பத்திரிக்கை செய்தி
29.04.2020
கொரோனாவை விடக் கொடியவை மத்திய மாநில அரசுகள் என்பதை அன்றாடம் மக்கள் உணர்ந்து வருகின்றனர். இழவு வீட்டில் கூட களவாடும் கேவலத்திற்கு மத்திய அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனம் உதவி செய்திருக்கிறது. கொரோனா அச்சத்திலும் வாழ்வாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் வரிப்பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்து கீழ்த்தரமான ஊழலில் ஈடுபட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் விரிவான சோதனைகளை வேகமாக மேற்கொண்டு வரும் வேளையில், விரைவு சோதனை கிட் வாங்குவதில் ஊழல் செய்து வாங்கிய கிட்டையும் பயன்படுத்த முடியாமல் முடக்கி வைத்துள்ளது. விரைவு சோதனை கிட் என்பது சமூகத்தில் மக்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அளவிடும் கருவிதான், இது ஆய்வுக்கான கருவியே தவிர கொரோனா தொற்றைக் கண்டறியும் கருவியல்ல என்பதை கடந்த மார்ச் மாதமே உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தி விட்டது. ஆயினும் மத்திய அரசும், தமிழக அரசும் விரைவு சோதனைக் கருவி இதோ வருகிறது, அரை மணி நேரத்தில் முடிவு தெரியும் என்றே ஏமாற்றி வந்தன. இப்போது அவற்றை வாங்கியதில் ஊழல் அம்பலமாகி உள்ளது.
இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனமும், புனேயிலுள்ள தேசிய தீநுண்மி ஆய்வகமும் சீனாவிலிருந்து வந்த மாதிரிகளை கள ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்திய பின்னரே 5 லட்சம் கிட்டுகள் வாங்க அய்.சி.எம்.ஆர் அனுமதியளித்துள்ளது. இதில் ஊழல் மட்டுமல்லாது வேறு சில பிரச்சனைகளும் இருப்பது உறுதியாகிறது. சீனாவிலிருந்து இறக்குமதியான விரைவு கிட்டுகளின் சோதனை முடிவுகள் 5% மட்டுமே சரியாக இருக்கின்றன என ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையிலும், இறக்குமதியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இவ்வூழல் இப்போது அம்பலமாகியுள்ளது.
சீனாவின் வெண்ட்போ நிறுவனத்தின் இந்திய இறக்குமதி நிறுவனமான மேட்ரிக்ஸ் லேப் ஒரு கிட் ரூ 245/- என்ற விலையில்(போக்குவரத்து உட்பட) இறக்குமதி செய்து ரூ 145/- லாபம் வைத்து ரூ 400/- என்ற விலையில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்திற்கு விற்றது. இதன் மீது ரூ 200/- லாபம் வைத்து ஒரு கிட் ரூ 600/- என்ற விலையில் அய்.எம்.சி.ஆருக்கு ரேர் மெட்டபாலிக் நிறுவனம் விற்றுள்ளது. அதாவது ரூ 245/- க்கு வாங்கப்பட்ட கிட் இரண்டு இடைத்தரகர்கள் கை மாறி ரூ 600/-க்கு மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு என்ன பங்கு என்பது யாருக்கும் தெரியாது. பங்கு இல்லாமல் இருக்காது என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். சந்தடிசாக்கில் எடப்பாடி அரசு ஷான் பயோடேக் என்ற நிருவனம் மூலம் இறக்குமதியாளர் மேட்ரிஸ் லேப் இடம் நேரடியாக வாங்கி கணிசமாக சுருட்டியுள்ளது.
விநியோகஸ்தரான ரேர் மெட்டபாலிக் நிறுவனத்திற்கும் இறக்குமதியாளரான மேட்ரிக்ஸ் லேப் நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கிட்டின் விலை ரூ 400/- என சமரசம் செய்து வைத்துள்ளது. இது குறித்து அய்.எம்.சி.ஆரும், மத்திய சுகாதாரத் துறையும் கொடுக்கும் விளக்கங்கள் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அரசே துணை போனதை உறுதிப்படுத்துகின்றன.
படிக்க:
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
♦ இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !
நமது கேள்விகள்:
- மத்திய அரசின் வர்த்தக நிறுவனம் (State Trading Corporation) இருக்கும் இருக்கும்போது தனியார் நிறுவனத்தை நாடியது ஏன்?
- 100% முன்பணம், காலக்கெடு உத்தரவாதம், டாலர் விலை காரணமாக ஏற்ற இறக்கம் குறித்து விதி இல்லாதது ஆகிய காரணங்களால் தான் நேரடியாக இறக்குமதி செய்வதைக் கைவிட்டதாக அய்.எம்.சி.ஆர் கூறுகிறது. அப்படியானால் இந்த உத்தரவாதங்களை தனியார் நிறுவனம் எப்படிப் பெற்றது? இந்திய அரசுக்கு உத்திரவாதம் கொடுக்க மறுத்த வெண்ட்போ நிறுவனம் அந்த உத்தரவாதத்தை தனியாருக்குக் கொடுத்த போது அரசு ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை?
- ரூ.600க்கும் குறைவாக விலைப்புள்ளி கொடுத்த கேட் இன் பயோ டெக் நிருவனத்தை காரணமின்றி நிராகரித்ததேன்?
- கிட்டின் தரம் பற்றி மாநிலங்கள் புகார் கூறியும் அது குறித்து அய்.எம்.சி.ஆர் கருத்து தெரிவிக்காதது ஏன்?
