டந்த ஆகஸ்ட் 13 அன்று இந்து தமிழ் நாளிதழ் “உண்மையான தேச துரோகிகளுக்கு என்ன தண்டனை?” என்ற தலைப்பில் தலையங்க செய்தி வெளியிட்டிருந்தது. தேச துரோகிகளுக்கு என்ன தண்டனை என்பதை பார்ப்பதற்கு முன்னால், முதலில் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள், தேச பக்தர்கள் யார் மற்றும் இந்த நாட்டின் எதிரிகள், தேச துரோகிகள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

ரயில் பெட்டி எஞ்சின்களை உருவாக்கும் நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஐ.சி.எஃப் நிறுவனம் தயாரித்த டிரெய்ன் – 18 (T-18) என்ற அதிநவீன – மணிக்கு 160 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய அதிவேக ரயில் உற்பத்தியானது முடக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பையும், அழகையும், செயல்பாடுகளையும் குறித்து நியூஸ்-18, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் விவரிப்பதில் இருந்தே பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் உழைப்பின் வண்ணமும், சீரிய சிந்தனையையும் உணர முடியும்.

அவ்வளவு நேர்த்தியான அதிவேக – அதிநவீன ரயில் எஞ்சின் ஐ.சி.எஃப் நிறுவனத்தின் சொந்த முயற்சியில் முனைப்போடு, அந்நிய நாட்டு தொழிற்நுட்பம் இல்லாமல், சொந்த நாட்டு தொழிற்நுட்பத்துடன் மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 80% அளவில் உள்நாட்டு உதிரி பாகங்களுடன் வெறும் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இந்த தொகையைவிட பல மடங்கு விலை அதிகரிக்கும்.

படிக்க :
♦ சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !
♦ சென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி ! படக்கட்டுரை

T-18 என்ற அதிவேக ரயிலை குறைந்த செலவில் அதிநவீன ரயிலாக உருவாக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஐ.சி.எஃப் நிறுவன தலைவர், இயந்திரவியல் பொறியாளர் சுதான்சு உட்பட 11 அதிகாரிகள் மீது முறைகேடு குற்றம்சாட்டப்பட்டு, இந்தத் திட்டம் மூன்றாண்டுகளுக்கு முன்னரே நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆராய்ச்சி – வடிவமைப்பு ஆகியற்றை உரிய தர நிர்ணயக் கழகத்திடம் அனுமதி பெறாதது; ரயில் தயாரிப்பிற்கு டெண்டர் விட்டதில் முறைக்கேடு என்று குற்றம் சாட்டப்பட்டதோடு; இது தொடர்பான ஆவணங்களையும் ரயில்வே வாரியத்தின் உத்திரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி விசாரணையையும் தொடங்கியது. அதனடிப்படையில் T-18 உற்பத்தியும், மேற்கண்ட 11 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் சுதான்சு உள்ளிட்ட 11 பேரும் குற்றமற்றவர்கள் என தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். சரி, இவர்கள் மீது இப்படி ஒரு தவறான / போலி வழக்குப் பதிவு செய்ய என்ன அவசியம் ?

ரயில் பெட்டிக்கான எலெக்ட்ரிக் வேலைகளுக்கான டெண்டரை ஐ.சி.எஃப் நிர்வாகம் கோரியது. இதனடிப்படையில் பல நிறுவனங்கள் டெண்டரில் கலந்துக் கொண்டன. அதில் குறைவான தொகையுள்ள மேதா என்ற இந்திய நிறுவனத்தின் டெண்டரை அங்கீகரித்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துக் கொள்ளப்பட்டது. அதே வேலையில், அதிகமான தொகையுள்ள மற்ற நிறுவனங்களின் டெண்டர்களை [அதாவது, கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் டெண்டரையும், ஜெர்மனியைச் சேர்ந்த சீமன்ஸ் நிறுவனத்தின் டெண்டரையும்] நிராகரித்துவிட்டது.

மேலும் அந்த சமயத்தில், T-18 வகையைச் சார்ந்த 60 அதிவேக ரயில்களை வாங்க, ரயில்வே வாரியம் சர்வதேச டெண்டர்களை கோரப்போவதாகவும், அதில் ஐ.சி.எஃப் நிறுவனம் கலந்து கொள்ளாத வகையில் நிபந்தனைகள் இருப்பதாகவும், ரூ.25,000 கோடியில் வெளிநாட்டில் இருந்து ரயில்களை இறக்குமதி செய்யப்போவதாகவும் செய்திகள் – தகவல்கள் வந்துள்ளதாக ரயில்வே தலைவர் Y.K.யாதவ்-விற்கு சுதான்சு கடிதம் எழுதியுள்ளார்.

BSNL நிறுவனத்தையும் HAL நிறுவனத்தையும் இதே போலவே முடக்கியதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். இந்த பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுக்களுக்கு களவுக் கொடுத்ததோடு இதனை ஒப்பிடலாம்.

இதைப் போலவே ஐ.சி.எஃப் நிறுவனமும் T-18 திட்டமும் கார்ப்பரேட்களால் களவாடப் பட்டுவருகின்றன என்பது திண்ணம். ஆனால், சுருட்டப்போவதும், சூறையாடப் போவதும் எவ்வளவு மில்லியன் டாலர் என்பது கார்ப்பரேட்டுகளுக்குத் தான் வெளிச்சம்.

