டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடம் இருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. அந்தவகையில், டெல்லி யூனியன் பிரதேசத்தில், குடிமைப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை) நியமிப்பது தொடர்பான விசயத்தில், ஆளுநரைக் கொண்டு டெல்லி அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்து வந்தது, ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு.

இது தொடர்பான வழக்கில், 2015-ஆம் ஆண்டில் தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு டெல்லி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. ஆனால், அந்த தீர்ப்பு மோடி அரசின் மேல்முறையீட்டால் முறியடிக்கப்பட்டது. இதற்கெதிராக டெல்லி அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கிட்டதட்ட எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த மே 11-ஆம் தேதி டெல்லி யூனியன் பிரதேசத்தில் குடிமைப் பணி அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்குதான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை உறுதிசெய்துள்ளது.

அத்தீர்ப்பில் “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும்” மற்றும் “அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும்” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்று இருந்தனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “ஜனநாயகத்திற்கும் டெல்லி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என வரவேற்று இருந்தார்.


படிக்க: டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!


இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக்கு சவால்விடும் விதமாக, மே 19-ஆம் தேதி டெல்லி யூனியன் பிரதேச அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில், தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தைத் (The Government of National Capital Territory of Delhi Act – 1991) திருத்தி, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (National Capital Civil Service Authority) உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது மோடி அரசு.

இந்த அவசரச் சட்டம் டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை) நியமனம் மற்றும் மாறுதல் செய்வதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.

இதன் மூலமாக, டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடமிருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

இந்த அவசரச் சட்டத்தின்படி, அமைக்கப்படும் ஆணையக் குழுவில் முதல்வர் தலைமையில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் மற்றும் மாறுதல் செய்வதற்கான முதல்வரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு, பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒருமித்த முடிவு எடுக்கப்படாவிட்டால், துணைநிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறப்பட்டுள்ளது.

000

இந்த வழக்கு விசாரணையின்போது மோடி அரசு, டெல்லியின் நிர்வாக அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தேச நலனுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில் வாதங்களை முன்வைத்தது. “டெல்லி இந்தியாவின் தலைநகராக உள்ளது. உலக நாடுகள் டெல்லியின் வழியாகத்தான் இந்தியாவை பார்க்கின்றன. இதனால் அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் ஒன்றிய அரசுக்கு தேவையான மற்றும் அவசியமான ஒன்று” என்று வாதிட்டது.

ஏற்கெனவே ஒன்றிய அரசு, தேச நலனைக் காரணம் காட்டி டெல்லி யூனியன் பிரதேசத்தின் பொது ஒழுங்கு, நிலம், காவல் ஆகியவற்றை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல ஆண்டுகளாக, டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையையும் மறுத்து வருகிறது. தற்போது நிர்வாக அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதன் மூலம், யூனியன் பிரதேசம் என்பதற்குக் கூட அருகதையற்ற நிலைக்கு டெல்லியைக் கொண்டு சென்றுவிட்டது, மோடி அரசு.

ஆகையால், மோடி அரசு முன்வைக்கும் ‘தேச நலன்’ என்பது வெற்றுக் கூச்சலாகும். மாநிலங்களுக்கான அதிகாரங்களைப் பறித்து அவற்றை அதிகாரங்கள் ஏதுமற்ற சமஸ்தானங்களாக சுருக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஏதாவது ஒரு வகையில் தடையாக அமைந்துள்ளன என்பதுதான் எதார்த்தமாகும்.

எதிர்க்கட்சிகள் கூட கார்ப்பரேட் திட்டங்களைத்தான் நடைமுறைப்படுத்துகின்றன என்றாலும், அது மோடி அரசு முன்னிறுத்தும் கார்ப்பரேட் வர்க்கங்களின் நலனிற்கும் இந்துராஷ்டிரக் கொள்கைக்கும் எதிரானதாக இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டில், அடிமை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் பல்வேறு விசயங்களில், அ.தி.மு.க. எந்த எதிர்ப்பையும் காட்டியதில்லை. ஆனால், பி.ஆர்.எஸ். ஆட்சி புரியும் தெலுங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் ஏதாவது சில அம்சங்களில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு உட்படாமல் எதிர்த்து வருகின்றன.

மாநிலங்களுக்கென சில தனித்துவமான கோரிக்கைகள் இருப்பதைக் கூட மோடி அரசு விரும்புவதில்லை என்பதுதான் எதார்த்தம். மாறாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களே ஆனாலும், அவை மாநில உரிமை என்று எதையும் கேட்க முடியாது; கேட்கக்கூடாது என்பதுதான் இந்திராஷ்டிரத் திட்டமாகும்.

டெல்லியில் மட்டுமல்ல, பா,ஜ.க ஆட்சி செய்யாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுதான் பொது நிலைமை. ஆளுநர்கள் மூலமும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்களை அதிகாரிகளாக நியமிப்பதன் மூலம் இணையாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களை எந்த அதிகாரமும் அற்ற வெற்றுக் கூடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளே அதற்கு சான்றுகளாகும்.


படிக்க: டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !


இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தலைமையிலான மோடி அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டப்பூர்வமாகவே எந்த முறையிலும் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பதற்கான அறிகுறி ஆகும். “நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம் என்பதால் இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது” என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு பெயரளவிலான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான அதிகாரம் ஒன்றிய அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிப்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டமும் இந்த அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரம்தான்.

இந்த அரசியல் சாசனத்தின் ஒரு கூறைப் பயன்படுத்தி, பாசிஸ்டுகள், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி, நீட் போன்ற போட்டித் தேர்வுகள், புதிய கல்விக் கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் போன்ற பல பாசிச சட்டங்களை அதற்கு நாம் சான்றுகளாக கூற முடியும். அதாவது இந்த பெயரளவிலான ஜனநாயகக் கட்டமைப்பை பயன்படுத்தி, இந்துராஷ்டிரத்தை நிறுவிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இல்லை; எனவே எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டி அவசரச் சட்டத்தை ரத்து செய்து விடலாம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.

மாநிலங்களவையில் போதிய வாக்குகள் இன்றி, அவசரச் சட்டம் தற்காலிகமாக கூட பின்வாங்கப்படலாம். ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்யலாம். ஆனால், அவையெல்லாம் தற்காலிகமானவைதான். ஏனென்றால், இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பு என்பது பாசிஸ்டுகளுக்கு விளைநிலமாக அமைந்துள்ளது. பல்வேறு வகைகளில் சதித்தனமாகவும் அரசியல் சாசனத்தின் மற்ற ஓட்டைகளைப் பயன்படுத்தியும் மாநிலங்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம் மாநில உரிமைகளைப் பறித்துவிடுவதில் மோடி கும்பல் கைதேர்ந்தது.

ஆகையால், பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைப்பதற்கான ஒரே வழி மக்கள் போராட்டங்கள் மட்டுமே. “சுற்றிவளைக்குது பாசிசப் படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்பது தமிழ்நாட்டிற்கான முழக்கம் எனினும் இந்துராஷ்டிரத்திற்கு எதிரான உரிமை முழக்கமாகும். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்காக, நாட்டையே சுற்றிவளைத்துக் கொண்டிருக்கும் பாசிசப் படைக்கெதிராக முழங்க வேண்டும். போலி ஜனநாயக மாயைகள் பாசிஸ்டுகளை வளர்க்கவே செய்யும்! பாசிசத்திற்கு எதிராக துவளாமல் போராடுவதற்கான மக்கள் எழுச்சிகளே பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைக்கும்!


குப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க