சென்னை ஐ.சி.எப். ரயில்பெட்டி சர்வதேச கண்காட்சி !

ர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி மே, 17 முதல் 19 வரை சென்னை ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய ரயில்வே மற்றும் பல்வேறு மாநில நகர்ப்புற போக்குவரத்து கழகங்கள் ஒன்று சேர்ந்து “புதிய தொழில்நுட்பங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களை அடையாளம் காண, நெருக்கமாக தொடர்புகொள்ள ஒரு சிறந்த தருணம்” என்று (IRCE-2018) இந்தக் கண்காட்சிக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்திய மக்களின் முதுகெலும்பு போலத் திகழும் பொதுத்துறையான ரயில்வே சிறிது சிறிதாக தனியார்மயப்படுத்தப்படும் சூழலில் இந்தக் கண்காட்சியின் பயன் என்ன?

மது வாழ்வில் பயணங்கள் எப்போதும், என்றும் குதுகலத்தை தரக்கூடியது, அது எந்த வயதாக இருந்தாலும் சரி. அதிலும் ரயில் பயணங்கள் உற்சாகத்துடன் உலக அனுபவத்தையும் தருவதுண்டு.

ஒவ்வொரு பெட்டியும் ஒரு அனுபவத்தை தரக்கூடியது. வெள்ளை காலர் அதிகாரிகள், சுற்றத்தை பார்க்க செல்லும் உறவினர்கள், அவசர வேலையாக செல்பவர்கள், பால்காரர், தினசரி சில நூறு கிலோ மீட்டர் கடந்து வேலைக்கு வந்து செல்பவர் என ரயிலில் பல அடுக்கு மக்களை பார்க்க முடியும். அதிலும் ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் பல வண்ண வாழ்க்கையை பார்க்க முடியும்.

இப்படி பலரின் வாழ்வை சுமந்து செல்லும் ரயில்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது இந்த கண்காட்சி.

இந்த கண்காட்சி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ரயில் குறித்த விளக்கங்களை மட்டுமல்ல இன்று ரயில் தயாரிப்பில் தனியாரின் ஆதிக்கம் எவ்வாறு உள்ளது என்பதையும் காட்டுகிறது.

சத்யநாராயணன், ஆதித்யன், சத்யா: ஐ.சி.எப்.-ல் தொழில் பழகுனர் பயிற்சி மாணவர்கள்.

சத்யநாராயணன், ஆதித்யன் மற்றும் சத்யா.

கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகளை பார்த்தோம். நாங்கள் வெல்டர், பிட்டர், எலக்டிரீசியன் என்பதால் ஒவ்வொரு துறையிலும் இவ்வளவு மாற்றங்களா என வியந்தோம்.

குறிப்பாக கிரைண்டிங் (கடைசல்) தொழில்நுட்பம் நம்ப முடியாத அளவு துல்லியமாக உள்ளது. ரயில் பெட்டியின் ஒவ்வொரு பாகமும் கண்ணாடி மாதிரி கண்ணை பறிக்கிறது. ஆனால் ஒருகுறை இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் பெரும் நிறுவனங்களின் தொழில் நிபுணர்களின் மொழி, தோற்றம் எங்களை அணுக விடாமல் தடுத்தது.

மாணவர்களாகிய எங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தவோ அவர்களின் கண்டுபிடிப்புகளை எங்களுக்கு விளக்கவோ நிர்வாகம் எந்த ஏற்படும் செய்யவில்லை. பொது மக்களும் இப்படித்தான் மிட்டாய் கடையை வெறித்து பார்ப்பது மாதிரி பார்த்து திரும்புகின்றனர்.

தினேஷ்பாபு மற்றும் சுந்தரம்

தினேஷ்பாபு , சுந்தரம்

ஐ.சி.எப். என்பது வெறும் பெயரில் மட்டும்தான். ஆனால் அதை இயக்குவது இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவங்கள் தான். இங்கு வந்திருக்கும் கம்பனிகள் அனைத்தும் ஐ.சி.எப்.-பின் ஆர்டர்களை வாங்கி சப்ளை செய்யும் நிறுவனங்கள்.

ரயில் பெட்டிக்கு தேவையான போல்ட் நட்டிலிருந்து பேஃன்கள், வீல், எஞ்சின் வரை ஏன் கழிப்பறையில் முகம் கழுவும் சில்வர் பேசின் வரை வெளி நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

இங்கு வெளிக் கம்பனி பொருட்களை அசம்பிள் செய்யும் வேலையை மட்டும் தான் செய்கிறார்கள். நாங்களே குறிப்பிட்ட கம்பனியின் சைட் இன்ஜார்சாக பணிபுரிவர்கள்தான். ஐ.சி.எப்.-பில் ஆர்டர் எடுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களோடு சில இந்திய கம்பனிகளும் உள்ளன. அவ்வளவுதான்.

கதிரவன், ஹர்பன்சிங், நிர்மல்குமார்: தொழில்நுட்ப மேலாளர்கள் ஆர்யன் நிறுவனம்.

கதிரவன், ஹர்பன்சிங் மற்றும் நிர்மல்குமார், தொழில்நுட்ப மேலாளர்கள் ஆர்யன் நிறுவனம்

எங்கள் நிறுவனம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. எங்களைப் போன்ற ஒரு சில இந்தியக் கம்பனிகள் தான் ரயில்வே ஆர்டர் பெறுவதில் இன்னமும் போட்டியில் நிற்கிறது. பராக், போனி போன்ற கம்பனிகள் அதில் சில.

