டெல்லி ரயில் நிலையத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு கும்பமேளாவிற்குச் செல்வதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இச்செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 தொடங்கி பிப்ரவரி 26 வரை (46 நாட்கள்) நடைபெறுகிறது. அதில் பங்கேற்று ’திரிவேணி சங்கம’த்தில் (கங்கை, யமுனை, புராணத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதிகளின் சந்திக்கும் இடம்) ’புனித’ நீராடுவதற்கு ஜனவரி 13 ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான மக்கள் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று வார விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். இரவு 8 மணிக்கே அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டத்தால் ரயில் நிலையமே ஸ்தம்பித்திருந்தது. மக்கள் அதனை தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் ரயில்வே அதிகாரிகள் இரவு 10 மணிக்கு நடைமேடை 14 மற்றும் 16 ல் நிற்கவேண்டிய ரயில்களின் பெயர்களையும், நடைமேடை எண்களையும் மாற்றிக் கூறியுள்ளனர். அதனால் ஏற்பட்ட குழப்பத்தினால் அனைவரும் நடைமேடை 16-இல் நின்று கொண்டிருந்த பிர்யாக்ராஜ் சிறப்பு ரயிலைப் பிடிப்பதற்காக நடைமேடை படிக்கட்டுகளில் முந்திக்கொண்டு ஓடியுள்ளனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் படிக்கட்டுகளில் முந்திக்கொண்டு ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் கால் தடுக்கி படிக்கட்டுகளில் ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்ததில் பின்னே வந்தவர்கள் மிதித்ததாலும், படிக்கட்டுகளின் ஓரம் உள்ள கம்பிகள் தலையைத் துளைத்ததாலும் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயங்களுடன் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா, லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படிக்க: உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!
பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் “ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது மற்றும் புறப்படுவதில் ஏற்படுகின்ற காலதாமதம், அடிக்கடி ரயில்கள் வந்து நிற்கும் நடை மேடைகளை மாற்றுவது, ரயிலில் உள்ள இருக்கைகளை விட அதிக டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழக்கக் காரணம்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் மக்கள் தெரிவித்த வலிநிறைந்த கருத்துக்களை எல்லாம் துளியும் பொருட்படுத்தாத மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ”கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. உயிர் இழப்பு ஏற்பட்டது குறித்து விசாரிப்பதற்கு உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 18 பேர் உயிரிழந்தது குறித்த செய்தி பரவுவதைத் தடுப்பதற்காக ரயில்வே துறை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் ”இழப்பீட்டால் என் மகளை மீண்டும் என்னிடம் திரும்பிக் கொண்டுவர முடியாது” என்று தெரிவித்த டெல்லி தென்மேற்கு சாகர்பூர் பகுதியைச் சேர்ந்த ஓபில் சிங் “நான் நடைமேடைக்குச் சென்றுகொண்டிருந்த போது ஒரு பெரிய கூட்டத்தைக் கண்டேன். என் மனைவியும் என் மற்றொரு குழந்தையும் படிக்கட்டில் ஏறிச் சென்று கொண்டிருந்தோம். என் ஏழு வயது மகள் ரியா கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டாள். மக்கள் எங்கள் மீது விழத் தொடங்கினர். இதற்கிடையில் ஒரு இரும்புக் கம்பி எனது மகளின் தலையைத் துளைத்தது. நான் என் மகளை என் கைகளில் தூக்கிக்கொண்டு ஆட்டோ ரிக்க்ஷவில் aமருத்துவமனைக்கு விரைந்தேன். ஆனால் நாங்கள் சென்றடைய மிகவும் தாமதமாகிவிட்டது. மருத்துவர்கள் அவள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்” என்று வலிகள் நிறைந்த வார்த்தைகளில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷூ சேகர் உபாத்தியாய் ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் “கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பயணி ஒரு நடைபாதை பாலத்தின் படிக்கட்டுகளில் வழுக்கி விழுந்ததால் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்தது. அதனால் மற்ற பயணிகளும் கீழே விழுந்தனர். அதனால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று கூறி தனிமனித தவறுதான் காரணம் என்ற வகையில் படுகொலைகளை மறைக்கும் விதமாகத் தெரிவித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படிக்க: ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலும்!
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான உண்மையை மறைக்கும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முயற்சி மிகவும் வெட்கக்கேடானது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி “இந்த சம்பவம் ரயில்வேயின் தோல்வியையும், அரசாங்கத்தின் உணர்வின்மையையும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. பிரயாக்ராஜுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்வதைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாசிச கும்பலானது அரசு அதிகாரிகள், எம்.பி-க்கள் , கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு வி.ஐ.பி என்று தனியாகப் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஆனால் கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை மோடி அரசு ஏற்படுத்தித் தரவில்லை. குறைந்த அளவிலான ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது மோடி அரசு. அதன் காரணமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களில் பயணிக்கக் கூடிய மக்களுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் ஆத்திரமடைந்து மக்கள் ஏசி பெட்டிகளின் ஜன்னல்களை உடைத்து, பயணிக்கின்ற காட்சிகளும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று பீகார் ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜூக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த ரயிலில் மக்கள் அடித்துக்கொண்டு ஏறினர். பலர் உள்பக்கமாகப் பூட்டிருந்த ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்து உள்ளே நுழைந்தனர். சிலர் இடம் கிடைக்காததால் இன்ஜின் பெட்டியில் ஆபத்தான முறையில் பயணித்த காணொளிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலிலிருந்தது. ஆனால் பாசிச கும்பல் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாவார்கள் என்று தெரிந்திருந்தும் தன்னுடைய இந்து முனைவாக்கத்திற்காக இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடத்துவதற்கு அனுமதி அளித்தது. அந்நிகழ்வு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொரோனா தொற்று பரவுவதற்குக் காரணமாக அமைந்து பல உயிர்களைப் பலி கொண்டது.
எனவே, பாசிச கும்பலானது மக்களிடம் நிலவுகின்ற மூடத்தனத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்து மதவெறியை ஊட்டி தனக்கான அடித்தளத்தை உருவாக்க முயல்கிறது. அதனை தனக்கான வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் தற்போது ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசல் பலிகளையும் பார்க்க வேண்டியுள்ளது.
ஏற்கெனவே ஜனவரி 29 அன்று மௌனி அமாவாசை நாளன்று 40 பேரைப் பலிகொடுத்த துயரம் மறைவதற்குள் தற்போது மீண்டும் 18 பேரை பாசிச கும்பல் பலி கொடுத்துள்ளது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram