மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்துள்ளது காங்கிரஸ். கடந்த முறை 104 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க, இந்த தேர்தலில் 66 தொகுதிகளை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், குதிரை பேரம் நடத்தினாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத அவநிலை பா.ஜ.க.விற்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மக்களின் இந்தத் தீர்ப்பு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்குமே உற்சாகத்தை அளித்திருக்கின்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற வலிமையான நம்பிக்கையையும் இத்தேர்தல் முடிவுகள் அக்கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன.
கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர் ராகுல் காந்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பெருமுதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட நிலப்பரப்பிலிருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்.
“இது 2024 பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வீழ்ச்சியின் தொடக்கம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.
“பாசிச, வகுப்புவாத, பிளவுவாத பா.ஜ.க.வை சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தியதன் மூலம் கர்நாடக மக்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றை வழங்கியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.
இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு இது இரண்டாவது வெற்றி. எனினும் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றியைவிட கர்நாடகத்தின் தேர்தல் வெற்றியே காங்கிரஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக கருதப்படுகிறது. காங்கிரஸ் மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும் கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் தோல்வியை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாகக் கருதி மகிழ்கிறார்கள். இதற்கு சில காரணங்களும் உண்டு.
000
கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியமைத்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பஞ்சாபை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்றது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1985-க்கு பிறகு மீண்டும் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்ததில்லை என்ற வழக்கத்தை பொய்யாக்கி பா.ஜ.க. வெற்றிபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவிலும், மேகாலயா தவிர்த்த இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியே அமைத்துள்ளது.
மேற்கண்ட தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றிகள், எதிர்க்கட்சிகளிடத்தில் ஒரு ஆழமான கருத்தை பதித்துச் சென்றது. இந்துமதவெறி, தேசியவெறி, ‘வலிமையான தலைவர்’ என்ற மோடியின் பிம்பம் ஆகியவற்றை எதிர்கொண்டு, ஒரு கட்சி பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது மிகச் சவாலான விசயம் என்பதே அந்தக் கருத்து. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த கருத்தை அடித்து நொறுக்கியுள்ளது. அதன் காரணமாகவே இத்தேர்தல் முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
“கர்நாடகாவில் மதவாதம் எடுபடவில்லை”, “இது மோடிக்கு கிடைத்த தனிப்பட்ட தோல்வி” போன்ற பல்வேறு தலைப்புகளில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை; கர்நாடகாவில் பா.ஜ.க.வின் தோல்வியை எப்படி மதிப்பிடுவது, புரட்சிகர-ஜனநாயக சக்திகள் பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி-தோல்விகளை எப்படி புரிந்துகொள்வது என்பதை ஆய்வுப்பூர்வமாக தெளிவுபடுத்திக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
வேலைக்கு ஆகாத பிரம்மாஸ்திரங்கள்!
இமாச்சலப் பிரதேசம் பா.ஜ.க.வின் கைகளில் இருந்து நழுவி காங்கிரஸுக்குச் சென்றதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல, முஸ்லிம் வெறுப்பை கிளறிவிட்டு இந்துப் பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை திரட்டிக்கொள்ளும் வாய்ப்பு, இமாச்சலப்பிரதேசத்தில் குறைவு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 2.18 சதவிகிதம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் ஆதிக்கம் செலுத்தும் சாதியாக அல்லாமல், பல்வேறு சாதிகளும் பரவலாக வாழும் மாநிலமாகவும் இமாச்சலப்பிரதேசம் உள்ளது. ஆகவே, அடிமட்டத்தில் எவ்வித அணிதிரட்டலும் இல்லாத காரணத்தால், பா.ஜ.க. அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், கர்நாடகா அப்படிப்பட்ட மாநிலமல்ல.