உள்ளரங்கத்தில் பார்வையாளர்கள்

புதிதாக தயாரிக்கப்பட்டிருக்கும் பாகங்களை வியப்புடன் பார்க்கும் பார்வையாளர்கள்.

கவுதம், சுதின், பாஸ்கர ராவ்: பொறியியல் மாணவர்கள்.

கவுதம், சுதின் மற்றும் பாஸ்கர ராவ்

“இதுநாள் வரையில் ட்ரெயினில் வருவோம் போவோம். ஏறுவோம் இறங்குவோம். இப்பதான் ட்ரெயின் எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொண்டோம். அதன் பாகங்கள் எந்தெந்த பொருட்களால் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் எப்படி பிரமாண்டமாக நவீனமாகி வருகிறது என்று பிரமித்துப் போனோம். கண்ணை பறிக்கும் நேர்த்தியுடன் ரயில் பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவதாக உள்ளது.”

வெங்கட், கோவிந்தன், ஜெயசங்கர்: ஐசிஎஃப்பில் பணியாற்றும் பல்துறை அதிகாரிகள்.

“நம் நாட்டின் வளர்ச்சி பற்றியும் நவீனமாகி வரும் ரயில்வே துறையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் இம்மாதிரியான கண்காட்சிகள் நடக்கிறது. இன்னும் சில மாதங்களில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ட்ரெயினில் நாம் பயணிக்கலாம்.

ஐ.சி.எப்.-பில் முன்பு மாதிரி உற்பத்தியோ தயாரிப்போ இல்லை. வெறுமனே வெளியில் இருந்து பொருட்களை வாங்கி இங்கு அசம்பிள் செய்யும் வேலைதான் நடக்கிறது, என்று சொல்வது உண்மைதான். ஆனால் வளர்ச்சியில் இதை தவிர்க்க முடியாது என்பது இன்னொரு உண்மை.

அமெரிக்காவிலும் இப்படிதான் வளர்ச்சி இருக்கிறது. அவர்களும் அவுட் சோர்சிங் தான் செய்கிறார்கள். அவ்வளவு ஏன் நம் வீட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நம் தாத்தா காலத்தில் வீட்டுக்கு ஐம்பது விருந்தாளிகள் வந்தாலும் வீட்டிலேயே சமைத்து போடுவார்கள். இப்போது நாம் என்ன செய்கிறோம்? ஐந்து பேர் வந்தாலே கேட்டரிங் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொடுக்கிறோம். உணவையே அவுட் சோர்ஸ் செய்கிறோம். இது நியாயமா?”

சர்வதேச கண்காட்சியில் பங்கேற்றிருக்கும் நிறுவனங்களின் பெயர் பட்டியல்.

கண்காட்சியின் பிரம்மாண்டமான அரங்கத்திற்குள்ளே அணிவகுத்து வரும் பார்வையாளர்கள்.

கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் மாதிரி மெட்ரோ ரயிலில் அமர்ந்து பார்த்து, செல்ஃபி எடுத்து மகிழும் பார்வையாளர்கள்.

வைஷ்ணவி, கனகா, அமிர்தா, குழந்தை தமிழ்மாறன்.

“கண்காட்சியில் டி.வி. இருக்கிற ட்ரெயின் பார்த்தோம். இரண்டு சீட்டு மட்டும் இருக்கிற ட்ரெயின், மெட்ரோ ட்ரெயின் எல்லாம் பார்த்தோம். இஞ்சின் முன்னே செல்ஃபி எடுத்தோம். பாக்கிறதுக்கு ஜாலியா இருந்தது.”

சென்னை மெட்ரோ ரயிலின் மாதிரிக்காக அமைக்கப்பட்டிருந்த ரயில் ஏறி அமர்ந்துவிட்டு இறங்கிய பார்வையாளர்கள்.

பூங்கோதை, தமிழரசி, ஆனந்தி, லட்சுமி: துப்புரவு பணியாளர்கள்.

“காலை ஏழு மணிக்கு வேலைக்கு வந்தோம். சாயங்காலம் ஆறு மணிக்குதான் போவோம். 350 ரூபா கூலி. கண்காட்சி மூணு நாள் இருக்கும். அதுவரைக்கும் வேலை கொடுப்பாங்க. இங்க வர்ற ஜனங்க சின்ன காகிதம் போட்டாலும் உடனே நாங்க பாத்து எடுக்கணும், இல்லனா திட்டுதான். ஸ்டாப்ளர்-பின் மாதிரி எதனா சின்னதா தரையில இருந்தாலும் உன்னிப்பா பார்த்து எடுக்கணும்.

எல்லாக் குழந்தைகளும் இங்க வர்றத பாக்கும்போது எங்க குழந்தைகளையும் இங்க இட்டுனு வந்து காட்ட ஆசையா இருக்கு. குழந்தைகளை நாங்க கூட்டி வந்தா எங்க வேலைய யாரு பாக்கிறது? நீங்க எங்கள போட்டோ எடுக்கிறது, பேசறது இதெல்லாம் ரொம்ப சந்தோசம்.”

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க