டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) உறுப்பினர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். அதில், “காஷ்மீரில் பிரச்சினை நடைபெற்று 32 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது உங்களுக்காக ஒரு படம் தயாரித்தோம் என்று கஷ்மீரி பண்டித்களிடம் மோடி அரசு சொல்கிறது. பண்டித்களுக்கு மறுவாழ்வுதான் வேண்டுமே தவிர திரைப்படம் அல்ல. இப்படம் பாஜகவிற்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரை முக்கியமானது இல்லை. இதற்கு பல்வேறு மாநிலங்களில் வரிவிலக்கு எதற்கு. திரைப்படத்தை யூடியூபில் வெளியிடுங்கள் அனைவருக்கும் சென்றடையும். பாஜக தொண்டர்களே ஆடுகளைபோல் நடந்து கொள்வதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த விமர்சனத்திற்கு ஆத்திரமடைந்த தேஜஸ்வி சூர்யாவின் தலைமையிலான பாஜக குண்டர்படை கெஜ்ரிவாலின் வீட்டுக்கு அருகே மார்ச் 30 அன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
படிக்க :
அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !
உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !
பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, “காஷ்மீர் இந்துக்களைப் படுகொலை செய்ததற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கேலிசெய்துள்ளார். இதற்கு கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை யுவ மோர்ச்சாவின் போராட்டம் தொடரும். ராமர் கோயிலை கேலி செய்வது, இந்து தெய்வங்களை கேலி செய்வது, பாட்லா ஹவுஸை கேள்வி கேட்பது, சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்புவது ஆம் ஆத்மி கட்சியின் கொள்கையாக உள்ளது” என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் இருந்த பாஜக குண்டர்கள் சிலர் மதியம் 1 மணியளவில், போலீசு வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, முதல்வர் மாளிகைக்கு சென்றனர். அங்கு அவர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக முழக்கமிட்டனர். சிறிய பெயிண்ட் டப்பாவை தடுப்பு கேட்டுக்கு வெளியே வீசியெறிந்தனர். வீட்டை சுற்றி இருந்த பூம் தடுப்புக்களை அடித்து உடைந்தனர். சிசிடிவி கேமராக்களை அடித்து உடைந்தனர் என்று போலீசு கூறியது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா “டெல்லி போலீசின் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பாஜக குண்டர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றி உள்ள சிசிடிவி-களை உடைத்தனர். வீட்டை சுற்றியுள்ள பாதுகாப்புச் சுவர்களை உடைத்துள்ளனர். அவரை கொல்ல பாஜக விரும்புகிறது” என்று மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் மீதான இத்தாக்குதல் அவரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய திட்டமிட்ட தாக்குதல் என்று அவர் குற்றம் சாட்டினார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி முறையான புகார் அளிக்கும் என்றும் கூறினார்.
போராட்டத்திற்குப் பிறகு ஆம் ஆத்மியின் திட்டமிட்ட தாக்குதல் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார் தேஜஸ்வி சூர்யா. நாங்கள் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தினோம். சேதப்படுத்தியது வேறுவொரு கும்பல் என்றார்.
“இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீரி இந்துக்கள்தான், ஆம் ஆத்மி கட்சியும் கெஜ்ரிவாலும் அல்ல” “இனப்படுகொலையை வெள்ளையடிக்கும் இந்த முயற்சி ஒரு நாகரீகத்தின் மீதான அநீதி” “இது நகர்ப்புற நக்சல்களின் காலத்தால் சோதிக்கப்பட்ட தந்திரம். எங்கள் போராட்டம் எந்த கட்சிக்கும் எதிரானது அல்ல, இது காஷ்மீர் கோப்புகள் தொடர்பானது மட்டுமல்ல. இந்த போராட்டம் காஷ்மீரில் நடந்த இந்து இனப்படுகொலையை மறுக்கும் கெஜ்ரிவாலின் மனிதாபிமானமற்ற மனநிலைக்கு எதிரானது” என்று அவர் கூறினார்.
காஷ்மீர் ஃபையில் திரைப்படம் பாஜகவால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் வரி சலூகையுடன் ஒலிபரப்பப்படுகிறது. அந்த திரைப்படம் முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பு அரசியலை விஷமாக கக்குகிறது என்று பலர் கூறிவரும் நிலையில்தான் இத்திரைப்படத்தை பற்றி விமர்சித்துள்ளார் கெஜ்ரிவால்.
படிக்க :
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
குஜராத் : ரேஷன் கார்டு இல்லையெனில் புயல் நிவாரணம் கிடையாது !
அந்த திரைப்படத்தை விமர்சித்ததே குற்றம் என்ற அளவிற்கு கெஜ்ரிவாலின் விட்டை தாக்கியுள்ளது பாஜகவின் வானரக் கூட்டம். ஓர் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களை இந்த காவிக் குண்டர்கள் தாக்குதல் மட்டுமல்லாது கொலையும் செய்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. குறிப்பாக, டெல்லியின் முதலமைச்சராக கெஜ்ரிவால் இருந்தாலும் தலைநகரம் என்பதால் மாநிலத்தில் போலீசு ஒன்றிய மோடி அரசின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதுவே தேர்தல் ஜனநாயகத்தை, மாநில முதல்வரின் அதிகாரத்தை கேலிக்கூத்தாக்குகிறது.
பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை கீழிருந்து உழைக்கும் மக்களின் படையைகட்டி மட்டும்தான் வீழ்த்தமுடியுமே தவிர, தேர்தலில் மூலம் அல்ல என்பதற்கு இச்சம்பவம் ஓர் துலக்கமான சான்று.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க