1980-களில் இருந்தே தீவிரமாக வேலைசெய்து கரையோர கர்நாடகத்திலும் வட கர்நாடகத்திலும் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். மாநிலத்தில் 17 சதவிகிதம் உள்ள லிங்காயத்துகளை தனது ஆதரவுப் பிரிவாக மாற்றிவைத்துள்ளது. தென்னிந்தியாவிலேயே ராமஜென்ம பூமி இயக்கத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தன்னை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்திக் கொண்ட மாநிலம் கர்நாடகம் மட்டுமே. ஆகவேதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் கர்நாடகத்தை தனது “தென்னிந்திய நுழைவாயில்” என்று அழைத்துக் கொள்கிறது.
உத்தரப்பிரதேசத்தில், “இது 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்குமான தேர்தல்” (இந்து முஸ்லிம் மக்கள்தொகை விகிதம்) என்று வெளிப்படையாக இந்துமதவெறியை தேர்தல் பரப்புரையாக வைத்து செயல்பட்டதைப் போல, கர்நாடகத்திலும் கையாண்டது காவிக் கும்பல்.
“சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசத்தேவையில்லை. இந்து-முஸ்லிம் பிரச்சினை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலைச் சந்திப்போம். ஒரு முஸ்லிம் வாக்குகூட எங்களுக்கு தேவையில்லை” என்று வெளிப்படையாக அறிவித்தார் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா.
படிக்க: கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது
முஸ்லிம்களின் நான்கு சதவிகித இடஒதுக்கீட்டைப் பறித்து, அதை லிங்காயத்துக்களுக்கும் ஒக்கலிகர்களுக்கும் தலா இரண்டு சதவிகித இடஒதுக்கீடுகளாக பிரித்து வழங்கியதன் மூலம் கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள இச்சமூகத்தினரின் வாக்குகளை திரட்டிக் கொள்ள முயன்றது காவிக் கும்பல்.
திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா, நஞ்சே கவுடா என்ற ஒக்கலிக மன்னர்கள்தான் என்றொரு மதவெறிப் புரட்டை பரப்பினார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் வளரும் என்று நச்சுப்பிரச்சாரம் செய்தார்கள். “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று மோடியே பிரச்சாரம் செய்தார். “பஜ்ரங்தள் அமைப்பை தடைசெய்வோம்” என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை “பஜ்ரங்கியை (ஆஞ்சநேயரை) அவமதித்துவிட்டார்கள்” என்று மடைமாற்றினார் மோடி. வாக்களித்துவிட்டு “ஜெய் பஜ்ரங்பலி” என்று முழக்கம் போடுங்கள் என்றார்.
தேர்தலுக்கு முன்பிருந்தே மதமாற்றத்தடைச் சட்ட அமலாக்கம், ஹிஜாபுக்கு தடை, பாங்கு ஓத எதிர்ப்பு, ஹலால் ஜிகாத் பிரச்சாரம், பழம்பெரும் மசூதிகள் அனைத்தும் இந்துக்கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவை என்ற பிரச்சாரம், கோயிலுக்கு வெளியில் முஸ்லிம் வியாபாரிகள் கடைபோடுவதற்கு தடை என பல்வேறு வடிவங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துமதவெறி தூண்டிவிடப்பட்டது. பல்வேறு கலவரங்களை காவிக்கும்பல் திட்டமிட்டு நடத்தியது. ஆனால், இந்த மதவெறி தூபம் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
மேலும், தனது மூன்றரை ஆண்டுகால சாதனைகளாக எதையும் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாத நிலையிலும், காங்கிரஸின் “40 சதவிகிதம் கமிஷன் சர்க்கார்” என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத நிலையிலும், பா.ஜ.க. முன்னெடுத்த “இரட்டை என்ஜின் சர்க்கார்” பிரச்சாரம் எடுபடவில்லை.
