“காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கான ஒரேவழி, பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமையின் கீழ் அணிதிரட்டிப் போராடுவது ஒன்றுதான்” என்று நாம் சொல்கிறோம். ஆனால் பாசிச அபாயத்தை உணர்ந்தாலும் தற்போதைக்கு பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து கீழிறக்கி, அதற்கெதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் உடனடியாக ஆகக்கூடிய ‘சாத்தியமான மாற்று’ என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ஒரு புரட்சிகர கட்சியின் அரசியல் தலைமையில் வெகுமக்களை அணிதிரட்டுவது ‘அசாத்தியம்’ என்பதுதான் அவர்களின் உளக் கருத்து என்றபோதும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு ‘சுவாசிக்கும் அவகாசமாக’ அப்படியொரு ‘சாத்தியமான மாற்று’ தேவை என்று பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
‘புரட்சியாளர்கள்’ என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது “தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.. வாக்களிக்க வேண்டும்” என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்தார்கள். பா.ஜ.க.வை வெறுக்கும் தமிழக மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காக தி.மு.க.வும் பா.ஜ.க.விற்கு எதிரான கட்சியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை என முழங்கியதானது அப்‘புரட்சியாளர்களின்’ பிரச்சாரத்திற்கு தோதாக அமைந்தது.
உண்மையில் தமிழகத்திற்கே உரிய களநிலைமைதான் தி.மு.க.வின் முற்போக்கு பிரச்சாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் தமிழகத்திற்கு எதிர்நிலை உதாரணமாக, இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் கூத்துகளோ ‘பாசிசத்திற்கு எதிராக போராட தற்போதைக்கு ஒரு சாத்தியமான மாற்று’ எனும் மாயையை கலைப்பதாகவும் புரட்சிகர கட்சியின் தலைமையே ஒரே மாற்று என்பதை உணர்த்தும் சாட்சியமாகவும் இருக்கிறது.
000
ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசம் இன்னும் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்துராஷ்டிரத்தின் அடையாளமாக அயோத்தியில் ராமர் கோயில், கோமாதாக்களுக்கென தனி ஆம்புலன்ஸ் சேவை, ஊர்களின் பெயர்கள் இந்துத்துவமயமாக்கம் என காவி மணம் கமழ்கிறது உத்தரப் பிரதேசத்தில்.
முஸ்லீம்களை குறிவைக்கும் மதமாற்றத் தடைச்சட்டம், தலித்துக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், கொரோனா கால சுகாதார நெருக்கடியால் கங்கைக் கரையில் மிதந்த பிணங்கள், போராடும் மக்கள் மீது சர்வசாதாரணமாக ஏவப்படும் ஊபா கொடுஞ்சட்டம், லக்கிம்பூர் – கேரியில் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் படுகொலை என யோகி அரசு எத்தனை கொடூரங்களில் ஈடுபட்டபோதும் அடுத்த தேர்தலிலும் பா.ஜ.க.தான் வெல்லும் என தற்போதுவரை வெளிவந்துள்ள தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. பல ஆண்டுகளாக காவிக் கும்பலால் இந்துத்துவ அரசியலில் பண்படுத்தப்பட்ட நிலமல்லவா உத்தரப் பிரதேசம்! எனவே இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான்.
இதே காரணத்திற்காகத்தான் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கட்சிகளைப் போலல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் அதன் காவிக் கொள்கையை எதிர்த்து மூச்சுகூட விடுவதில்லை.
இவர்கள் காவி அரசியலை எதிர்ப்பவர்களில்லை என்பது பழையநிலை; பா.ஜ.க.வை எதிர்ப்பதாகச் சொல்லி களம் காண்பவர்களே, அதன் ‘இந்து அரசியலை’ தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தற்போது முதிர்ச்சிபெற்றுவரும் புதிய எதார்த்தம். ஆம், அடுத்த ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்களின் உள்ளடக்கமோ பா.ஜ.க.வின் ‘இந்து’ அரசியல் VS பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அரசியல் என்பதாக உள்ளது. ‘சாத்தியமான மாற்று’ என்று எவையும் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புலப்படவில்லை.
