பெண்ணுக்கு வயது 23-ஐ தாண்டிவிட்டது. வீட்டில் எவ்வித உரிமையும் கிடையாது. செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு எல்லாம் அம்மா தெருவில் வைத்து விளக்குமாற்றால் அடிப்பார். சிறு வயது முதல் தினம் தினம் அந்தப் பெண் சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல.

குடும்பத்திலிருந்து வெளியேறுவதே அந்த பெண்ணுக்கு முதல் தேவையாக இருந்தது. அப்பா அம்மா என ஒட்டுமொத்த குடும்பம் தன்னை அடிமையாக நடத்துவதை அந்தப் பெண் விரும்பவில்லை.

வேலைக்குச் சென்ற இடத்தில் காதல் பூத்தது. பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். பையனோ ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்.

தினமும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் அடிகளையும் வாங்கிய அந்தப் பெண்ணின் மனதிற்குத் தென்றலாய் இருந்தது காதலனின் பேச்சு.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்ய, அந்தப் பெண்ணோ தான் ஒரு நபரைக் காதலிப்பதைச் சொல்ல, மீண்டும் குடும்பம் அடித்து உதைத்து, சித்திரவதை செய்தது. காதலனும் எப்படியாவது கிளம்பி வந்து விடு நாம் திருமணம் செய்து கொள்வோம் என்கிறான். அந்தப் பெண்ணின் விருப்பத்தை மீறி.


படிக்க : கர்நாடக தேர்தல் முடிவுகள்: பாசிஸ்டுகளின் மிகைமதிப்பீடும், பாசிஸ்டுகளைப் பற்றிய குறைமதிப்பீடும்!


நிச்சயதார்த்தம் முடிந்த அன்று, இரவில் அந்தப் பெண் வீட்டிலிருந்து தப்பித்து ஓடுகிறார். அப்பெண்ணின் குடும்பம் துரத்த ஊர் வேடிக்கை பார்க்கிறது. குடும்பத்திடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார்.

காதலனைச் சந்தித்து நாம் திருமணம் செய்து கொள்வோம் என்கிறார். தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் ஊரில் பிரச்சினையாகும் என்று காதலனுக்கு திடீரென்று ஞானோதயம் பிறக்க அவன் விட்டுவிட்டு ஓடுகிறான்.

என்ன செய்வார் அந்தப் பெண்?

அடிமைப்பட்டுக்கிடந்த இடத்தில் இருந்து தப்பி வந்த பிறகு காதலன் ஏமாற்றிவிட்டு ஓடி விட்டான். திரும்பி அந்த இடத்துக்கு போக வேண்டுமா இல்லை, ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் சாக வேண்டுமா?

எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற இன்னொரு முடிவை அந்தப் பெண் எடுக்கிறார்.

தன்னுடைய பெண் நண்பர்களோடு இணைந்து அறையில் வாழ முடிவெடுக்கிறார். இதைக் கேள்விப்பட்ட அந்தக் குடும்பம், அந்தப் பெண்ணை மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அழைத்து வருவது அந்த பெண்ணை மீண்டும் பழிவாங்குவதற்கே தவிர வேறு எதற்காகவும் இல்லை.

 

அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்துக்கு மீண்டும் திரும்பி வர மறுக்கிறார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பம் போலீஸ் நிலையத்துக்குச் செல்கிறது. இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் பேசி பார்க்கிறார். அந்தப் பெண்ணோ குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் தனியாக வாழ்ந்து கொள்வதாகவும் கூறிவிட்டார். அந்தப் பெண் வீட்டிலிருந்து குண்டுமணி நகையைக் கூடக் கொண்டு செல்லவில்லை.

ஆனாலும் போலீசு யோசனை கொடுக்கிறது .”தாய் மாமன் வீட்டிலிருந்து நகையை உங்கள் பெண் திருடிக் கொண்டு ஓடி விட்டதாக ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்கள். அந்தப் பெண்ணை கைது செய்து கொண்டு வந்து ஸ்டேஷனில் வைத்து விடுகிறோம். பிறகு நீங்கள் வந்து பேசிக் கொள்ளுங்கள்”.

இதைக்கேட்டுப் பயந்துபோன அந்த தாய் மாமன், “இதெல்லாம் என்னால் முடியாது” என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இப்போது வரை அந்தப் பெண் தன் நண்பர்களுடன் இருக்கிறார். இறுதிவரை தனியாக வாழலாம் அல்லது குடும்பத்தினரின் சித்திரவதையை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த புதைகுழியில் போய் விடக் கூட நேரலாம். இதெல்லாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பானது மட்டுமல்ல.

ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.

ஏற்கனவே, இந்த சமூக முறையில் இருக்கின்ற குடும்பம் என்ற நிறுவனம் ஒரு கேடுகெட்ட நிறுவனம். அது எப்பொழுதுமே தனிப்பட்ட ஒரு பெண்ணின் அல்லது ஆணின் சுதந்திரத்தைப் பற்றிய உரிமைகளைப் பற்றியோ ஒருபோதும் யோசிக்காது. ஏற்கனவே, புரையோடிப்போன பழக்கவழக்கங்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு சுமக்கும். அதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான விபச்சாரத்தனமான வேலைகளையும் பார்க்கும். அதையும் மீறிச் சிந்திக்கின்ற குடும்பங்கள், ஏற்கனவே இருக்கின்ற குடும்ப அமைப்பு முறையை உடைத்துவிட்டுப் பிறந்தவையாக இருக்கின்றன.


படிக்க : டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


இந்த கேடுகெட்ட குடும்ப அமைப்புமுறை தானாக மாறிவிடுமா? இந்தப் பெண்ணுடைய பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுடைய வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. வீட்டிலே வாழ்வதற்கும் சரி; வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும் சரி.

வீட்டைவிட்டு வெளியேறிய அந்த பெண்ணின் தோல்வியைத் துடைப்பதல்ல இந்த குடும்பத்தின் நோக்கம்; மாறாக இழந்துபோன பெருமையை மீட்பதற்காக நடத்துகின்ற நாடகம். இதை அறிந்த போலீசின் செயல்பாடு என்னவாக இருக்கிறது? இந்த அரசமைப்பு முறைக்கு எதிராக அல்லவா இருக்கிறது? அந்தப் பெண் மீது பொய்ப்புகார் கொடுங்கள் நான் கொண்டு வந்து நிறுத்துகிறேன் என்று கூறும் அந்தப் போலீசின் உளவியல் என்னவாக இருக்கிறது? இந்த கேடுகெட்ட குடும்பம் என்ற நிறுவனத்தைக் காப்பதாக அல்லவா இருக்கிறது? போலீசின் உளவியல்தான் நீதிமன்றத்தின், அரசின் உளவியலாக எப்போதும் இருக்கிறது.

சாதி, மதம், குடும்பம், பாரம்பரியம், பழக்கவழக்கம், போலீஸ், நீதிமன்றம் எல்லாம் அரசு என்ற ஒரே சங்கிலியில் இணைக்கப்பட்டவைதான் எதுவும் வேறு அல்ல. இந்த அரசை அடித்து நொறுக்குகின்ற போராட்டத்தைத் தொடங்காமல் தனிப்பட்ட ஒருவரின் விடுதலை சாத்தியமாகலாம். அது ஒருபோதும் ஒரு சமூகத்திற்கான முழுமையானதாக இருக்காது.

மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க