டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!

இந்திய அரசியலமைப்பு சாசனத்தையும் ஆளுநரையும் பயன்படுத்தி பா.ஜ.க ஆளாத மாநிலங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதன் மூலம் தனது கட்டுக்கடங்காத அதிகார வெறியை பாசிச மோடி அரசு வெளிப்படுத்தி வருகிறது.

0

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசாங்கத்திற்கும் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா-விற்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முட்டல் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இவ்‌வழக்கின் தீர்ப்பு கடந்த மே 11 அன்று வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லை என்றாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் அரசுக்கே உள்ளது” என்று கூறப்பட்டது.

இத்தீர்ப்பு ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கெஜ்ரிவால் சில முக்கிய அதிகாரிகளையும் மாற்றியிருந்தார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள “துணைநிலை ஆளுநர் டில்லி சட்டமன்றத்திற்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும்” என்பதையும், “அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படவில்லை என்றால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்” என்பதையும் பலரும் கொண்டாடி வந்தனர். அதிகார வெறி பிடித்த பாசிஸ்டுகளால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கொண்டாட்டங்கள் முடிவடைவதற்குள் பாசிச மோடி அரசு தனது அடுத்த தாக்குதலைத் தொடுத்துவிட்டது.

கடந்த மே 19 அன்று டெல்லி அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (The Government of National Capital Territory of Delhi Act, 1991) திருத்தியும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நிராகரிக்கும் வகையில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


படிக்க: நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!


இந்த அவசர சட்டம் வாயிலாக, குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்க தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம் (National Capital Civil Service Authority) என்ற அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதில் டெல்லி முதல்வர், டெல்லி அரசு தலைமைச் செயலாளர் (chief secretary) மற்றும் முதன்மை உள்துறைச் செயலர் (principal home secretary) ஆகியோர் அங்கம் வகிப்பர். இதற்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். இக்குழு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். நியமனம் தொடர்பான இறுதி முடிவை துணைநிலை ஆளுநர் தான் எடுப்பார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வரின் முடிவு இக்குழுவில் சிறுபான்மை ஆகிறது. இது மே 11 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யும் நடவடிக்கையாகும்.

டெல்லி என்பது சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சொந்த சட்டசபையைக் கொண்ட யூனியன் பிரதேசமாகும். 2015-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அப்போது டெல்லி துணைநிலை ஆளுநராக இருந்தவர் காங்கிரஸ்-ஆல் நியமிக்கப்பட்ட நஜீப் ஜங் (Najeeb Jung). இவர் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு கொடுத்து வந்த குடைச்சல்களைக் கண்ட மத்திய பா.ஜ.க அரசு டிசம்பர் 2016 வரை இவரை பதவியில் விட்டு வைத்திருந்தது. பின்னர், உள்துறை அமைச்சகத்தின் நிர்பந்தத்தால் இவர் திடீர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தையும், பொதுப் பட்டியலில் (Concurrent list) மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தையும் பயன்படுத்தி பா.ஜ.க ஆளாத மாநிலங்களை நிலைகுலையச் செய்வதை ஒரு உத்தியாகக் கடைப்பிடித்து வருகிறது பாசிச மோடி அரசு. அதிலும் குறிப்பாக, மோடியின் 2019 தேர்தல் வெற்றிக்கு பிறகுதான் துணைநிலை ஆளுநர்கள் உக்கிரமானவர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில் தான் மே 2022-இல் வினய் குமார் சக்சேனா டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

சக்சேனா தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல்‌ தனது ‘பணி’யை செவ்வனே செய்யத் தொடங்குகிறார். அமைச்சர்களைத் தொடர்பு கொள்ளாமல் நேரடியாக அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்துவது போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காத போக்கை கடைப்பிடிக்கிறார். சக்சேனா மீது டெல்லி அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. துணைநிலை ஆளுநரைக் கொண்டு மத்திய அரசு மேற்கொள்ளும் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாத டெல்லி அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.


படிக்க: ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!


உச்ச நீதிமன்றமும் டெல்லி அரசாங்கத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 123-ஐ பயன்படுத்தி, தனது கைப்பாவையான குடியரசுத் தலைவரைக் கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாக் காசாக்கும் வண்ணம் அவசர சட்டத்தை இயற்றியுள்ளது பாசிச மோடி அரசு.

அரவிந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றம் சென்று சட்டப்போராட்டம் நடத்தி உரிமையை வென்றெடுக்க வழிவகை செய்த அதே அரசியல் அமைப்பு சாசனம் தான், பாசிச மோடி அரசு குடியரசு தலைவரின் துணைகொண்டு அவசர சட்டம் இயற்றி வென்றெடுக்கப்பட்ட அந்த உரிமையை பறித்துக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. நாம் இங்கு கவனிக்க வேண்டிய விசயம் இது தான்.

கேஜ்ரிவாலோ தற்போது மாநிலங்கள் அவையில் இந்த சட்டத்தை தோற்கடிக்கும் பொருட்டு பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் இதே சட்டத்தை அச்சு பிறழாமல் மீண்டும் ஒருமுறை அவசர சட்டமாக் கொண்டுவர இந்த அதிகாரவெறி பிடித்த பாசிச மோடி அரசு தயங்காது.

பாசிசம் அரசியல் அமைப்பு சாசனத்தைப் பயன்படுத்தியே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. சிலர் இதை அறியாமல் இருக்கின்றனர். இன்னும் சிலரோ, இதை அறிந்ததும் அறியாததுபோல் “அரசியலமைப்பு சாசனத்தை காப்போம்” என்று முழங்குகின்றனர். எனவே பாசிசத்தை வீழ்த்த, அரசியல் அமைப்பு மாயைகளை விட்டொழிந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க