பிரியங்காவின் அஸ்திரம் : கவர்ச்சிவாதம் + ‘இந்து’ அடையாளம்
தேர்தலில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு, மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் என பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை முன்னிறுத்தி, பெண்களின் ஓட்டுக்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா. எனினும் உ.பி.யில் வெற்றிபெற வேண்டுமானால் அதுமட்டும் போதாது எனத் தெரிந்துவைத்திருக்கும் பிரியங்கா, தனது போலி மதச்சார்பின்மையையும் கூட தூக்கி எறிந்துவிட்டு தன்னை தீவிரமாக ‘இந்து’ அடையாளத்துடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதரையும் துர்க்கையையும் வழிபட்ட பிரியங்கா, “விவசாயிகளுக்கான நீதி” (கிசான் நியாய்) என்ற பெயரில் தனது கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டமொன்றில், நெற்றியில் குங்குமத் திலகமிட்டு கழுத்தில் ருத்ராக்ஷ மாலையுடன் ‘தெய்வகாடாக்ஷமாக’ காட்சியளித்தார். பிரியங்கா மட்டுமல்ல, அங்கு மேடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பெருந்தலைகளின் நெற்றி அனைத்தும் அன்று வண்ணமயமாகத்தானிருந்தது.
பொதுக்கூட்டம் தொடங்கியதும் மேடையிலிருந்த பிரியங்கா, சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் “ஹர் ஹர் மஹாதேவ்” என ஓங்காரமாக முழங்கினார்கள். பிரியங்கா பேசத் தொடங்கும் முன், தாம் நவராத்திரி விரதமிருப்பதாகச் சொல்லி துர்கா சப்தசதியிலிருந்து “யாதேவி சர்வ பூதேஷூ” என்ற ஸ்லோகத்தை உச்சாடனம் செய்துவிட்டு ‘ஜெய் மாதா தி’ என ஓங்காரமாக முழங்குகிறார். கூட்டத்திலுள்ளவர்களையும் முழங்கச்சொல்கிறார். இது காங்கிரசின் கூட்டம்தானா, இல்லை சங்க பரிவாரத்தினரின் கூட்டமா என்று இனம் காண முடியாத அளவுக்கு அக்காட்சி அமைந்திருந்தது.
இராமர் கோயில் அறக்கட்டளை சார்பாக நிலம் வாங்கியதில் மோசடி நடந்த விவகாரத்தை மற்ற கட்சிகளைவிட காங்கிரஸ் பெரிய அளவில் விவாதப் பொருளாக்கியது. “கடவுள் இராமரின் பெயரைச் சொல்லி பா.ஜ.க.வால் எப்படி இவ்வளவு பெரிய ஊழலைச் செய்ய முடிகிறது” என காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா ஆதங்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி, “கொரோனா தொற்றுக் காலத்தில் மற்ற எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கும்போது, ஏன் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கக் கூடாது. நம்பிக்கைகள் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்” என்று ‘இந்துக்களுக்காக’ குரல் எழுப்பினார். ஊரடங்கு விதிகள் காரணமாக தி.மு.க. அரசு கோயிலைத் திறப்பதற்கு தடை விதித்திருந்தபோது, தமிழக பா.ஜ.க. இந்துக் கோயில்களைத் திறக்க வேண்டும் என ஆர்பாட்டங்கள் நடத்தியது, அதன் மூலம் தி.மு.க. எதிர்ப்பில் ‘இந்து’ அணிதிரட்டலை மேற்கொண்டது. அதைப் போல பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அணிதிரட்டலுக்கான ஒரு வாய்வீச்சுதான் அது.
