டெல்லி: மத முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் வி.எச்.பி!

“உங்கள் வீடுகளில் ஐந்து அடிகள் கொண்ட திரிசூலங்களை வைத்திருக்க வேண்டும். குறைவான உணவை உண்ணுங்கள்; மலிவான விலையில் மொபைல் போன் வாங்குங்கள்; எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்கள் வீடுகளில் ஐந்து திரிசூலங்கள் வைத்திருப்போம் என்று சபதம் செய்யுங்கள்” - வி.எச்.பி

ஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் மத முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தி வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்காக டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 50,000 திரிசூலங்களை விநியோகிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23, 2025 ஆம் ஆண்டு முடிவடைவதால் 2025 சட்டமன்றத் தேர்தல் தேதிகள் ஜனவரி முதல் வாரத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி மத்தியில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்கிற உள்ளதால் காவி கும்பல் டெல்லியில் தீவிர மதவெறிப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது.

விஸ்வ ஹிந்து பரிஷத் ”திரிசூல் தீச்ஷா சமரோ” (Trishul Diksha Samaroh) என்கிற மதவெறிப் பிரச்சார இயக்கத்தின் தொடக்க விழாவை பஹர்கஞ்ச்-இல் (Paharganj) நடத்துவதற்கு முடிவு செய்து 8,000 திரிசூலங்களை வழங்குவதற்குத் திட்டமிட்டது. அதற்காக “நீங்கள் அனைவரும் உங்களின் பெயர்களைப் பதிவு செய்து ஆயுதங்களை எடுத்துச் செல்ல வேண்டும்” என்று வாட்ஸ்அப் மூலமாகப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது வி.எச்.பி-யின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள்-க்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் திரிசூலங்கள் வழங்கப்படுவது குறித்து ”இந்து தெய்வங்கள் தங்களின் கைகளில் ஆயுதங்களை வைத்திருக்கின்றன. விஜயதசமியின் போது ஆயுதங்களை வணங்குகிறோம். ஒவ்வொரு இந்துவும் மஹாகாளேஸ்வரின் ஆயுதமான திரிசூலத்தை வைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒரு முறை திரிசூலத்தை இதுபோன்று வழங்கி வருகிறோம்” என்று வி.எச்.பி-ஐ சேர்ந்த சுரேந்திர குப்தா கூறுகிறார்.

முக்கியமாக விழாவில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு நன்றி தெரிவித்து “வங்கதேச ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு இந்தியாவிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் டெல்லி முதல் மாநிலமாக மாறியுள்ளது.

இந்த பாராட்டத்தக்க முயற்சியையும் அறிவுறுத்தலையும் துணைநிலை ஆளுநரின் நிர்வாக அதிகாரிகள் தீவிரமாகப் பின்பற்றுவார்களா என்பதில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து வெளியேற்ற டெல்லி நிர்வாகத்துடன் ஒத்துழைப்புடன் செயல்பட நூற்றுக்கணக்கான பஜ்ரங் தள் தொண்டர்கள் தயாராக உள்ளனர்” என்று பேசியுள்ளார்.

இதன் மூலமாக இஸ்லாமியர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவோம், அதற்கு பஜ்ரங் தள் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகப் பேசியுள்ளார்.


படிக்க: பாசிச கும்பலால் குறிவைத்துத் தாக்கப்படும் கிறிஸ்தவர்கள்


விஸ்வ ஹிந்து பரிஷத் ”இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு நாங்களும் துணையாக இருப்போம்” என்று டிசம்பர் 18 ஆம் தேதி அன்று டெல்லி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேடையிலிருந்து திரிசூலத்தைத் தூக்கிக் காண்பித்த ஜதேதார் (Jathedar) ஹர்ஜீத் சிங் “இதோ ஒன்றை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆனால் உங்கள் வீடுகளில் ஐந்து அடிகள் கொண்ட திரிசூலங்களை வைத்திருக்க வேண்டும். குறைவான உணவை உண்ணுங்கள்; மலிவான விலையில் மொபைல் போன் வாங்குங்கள்; எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்கள் வீடுகளில் ஐந்து திரிசூலங்கள் வைத்திருப்போம் என்று சபதம் செய்யுங்கள்” என்று இந்துமதவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

வலதுசாரி டிவி சேனலான சுதர்சன் நியூஸிடம் பேசிய வி.எச்.பி டெல்லி மாநில தலைவர் கபில் கண்ணா “டெல்லியில் இந்து அல்லாத மக்களால் பரப்பப்படும் லவ் ஜிகாத், நில ஜிகாத் போன்ற அணைத்து தீய செயல்களையும் முடிவுக்குக் கொண்டுவர உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம். பசுக்களைப் பாதுகாக்கவும் உறுதிமொழி எடுத்துள்ளோம்” என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்துக்களைப் பேசியுள்ளார்.

சம்பலில் நடந்த வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுப் பேசிய ஜெயின் “ஜிகாதி சக்திகள் இந்துக்களின் மத யாத்திரைகளில் தாக்குதல்களை நடத்துகின்றன. நிறுவப்பட்ட கோயில்கள் குறித்து சட்டப்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டாலும், வகுப்புவாத வெறியைப் பரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது பஜ்ரங் தள் ஊழியர்கள் அத்தகைய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டனர்” என்று கூறியுள்ளார். இது வி.எச்.பி பயங்கரவாத கும்பலின் வெளிப்படையான அச்சுறுத்தலாகும்.

இந்துக்கள் பாதுகாப்பு என்கிற பெயரில் திரிசூலங்கள் வழங்குகின்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்துவதற்குக் காவி கும்பல் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக (தேர்தலுக்கு முன்பாக) 50,000 திரிசூலங்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, மகாராஷ்டிர மாநில தேர்தல் பிரச்சாரத்தில் மோடி முன்வைத்த ”ஒன்றிணைந்தால் பாதுகாப்பு” என்று இந்து மக்களை அணிதிரட்டிக் கொள்வதற்கான அதே முழக்கங்கள் இந்த நிகழ்ச்சியிலும் வலியுறுத்தப்பட்டன.

சங்கப் பரிவார கும்பலைக் களத்தில் முறியடிக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க