உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஜூலை 2 அன்று மத சொற்பொழிவு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 121 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது.
போலே பாபா என அழைக்கப்படும் சூரஜ்பால் சிங் என்ற சாமியாரின் மத சொற்பொழிவு நிகழ்ச்சி ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 80,000 பேர் கலந்துகொள்வர் என்றுக்கூறி அரசு நிர்வாகத்தில் அனுமதி வாங்கப்பட்டிருந்த நிலையில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திரட்டியிருந்தனர். மக்கள் வெளியேறுவதற்கு போதிய நுழைவாயில்களும்; எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் பாதுகாப்பற்ற வகையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்தபிறகு, “பாபாவின் பாதம்பட்ட மண்ணை சேகரித்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்” என திட்டமிட்டு பரப்பபட்ட பொய்யை நம்பி மண்ணை சேகரிக்கவும், பாபாவின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கவும் போட்டிபோட்ட மக்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாபாவின் பாதுகாவலர்கள் என்ற பெயரிலான குண்டர்கள் போலே பாபாவை நெருங்கிவந்த மக்களை தடியால் தாக்கியதிலும் தள்ளி விட்டதிலும் பலர் கீழே விழுந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழ முடியவில்லை. பகலில் பெய்த மழையால் மண் ஈரமாகவும் வழுக்கும் தன்மையுடனும் இருந்தது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியானதோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் டெம்போ மற்றும் பஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் நடந்த புல்ராய் கிராமத்தில் ஒரு சிறிய அரசு மருத்துவமனை மட்டுமே இருந்தது. அங்கு ஒரே ஒரு மருத்துவரால், காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை. எனவே, காயமடைந்தவர்கள் ஹத்ராஸில் உள்ள சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிக நபர்களைக் கையாள முடியாமல் அம்மருத்துவமனையும் திணறியது. இதனால், பலரும் உயிரிழந்து, பலி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. சிகிச்சையளிப்பதற்கு படுக்கை வசதி கூட இல்லாததால் மருத்துவமனை வாசலில் உடல்கள் குவிக்கப்பட்டிருந்த அவலம் அரங்கேறியது.
காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி இறந்தவர்களுக்கு உடற்கூராய்வு கூட செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள எட்டா, காஸ்கஞ்ச், ஆக்ரா, அலிகார் உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மருத்துவமனைகளில் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்ட உடல்களை பெற உறவினர்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சியும் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் செத்தார்களா? பிழைத்தார்களா? எனத் தெரியாமல் பிணக்குவியலுக்குள் தங்களது குடும்பத்தினரை தேடிய காட்சியும் இணையத்தில் பரவி காண்போரின் மனதை உலுக்கியது. சொல்லபோனால், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் ஒருபகுதி எனில் உத்தரப்பிரதேச மருத்துவக் கட்டமைப்பு சீர்கேடு கணிசமானோரை கொன்றொழித்தது
இக்கொடூரச் சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பகுதியினர் பெண்களும் குழந்தைகளும்தான். சில குடும்பங்கள் தாய், மகள், மனைவி என மூவரையும் இழந்து பரிதவித்தன. மதம் என்ற போதையில் மக்களை ஆழ்த்துவதன் கோர விளைவை இச்சம்பவம் துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது.
பாலியல் பொறுக்கி ‘பாபா’வான கதை
வெண்ணிற ஆடையை அணிந்துகொண்டு தன்னை பாபா என்று சொல்லிக்கொள்ளும் சூரஜ்பால் சிங் ஆரம்பக்காலத்தில், உத்தரப்பிரதேசத்தில் போலீசில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தான். போலீசாக இருக்கும்போதே ஆக்ரா, எட்டாவா, கஸ்கஞ்ச், ஃபரூகாபாத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூரஜ் பால் சிங் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பிற குற்ற வழக்குகளும் பதியப்பட்டிருந்தன. இதனால் பலமுறை இடைநீக்கம் செய்யப்பட்ட சூரஜ்பால் 1997-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலிருந்து வெளியே வந்தவன் தனது போலீஸ் வேலையை ‘துறந்து’ போலே பாபாவாக அவதாரம் எடுத்தான்.
