கூட்டுறவு கூட்டாட்சி: மோடியின் பொய்யுரைகளால் அரசின்(கொரோனா) அலட்சிய செயல்பாடுகளை மறைக்க முடியாது!

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது.

0

கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து மாநிலங்களும் பங்காற்றியுள்ளன என்றும், இது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 07 அன்று தெரிவித்தார்.

இதில், 23 முதல்வர்கள், 3 லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் இரண்டு நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தெலுங்கானா மற்றும் பீகார் முதல்வர்கள் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

நிதி ஆயோக் ஆளும் குழுவின் 7-வது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தொற்றுநோய்களின் போது, ​​அரசியல் கோடுகளுக்கு அப்பால் ஒத்துழைப்பதன் மூலம் பொது சேவைகளை அடிமட்ட அளவில் வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாநிலமும் முக்கியப் பங்காற்றியது என்றார். அந்தச் செயல்பாட்டில், வளரும் நாடுகளுக்கு ஒரு உலகத் தலைவராக இந்தியா முன்னோடியாக உருவெடுத்தது என்றார்.

அரசியல் ரீதியாக ஒத்துழைப்பதன் மூலம் பொது சேவைகளை அடிமட்ட அளவில் வழங்குவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்துகின்றன என்று மோடி கூறினார்.


படிக்க : லான்செண்ட் அறிக்கை : கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவில்தான் அதிக மரணம் !


உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்திய தூதரகத்தின் மூலம் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலமும் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடி கூறினார். இறக்குமதியைக் குறைப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மேம்பட்டிருந்தாலும், அதிக வாய்ப்புகள் இருந்தன. “ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கும் இது முக்கியமானது,” என்றார்.

இருப்பினும், தெலுங்கானாவின் கே சந்திரசேகர் ராவ் மற்றும் பீகாரின் நிதிஷ் குமார் ஆகிய இரு முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ராவ், ஆகஸ்ட் 6 அன்று மோடிக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் மாநிலங்கள் சம பங்குதாரர்களாக சேர்க்கப்படவில்லை. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு “இந்திய அரசின் சில நடவடிக்கைகளால் சிதைக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். நிதி ஆயோக்கின் கூட்டங்கள் எந்த ஆக்கபூர்வமான நோக்கத்திற்காகவும் உதவாது என்றும், முதலமைச்சர்கள் பேசுவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் ராவ் கூறினார்.

இந்த ஆண்டு, ஆட்சிக் குழு நான்கு முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தது: பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களில் தன்னிறைவு அடைதல்; பள்ளிக் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துதல்; உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்; மற்றும் நகர்ப்புற நிர்வாகம்.

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் வருவாயை இழந்த மாநிலங்களுக்கு இழப்பீட்டு மானியத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மத்திய அரசை வலியுறுத்தினார். ஜூலை 2017-ல், புதிய வரியால் மாநிலங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டால் ஈடுசெய்யப்படும் என்று மத்திய அரசு கூறியது. அது கடந்த ஜூன் 30 அன்று காலாவதியானது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இழப்பீடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பதினாறு மாநிலங்கள் கோரியுள்ளன.


படிக்க : கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!


கோவிட் 19 பேரிடர்காலத்தில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருந்தது என்பதுதான் வரலாறு. ஆனால், மோடி உண்மை நிகழ்வை பற்றி பேசாமல் கூட்டுறவு கூட்டாட்சி என்று புலுகி வருகிறார்.

கொரோனாவிற்கு ஆக்சிஜனும், தடுப்பூசியும் கிடைக்காமல் மக்கள் அலைந்தனர். பல்வேறு அரசு மருத்துவனைகளில் பிணங்கள் குவிந்தன. இதில் உத்தரப்பிரதேசம் படுமோசமான நிலையை அடைந்தது. 24 மணிநேரமும் பிணங்களை எரியூட்டப்படுவதன் காரணமாக சுடுகாடுகளின் இருப்பு கம்பிகள் உருகின என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது. கொரோனாவின் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் ஏற்பட்ட மரணங்கள் தனிக்கதை!

சில மாநிலங்களில் சில அரசு மருத்துவமனைகள் சிறந்த முறையில் பங்காற்றி இருப்பினும் மத்திய அரசு உண்மையில் எந்த ஆணியும் அகற்றவில்லை. கொரோனா பேரிடரில் மத்திய பாஜக அரசின் அலட்சிய செயல்பாடுகளை மோடியின் இந்த கூட்டுறவு கூட்டாட்சி என்ற பித்தலாட்ட பேச்சுக்களால் மறைந்துவிட முடியாது என்பதே திண்ணம்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க