மாநிலப் பிரச்சினைகள் எதையும் பேசாமல் இஸ்லாமிய வெறுப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் தன்னைப் பற்றிய சுயவிளம்பரம் ஆகியவற்றையே முன்னிறுத்திய மோடியின் பிரச்சாரம் வடமாநில மக்களைப் போல கர்நாடக மக்களை கவரவில்லை. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், பிரகலாத் ஜோஷி, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் இறக்கிவிடப்பட்டு ‘இரட்டை என்ஜின் சர்க்காரை’ வலியுறுத்திப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். மோடிக்கு அடுத்து இந்துத்துவத்தின் தேசிய முகங்களாக அறியப்படுகின்ற யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்வா ஆகியோரையும் களமிறக்கிப் பிரச்சாரம் செய்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
ஊழல், உள்ளடிச்சண்டை, செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லாத சூழலில் ‘வெல்லப்பட முடியாத தலைவர்’ என்று கருதப்படுகின்ற மோடியை இறக்கிவிட்டது தனது கட்சிக்கு பலம் என்று கருதிக்கொண்டிருந்தது பா.ஜ.க. மோடி பங்கேற்ற 33 பேரணிகள், 28 ரோடு ஷோக்கள், ஏழுநாள் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்தும் பா.ஜ.க.வின் வாக்குவங்கியை கூட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “பா.ஜ.க. 80 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருந்தது; மோடியின் பிரச்சாரத்தால் அது குறைந்துவிட்டது” என்கிறது பிபிசி தமிழ். “மோடி பிராண்டு கர்நாடகத்தில் வேலைக்கு ஆகவில்லை” என்று கைகொட்டி சிரிக்கின்றன ஊடகங்கள்.
பாசிச பா.ஜ.க.வை தோல்வியுறச் செய்த உழைக்கும் மக்கள்!
சென்ற முறைப் பெற்ற தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், பா.ஜ.க. தனது வாக்குசதவிகிதத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறுவதெல்லாம் மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துக் கொள்வதாகும். உண்மையில், பா.ஜ.க. தனது அடித்தளப் பகுதிகள் என்று பீற்றிக் கொண்டிருந்த பகுதிகளில்கூட வாக்குவங்கியை இழந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டை என்று கருதப்படுகின்ற கடலோர கர்நாடகத்தின் 19 தொகுதிகளில் கடந்தமுறை 17 இடங்களை வென்றது; இந்த தேர்தலில் 13 தொகுதிகளையே தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூஸ்18 பத்திரிகையின் பகுப்பாய்வின்படி, இந்த பிராந்தியத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற தொகுதிகளில்கூட 20 முதல் 40 சதவிகிதம் வாக்குவங்கி குறைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.
அண்மைக்காலமாக பா.ஜ.க.வின் செல்வாக்குமிக்க பிராந்தியங்களாக இருந்த மும்பை கர்நாடகா (-2.4), ஹைதராபாத் கர்நாடகா (-1.8), மத்திய கர்நாடகா (-7) போன்ற பிராந்தியங்களிலும் தற்போது அதன் வாக்குசதவிகிதம் சரிந்திருக்கிறது.
சாதிரீதியான முனைவாக்கம், மதரீதியான முனைவாக்கம் அனைத்தையும் கடந்து பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்தியதில் முக்கியமான பங்கு விவசாயிகள், தொழிலாளர்கள், அன்றாடம் காய்ச்சிகளான ஏழை உழைக்கும் மக்களுடையதாகும்.
அனைத்து சாதிகளிலும் மேட்டுக்குடிகள் மத்தியிலும் அதிக சம்பளம் பெறும் குடும்பத்தினர் மத்தியிலும் பா.ஜ.க.விற்கு பெருமளவு ஆதரவு இருப்பதையும், ஏழைகள், சொற்ப சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் குடும்பங்களிடம் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு இருப்பதையும் கன்னட செய்தி ஊடகமான ஈ-தினாவின் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியது.