மாயாவதியின் ‘தலித் – பார்பனக் கூட்டணி 2.0’
“தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும். தலித்துக்களுக்குத் தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும். தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்” என்றெல்லாம் ஆரம்பக் காலத்தில் அடையாள அரசியல் சவடாலடித்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி, உ.பி.யின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் மூழ்கி ஞானம் பெற்றபோது பச்சையான பார்ப்பன பாதந்தாங்கி கட்சியாக இழிந்துபோனது.
தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், தலித்துகளின் 23 சதவிகித ஓட்டுகள் மட்டுமே நமக்கு போதாது. உ.பி.-யின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் வரையுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுகளைப் பெற்றால் சுலபமாக ஆட்சியைப் பிடிக்கலாம் என கணக்கு போட்ட மாயாவதி, அதற்குத் தகுந்தாற்போல் எடுத்த புது அவதாரம்தான் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’. எங்கள் கட்சி தலித்துகளுக்கான கட்சி மட்டுமில்லை, ஏழை பார்ப்பனர்களுக்கான கட்சியும்தான் என்று தாளம் மாறியது பகுஜன் சமாஜ் கட்சி. பார்ப்பனர்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இடம்தந்தது.
இவ்வாறு தனது அடையாளத்தை மறுவார்ப்பு செய்துகொண்டு பார்ப்பனர்களே ‘தமக்கான கட்சி’ என்று போற்றுமளவிற்கு செயல்பட்டதால் 2007 ஆம் ஆண்டு மாயாவதி உ.பி.யின் முதல் ‘தலித்’ முதலமைச்சரானார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’ பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார் மாயாவதி. இதற்காக தனது பிரச்சாரத்தை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது பகுஜன் சமாஜ் கட்சி.
முதல்கட்டமாக பார்ப்பனர்களை கவர்வதற்காக, ‘பிராமண சம்மேளனம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாநாடுகளை நடத்துவதற்கு திட்டமிட்டார்கள். சாதி பெயரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பதால் அம்மாநாட்டின் பெயரை ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் கருத்தரங்கு’ (Seminar in honor of the enlightened class) என மாற்றி நடத்தியிருக்கிறார்கள். அயோத்தியில் நடந்த முதல் மாநாட்டின் சிறப்பு விருந்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர். கூட்டத்திற்கு சில மணிநேரம் தாமதமாக வந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, தாம் ராம்லல்லாவுக்கும் ஹனுமான்கடிக்கும் சென்றுவந்ததாக கூறினார்.
பின்னர், இக்கூட்டத்தில் பேசிய மிஸ்ரா, பார்ப்பனர்களின் ‘முக்கிய பிரச்சினைகள்’ குறித்து விவாதித்தார். “ராமர் கோயிலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட பணத்திற்கு என்ன கணக்கு? ஓராண்டாகிவிட்டது இன்னும் அஸ்திவாரம்கூடப் போடப்படவில்லை, கோயிலைக் கட்டுவார்களா இல்லையா என்பதே கேள்வியாக இருக்கிறது” என்று ஆத்திரப்பட்ட அவர், உ.பி.யின் மிகப்பெரிய தாதாவாக வலம்வந்த விகாஸ்துபே (இவன் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன்) என்கவுண்டரைச் சுட்டிக்காட்டி, கடந்த நான்காண்டு காலத்தில் பல பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் உ.பி. அரசின் கீழ் ‘பிராமணர்கள் மீதான கொடுமைகள்’ அதிகரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். எனவே பா.ஜ.க.விற்கு மாற்றாக பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும்படியும் “மாநிலத்தில் 13 சதவிகிதமுள்ள பிராமணர்கள் 23 சதவிகிதமுள்ள தலித்துகளுடன் இணைந்தால் வெற்றி நிச்சயம்” என்றும் பிளந்துகட்டினார்.
இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, சாதிவெறித் தாக்குதல்கள்; படுகொலைகள்; பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் நடப்பதாக சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை விவரம் காட்டியது. அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களுக்கு எதிராக போராடாத பகுஜன் சமாஜ் கட்சி, பார்ப்பனர் ஓட்டைப் பொறுக்குவதற்காக ரவுடி விகாஸ்துபேவுக்கு நீதிகேட்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என தலித்துகள் கொல்லப்படும்போது பசுப் பாதுகாப்பு கொட்டகையில் பசுக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வருத்தப்படுகிறது.
‘நாங்களும் இந்துதான்’ என்று வண்டியில் ஏறும் அகிலேஷ் யாதவ்
உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் வாங்குவங்கி அடித்தளமாக இருப்பது யாதவ்கள் மற்றும் முஸ்லீம்கள்தான். அதனாலேயே பா.ஜ.க. தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியையும் அகிலேஷ் யாதவையும் கடுமையாக தாக்கி வருகிறது. “முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக அகிலேஷ் மதம் மாறினாலும் மாறுவார்” என்று சாடினார் யோகி ஆதித்யநாத். இப்படியே தாம் தாக்கப்பட்டால் இந்து யாதவ்களின் ஓட்டுக்களையும் இழந்துவிடுவோமோ (அஹிர்கள் என்றழைக்கப்படும் யாதவ் சாதியினரின் ஒரு உட்பிரிவை ஆர்.எஸ்.எஸ். தன் செல்வாக்கிற்கு கொண்டுவந்துவிட்டது) என்று அஞ்சிய அகிலேஷ் ‘நாங்களும் இந்துதான்’ என்று வலிந்து காட்டிவருகிறார்.
“கடவுள் இராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். நாங்கள் இராமர் மற்றும் கிருஷ்ணரின் பக்தர்கள்” என்று கூறிய அகிலேஷ் யாதவ், பிப்ரவரி மாதம் முதலே அயோத்தி, சித்திரகூடம், ஃபருகாபாத் என கோயில் கோயிலாக சுற்ற ஆரம்பித்துவிட்டார். அவ்வாறு தாம் சென்று வழிபடும் இடங்கள், சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெறுவது போன்றவற்றை புகைப்படங்களெடுத்து டிவிட்டரில் பதிவிட்டார். “உண்மையான இராமராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக நாங்கள் வெற்றிபெற்றால், கோயில்களிலிடமிருந்து வசூலிக்கப்படும் நகராட்சி வரிகளை தள்ளுபடி செய்வோம்” என வாக்குறுதியளித்திருக்கிறார்.
‘இந்து’ அடையாளத்தோடு சாதி அரசியலையும் சேர்த்து கையாளுகிறது சமாஜ்வாதி கட்சி. தாங்கள் ஆட்சி செய்தபோது, விஸ்வகர்மா ஜெயந்தியை விடுமுறை நாளாக அறிவித்திருந்த நிலையில், தற்போதைய யோகி அரசு அதை வாபஸ் பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த விஸ்வகர்மா சமூகத்தையும் அவமதித்துவிட்டதாக சாடிய அகிலேஷ் யாதவ் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஷ்வகர்மா ஜெயந்தி நாளை மீண்டும் விடுமுறையாக அறிவிப்போம் என்றும் கோமதி நதிக்கரையில் விஸ்வகர்மாவுக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளன்று அம்பேத்கர் பிறந்தநாள் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ‘தலித் தீபாவளி’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது.
ஆம் ஆத்மி: ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்த ஸ்டெப்னி, ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்த்த மற்றொரு அரசியல் கருவி!
