கார்ப்பரேட் சேவகன் மோடி ஆட்சி செய்த, கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய வங்கிகள் இரத்து செய்த வாராக்கடன்களின் மொத்த மதிப்பு 10.72 இலட்சம் கோடி என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் கோரிய மனுவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.
இந்தியாவில் பெரும் முதலாளிகளூம், பெரும் நிறுவனங்களும் பொதுத்துறை வங்கிகளில் பெரும் கடன்களை வாங்கி கட்டாமல் விட்டு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் விவகாரம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
2012-ம் ஆண்டில் வாராக்கடன்களை வெகுநாட்களாக திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்துதான் பொதுத்துறை  வங்கிகளை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவது பொதுவெளிக்கு அம்பலமானது.
அப்படி அம்பலமானாலும்,  வங்கியில் கடன் மோசடியில் ஈடுபடுவதும், வாங்கிய கடனைக் கட்டாமல், தப்பித்து வெளிநாடு செல்வதும் இன்று வரையில் தொடர்ந்து தான் வருகிறது. இந்நிலையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியில் கடந்த பத்தாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடனின் அளவு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் வாராக்கடன்களாக தீர்மானிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை அளித்துள்ளது.
படிக்க :
வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி
கடந்த பத்தாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வாராக்கடன் தொகை ரூ. 11.68 இலட்சம் கோடி ஆகும். இதில் பெருமளவிலான இரத்து நடவடிக்கைகள் கடந்த ஏழு ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் தான் நடந்துள்ளது. அதாவது கடந்த ஏழாண்டுகளில் மட்டும் ரூ. 10.72 இலட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோடியின் புண்ணியத்தில் பெரும் பணக்காரர்களுக்கு கடன்களில் இருந்து விமோச்சனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ. 1.08 இலட்சம் கோடியும், 2017-18 நிதியாண்டில் ரூ. 1.61 இலட்சம் கோடியும், 2018-19 நிதியாண்டில் 2.36 இலட்சம் கோடியும், 2019-20 நிதியாண்டில் 2.34 இலட்சம் கோடியும் வாராக்கடன்களை தள்ளுபடி செய்யப்படுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. கடந்த மார்ச் 2021-ல் முடிந்த நிதியாண்டில் மட்டும் 2.03 இலட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வாராக்கடனில் சுமார் 75% கடன்கள் பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். 2020-21 நிதியாண்டில் மட்டும், ஸ்டேட் வங்கியால் தலைமை தாங்கப்படும் ஐந்து வங்கிகள் மட்டுமே, ரூ. 89 ,686 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருக்க்கின்றன.
இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும் கடன்களில் பெருவாரியானவை, பெரும் நிறுவனங்களும் பெரும் பணக்காரர்களும் வாங்கியக் கடன்களே. ஆனால் சாதாரண மக்கள் வாங்கிய கடன்களை வங்கிகள் அவ்வளவு எளிதாக தள்ளுபடி செய்துவிடுவதில்லை.
அதே போல எந்தெந்த பெருநிறுவனங்களின் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறித்த விவரப்பட்டியலை இதுவரை எந்த வங்கிகளும் வெளியிடவில்லை. கூட்டுக்களவானிகளைக் காட்டிக் கொடுக்க மறுக்கும் இதே வங்கிகள்தான் கடன் கட்ட முடியாமல் தவிக்கும் உழைக்கும் மக்களின் புகைப்படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்துகின்றன.
படிக்க :
ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !
ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !
பெரும் நிறுவனங்களின் வாராக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்த ஒரு வழிமுறைகளும் எதுவும் வெளிப்படைத்தன்மையானவையாக இல்லை என்கின்றனர் பல வங்கி அதிகாரிகள். கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் அதை மீண்டும் வசூலிக்க வங்கிகளுக்கு உரிமை இருக்கிறது எனினும் இதுவரை அப்படி தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட தொகையின் அளவு வெறும் 15-20%-ற்கு குறைவானது தான் என்று தெரிவிக்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்ல, தனியார் வங்கிகளிலும் இத்தகைய பெருமுதலாளிகளால் சூறையாடப்படும் பணம், அன்றாடம் பணிக்குச் சென்று தினக்கூலியோ, மாதச் சம்பளமோ பெற்று சிறுகச் சிறுக சேமிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் தான். வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான் வேறு வடிவில் ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.
மோடியின் ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல, அது கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கான ஆட்சி என்பதை கடந்த ஏழாண்டு தகவல் நிரூபித்துவிட்டது.

கர்ணன்
நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

2 மறுமொழிகள்

 1. Write off எண்பது வேறு waive off எண்பது வேறு. நீங்கள் பேசுவது write off பற்றியது. அதாவது வராக்கடன் நிலுவையில் இருந்தால் அவர்கள் மீது மேற்கொண்டு legal action எடுப்பதற்காக தனியாக எடுத்தது வைப்பது write off.
  உதாரணம் மல்லையா case.
  அவரிடம் இருந்து அநேகமாக மொத்த கடனும் வசூலிக்க பட்டதாக தெரிகிறது. ஆனால் write off என்றதும் மல்லையா கடன் தள்ளுபடி செய்ய பட்டது என்று அனைத்து மீடியாவிலும் பரப்ப பட்டது.. அந்த மீடியா மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று இது வரை எனக்கு புரிய வில்லை…

  • இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு அதனை வசூலிக்கலாம் என்றும் அவ்வாறு இதுவரை வசூலிக்கப்பட்டது 15-20%-க்கும் குறைவானது என்று குறிப்பிட்டிருக்கிறாரகளே..

   ரைட் -ஆஃப் செய்யப்பட்ட கடன்கள் அனைத்தும் கடன் கணக்கில் இருந்து அகற்றப்பட்டவை. அதன் பொருள், அவை இனி வராது என முடிவெடுக்கப்பட்டவை. ஒருவேளை அவை தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால், அதற்கான வருவாய் வரியை வங்கிகள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் …

   ஆகையால் ரைட் ஆஃப் – வெய்வ் ஆஃப் என்ற வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால் இருக்கும் நடைமுறை எதார்த்தம் ஒன்றுதான். அது தான் தள்ளுபடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க