224 சட்டப் பேரவைத் தொகுதிகளுள் 204 தொகுதிகளில் 41,169 பேரிடம் நேரில் சென்று பதிலைப் பெற்ற இக்கருத்துக் கணிப்பில், விவசாயத் தொழிலாளர் – அன்றாடங்காய்ச்சிகளில் 50 சதவிகிதம் பேர் காங்கிரஸூக்கும், 29 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்கப்போவதாக கூறியுள்ளனர். வியாபாரிகள், சொந்தமாக தொழில் செய்பவர்களில் 43 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வையும் 30 சதவிகிதம் பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர். அதிக அளவு ஊதியம் பெறுவோரில் குறைவானவர்களே காங்கிரஸை ஆதரிக்கின்றனர். குறைந்த அளவு ஊதியம் பெறுவோரில் அதிகமானோர் காங்கிரஸை ஆதரித்துள்ளனர்.
பா.ஜ.க.வின் உறுதியான வாக்குவங்கிகளாகக் கருதப்படும் முற்படுத்தப்பட்ட சாதிகளிலேயே மிகவும் ஏழைகள் 34 சதவிகிதம் பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்துகளில் பணக்காரர்களில் 24 சதவிகிதமும் ஏழைகளில் 32 சதவிகிதமும் காங்கிரஸை ஆதரித்துள்ளனர். அதேநேரம், பட்டியல் இனத்தவர்களில் ஏழைகளில் 31 சதவிகிதம் காங்கிரஸையும், பணக்காரர்களில் நான்கு சதவிகிதம் பேர் பா.ஜக.வையும் ஆதரித்துள்ளனர்; முஸ்லிம்களில்கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 22 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஈ-தினா வெளிப்படுத்தும் இந்த புள்ளிவிவரங்கள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் மதவெறிப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல், வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயப் பிரச்சினைகள் என தங்களது பொருளாதார வாழ்நிலையை கணக்கிலெடுத்துக் கொண்டு வாக்களித்த கிராமப்புற உழைக்கும் மக்களால்தான் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகின்றன.
பா.ஜ.க.வை தாங்கிப் பிடித்த நகர்ப்புற நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம்!
பல்வேறு பிராந்தியங்களில் பா.ஜ.க.வுக்கு வாக்குவங்கி சரிந்திருக்கிறது என்றால், அது மீண்டும் தனது வாக்குவங்கியை மீளப்பெற்றது எப்படி? கிராமப்புற பகுதிகளில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட்டு காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் பெரும்பாலான நகர்ப்புறப் பகுதிகளில் பா.ஜ.க. தனது வாக்குவங்கியைக் கூட்டியுள்ளது; நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கங்களே பாசிச பா.ஜ.க.வை தூக்கி நிறுத்தியுள்ளன என்ற மறுபக்கமும் சேர்ந்ததுதான் கர்நாடகத் தேர்தலின் முடிவுகள்.
பழைய மைசூர் மற்றும் பெங்களூருவில் 2018-ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளைவிட, இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 58 நகர்ப்புறத் தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவின் நகர்ப்புற வாக்குவங்கியில் 45.7 சதவிகிதத்தை பா.ஜ.க. மட்டுமே பெற்றுள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனது சீட்டுகளை இழந்தாலும் பல இடங்களில் வாக்குவங்கியை அதிகரித்திருப்பது குறித்து ஸ்வராஜ்யா தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை கீழ்கண்டவாறு விவரங்களை அடுக்குகிறது:
“மொத்தமாகப் பார்க்கும்போது, மும்பை கர்நாடகாவில் பா.ஜ.க. 2.4 சதவிகித வாக்குகளை இழந்திருக்கிறது. நெருக்கிப் பார்த்தால், மும்பை கர்நாடகாவின் 18 தொகுதிகளில் பா.ஜ.க. 7.4 சதவிகித வாக்குகளை இழந்திருக்கிறது. அதேநேரம் மீதமுள்ள 32 தொகுதிகளுள் 16 தொகுதிகளில் தனது வாக்குவங்கியில் 10 சதவிகிதம் உயர்வைக் கண்டிருக்கிறது.
