மிழ்நாட்டில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொடுகிறது. தொற்று பரவும் வேகத்தில் தப்பிக்க முடியாமல், உழைக்கும் மக்கள் வேரறுந்த மரமாக வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் சாய்கிறாகள்.

வறுமையும் நோய்த் தொற்றும் ஒருசேர அவர்களை விரட்டுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தவிக்கிறார்கள். நோய்த் தொற்று நமக்கு வந்தாலும் பரவாயில்லை, பசியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற பலவண்ண முகக்கவசங்களுடன் சாலைகளில் அலைகிறார்கள், இந்த முகமற்றவர்கள். வேலைதேடி புதிய இடம், புதிய தொழில் என்று தடுமாறுகிறார்கள். இவர்களை கைவிட்டுவிட்டது அரசு.

***

சென்னை சைதாப்பேட்டை மார்கெட் பகுதி நகராட்சி மருத்துவமனை அரசு அலுவலகங்கள் குவிந்துள்ள இடம். பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஸ்டான்ட் என்று அடுத்தடுத்து மக்கள் நெரிசல். அங்கு நடைபாதையை ஒட்டியுள்ள சுற்றுச்சுவர் கம்பியில் தோரணம் போல பல வண்ணங்களில் தொங்கும் முகக்கவசங்கள். இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று விலை கூவி விற்றுக்கொண்டிருந்தார் பாபு.

நடுத்தர வயது. அங்குள்ள முகக்கவசங்கள் பற்றி விசாரித்து அவரிடம் பேச்சுகொடுத்தோம்.

கதவு, ஜன்னல், அலமாரின்னு கஸ்டமரோட டேஸ்ட்டுக்கு ஏற்ற மாதிரி வேலை செய்வேன். இப்ப வேலையில்ல, மாஸ்க் விற்க வந்துவிட்டேன் என்கிறார் கார்பென்டர் பாபு.

சார் நான் இந்தத் தொழிலுக்கு வந்து முழுசா 2 வாரம் கூட ஆகல. நான் ஒரு கார்பெண்டர். 20 வருசமா அதுதான் என்னோட தொழில். வீட்டு மர வேலைகளில் நான் ஸ்பெசலிஸ்ட். கதவு, ஜன்னல், அலமாரின்னு அவங்கவுங்க தேவைக்கு ஏற்ற மாதிரி வேலை செய்வேன். அந்தத் தொழில்தான் இவ்வளவு நாள் குடும்பத்துக்கு சோறு போட்டது. கொரோனா வந்தது, எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. என்ன மாதிரி வேலைக்காரங்கள, வீட்டுக்குள்ள சேர்க்குறதுக்கு கஸ்டமர் ரொம்பவே பயப்புடுறாங்க. கொரோனா தொற்று பயமா இருக்குன்னு வீட்டுக்கு வெளியேகூட நிற்க விடாமல் அனுப்பி விடுகிறார்கள்.

சோத்துக்கு வழி தேடி பெயின்டர் வேலை, பிளம்பர் வேலை செய்ய நினைத்தாலும் கூப்பிட ஆளில்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு வெறுமனே வீட்டில் சும்மா இருக்க முடியுமா? பக்கத்தில இளநீர் விற்கும் கடை போட்டிருக்குற அக்கா ஏற்கெனவே பழக்கம். அவர்தான் இந்த யோசனையை எனக்குச் சொன்னாங்க. இப்போ 2 வாரமா இதுதான் பொழப்பு. தினமும் 100, 200 தேறுது. 5000 ரூபா முதல் போட்டிருக்கேன். ஒரு பீஸ் 10 ரூபாயிலிருந்து 30 ரூபா வரை விக்கிறேன். மண்டை ஓடு படம் போட்டது, சோட்டா பீம், ஏஞ்செல்ஸ் படம் போட்ட மாஸ்க்குகள்… இப்படி குழந்தைகளின் விருப்பத்திற்காக பல கலருல வாங்கி வச்சிருக்கேன். எப்படியோ குழந்தைகள் விளையாட்டாக மாட்டிக்கொண்டால்கூட போதுமென்று பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். புதுசா இதுவேற செலவு என்று கஷ்டத்துடன் பணத்தை எடுக்கிறார்கள்.

