கொரோனா பேரிடரைக் காரணமாகக் காட்டி, மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதிலேயே மும்முரமா இருந்து வருகிறது. இதில், “யானை புகுந்த சோளக்கொள்ளையைப் போல” சிறு குறு தொழில் செய்வோர் தங்களது வாழ்வு நசுக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல நூறுகளையோ, சில ஆயிரங்களையோ முதலீடுகளாய் போட்டு தொழில் செய்யும் நடைபாதை வியாபாரிகளின் நிலையைச் சொல்லவா வேண்டும்.

அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டவர்களின் வாழ்விலிருந்து …

***

ஜோதியப்பன், வயது 70.

நகராட்சி மருத்துவமனை வாசலில் மரத்தடி நிழலில் வீட்டுக்குத் தேவையான சிறு பொருட்களை விற்பவர்.

கொரோனா 60 வயசுக்கும் மேலானவர்களை அதிகம் தாக்கும், வெளியில் நடமாடக் கூடாது என்று அரசு சொல்கிறதே, உங்களுக்குத் தெரியாதா என்றோம். அவர் நம்மை ஏற இறங்கப் பார்த்தார்.

சார் அரசு சொல்றத நான் கேட்டுக்கிறேன், என் வயிறு கேக்குதில்லயே சார். நான் என்ன பண்றது. ரோட்டுல கடைய போடாதேன்னு டெய்லி போலீசு தொறத்துது; வயிறு ரோட்டுக்குப் போடான்னு தொறத்துது. யார் சொல்றத சார் நான் கேக்குறது? என்றார் பரிதாபமாக.

பூட்டு, கீ செயின், ஸ்பேனர், நகவெட்டி, ஊசி, தாயக்கட்டை, கத்திரி இப்படி, நான் விக்கிறதே 50 ரூபா பொருள்தான். இதையும் 10, 20 கம்மியா கொடுன்னு பேரம் பேசுறாங்க. கேக்குறவுங்க மேலே கோபப்பட்டு பிரயோஜனமில்லை. அவங்ககிட்டே பணம் இருந்தாத்தானே கேக்குறத கொடுப்பாங்க.

எனக்கு வீடு வேளச்சேரியில. காலையிலே சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சா, சைதாப்பேட்டை வந்து சேர ஒன்னவர் ஆகும். 10 கிலோமீட்டர். இங்கே வந்து எடத்த பெருக்கி சுத்தம் பண்ணி முடிக்கும்போது, உடம்பு அப்பாடான்னு ஆயிடும். அப்புறம் அம்மா மெஸ்ஸில 6 இட்லி சாப்பிடுவேன். வகையான சாப்பாட்டை நிறுத்தி நாலு மாசமாச்சு. சாயாந்திரம் 7 மணிக்கு கடையை சாத்திட்டு திரும்பவும் சைக்கிளை மிதிப்பேன். இப்படியே போகுது என்னோட வாழ்க்கை.

பொண்டாட்டி மட்டும்தான் கூட இருக்கா. எங்க 2 பேருக்கே இவ்வளவு கஷ்டமுன்னா கொழந்த குட்டிகளோடு இருக்குறவுங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்! நினைப்பதற்கே பயமாயிருக்கு என்றார்.

படிக்க:
தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை
முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

அங்கப்பன், வயது 50.

மோதிரங்கள் மற்றும் பழைய காசுகளை விற்பவர்.

எந்தக் கேள்வி கேட்டாலும் பேச மறுத்தார். அருகே அமர்ந்தும் நெருக்கமாகப் பேசியும் பார்த்தோம், போ… போ… என்று கையால் சைகை காண்பித்தார்.

இந்த ராசிக்கல் மோதிரக்காரர், மோதிரங்களை கைப்பெட்டியில் வைத்து 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களாக இவருக்கு ஒரு வியாபாரமும் இல்லை. தற்போது மதியம் ஒரு மணி வரையில் ஒன்றுகூட போனியாகவில்லை.

“தினமும் தவறாமல், கடையைப் போடுகிறார். வெறுமனே உட்கார்ந்துவிட்டு வெறுங்கையோடு போகிறார். எங்களோடு கூட அதிகம் பேசுவதில்லை. நாங்கள் சாப்பிடும்போது எங்களிடம் இருப்பதைக் கொடுப்போம். அதைக்கூட சிலநேரம் வாங்க மறுத்து விடுவார்.

இன்னைக்கு காலையில ஒரு டீ வாங்கிக் கொடுத்தோம். இதுவரை அவர் வேறு எதுவும் சாப்பிடவில்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் ரோட்டில் போவோர் வருவோர் கொடுத்த சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டு வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு யாரும் எதுவும் கொடுப்பதில்லை. வீட்டிலும் யாரும் என்னிடம் பேசுவதில்லை என்று வருத்தப்படுவார்.

கொரோனா வந்தால்கூட ஒரேயடியாகப் போய்ச்சேரலாம், இப்போ எதுவும் இல்லாமலேயே செத்துக்கொண்டிருக்கிறோம் என்று மனம் நொந்து போவார். அந்த நிலைமைதான் சார் எங்களுக்கும்” என்றார்கள் அருகில் இருந்த அனைவரும்.

ஊருக்கெல்லாம் ராசிக்கல் விற்றவர், ஊரிலிருக்கும் குடும்பத்தினரின் கஷ்டத்தைக் கேட்டவர், இப்போ அவரோட கஷ்டத்தைக் கேட்க யாருமில்லையே என்று பக்கத்துக் கடைக்காரர்கள் உருகினர்.

கொரோனா நோய்த்தொற்று தோற்றுவித்திருக்கும் சமூக அவலங்களின் ஆழம், நம்மால் மதிப்பிட முடியாத அளவிற்கு போய்விட்டது. மோடி – எடப்பாடி விதித்திருக்கும் ஊரடங்கு மனிதத்தை குழிதோண்டி புதைத்துவிட்டது. ஆதரவுக் கரம் நீட்டவேண்டிய அரசு, வாய்க்கரிசி போடவும் வக்கற்று இருக்கிறது.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க