2000-ஆம் ஆண்டு ஆக்ராவில் இறந்த இளம்பெண் ஒருவரை உயிர்த்தெழுப்பப் போவதாக சர்ச்சையைக் கிளப்பியதால், மீண்டும் போலீசால் கைது செய்யப்பட்டான். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு, சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு தலைமுடியை நீளமாக வளர்த்துக்கொண்டு நீண்ட வெள்ளி நிற ஆடைகளை அணிந்துக்கொண்டு ‘முழு பாபாவாக’ மாறினான். “கருப்பு கமாண்டோக்கள்” என்று அழைப்படும் கருட் யோதா, ஹரி வாஹக், நாராயணி சேனா என மூன்றடுக்கு மெய்காப்பாளர்கள் என்ற பெயரிலான குண்டர் படையையும் வைத்துள்ளான். தனித்தனி ஆடையும் பணியும் ஒதுக்கப்பட்டுள்ள இக்குண்டர்களைக் கொண்டு மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.
குறிப்பாக, சூரஜ்பால் சிங் உத்தரப்பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ள தலித் உட்பிரிவான ஜாதவ் சாதியை சார்ந்தவன் என்பதால் உத்திரப்பிரதேசத்தின் எட்டா, ஹத்ராஸ், புலந்த்ஷாஹர், அலிகார், குர்ஜா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஜாதவ் மற்றும் வால்மீகி தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வருகிறான். உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள மக்களிடமும் இவனுக்கு ஆதரவு உள்ளதால் சூரஜ்பாலின் சொற்பொழிவிற்கு எளிதாக லட்சக்கணக்கான மக்கள் கூடிவிடுவர். அதிலும் பெண்களை தனது அடித்தளமாக கொண்டுள்ள சூரஜ்பால் சிங், அதற்காகவே தனது மனைவியை ஒவ்வொரு சொற்பொழிவிற்கும் திட்டமிட்டு அழைத்து செல்கிறான்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், பார்ப்பனிய ஆகம விதிகளுக்கு மாறாக அனைவரும் கருவறைக்கு சென்று கடவுளை வழிபடலாம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் வரலாம் என்றெல்லாம் அறிவித்தன் மூலம் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்களை சாரை சாரையாக வரவைத்து கொள்ளையடித்தது போலவே சூரஜ்பால் சிங்கும் தலித் மக்களையும் பெண்களையும் குறிவைத்து பல உத்திகளை மேற்கொண்டான். பார்ப்பனிய சமூக கட்டமைப்பால், மோசமான வாழ்க்கைச் சூழலையும் தீண்டாமையையும் அனுபவித்துவரும் தலித் மக்கள் மத்தியில் சாதியையும், சாதி பாகுபட்டையும் எதிர்த்து பேசினான். சமத்துவம், சகோதரத்துவம் மலர வேண்டும்; வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும்; மனிதநேயம்தான் உண்மையான மதம்; அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றெல்லாம் பேசி தலித் மக்களை அணித்திரட்டினான். இதனால், தங்களிடமிருந்த பாதுகாப்பின்மை உணர்வை உடைத்து பாபா நம்பிக்கையளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், மதுவிற்கு அடிமையான ஆண்களாலும், குடும்ப வன்முறைகளாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து பேசுவதன் மூலம் கடுமையான அடக்குமுறைகளை சந்திக்கும் பெண்களை இவனை பின்தொடர்கின்றனர். இவையன்றி சிலருக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்வது; தனது சொற்பொழிவு கூட்டங்களை இலவசமாக நடத்துவது அடித்தட்டு ஏழை மக்களை மேலும் ஈர்க்கிறது. இதன் காரணமாகவே, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழிந்துள்ள போதிலும் பலருக்கும் சூரஜ் மீது கோவம் வரவில்லை, “விபத்து ஏற்படுவதற்கு முன்பே பாபா சென்றுவிட்டார். விபத்துக்கு காரணம் அரசாங்கமும் மருத்துவ கட்டமைப்பு சீரழிவும் தான்” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே பேசுகின்றனர்.