மற்ற கட்சிகளெல்லாம் உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரு உத்தி என்ற முறையில் ‘இந்து’ அரசியலோடு சங்கமமாகத் தொடங்கின என்றால், “ஊழல் ஒழிப்பு, வேர்மட்ட ஜனநாயகம்” என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தன்னை உணர்வுப் பூர்வமாகவே இந்துத்துவ அரசியலோடு கரைத்துக் கொண்டு, இந்துத்துவத்தின் மற்றுமொரு அரசியல் பிரிவாகவே உருமாறிக் கொண்டு வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனித்துப் போட்டியிடும் இக்கட்சி, அங்கு மட்டுமல்லாமல் தான் ஆட்சி புரியும் டெல்லியிலும் கூட பா.ஜ.க.வின் ‘மதவாதம்-தேசியவாதம்’ என்ற இருமுனை ஆயுதத்தை புதிய பாணியில் பயன்படுத்துகிறது.
அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோயிலுக்கு சென்றுவந்த கெஜ்ரிவால், இனி டெல்லிவாசிகள் அயோத்திக்கு வந்து வழிபடுவதற்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்திருக்கிறார். கடந்த தீபாவளியின் போது இராமனை வழிபடுவதற்காக டெல்லியில் அயோத்தியில் கட்டப்படும் வடிவிலான தற்காலிக இராமர் கோயில் ஒன்றை நிறுவிய கெஜ்ரிவால், தம் மனைவி, அமைச்சர்கள் புடைசூழ கோலாகலமான ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டார். ஒரு கட்சியாகவும் அரசாங்கமாகவும் சட்டப்படி பெயரளவிற்காகவாவது மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது பொதுவிதியாக இருக்கும் நிலையில், கெஜ்ரிவாலின் இந்த கூத்து ஆம் ஆத்மி கட்சியை இன்னொரு பா.ஜ.க.வாகவே காட்சிப்படுத்தியது.
அவரின் இந்த திடீர் இராம பக்தி, கோயில் கோயிலாக சுற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒட்டி ஆம் ஆத்மி ‘மென்மையான’ இந்துத்துவத்தைக் கடைபிடிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தபோது, “நான் ஒரு ‘இந்து’. நான் இராமர் கோயிலுக்கும் போவேன் அனுமன் கோயிலுக்கும் போவேன், இதில் யாருக்கு என்ன பிரச்சினை” என்று பொங்கினார். மேலும் “மென்மையான இந்துத்துவம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, நான் இந்த நாட்டின் 130 கோடி மக்களை ஒன்றிணைக்க விரும்புகிறேன். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் இணைக்க விரும்புகிறேன். இதுதான் இந்துத்துவா.. இந்துத்துவா ஒன்றுபடுத்துகிறது, இந்துத்துவா உடையாது” என்று ஆர்.எஸ்.எஸ்.இன் இலக்கணத்தை அச்சுபிசகாமல் ஒப்பித்தார்.
“நாங்கள்தான் உண்மையான இந்துத்துவா” என்று காவி நீரோட்டத்தோடு தான் கலந்துவிட்டதை பகிரங்கப்படுத்திய கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் “தேசபக்தி” ஃபார்முலாவையும் விட்டுவைக்கவில்லை. டெல்லியிலுள்ள மாணவர்களுக்கு ‘தேச உணர்வை’ வளர்க்கும் விதமாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆம் ஆத்மி அரசு. அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியிருக்கிற உத்தரகாண்டில் தங்களது முதல்வர் வேட்பாளராக, இராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய அஜய் கோத்தியாலை முன்னிருத்தியிருக்கிறார்கள். உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடித்தால், அம்மாநிலத்தை ‘இந்துக்களின் ஆன்மிகத் தலைநகராக்குவோம்’ என்று அறிவிப்பு விடுத்திருக்கிறார் கெஜ்ரிவால்.
