மார்ச் – 24 ஊரடங்கிற்குப் பிறகு இந்தியாவெங்கிலும் சாலைகளில் சாரைசாரையாக இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பி சென்றனர். பிரிவினைக்குப் பிறகு நாடு முழுதும் நடக்கும் நீண்ட பயணமிது. தொடர்ந்து சில பத்தாண்டுகளாக இந்தியாவின் விவசாய கிராமங்கள் வெறிச்சோடி வருகின்றன. இந்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கையே இதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தாலும் மக்கள் சொல்லும் ஒரே காரணம் – கிராமத்தை விட நகரங்களில் கூலி அதிகம். தாயாராம் வாழும் மத்தியப்பிரதேசத்தின் பண்டல்காந்த் பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல.

தயாராமும் அவரைப்ர போன்ற சமூகத்தின் கீழ்மட்டத்தில் வாழும் மக்களுக்கும் நம்பிக்கை என்று ஏதாவது இருக்க முடியுமா? தாயாராம் போன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தாம் இந்திய நகரங்களின் முதுகெலும்பாக உள்ளனர். ஒரு பகுதியினர் பெரும் நகரங்களையும் அவற்றை இணைக்கும் சாலைகளையும் மேம்பாலங்களையும் கட்டியெழுப்புகிறார்கள். இன்னொரு பகுதியினர் கழிப்பறைகளை தூய்மை செய்கின்றார்கள், வாடகை மகிழுந்து ஓட்டுகிறார்கள். இவர்கள் அனைவரும் தினக்கூலிகள். ஆண்டுதோறும் சுமார் 228,840‬ கோடி இந்திய ரூபாயை தத்தமது கிராமங்களுக்கு எடுத்து சென்று குற்றுயிராய் கிடக்கும் கிராம பொருளாதாரத்திற்கு பேருதவி செய்கின்றனர்.

ஊரடங்கு, மறு ஊரடங்கு அப்புறம் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்று உலகின் மிகப்பெரிய ஊரடங்கு சோதனைக்களமாக கைதட்டியும், தட்டாலடித்தும், விளக்கேற்றியும் ஒரு சாரார் கொண்டாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஆலைகளிலும் சாலைகளிலும் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு அகதிகள் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்வதற்கான ஒரு நீண்ட பயணத்தை தொடங்கினார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களான குஷ்வாஹா (Kushwaha)குடும்பத்தின் நண்பர்களும் உறவினர்களும் தங்கள் கிராமங்களுக்கு திரும்ப புது தில்லியில் ஒரு சாலையில் நடந்து செல்கின்றனர்.

குடும்பத்திற்கு உணவளிக்கவோ அல்லது வாடகை செலுத்தவோ வழியில்லாத நிலையில் தனது 5 வயது மகன் சிவத்தை தோள்களில் ஏற்றிக்கொண்டு 500 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு தாயாராம் நடக்க தொடங்கினார். வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் வயதான உறவினர்களுடன் கிராமத்தில் விட்டுச் செல்லப்பட்ட தனது மற்றொரு ஏழு வயது மகன் மங்கலைப் பற்றிய நினைவுடன் இருப்பதாக அவர் கூறினார். அவனுடன் இருப்பது தொற்றுநோய்க்கு நடுவில் குறைந்தபட்சம் ஒரு ஆறுதலை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ளா ஜுகாய் கிராமத்தில் தாயாராம் கோதுமையை அறுவடை செய்கிறார். அவரது வீட்டின் இருட்டான ஒரு அறையில் தானியங்கள் மற்றும் உடைகள் சாக்குகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சட்டமில்லா சுவரொட்டி சுவரில் தொங்குகிறது. ஒரு ஏரியின் மீது சிவப்பு கூரை கொண்ட வீட்டை சித்தரிக்கின்ற அந்த படத்தில் பனி மூடிய மலைகளுக்கு பின்னால் சூரியன் மறைகிறது. ”சின்னஞ்சிறிய கிராமங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்திற்கு கடிகாரத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன்” என்று அது கூறுகிறது.

