கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர், மாணவர்களைச் சாதி ரீதியாகப் பேசியதைக் கண்டித்து நடந்த மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக அக்கல்லூரி கால வரையறையின்றி மூடப்படுவதாக அதன் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயவாணி ஸ்ரீ என்பவர் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் சில மாணவிகளைச் சாதி ரீதியான வசைச் சொற்களால் திட்டியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றதாகும்.  இதுதொடர்பாக மாணவர்களால் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுக்கப்பட்டு, ஜெய வாணிஸ்ரீக்கு எதிராகப் போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகக்  கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் உறுதி கூறப்பட்டதை அடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லை என்பதால் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகக்  கல்லூரியின் அனைத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராடி வருகின்றனர்.

இதனால், “எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக,  அடுத்த அறிவிப்பு வரும்வரை கல்லூரி மூடப்படுவதாக” கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.


படிக்க: பேராசிரியர் சாய்பாபா விடுதலை | வழக்குரைஞர் ப.பா.மோகன் | நேர்காணல்


எது எதிர்பாராத சூழ்நிலை? சாதி ரீதியாகப் பாதிக்கப்பட்ட சக மாணவர்களுக்கான நீதியை வேண்டி ஒரு மாதமாக மாணவர்கள் பல்வேறு வழிகளில் போராடி வருகிறார்கள். ஆனால் சாதிய குற்றவாளியான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை காப்பாற்றி வந்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். அதனைக் கண்டித்து மாணவர்கள் போராடினால் கல்லூரியை மூடுகிறார்கள்.

சாதியாதிக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்காமல் குற்றவாளிகளைப் பாதுகாப்பது, இருதரப்பையும் சமாதானம் செய்து ஒடுக்குமுறையை நீடிக்கச் செய்வது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது. கோவிலில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களின் ஆலய நுழைவு உரிமையை நிலைநாட்டாமல் கோவிலைப் பூட்டி வைப்பதும், சாதிக் கொடுமைகளுக்கு எதிராக மாணவர்கள் போராடினால் கல்லூரியைப் பூட்டி வைப்பதும்தான் “திராவிட மாடல்” ஆட்சியா?

சாதியாதிக்க குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கல்லூரி நிர்வாகம் முதல் அரசு இயந்திரம் வரை ஒன்று சேர்ந்து காப்பாற்ற நினைக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டதாலே மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் போராடும் மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டும்.


சீனிச்சாமி

செய்தி ஆதாரம்: The News Minute

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க