உத்தரப்பிரதேசத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக, கடந்த செப்டம்பர் மாதம் அயோத்தியில் திரியங்கா (மூவர்ணக் கொடி) யாத்திரை என்ற பெயரில் தேசியக்கொடியோடு ஊர்வலம் போனது ஆம் ஆத்மி கட்சி. இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த ஒருநாள் முன்பே வந்த டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோதியா மற்றும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்ஜய் சிங் ஆகியோர் ராம ஜென்ம பூமியையும் ஹனுமன் கிராந்தியையும் தரிசித்துவிட்டு, சரயு நதியில் தலைமுழுகி பக்தியோடு ஹனுமன் சாலிசா பாடினார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி எப்படி உ.பி.யில் 13 சதவிகிதமுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுக்களை பொறுக்குவதற்கு ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் மாநாட்டை’ நடத்தியதோ அதேபோல, ஆம் ஆத்மி கட்சியும் ‘சாணக்ய விசார் சம்மேளனம்’ என்ற பெயரில் நடத்தியுள்ளது.
தொகுப்பாக பார்க்கும்போது மற்ற கட்சிகளைவிட ஆம் ஆத்மி பேசும் இந்துத்துவ அரசியல் நேரடியாக காவி பாசிசத்துடன் நெருக்கமுடையது. 2019 ஆம் ஆண்டு டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பயங்கரவாத பாசிசத் தாக்குதல்கள் அரங்கேறியபோது, அமைதியாக அதை ஆதரித்து வேடிக்கைப் பார்த்தவர்தான் கெஜ்ரிவால். சென்ற அக்டோபர் மாதம் பஞ்சாபில் விவசாயிகளுடனான கூட்டமொன்றில் கலந்துகொண்ட கெஜ்ரிவாலிடம், “காஷ்மீரின் 370-ஆவது சிறப்புச் சட்டத்தை இரத்து செய்திருக்கும் மோடியின் நடவடிக்கையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று ஒரு விவசாயி கேள்வி எழுப்பியபோது, “இது ‘அரசியல் கேள்வி’, வேறு எதாவது இருந்தால் கேளுங்கள்” என்று சொல்லிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்.
ஆம் ஆத்மியின் இந்தப் போக்கை விமர்சிக்கும் லிபரல்கள், அவரை ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்கின்றனர். ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்வதைவிட ஆளும் வர்க்கங்களின் பி டீம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மோடி அரசின் பொருளாதாரத் தாக்குதல்களால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள் நாளுக்குநாள் பா.ஜ.க.வின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்தமான இந்துத்துவத்தின் மீதோ, தேசவெறியின் மீதோ அல்ல.. இச்சூழலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தால் அதே ‘இந்துத்துவம்-தேசவெறியைப்’ பேசி வெகுமக்களைக் கவரக்கூடிய ஒரு கட்சியாக உருமாற வாய்ப்புள்ள ஆம் ஆத்மியை ஆளும் வர்க்கங்கள் தத்தெடுத்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.க. என்ற டயர் பஞ்சரானால் வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கான ஸ்டெப்னியாக (Stepney) ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்திருக்கிறது ஆம் ஆத்மி.
மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். அது, இந்திய நாட்டில் நூறாண்டுகால வேர்களைக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியையும் தனது கருத்துருவாக்கத்துக்கு பணிய வைக்கக் கூடியது என்கிறார் சி.பி.ஐ.(எம்.எல்) ரெட் ஸ்டாரைச் சேர்ந்த தோழர் பி.ஜே.ஜேம்ஸ். (நவ தாராளவாதம் மற்றும் நவ பாசிசம்: ஒரு இடதுசாரி பார்வை – என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை)
படிக்க :
♦ ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !
♦ மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !
இந்துராஷ்டிர அபாயத்தை எதிர்கொள்வதெப்படி?
பார்ப்பன இந்துமதவெறி பாசிசம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வேரூன்றி வளருகிறதோ, அந்த அளவிற்கு ‘சாத்தியமான மாற்று’களெல்லாம் மறைந்துகொண்டிருக்கின்றன. ஒன்று, பாசிச சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை, பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்களைத் அணிதிரட்டி மோத வேண்டும். இவை இரண்டிற்கும் இடையிலான இடைக்கட்டம் – சுவாசிப்பதற்கான அவகாசம் – எதுவுமில்லை. இதுதான் எதிர்வரும் உத்தரப்பிரதேசத் தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை.