T-18-ஐ உருவாக்கியவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, இந்திய தொழில்நுட்ப சாதனைகளை – சந்திராயன் விண்கல வடிவமைப்பு போன்ற பெருமிதங்களை –  சாதித்த விஞ்ஞானிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இணையானது என்கிறார் சுதான்சு.

மேக்-இன்-இந்தியா என்ற மோடியின் கனவுத் திட்டத்தைக் கூட அந்நிய – உள்நாட்டு கார்ப்பரேட்கள் தான் தீர்மானிக்கின்றனர் என்பதோடு டி-18 திட்டம் முடக்கப்பட்டதன் மூலம், ஆளும் வர்க்கம், அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோரியின் கள்ளக் கூட்டை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இப்படி பொதுத்துறை நிறுவனங்களில் சாதனை செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது என்ன புதிய விவகாரமா ?இதை ஏற்கெனவே இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் செய்து காட்டியிருக்கிறார்களே !

நம்பி நாராயணன் மீது விசாரணை மட்டும் நடத்தப்படவில்லை. கைது நடவடிக்கையும், 50 நாட்கள் சிறை வாசத்தையும் சந்தித்தார் அவர்.  அது மட்டுமா ? ‘தேச துரோகி’ என்ற பட்டம் வேறு. இவர் மாநகராட்சிப் பள்ளியில் படித்து விஞ்ஞானியாகி, பின்பு இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுடன் இணைந்து T-1 என்ற ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டவர். உலகில் முதல் திரவ எரிப்பொருளில் இயங்கும் ராக்கெட் எஞ்சினை அறிமுகப்படுத்தியவர்.

உலகம் போற்றிய இஸ்ரோவின் ‘க்ரையோஜினிக்’ எஞ்சின் ஆராய்ச்சியின் இயக்குனரான நம்பி நாராயணன், பாகிஸ்தான் உட்பட சில வெளிநாடுகளுக்கு திரவ ராக்கெட் எரிபொருள், க்ரையோஜினிக் எஞ்சின் தொடர்பான செய்திகளை இஸ்ரோவிலிருந்து திருடி விற்றதாக கேரள போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவருடன் இணை இயக்குநர் சசிக்குமார், ரஷ்ய விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திர போஸ் போன்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணைக்குப் பிறகு, இது புனையப்பட்ட [ஜோடிக்கப்பட்ட] வழக்கு என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதை உலகமே அறியும்.

மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தனது சுயசரிதையான “ORBIT OF MEMORIES” என்ற நூலில் “இந்தியா கிரயோகெனின் எஞ்சின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்கு தடை ஏற்படுத்த முயல்கிறது. சிஐஏ-வை ஏவிவிட்டு, அடுத்தவர்களை அழிப்பதில் வலிமைப் படைத்த அமெரிக்கா, தனக்கு மசிந்த இந்த போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய் குற்றச்சாட்டுகளை போட வைத்து என்னைக் கைது செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தொழிற்நுட்பத்தை இந்தியாவுக்கு ரஷ்யா தரக்கூடாது என்று ஜெர்மனியும், பிரான்சும் ரஷ்யாவை மிரட்டின.

படிக்க :
♦ ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
♦ பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !

இவ்வளவு கொடுமைகளை நிகழ்த்திய கொலைகாரப்படை CIA-வின் அடியாளாக செயல்பட்டு சொந்த நாட்டுக்கே உலைவைத்த இந்திய போலிசு அதிகாரிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா இந்த தொழிற்நுட்பத்தி வளரக் கூடாது என கங்கனம் கட்டி வேலை செய்யும் இந்திய நாட்டின் – மக்களின் எதிரியான அமெரிக்க, ஜெர்மனி, பிரான்சு போன்ற ஏகாதிபத்திங்களுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கைக் கூட இல்லையே ஏன்?

இதுதான் RSS,BJP பாசிச கும்பலின் இந்திய அதிகாரவர்க்கதின் ஏகாதிபத்திய தேசபக்தி ! வர்க்க புத்தி. ஆனால், உண்மையான நாட்டுப்பற்றாளர்களை – போராளிகளை, பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை தேச துரோகியாக சித்தரித்து சுட்டுக்கொள்ளுகிறது இந்த அரசு.

இத்தகைய பொதுத்துறை அழிப்பு நடவடிக்கைகளையும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத  செயல்பாடுகளையும் அம்பலப்படுத்திய ஆனந்த் தெல்ட்தும்டே, வரவர ராவ், சாய்பாபா, சுதா பரத்வாஜ் போன்ற செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சல்கள் என முத்திரை குத்தி, பொய் வழக்கில் கைது செய்து,  ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து பிணை வழங்காமல் இன்றளவும் சிறையில் அடைத்திருக்கிறது பாஜக.

நீதித்துறை முதல் உளவுத் துறை வரை அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் பெகாசஸ் போன்ற செயலிகள் மூலம் வேவு பார்ப்பது, அவர்களை மிரட்டியோ, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டோ அவர்களை முடக்குவது இதன் மூலம் தனது காவி கார்ப்பரேட் பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது பாஜக.

இன்று பொதுத்துறையை பாதுகாத்த ‘குற்றத்திற்காக’ தேசதுரோக முத்திரை குத்தி ஐசிஎஃப் அதிகாரிகள், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோரைத் தண்டித்தது போல, நாளை நமக்கும் நடக்கலாம். கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் தமது அயோக்கியத்தனங்களை மறைக்க போடும் வெளி வேசம் தான்  தேசபக்தி, தேச துரோகி எனும் முத்திரைகள் அனைத்துமே !!

வினவு செய்திப் பிரிவு
கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க