- தகுதியான மருத்துவ நுட்புநர்கள்தான் விரைவு சோதனை கிட்டை கையாண்டார்களா என சீனா எழுப்பும் கேள்விக்கு என்ன பதில்?
- தனது கிட்டின் தரத்திலும், செயல்பாட்டிலும் எந்தக் குறையுமில்லை; இந்தியாவில் கையாண்ட விதம், சரியாகப் பாதுகாக்காதது ஆகிய காரணமாக இருக்கலாம். எந்த விசாரணைக்கும் தயார் என்ற வெண்ட்போ நிறுவனத்தின் அறிக்கை, அதை உறுதிப்படுத்தும் சீனத்தூதரின் கருத்து இவை குறித்து அய்.எம்.சி.ஆர் மத்திய சுகாதாரத்துறை ஏன் கருத்து கூறவில்லை? மீண்டும் புதிய கொள்முதலை சீனாவிடமே மேற்கொள்வதேன்?
- விரைவு சோதனை கிட் தயாரிப்பு ராக்கெட் விஞ்ஞானமல்ல. உள்நாட்டில் தயாரிக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை?
- ரேர் மெட்டபாலிக் பெரிதும் அறியப்பட்ட நிறுவனமல்ல. அதன் உரிமையாளர் கிருபா சங்கர் குப்தா, மேட்ரிக்ஸ் லேப் நிறுவனம் ஆகியோரின் அரசியல் தொடர்பு என்ன?
மேற்கண்டவற்றை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரக்கூடும். தடுப்பில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு உணவு கூட கொடுப்பதிலும் படுதோல்வி அடைந்து நிற்கின்றன மத்திய மாநில அரசுகள். நிராதரவாக நிற்கும் மக்களை மேலும் மேலும் வீட்டுக்குள் முடக்கி பட்டினியில் தள்ளிக் கொல்கின்றன மத்திய மாநில அரசுகள். மேக் இன் இந்தியா (உள்நாட்டில் தயாரிப்போம்) என்று சவடால் வசனம் பேசிய மோடி அரசு சாதாரண மருத்துவ சாதனங்களைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியவுடன் தடையை நீக்கி மருந்தை அனுப்பிய மோடி அரசு உள்நாட்டு மக்களையும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களையும் கொரோனாவிலிருந்து காக்க எந்த வேகமும் காட்டாமல் தற்புகழ்ச்சியிலும், சுய திருப்தியிலும் காலம் கடத்துகிறது.
நடைபெற்றிருப்பது வெறும் ஊழல் மட்டுமல்ல; மக்கள் உயிரோடு விளையாடும் குற்றமுறு அலட்சியம். விரைவு சோதனை கிட்டை மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டு பத்து நாட்களுக்குப்பிறகே கிட்டை பயன்படுத்தும் வழிமுறைகளை ஐ சி எம் ஆர் அனுப்பியுள்ளது.
மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் மருத்துவம் என அனைத்தையும் வழங்கவேண்டிய அரசே இன்று மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிப்போயிருப்பதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
மருத்துவத்துறை மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே
தோற்றுப்போய் திவாலாகிப் போயிருக்கிறது. கொரோனாவின் தாக்குதல் ஒரு கட்டத்தில் நிச்சயம் நிற்கும். ஆனால் இந்த அரசின் தாக்குதல் நிற்கப்போவதில்லை. நமக்குப் போராடுவதைத்தவிர வேறு வழியேயில்லை.
தங்கள்
தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழகம் மற்றும் புதுவை
இந்த ரேபிட் கிட் ஊழலில் இன்னொரு அம்சம் உள்ளதை உங்களது அறிக்கை சுட்டிக் காட்டவில்லை. அது மிக முக்கியமானது. மோடியின் ஆட்சியில் ஊழல் நடைபெறுவதில்லை என்றொரு சித்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மாறாக, அவரது ஆட்சியில் அதிகாரம் எவ்வாறு மையப்படுத்தப்பட்டிருக்கிறதோ, அது போலவே ஊழலும் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் தொடங்கி இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அப்படியான மையப்படுத்தப்பட்ட ஊழலின் இன்னொரு அவதாரம்தான் இந்த ரேபிட் கிட் ஊழல்.
குறிப்பாக, இந்தக் கொள்முதலுக்கு முன்பாக, எந்தவொரு மாநில அரசும் தனியாக ரேபிட் கிட் கொள்முதலை நடத்தக்கூடாது என மைய அரசிடமிருந்து ஓலை வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தனது கொள்முதலை நிறுத்திவைத்தது. இத்தகைய ஆணை அப்பொழுதே பலராலும் விமர்சிக்கப்பட்டது. அப்படியொரு உத்தரவை ஏன் இட வேண்டும் என்பதை இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்ட ஊழல் விளங்க வைத்துவிட்டது.
எனக்குத் தெரிந்த இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் ஊழல் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்று, அம்மா உயிரோடு இருந்தவரையில் போயஸ் தோட்டம் அம்மையப்படுத்தப்பட்ட ஊழலின் கோட்டையாக இருந்தது. இரண்டாவது, மோடி-அமித் ஷா கும்பல் ஆட்சியின் கீழ் ஊழல் டெல்லியில் மையப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், இங்கு ஆராய வேண்டியது இந்த ரேபிட் கிட்டை சீனாவிலிருந்து வாங்கி இந்தியாவில் விநியோகித்த நிறுவனங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள தொடர்பு குறித்து. ரஃபேல் கொள்முதலில் கடனில் சிக்கிக்கொண்ட அனில் அம்பானிக்கு உதவிய பரோபகாரி அல்லவா மோடி!