பா.ஜ.க.விற்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க.வை ஆதரிக்கச் சொன்னவர்கள், தற்போது உத்தரப்பிரதேசத்தில் எந்தக் கட்சியை ஆதரிக்கலாமென சொல்ல முடியுமா? தமிழக அளவில் தி.மு.க. ‘சாத்தியமான மாற்றென்றால்’, இந்திய அளவில் சாத்தியமான மாற்று எது? காங்கிரசு என்று சொல்வார்களானால், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் சி.பி.எம்.ஐயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்க வேண்டுமா? ஆனால் அங்கெல்லாம் மாநில அளவில் உள்ள நிலையை கவனித்தால் சி.பி.எம்.-உம் திரிணாமுல் காங்கிரசும் தானே மாற்றாகத் தெரிகிறது. எனவே இது மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கையில்லாத அவநம்பிக்கை வாதம் என்பதோடு படுகுழப்பமான வாதமுமாகும்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதோ, இல்லை அதற்காகப் போராடும் சக்திகளுக்கு துணை செய்வதோ காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எந்த ஓட்டுக் கட்சிக்கும் நோக்கமல்ல. ஓட்டுப் பொறுக்கி ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு சுரண்டிக் கொழுப்பதும்தான் நோக்கம். அதற்கு மக்களுடைய ஆதரவைப் பெறும் ஓரே காரணத்திற்காக தங்கள் பிரச்சாரங்களையும் கொள்கைகளையும் வடிவமைத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு தி.மு.க.வுக்கு சமூக நீதியைக் கொடுத்தது. உத்திரப்பிரதேசத்தின் இந்துமதவெறி மேற்சொன்ன கட்சிகளை இந்துத்துவத்தோடு சங்கமிக்கச் செய்திருக்கிறது.
பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் தீர்மானகரமான அம்சம் எதுவெனில், யார் மக்களை அரசியல்படுத்துவது என்பதுதான். பாட்டாளி வர்க்க அரசியிலின் கீழ் பரந்துபட்ட உழைக்கும் மக்களை நாம் மக்களை அணிதிரட்டப்போகிறோமா, இல்லை இந்துத்துவ அரசியலின் கீழ் எதிரி அணிதிரட்டப்போகிறானா என்பதுதான் விவகாரமேயன்றி ‘சாத்தியமான மாற்று’ என்ற பெயரில் ஆளும்வர்க்க கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதல்ல.
செவ்வந்தி
கட்டுரையில் சொல்லுவது,
“பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் தீர்மானகரமான அம்சம் எதுவெனில், யார் மக்களை அரசியல்படுத்துவது என்பதுதான். பாட்டாளி வர்க்க அரசியிலின் கீழ் பரந்துபட்ட உழைக்கும் மக்களை நாம் மக்களை அணிதிரட்டப்போகிறோமா, இல்லை இந்துத்துவ அரசியலின் கீழ் எதிரி அணிதிரட்டப்போகிறானா என்பதுதான்”
உண்மைதான்.
பாசிச இருட்டில் கொள்ளிக்கட்டைகளின் வெளிச்சம்தான் மிச்சம்.மக்கள்,விட்டில்பூச்சிகளாகஅதில்விழுந்துக்கொண்டு
இருக்கிறார்கள்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு தப்பியது என்பதுதான் மக்கள் கருத்து.அவர்களிடம், உங்களை இவர்கள் வறுத்து சாப்பிட துடிக்கிறார்கள் என்று சொல்லுவதுபோல் அல்லவா இது!