படிக்க:
♦ ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !
♦ “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

தயாராம் மற்றும் அவரது மனைவி கயன்வதி ஆகியோர் கோதுமை அறுவடைக்கு இடையில் ஓய்வு எடுக்கும் நேரத்தில் தங்கள் மகன்கள் மங்கல் மற்றும் சிவம் ஆகியோருடன் விளையாடுகிறார்கள். ”நான் டெல்லியை நேசிக்கிறேன் என்பதல்ல. பிழைப்பதற்கு எனக்கு பணம் தேவை. எங்களிடம் அது இருந்திருந்தால் நாங்கள் இங்கே தங்கியிருப்போம். இது தான் எங்களது வீடு” என்று கூறினார்.

மங்கல் பிறந்த பிறகு, அவனைப் பார்த்துக் கொள்ள ஜுகாயிலேயே கயன்வதி தங்கியிருந்தார். அவன் மட்டும் இருந்தபோது அவனையும் புதுதில்லிக்கு அழைத்து வந்தார். ஆனால் சிவம் பிறந்த பிறகு, ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது: மங்கலையும் அழைத்துச் செல்வதா அல்லது கிராமத்திலேயே அவனை விட்டு விடுவதா. ”வேலையின் போது ஒரு குழந்தையை சுமப்பது எளிது. ஆனால் இருவரை சுமப்பது மிகவும் கடினம். எனவே நாங்கள் அவனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்று கயன்வதி கூறினார். ‘

தயாராம் தன்னுடைய விதியைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார். அவரது திருமணம், புதுடெல்லிக்கு அவர் சென்றது, வீட்டிற்கு திரும்பிச் செல்வது – எதுவும் விட முடியாத கட்டாயத்தேவைகள். தயாராமின் அத்தை அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தார். அவரும் கியான்வதியும் தொன்றுத்தொட்டு இந்திய சமூக ஏணிப்படியில் கீழ்மட்டத்திலிருக்கும் பாரம்பரியமாக உழவுத்தொழிலில் ஈடுபட்ட குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் முதன்முதலாக சந்தித்தனர். ”அவர் பொருத்தமாக தான் இருந்தார்” என்று தாயாராம் தனது மனைவியுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த போது அவரது முகத்தை ஒரு புன்னகை சுருக்கமாக கடந்தது. ”ஆனால் என் தலைவிதியில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் சரிதான்” என்று கூறினார்.

தயாராம் குஷ்வா மற்றும் கியான்வதியின் இரண்டு அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு. நான்கு நாட்கள் தொடர்ச்சியான நடைப்பயணம் மற்றும் சரக்குந்துகள் பயணத்திற்கு பிறகு 2,000 மக்கள் வாழும் விவசாய கிராமமான ஜுகாயில் (Jugyai) உள்ள தங்கள் வீட்டை அவர்கள் சென்றடைந்தனர்.

புதுதில்லியில் இருந்து வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளி பிரமோத் குஷ்வாஹா மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தன்னுடைய சுராரி (Churari) கிராமத்தில் உள்ளார்.

நாடு தழுவிய ஊரடங்கின் போது வெறிச்சோடிய ஜுகாய் கிராமத்தின் தெரு வழியாக பெண்கள் நடந்து செல்கின்றனர். இந்த ஊரடங்கு தனது குழந்தைகளின் கல்விக்கான எல்லா நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிடும் என்று தயாராம் கவலைப்படுகிறார். ”எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை ஒரு வேலையாளாக பணிப்புரிய விரும்புவதில்லை. ஆனால் வேறு வழியில்லை. நான் செய்வதை தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கவலையுடன் கூறினார்.

தயாராமின் பெற்றோர்கள்: இடப்புறத்தில் கேஸ்ரா மற்றும் வலப்புறத்தில் தாகூர் தாஸ். இருவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். வழக்கமாக வீட்டில் இருப்பவர்களின் செலவிற்கு அனுப்பிய பணத்திற்கு பதிலாக வெறுங்கையுடன் தனது கிராமத்திற்கு வந்தவுடன் என்ன நடக்கும் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று முயற்ச்சி செய்ததாக அவர் கூறினார். குறைந்தது அவருக்கு ஒரு வீடாவது இருக்கிறது என்றார் அவர்.


தமிழாக்கம்: -சுகுமார்
நன்றி: அல்ஜசீரா

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க