பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து லெபனான் விடுபட்ட நாளின் 100-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் விதமாகவும், மக்கள் மீது அக்கறையற்ற லெபனான் அரசாளும் வர்க்கத்தினரை எதிர்க்கும் விதமாகவும் கடந்த செப்டெம்பர் 1-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் முன்னால் போராட்டம் நடத்த லெபனான் மக்கள் ஒன்றுகூடினர்.

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, பெய்ரட் துறைமுகத்தில் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் தேக்கி வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 190 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடிழந்தனர்.

இது மக்களின் பாதுகாப்பைப் பற்றி கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளால் தான் நிகழ்த்தப்பட்டது எனக் குற்றம்சாட்டி லெபனான் மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தின் ஒரு கட்டமாகத்தான் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம். ஒரு நுழைவாயில் வழியாக நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்தது போலீசு. போராட்டக்காரர்கள் மீது தாக்குதலும் தொடுத்தது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவ வாகனத்தையும் உதவிக்கு அழைத்தது போலீசு.

லெபனான் உருவாகி 100-ம் ஆண்டைக் குறிக்கும் விதமாகவும், அரசாளும் பிரிவினருக்கு எதிராக போராடவும், தியாகிகள் சதுக்கத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் !

போலீசின் இந்த நடவடிக்கைகளை செயல்பாட்டாளர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். போராட்டக்காரர்கள், மக்களை நிந்தித்த தலைவர்கள் இல்லாத ஒரு புதிய லெபனானிற்கு அறைகூவல் விடுத்தும், பிரெஞ்சிலிருந்து விடுதலை பெற்ற 100-ம் ஆண்டு விழாவை ஒட்டி அங்கு வருகை புரிந்த பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரானிடம், தற்போதைய லெபனான் அரசுடன் ஒத்துழைக்கக் கூடாது என வலியுறுத்தியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

விபத்து நடந்த பெய்ரட் துறைமுகத்திற்கு அருகில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை மேடையேறி முன் வைத்தனர். மதச் சார்பற்ற அரசு, பலன் தரத்தக்க பொருளாதாரம் ஆகியவையே அவர்களது முக்கியக் கோரிக்கைகளாகும்.

லெபனான் கொடிகளை ஏந்தி, ஊழல் அரசியல்வாதிகளை கண்டித்துக் கொண்டே, பழைய தோல்வியடைந்த அரசியல் அதிகாரப் பகிர்வு முறைக்கு முடிவு கட்டி புதிய மதச்சார்பற்ற அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்

“ (விடுதலைக்குப் பின்னான) இந்த முதல் நூற்றாண்டு, போர்கள், அந்நிய ஆக்கிரமிப்பு, வறுமை, ஊழல், இடப்பெயர்வு, பிரிவினைவாத பிளவுகள் மற்றும் தற்போதைய துறைமுக வெடிவிபத்து ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இந்த அமைப்பை அவசரமாக சரி செய்ய வேண்டியது இருக்கிறது” என்று தெரிவிக்கிறார் 21 வயது துறைமுகப் பணியாளர் ஓமர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள், பெய்ரட்டின் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகில் நடத்திய போராட்டத்தில் முழக்கமிடுகின்றனர்.

போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்ளும் போராட்டக்காரர்கள் !

ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்து 190 பேர் மரணமடைந்து, 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களானதற்குக் காரணமான பெய்ரட் துறைமுக வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோனின் லெபனான் வருகையும் இந்தப் போராட்டங்களோடு தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழ்ந்துள்ளது.

லெபனானின் வெகுவாகப் பாதுகாக்கப்பட்ட பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள எஃகு சுற்றுச் சுவற்றின் மிது உலோக சட்டகங்களைப் பயன்படுத்தி ஏறும் போராட்டக்காரர்கள்.

பெய்ரட் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட கண்ணீர்ப் புகை குண்டுகளை பாட்மிட்டன் மட்டையால் திருப்பியடிக்கும் போராட்டக்காரர்.

பாராளுமன்ற சதுக்கத்துக்கு அருகே அரசாங்கத்திற்கெதிரான போராட்டக்காரர்களுடன் கலவர தடுப்பு போலீசு, மோதலில் ஈடுபட்டுள்ளது.

ஒரு போராட்டக்காரர் கலவர தடுப்புப் போலீசின் மீது கற்களை வீசுகிறார்

கூட்டத்தை சமாளிக்க ஒரு இராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டது.

தமிழாக்கம் : நந்தன்

நன்றி :
அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க