கண்ணெதிரெ பச்சை ரத்தம் குடிப்பவனை நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? சாபம்விடுவதைத்தவிர?அறுக்கதெறியாதவனுக்கு இடுப்பச் சுத்தி ஆயிரத்தெட்டு அருவா ஏன்? என்கிறார்கள்.
வறுத்து சாப்பிட துடிக்கும் எதிரி கூட அதற்கு தேவையான கருவியை ஏந்துகிறான்.
ஆனால் நாம் வைத்திருக்கும் அறுவா, கொல்லன் பட்டறையில்இன்னும்கூர்தீட்டும்வேலையேபார்க்க
வில்லையே.
இப்படி,முன் தயாரிப்பு இல்லாமல்,
வரும் எதிரியை வழியில் மறிக்காமல்,
டேய்..வாடா..வாடா என்பது வடிவேல் பாணியல்லவா?
கட்டுரையில் எப்படி தோழரே, “வரும் எதிரியை வழியில் மறிக்க முடியும்”…
அது அமைப்பின் நடைமுறையிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய விசயம் அல்லவா..? கட்டுரை சொல்லவரும் விசயத்தில் தாங்கள் எங்கு முரண்படுகிறீர்கள்?
சாத்தியமான மாற்றை “நம்பலாமா? நம்பக் கூடாதா?..”
தோழர் அதியன் அவர்களுக்கு,
நிலைமையை விளக்குவது எதற்கு? அதை மாற்றுவதற்குதானே? ஆக சாத்தியமான சக்திகளை அதற்கு உறுதிசெய்யவேண்டும்தானே?
அதற்கு,செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். இதை திருவள்ளுவர்,”வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.”என்கிறர்.
நமக்கு முன் இருக்கும் இந்த அறிவார்ந்ந தொல் மரபும் மார்க்சிய இயங்கியல் பாடமும் நமக்கு சொல்லுவது என்ன? பாமரர்கள் இதையே,”சிறுதுரும்பும் பல் குத்த உதவும்” என்று எதையும் எச்சரிக்கை உணர்வுடன் அணுக வாரிசுகளை பழக்குவார்கள்.அந்த எச்சரிக்கை உணர்வு கட்டுரையில் இல்லை.
தி.மு.க.போன்ற ஆளும் வர்க்க கட்சிகளும் அவர்களை மையப்படுத்தி சுழலும் சீர்திருத்த மற்றும் பகுத்தறிவு அறிவுதுறையினரை விவாதத்துக்கு இழுப்பதுதான் தற்போது,நமக்கான பணி.
நாம் விரும்பாவிட்டாலும் களத்தில் மோடிக்கு பிரதான எதிரிகள் அவர்கள்தான்.
பலமட்டத்தில் சமூக பணியாற்றும் இந்த அறிவுத்துறையினர் நமக்கு தேவையில்லையா? தி.மு.க. வின் ஸ்டாலின்தான் அவர்களின் சாசுவதமான தலைவர்.அந்த முட்டாள்களைப்பற்றி நாமக்கு என்ன? என்ற அறிவு தடித்தனம் நமக்கு ஆக சாத்தியமான சக்திகளை ஈர்க்குமா?
மார்க்சிய ஆசான்கள் வழி இதுதானா?புரட்சிகரக்கட்சியின் பத்திரிக்கைப் பணி என்ன? அடிப்படையில் அமைப்பாளன் பணிதானே? ஆனால், “கட்டுரையில் எப்படி தோழரே, “வரும் எதிரியை வழியில் மறிக்க முடியும்” என்று காமெடி பேசுவது எதை சாதிக்கும்? பரவாயில்லை,உண்மையில் இந்த டைமிங் நக்கலை நான் ரசித்தேன்.
“சாத்தியமான மாற்றை “நம்பலாமா? நம்பக் கூடாதா?..” என்ற தங்களின் கேள்விக்கு என்பதில் இதுதான் “எ பார் ஆப்பிள்” என்ற பதில் அறிவின் ஆரம்பநிலை.