மேலும், அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் மத்தியில் சூரஜ்பால் சிங்கிற்கு பெரும் செல்வாக்கு உள்ளது. கட்சி வேறுபாடின்றி சூரஜ் அணித்திரட்டி வைத்துள்ள தலித் மக்களை வாக்குவங்கியாக மாற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் சூரஜுடன் நெருக்கமாக இருப்பதோடு, அவனது கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளனர். சாமியார்களின் சொர்க்கபுரியாக விளங்கும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மட்டுமின்றி, தலித் மக்கள் தலைவராக சொல்லிக்கொள்ளப்படும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஆட்சியிலும் இவனுக்கு மட்டற்ற மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாயாவதியும் ஜாதவ் சாதியைச் சார்ந்தவர் என்பது முக்கிய காரணம். அதேபோல் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் இவனோடு நெருக்கமாக இருந்ததற்கு ஆதாரமாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இவனின் மடங்களில் நடக்கும் பெரிய அதிகாரிகளின் குடும்ப திருமணங்கள், அதிகாரவர்க்கம் மத்தியில் உள்ள போலே பாபாவின் செல்வாக்கிற்கான சாட்சி.
இதன் காரணமாகவே, 121 பேர் உயிரிழந்துள்ள போதிலும், முதல் தகவல் அறிக்கையில் கூட போலே பாபா பெயர் இடம்பெறவில்லை. ஆனால், பாபா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை, தேடிக்கொண்டிருக்கிறோம் என்று போலீசு கதையளந்துக் கொண்டிருக்கும்போதே, “அனைவரும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கத்தான் வேண்டும். மரணத்தை யாராலும் தடுக்க முடியாது” என்று திமிர்த்தனமாகவும் “இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூட்டத்தில் விஷம் தெளிக்கப்பட்டதாக எங்களிடம் கூறினர். சதிகாரர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று இப்படுகொலையை சதியாக மாற்ற முயற்சிக்கும் வகையில் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-க்கு நேர்க்காணல் கொடுத்திருந்தான். இவனது குண்டர் படையினரும் துளியும் அச்சமின்றி இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே அடுத்த நிகழ்ச்சிக்கான நிதி சேகரிப்பு வேலையில் ஈடுபடுகின்றனர்.
இவையெல்லாம், உத்தரப்பிரதேசத்தை ஆளும் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசியின் முழு துணையோடுதான் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் சூரஜ் என்ற பெயரை கூட உச்சரிக்காமல் உத்தரப்பிரதேச அரசின் நிர்வாக சீர்கேடே இப்படுகொலைகளுக்கு காரணம் என பேசி வருகின்றனர். சுரஜ்பால் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள எந்த கட்சியும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. இடைத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என உத்தரப்பிரதேசம் அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள சூழலில் எந்த கட்சியும் சூரஜ்பால் சிங்கை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.
முற்போக்கு போர்வையில் இந்துத்துவத்திற்கான அணித்திரட்டல்
பார்ப்பனிய மேலாதிக்கமும் சாதிய கொடுமைகளும் தாண்டவமாடும் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தலித் மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதே ஹதராஸ் மாவட்டத்தில் ஆதிக்கச்சாதி வெறியர்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயதான இளம்பெண்ணை நாக்கறுத்து, முதுகெலும்பை உடைத்து மிக கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர். உ.பி. பா.ஜ.க. அரசு அப்பெண்ணின் உடலை பெற்றொருக்கு கூட காட்டாமல் இரவோடு இரவாக எரித்தது. பாசிச பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஆட்சிக்கு வந்தபிறகு இஸ்லாமியர்கள் போலவே தலித் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதற்கு இந்த கோர சம்பவமே போதுமான சாட்சி. அதிலும் பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பசு வளைய மாநிலங்களில் இந்த நிலை மிகவும் மூர்க்கமாக அரங்கேறி வருகிறது.
ஆனால், எந்த பார்ப்பனியத்தால் மக்கள் துரத்தியடிக்கப்படுகின்றனரோ அதே பார்ப்பனியத்தை வேறு வடிவில் வைத்து தலித் மக்களை அணித்திரட்டி, அவர்களை இந்துத்துவத்திற்கு பலியிடும் வேலையைத்தான் சூரஜ் பால் சிங் செய்து வருகிறான்.
