதிக்க, பெண்ணை பொருளாக என்னும் சமுதாயத்தில் இத்தகைய ஒரு மாற்றம் நிகழுமேயானால், உடலுறவு குறித்த பார்வையிலும், அணுகுமுறையிலும் பெரிய அளவில் நல்ல மாற்றங்களை காணலாம்.

இவற்றில் உள்ள அனைத்து கருத்துகளும் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஏற்புடையதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாதவற்றை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். அப்படியும் ஏற்புடையதாக இல்லை எனில் விவாதிப்போம்! விளங்கிக் கொள்வோம்! பேசாப் பொருளை பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

படிக்க : ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! சிறப்பு வெளியீடு!

இப்புத்தகம் காமம் குறித்தான அனைத்து பார்வைகளிலிருந்தும் விளக்கம் அளிக்கிறது. மேலும் பல அறிஞர்களின் ஆராய்ச்சிகளை மேற்கோள்காட்டி அறிவியல் ரீதியாகவும் பேசுகிறது. தற்போது நம் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கு காரணங்களை கூறுவதோடு, தீர்வையும் எடுத்துரைக்கிறது. இப்புத்தகம் பெண்ணியப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் ஆண்களை மட்டும் விமர்சனம் செய்யாமல் பெண்களையும் சில இடங்களில் விமர்சனம் செய்கிறது. மேலும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் எவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதையும், ஆண்கள் எதனால் தவறிழைக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது.

சொத்துடைமை ஆரம்பமானத்திலிருந்து தாய் வழியில் இருந்த சமுதாயம் தந்தை வழி சமூகத்திற்கு மாற்றப்பட்டது. தந்தை வழிச் சமுதாயம் மூலம் சொத்துரிமை  வாரிசுகளுக்கு கடத்தப்பட்டது. இங்கிருந்துதான் பெண்ணடிமைத்தனம் ஆரம்பமாகி இருக்கிறது. இதற்கு பின் வந்த அத்தனை சமுதாய அமைப்புகளிலும் முற்போக்காக முன்னேற்றம் அடைந்து வந்தாலும், பெண்ணடிமைத்தனம் ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப நவீனப்பட்டு வந்துள்ளது. இப்படி நவீனப்பட்டதன் விளைவாக பெண்ணானவள் தான் அடிமையாக உள்ளோம் என்பதை அறியாமல் இருக்கிறாள்.

எப்போது சொத்துரிமை என்கிற முறை அடித்து நொறுக்கப்பட்டு மாற்றம் காணுமோ, அப்போதே பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்படும். ஆனால் இந்த நூலின் ஆசிரியர் தற்போதுள்ள சமூகத்திற்கு பதிலாக காட்டுமிராண்டி (பிரதான பொதுவுடைமை) சமூகமே மேலானது என்கிறார். ஆனால் அவ்வாறு பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு சமூகமும் பல்வேறு பிற்போக்குத்தனங்களை முறியடித்து தான் நவீனமயமாக்கப்பட்டு வந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு விவாதத்திற்கு கருவியாக இப்புத்தகம் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!

நூலின் பெயர்: கழிவறை இருக்கை
ஆசிரியர்: லதா
பக்கங்கள்: 224
விலை: ரூ 225
வெளியீடு: நோராப் இம்பிரிண்ட்ஸ்
19/5, நவரத்தினம், ருக்மணி சாலை, பெசன்ட் நகர், சென்னை – 600090
தொலைபேசி: 9790919982
மின்னஞ்சல்: mail.knowrap@gmail.com

நூல் அறிமுகம் : Dr. அசுரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க