யாரிடமும் கையில் பணமில்லை. ஏதும் பெரிய வருமானம் இல்லையென்றாலும் 4 பேரை பார்க்கிறோம். மனசு பாரம் குறையுது. முகம் தெரியாத ஒருவருக்கொருவர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம் வாழ்க்கை பரவாயில்லையே என்று நம்பிக்கை துளிர்க்கிறது. கொரோனா காலத்தில் இப்படித்தான் என் காலம் ஓடுகிறது.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

மாஸ்க் விற்கும் டெய்லர் நியாஸ்

மாஸ்க் வாங்க வந்தவர்போல் சொந்தக் கடையை விட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் நியாஸ். நீங்கதான் ஓனரா என்றோம். ஓனர் மைலாப்பூர்ல இருக்காரு. இதே மாதிரி ஒரு கடையை அங்கே போட்டிருக்கிறார். சரக்கை தினமும் இங்கே என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். எனக்கு ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளம் என்றார்.

கடைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவரைப் போல பிளாட்பாரத்தின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார் டெய்லர் நியாஸ்.

ஏன் நீங்களாவே சொந்தமா கடை போடலாமே என்றோம்.

அய்யாயிரம்.. பத்தாயிரமுன்னு முதல் போட நம்மகிட்டே ஏது காசு. இதுல வேற தெரிஞ்சவுங்க பக்கத்துல இருக்கணும். அப்பத்தான் பஜார்ல ஓரமா நின்னு விற்க முடியும். நமக்கு யாரையும் தெரியாது. கையில பணமும் இல்லை. நான் இந்த வேலைக்கு வந்தே ரெண்டு நாளுதான் ஆகுது. என்னோட வேலையே வேற. எனக்கு டெய்லரிங் நல்லா தெரியும். ஜென்ட்ஸ் ஸ்பெசலிஸ்ட். பேன்ட், சட்டை என பீஸ் ரேட்டுக்கு போயி தச்சு கொடுப்பேன். கொரோனாவுக்கு முன்னாளேயே பல நாட்கள் வேலை இல்லை. கொரோனா மொத்தமா எங்க சோலிய முடிச்சிடுச்சு.

டெய்லர் தொழில்ல தினமும் 400 ரூபாயாவது சம்பாதிப்போம். அத வச்சு குடும்பம் ஓடுச்சு. கொரானாவுல பல மாதங்களா வேலை இல்லாம சும்மாதான் இருந்தேன். இப்பத்தான் இங்கேவந்து நிக்கிறேன். வேற வழி தெரியல. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்குக்கூட விற்க மாட்டேங்குது. எனக்கு விற்கத் தெரியலன்னு ஓனர் திட்டுராறு. கஷ்டமா இருக்கு. இதோ பாருங்க, காலையிலிருந்து வெறும் 60 ரூபாதான் இதுவரை வித்திருக்கு என்று பாக்கெட்டைத் துழாவி எடுத்துக் காண்பித்தார்.

இப்ப ஒரு வேளைதான் சாப்பாடு. பக்கத்துல பீப் பிரியாணி விற்கிற தம்பிகிட்டேதான் மதியம் சாப்பாடு சாப்பிட்டேன். என்னோட நிலைமைய தெரிஞ்சு, 50 ரூபா குஸ்காவை 30 ரூபாய்க்கு எனக்குக் கொடுக்கும். முகம்தெரியாதவங்கதான் ஆதரவா இருக்காங்க.

30 ரூபாய்க்கு பீப் பிரியாணி சாப்பிட்டேன். இப்ப இருக்குறது, வெறும் 60 ரூபாதான் என்று பாக்கெட்டைத் துலாவி எடுத்துக் காண்பிக்கிறார், நியாஸ்.

