தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!

ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ வழியற்று தற்கொலை செய்துகொள்வதும் மோடியை பொறுத்தவரை 'நகைச்சுவை' தான்.

0

ப்ரல் 26 அன்று ஒரு ஊடக நிகழ்வில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து மோடியின் ‘நகைச்சுவை’ சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை பற்றி ஒரு பிரதமர் நகைச்சுவையாக கூறுவது மிகவும் மோசமானது என்று பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில், ஊடக சந்திப்பில் பார்வையாளர்கள் முன் இந்தியில் பேசிய மோடியின் உரை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரடியாக ஒளிபரப்பட்டது. அதில் மோடி, “எங்கள் குழந்தை பருவத்தில், நாங்கள் ஒரு நகைச்சுவையைக் கேட்போம். அதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

அப்போது அவர் கூறியதாவது: ஒரு பேராசிரியர் இருந்தார், அவருடைய மகள் தற்கொலை செய்து கொண்டாள். அவள், “வாழ்க்கை  மனச்சோர்வை அளிக்கிறது. வாழ விரும்பவில்லை. அதனால் நான் கன்காரியா ஏரியில் குதிக்க போகிறேன்” என்று கடிதத்தில் எழுதி இருந்தாள். காலையில் மகள் வீட்டில் இல்லாததை பெற்றோர்கள் பார்த்தார்கள். படுக்கையில் அவள் கடிதத்தை தந்தை எடுத்து படித்துவிட்டு மிகவும் கோபமடைந்தார். “நான் ஒரு பேராசிரியர். இத்தனை ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்தேன், இப்போதும் கூட அவள் கன்காரியா என்பதை தவறாக எழுதியுள்ளார்” என்றார்.

படிக்க : காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

இதை கேட்டு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். மோடியும் சிரித்தார். மேலும், “அர்னாப் கோஸ்வாமி நல்ல இந்தி பேசத் தொடங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். மேலும் கைதட்டல் எழுந்தது. “அவர் கூறியது சரியா தவறா என்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நல்ல இந்தியில் பேசுகிறாரா இல்லையா என்பதில் நான் கவனம் செலுத்தினேன். அவர் மும்பையில் வசிப்பதால் இந்தி சரியாகக் கற்றுக்கொண்டிருக்கலாம்” என்று கோஸ்வாமியை புகழ்ந்து மோடி கூறினார்.

கோஸ்வாமியின் இந்தியைப் பாராட்ட இந்த ‘நகைச்சுவை’ ஏன் தேவைப்பட்டது என்பது பற்றி மோடியும் கூறவில்லை நமக்கும் தெளிவாகத் தெரியவில்லை.

மோடியின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குழந்தைகளை இழக்கின்றன என்றும் அவர்களை பிரதமர் கேலி செய்ய வேண்டாம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இந்தியாவின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பதென்பது ஒரு சோகம் என்றும் நகைச்சுவை அல்ல என்றும் கூறினார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி மனோஜ் குமார் ஜா, “தற்கொலை போன்ற முக்கியமான பிரச்சினையை நாட்டின் பிரதமர் நகைச்சுவையாகச் சொல்லுவது மோசமானது. ஆனால் அந்த நகைச்சுவைக்குப் பிறகு கைதட்டல் மற்றும் சிரிப்பு என்பது இன்னும் படுமோசமானது. நாம் மிகவும் இழிவான சமூகமாகிவிட்டோம்…” என்று ட்விட் செய்துள்ளார்.

“மோடி தன்னைத்தானே மிஞ்சுகிறார்” என்று ஸ்வாதி சதுர்வேதி எழுதினார்.

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2021-ல் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் 450 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும் சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது முந்தைய ஆண்டை விட  7.2% அதிகமாகும்.

சமீபத்திய அறிக்கைகள் பல இளம் இந்தியர்களிடையே கல்வி சார்ந்த பிரச்சினை, உயரடுக்கு நிறுவனங்களில் கூட சாதிப் பாகுபாடு, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகள் மாணவர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் தனிமைப்படுத்தியுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

படிக்க : மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ

மோடி ‘தற்கொலை’ பற்றி பேசிய அதே ஏப்ரல் 26‌ அன்று ஆந்திராவில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் மனநிலையை பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் சென்று நகைச்சுவை செய்வாரா பிரதமர் மோடி?

ஐஐடி – ஐஐஎம்-களில் தொடர்ந்து நடக்கும் மாணவர்களின் தற்கொலையை எப்படி பார்க்கிறார் மோடி என்பது அவரின் கேவலமான நகைச்சுவை உணர்வில் இருந்து நமக்கு தெளிவாக புலப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ வழியற்று தற்கொலை செய்துகொள்வதும் மோடியை பொறுத்தவரை ‘நகைச்சுவை’ தான்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனப்படுகொலையில் 2000 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த காவிக்குண்டர்களில் முதன்மையானவரான மோடிக்கு, தற்கொலை சம்பவங்கள் நகைச்சுவையாகத்தான் தெரியும். இந்த பாசிச குணாம்சம் மோடிக்கு மட்டும் உரியது கிடையாது; ஹிட்லர் முதல் மோடி வரை பாசிஸ்டுகள் அனைவருக்குமே உரித்தானது இது!


காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க