37 தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய கர்நாடகாவில் (ஸ்வராஜ்யாவின் கணக்குப்படி) மொத்தமாகப் பார்க்கும்போது, 2.1 சதவிகிதம் வாக்குவங்கி சரிவு. நெருக்கிப் பார்த்தால் 15 தொகுதிகளில் மொத்தம் 10 சதவிகிதம் வாக்குவங்கி சரிவைக் கண்ட அதேநேரத்தில், மீதமுள்ள 22 தொகுதிகளில் 3 சதவிகிதம் வாக்குவங்கியை அதிகரித்திருக்கிறது.
ஹைதராபாத் கர்நாடகத்தில், மொத்தமாகப் பார்க்கும்போது 3.5 சதவிகிதம் வாக்குவங்கியை பா.ஜ.க. இழந்துள்ளது. நெருக்கிப் பார்த்தால், 18 இடங்களில் பா.ஜ.க.வின் வாக்குவங்கி அதிகரித்திருக்கிறது”
பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஸ்வராஜ்யா பட்டியலிடும் தொகுதிகளில் ஆகப் பெரும்பாலானவை நகர்ப்புறத் தொகுதிகளாகும். தெள்ளத்தெளிவாக, பாசிஸ்டுகளின் அரசியலுக்கு பலியாகியுள்ள பிரிவினரை வர்க்கரீதியாக நாம் அடையாளம் காணமுடிகிறது.
குறைந்தவையானாலும் பாசிஸ்டுகளுக்கு இது சித்தாந்த வெற்றி!
பொதுவாக ஊழல், நிர்வாக சீர்கேடுகள், ஒரு கட்சியின் அரசியல் கொள்கை ஆகியவை குறித்து பெரிதும் அக்கறைப்படும் வர்க்கமாக இருப்பது நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கங்களே. ஆனால், “40 சதவிகிதம் கமிஷன் சர்க்கார்” என்ற காங்கிரஸின் பிரச்சாரத்தை இந்த வர்க்கங்கள் துளியும் பொருட்படுத்தவில்லை. மேலும், இவர்கள் கொள்கை ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை ஆதரித்துள்ளார்கள் என்பதுதான் அபாயகரமான உண்மை.
“பெருமழையால் பெங்களூரு நீரில் மூழ்கியது, பெருகும் போக்குவரத்து நெரிசல்கள், மோசமான திடக்கழிவு மேலாண்மை ஆகியவை பா.ஜ.க.வின் வெற்றியை பாதித்திருக்க வேண்டும். ஆனால், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்தே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூரில் உள்ள 7 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்” என்கிறது நியூஸ் கிளக் செய்தித்தளத்தின் ஒரு கட்டுரை.
கர்நாடகாவில் கிராமப்புறங்களில் காங்கிரஸுக்கு இருக்கும் அமைப்பு பலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு இல்லை. இன்றளவும் அது கிராமப்புற பகுதிகளில் பலவீனமாகவே உள்ளது. அதேநேரம், பல ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். கும்பல், கர்நாடகாவின் நகர்ப்புறங்களில் தீவிரமாக வேலைசெய்துவந்திருக்கிறது. அதன் பலனைத்தான் இத்தேர்தலில் அறுவடை செய்துள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நகர்ப்புற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். தனது ஷாகா வலைப்பின்னலை பெருக்கியது. அரசுப் பள்ளிகளிலேயே ஷாகா பயிற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. இன்று பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என முழங்கும் காங்கிரஸுதான் ஷாகா பயிற்சிகளை தடுத்தால், ‘இந்துக்கள்’ கோபித்துக் கொள்வார்கள் என வேடிக்கை பார்த்தது.