என் பொண்டாட்டி நிலைமைய புரிஞ்சிக்கிறா. இந்த கஷ்டமெல்லாம் குழந்தைகளுக்கு புரியுமா? பர்த்டே புது ட்ரெஸ் இல்லன்னு கோச்சுக்குதுங்க. இங்க சோறே பிரச்சினை. குழந்தைகளை காப்பாத்தவாவது எப்படியாவது வாழ்ந்தாகணுமேன்னு தோனுது. மாதம் 2,500 ரூபா வீட்டு வாடகை. மூனு மாதமா கொடுக்கல. ஒரு ரெண்டாயிரமாவது கொடுத்து ஓனர சமாளிக்கலாமுன்னு பாக்குறேன், முடியல. வீடு காலி பண்ணச் சொன்னா, குழந்தைகள அழைச்சிகிட்டு எங்கே போவேன் என்றார் துக்கம் தாளாமல்.

படிக்க:
இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !
கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை

சேல்ஸ்மேன் ஆன, சேல்ஸ் மேனேஜர்

அப்பகுதியிலிருந்த சாலையோர முகக்கவச கடைகளிலேயே பளிச்சென்று பகட்டாக இருந்த கடை. பார்த்தவுடன் கவர்ந்தது.

எப்படி உங்க கடை மட்டும் தனித்துத் தெரிகிறது? முகக்கவசங்கள் எல்லாம் ப்ரஷாக மிடுக்காக இருக்கே எப்படி? என்றோம்.

இது தி.நகர் பாண்டியன் ஹோல்சேல் ஸ்டோர் போட்ட நேரடி கடை சார். இங்கே 40 ஆயிரத்துக்கு சரக்கு இருக்கு. தினமும் பழைய சரக்க எடுத்துட்டு ப்ரஷா சரக்கு போடுவோம் என்றார்.

பாண்டியன் ஸ்டோரில் என்ன வேலை செய்தீர்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்? என்றோம்.

தி.நகர் துணிக்கடையில் ப்ளோர் மேனேஜராக இருந்தேன். இப்போ, வியாபாரம் இல்லேன்னு முக்கால்வாசி பேரை தூக்கிட்டாங்க. என்ன மாதிரி பல வருசங்களா வேலை செஞ்சவுங்கள விடாம வச்சிருக்காங்க. சென்னை முழுவதும் இந்த மாதிரியான தெருவோரக் கடைகள், பத்துக்கும் மேல இருக்கு. இன்னும் பல கடைகளை தெறக்கப் போறாங்க.

தி.நகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்-இல் ப்ளோர் மேனேஜராக இருந்த விஜய், தற்போது சாலையோரக் கடையில் மாஸ்க் விற்பனை செய்து வருகிறார்.

மொத்த சரக்கையும் நம்பிக்கையின் பேரில பில் போட்டு எங்களுக்கு கொடுத்துடுவாங்க. வேலை முடிஞ்சு தினமும் ஸ்டோருக்கு போயி கணக்கு  கொடுக்கணும். சாப்பாடு, தங்குற இடம் அவங்களோட ஏற்பாடு. ஒரு நாளைக்கு 3,000 ரூபாய்க்காவது வித்தாகணும். அதுக்கு மேல ஒவ்வொரு ஆயிரத்துக்கும் 100 ரூபா எக்ஸ்ட்ரா. எதுவும் விக்கலன்னாலும் தினக்கூலி 500 உண்டு.

ஒரு மாஸ்க் 40 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரைக்கும் பல வெரைட்டி இருக்கு. நல்ல தரமா இருக்கும். நீங்களே பாருங்கள் என்றார்.

கடையில் ஏசி அறையில் மேனேஜர் வேலை பார்த்துவிட்டு வெயிலில் தூசியில் நிற்பது கஷ்டமா இல்லையா, கொரோனா பயம் போயிருச்சா என்றோம்.

மனசு பயப்படத்தான் செய்யுது. ஆனா, வயிறு பசி எடுக்காமலா இருக்குது? இந்த வேலையும் செய்ய மாட்டேன்னு வீட்டுக்குப் போனா எல்லோரும் பசியிலேயே செத்துடுவோம் சார் என்று வாடிக்கையாளர்களை கவணிக்க ஆரம்பித்தார்.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க