தன்னை கிருஷ்ணனின் அவதாரமாகவும், சிவனின் அவதாரமாகவும் கூறிக்கொள்ளும் சூரஜ்பால் சிங், தனது மனைவியை லக்ஷ்மியின் அவதாரமாக முன்னிறுத்துகிறான். மேலும், மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக பார்ப்பனிய சடங்குகள் மற்றும் மரபுகளையும், நடைமுறைகளையும் முன்வைப்பது; தனது குண்டர் படையின் மூலம் நேரடியாக மக்கள் மத்தியில் இந்துத்துவ கருத்துகளையும் அடையாளங்களையும் பரப்புவது என அப்பட்டமாக இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலை செய்துக் கொண்டிருக்கிறான். இதன்மூலம் தலித் மக்கள் மத்தியில் உள்ள பொருள்முதல்வாத முற்போக்கு கருத்துகளும், அம்பேத்கரின் சாதி எதிர்ப்பு கருத்துகளும் நீர்த்தப்போவதோடு, பார்ப்பனிய எதிர்ப்பு அழிக்கத்தொழிக்கப்பட்டு இந்துத்துவத்திற்கான அடித்தளம் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம், தலித் மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஊடுருவலுக்கான கதவு திறந்துவிடப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் சூரஜ்பால் சிங் மட்டுமின்றி, குஜராத், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய சாமியார்கள் ஏழை-எளிய தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களை அணித்திரட்டுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுடன் நேரடி தொடர்பில் இருப்பது பல சமயங்களில் அம்பலமாகியுள்ளது. மேலும், பா.ஜ.க. சார்பு ஊடகங்கள் இக்கும்பலை விளம்பரப்படுத்தி மேலும் பிரபலமடையச் செய்கின்றன.
1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலானியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டப் பிறகு கடவுள், பக்தி, ஆன்மீகம் முதலியவற்றை சரக்காக்கி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் பல கார்ப்பரேட் சாமியர்கள் உருவெடுத்தனர். ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ், பங்காரு அடிகளார் என இந்த கார்ப்பரேட் சாமியர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. கருப்புப்பணம் மோசடி, இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பது; கல்வி-அழகுப்பொருட்கள் விற்பனை வரை அனைத்திலும் இந்த கார்ப்பரேட் சாமியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கார்ப்பரேட் கொள்ளையில் ஈடுபடுவதுடன் இந்துவத்தின் புரோக்கர்களாகவும் இக்கார்ப்பரேட் சாமியர்கள் செயல்படுவதால் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பலால் திட்டமிட்டே ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள சூழலில் எந்த கட்சியும் சூரஜ்பால் சிங்கை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.
ஆனால், பிற கார்ப்பரேட் சாமியார்களைக் காட்டிலும் போலே பாபா-வின் வளர்ச்சி இன்னும் அபாயமிக்கது. ஏனெனில், எந்த பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தலித் மக்களை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டுகிறதோ, அதே பார்ப்பனிய சித்தாந்தத்தின் கீழ் தலித் மக்கள் அணித்திரட்டப்படும் பேரவலமும் ஆபத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தலித் மக்கள் இத்தகைய சாமியர்களுக்கு கீழ் அணிதிரளும் போக்கை “மாற்று மதத்தை கோரும் ஆர்வம்” என்று குறிப்பிடும் டெல்லியின் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யோகேஷ் ஸ்நேஹி, இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் சனாதனத்தால் பிரதான மதத்திலிருந்து அந்நியப்பட்டுள்ள தலித் மக்களில் கணிசமானோர் மாற்று நம்பிக்கையை தேட தொடங்குகின்றனர்; இந்நிலையில், சூரஜ்பால் சிங் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்திருப்பதாலும் மத மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குவதாலும் மக்கள் எளிமையாக அவனுக்கு கீழ் அணிதிரள்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.
தலித்துகளின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்ட உத்தரபிரதேசத்திலிருந்த அம்பேத்கரிய அமைப்புகளின் சந்தர்ப்பவாதமே இந்த அணித்திரட்டலுக்கான அடிப்படையாக அமைந்துள்ளது.