பலரும் தீவிரமான இந்துத்துவப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டதால்தான் பா.ஜ.க. தோல்வியுற்றது என்கிறார்கள். கர்நாடகத்தில் பாசிசக் கும்பலின் இந்த அணுகுமுறை பெரும்பான்மையான நடுநிலை, ஊசலாட்ட வாக்காளர்களை எதிர்வரிசைக்கு தள்ளியுள்ளது என்பதும், அதனால் பா.ஜ.க. தோல்வியுற்றது என்பதும் உண்மைதான். அதேநேரம் நாம் இதன் மற்றொரு பகுதியையும் கவனிக்க வேண்டும்.
படிக்க: கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!
மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசாதது, எடியூரப்பாவுக்கு அடுத்து மாநிலத்தில் பிரபலமான தலைவர்கள் இல்லாமல் போனது, ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மன் சவடி போன்ற பா.ஜ.க. பெருந்தலைவர்கள் காங்கிரஸூக்கு ஓடிப்போனது, பல புதிய முகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியது, மூன்றரை ஆண்டுகால ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி ஆகியவற்றையெல்லாம் கடந்து 30 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளார்கள். இவை அனைத்தும் சித்தாந்த ரீதியாக கிடைத்துள்ள வாக்குகளாகும்.
ஆனால், காங்கிரஸூக்கு கிடைத்த வாக்குகள் இப்படி சித்தாந்த ரீதியாக பெறப்பட்ட வாக்குகள் அல்ல. மக்களின் பொருளாதார வாழ்நிலை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே அவர்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழை எளிய மக்களின் வாக்குகளையும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாக்குகளையும் கவரும் வகையில் தனது தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்துக் கொண்டதே காங்கிரஸின் வெற்றிக்கு அடிப்படை. ஆகவே, இதிலிருந்துதான் பாசிஸ்டுகளின் தேர்தல் தோல்வியை நாம் பரிசீலிக்க முடியும்.
கர்நாடகத்தை குஜராத், உத்தரப்பிரதேசத்தைப் போலக் கருதிக் கொண்டு மிகைமதிப்பீடு செய்ததுதான், பா.ஜ.க. செய்த ஒரே தவறு. மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி, வயர் தளத்திற்கு அளித்த பேட்டியில் இதைத் தெளிவாக விளக்குகிறார்.
“அப்படியானால், நீங்கள் இங்கு இந்துத்துவா வெற்றிபெற முடியாது என்று கருதுகிறார்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:
“இந்துத்துவாவிற்கு சில தனித்த கட்டங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். முதலில் இந்துத்துவா வெவ்வேறு சாதிக் குழுக்களை அல்லது அடையாளங்களை அங்கீகரித்து, அதனை பரந்த இந்து அடையாளத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இரண்டாவது, இந்து அடையாளத்தை இந்துத்துவா அடையாளமாக (முஸ்லிம், கிறித்தவ வெறுப்பு) மாற்ற வேண்டும். மாற்றம் ஒவ்வொரு கட்டமாக நடைபெறுகிறது”
“கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே – அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார். கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.
ஆகவே, கர்நாடகம் இன்னும் குஜராத்தாக மாறவில்லை; ஆனால், மாறும் போக்கில் உள்ளது. கர்நாடகத்தைப் பற்றிய தங்களின் மிகைமதிப்பீட்டை பாசிஸ்டுகள், இந்த தேர்தல் தோல்வியின் மூலம் உணர்ந்திருப்பார்கள். இனி அடுத்து தங்களது நிகழ்ச்சிநிரலை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், பா.ஜ.க.வின் இந்த தேர்தல் தோல்வியைப் பார்த்து “மதவாதம் வீழ்ந்துவிட்டதாக” பாசிச எதிர்ப்பு சக்திகள் இருமாந்திருந்தால், அடுத்த சுற்றில் நாம் எழுந்திருக்கமுடியாத வகையில் வீழ்த்தப்படுவோம்!
பால்ராஜ்