சாதி அரசியல் செல்வாக்கு செலுத்தும் உத்தரபிரதேசத்தில், கன்ஷிராம் 80-களின் இறுதியில், தலித்துகள் மட்டுமின்றி பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இதர வகுப்பினர், மதச் சிறுபான்மையினர் என பார்ப்பனர்கள் தவிர்த்து பிற மக்களை உள்ளடக்கிய “பகுஜன்” என்ற குறியீட்டை கொண்ட இயக்கத்தை உருவாக்கினார். இது பின்னர் “பகுஜன் சமாஜ் கட்சி”யாக பரிணமித்து உத்தரப்பிரதேச தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்தியது. உத்தரப்பிரதேசத்தில் தலித்திய அரசியல் தாக்கம் செலுத்தவும் காரணமாக அமைந்தது. ஆனால், கொள்கையற்று அரசியல் அதிகாரத்திற்கு செல்வதை மட்டுமே ஒற்றை நோக்கமாக கொண்டிருந்ததோடு அதுவே அம்பேத்கரிய அரசியல் என திரித்து சந்தர்ப்பவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் வீழ்ந்தது.
“தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; ஆதிக்கச் சாதியினரை எமது கட்சியிலும் சேர்க்க மாட்டோம்” என்றுச் சவடால் அடித்துவந்த இக்கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் அரசியல் கூட்டு வைத்துக்கொண்டு பார்ப்பனர்களின் பாதந்தாங்கி கட்சியாகவும் மாறியது. இதன் உச்சமாக, தலித்துகளின் 23 சதவிகித ஓட்டுகளுடன் 13 சதவிகிதம் வரையுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுகளையும் பெற்றால் சுலபமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என கணக்கு போட்ட மாயாவதி, ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’ வைத்தது கட்சியை பிழைப்புவாதத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றதோடு, தற்போது பா.ஜ.க-விற்கான பி-டீம் ஆக செயல்பட்டுவருகிறது.
மொத்தத்தில், தலித்துகள் மத்தியில் பார்ப்பனிய-இந்துத்துவ கருத்துகளும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவதற்கான காரணமாக மாறியுள்ளது. சித்தாந்த ரீதியாக தலித் மக்களை அணித்திரட்டாமல்; பிழைப்புவாதத்திற்காக வர்க்க விடுதலையையும் வர்க்க அரசியலையும் முன்வைக்காமல் அடையாள அரசியலை முன்வைத்ததன் விளைவே போலே பாபா போன்ற கருங்காலிகள் தலித் மக்களை இந்துத்துவ சித்தாந்ததின் கீழ் அணித்திரட்ட வழிகோலியுள்ளது.
“சாதி ஒழிப்பும் அடையாள அரசியலும்” என்ற நூலில் தலித்துகளை அணித்திரட்டுவது குறித்து குறிப்பிடும் ஆனந்த் டெல்டும்டே, “தலித், பகுஜன், முல்நிவாசி ஏன் பௌத்தம் போல சாதி ஒழிப்பு என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட எந்த ஒரு அரசியல் அடையாளமாக இருந்தாலும் அது தன்னை சாதி ஒழிப்பிற்கானது என நிறுவ முற்பட்டாலும் அது சாதியை வலுப்படுத்தும் அங்கமாகவே மாறியது. சாதி என்னும் அரக்கனை ஒழிக்க அதற்கு மாற்றான வர்க்க அடிப்படையிலான அரசியலால் மட்டுமே சாத்தியம். இவற்றைக் கேட்க கடினமாகருந்தாலும் வரலாற்று இன்னல்களை மாற்றி குறுக்கு வழிகள் எதுவும் இல்லை” என்கிறார். எனவே, பாசிச பேயாட்சியால் சொல்லொனா துயரங்களை அனுபவித்துவரும் தலித் மக்களை வர்க்கமாக அணித்திரட்டி பாசிச எதிர்ப்பு அரசியலின்கீழ் அவர்களை போராட வைப்பதே தலித் மக்களின் விடுதலைக்கான தீர்வாக இருக்கும்.
துலிபா
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube