கங்கனாவின் கன்னத்தை பதம்பார்த்த சி.ஐ.எஸ்.எப்ஃ அதிகாரி: இது முடிவல்ல, தொடக்கம்!

விவசாய சங்கங்கள் தங்களுக்கே உரித்தான வர்க்க உணர்வுடன் "குல்விந்தர் கவுருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்" என எச்சரித்து பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளனர்.

ன்று (ஜூன் 9-ஆம் தேதி) நரேந்திர மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், ஜூன் 7 அன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 6) சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றார். இந்நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (CISF) சேர்ந்த பெண் அதிகாரி குல்விந்தர் கவுர், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாக உருவாக்கியுள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதற்காகதான் கங்கனாவை அறைந்ததாக பெண் அதிகாரி குல்விந்தர் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்காக, தற்போது கங்கனாவின் கன்னத்தை பெண் அதிகாரி பதம்பார்த்த சம்பவம் பாசிசக் கும்பலை பீதியடையச் செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த குல்விந்தர் கவுர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சண்டிகர் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவரது கணவரும் சி.ஐ.எஸ்.எப்ஃ. அதிகாரியாக பணியாற்றுகிறார். குல்விந்தர் கவுரின் சகோதரர் ஷேர் சிங், “கிசான் மஸ்தூர் சங்கர்ஷ்” என்ற விவசாய சங்கத்தின் தலைவராக உள்ளார். விவசாயப் பின்னணியைக் கொண்ட குல்விந்தர் கவுரின் குடும்பத்தினர், மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: காவிகளே, இது தமிழ்நாடு | வீழாது தமிழ்நாடு | PALA Red Wave Song | ம.க.இ.க சிவப்பு அலை பாடல்


இதனையடுத்து கங்கனா ரனாவத் அளித்த புகாரின்பேரில், சி.ஐ.எஸ்.எப்ஃ. உயர் அதிகாரிகளை கொண்ட குழு குல்விந்தர் கவுரிடம் விசாரணை நடத்தியது. அவ்விசாரணையில், “விவசாயிகள் ரூ.100, 200-க்காக போராட்டத்தில் உட்காருகிறார்கள். அவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என்று அவர் (கங்கனா) கூறினார். என் அம்மாவும் அப்போது அந்தப் போராட்டத்தில்தான் இருந்தார். அதனால்தான் அறைந்தேன்” என குல்விந்தர் கவுர் தனது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, இந்திய தண்டனைச் சட்டம் 323 மற்றும் 341 சட்டத்தின்கீழ் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதுகுறித்து துளியும் கவலையுறாத குல்விந்தர் தன் தாயின் மரியாதைக்காக ஆயிரம் வேலையை கூட இழக்க தயாராயிருக்கிறேன் என்று தன்மான உணர்ச்சியுடன் பேசியுள்ளார்.

இந்த விடயம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. பல்வேறு தரப்பினரும் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். குல்விந்தர் கவுரை ஆதரித்து அடுத்தடுத்து பல பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. மேலும், கங்கனாவின் கன்னத்தில் கையால் அறைந்த தடம் இருப்பது போன்ற புகைப்படங்கள், கார்டூன்கள் பகிர்ந்து கங்கனாவையும் பா.ஜ.க-வையும் நக்கலடித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் கங்கனாவை குல்விந்தர் அறைந்ததை அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக குல்விந்தருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக குல்விந்தர் கவுருக்கு ஆதரவளித்து தனது “எக்ஸ்” தளத்தில் கருத்து தெரிவித்த பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி, “நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த பணியாளர்களின் கோபத்தின் அவசியத்தை நான் முற்றிலும் புரிந்துகொள்கிறேன். சி.ஐ.எஸ்.எப்ஃ. மூலம் அவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் அதை ஏற்றுக்கொள்வதற்குத் தேர்வுசெய்யும் பட்சத்தில், அவருக்கு ஒரு வேலை காத்திருக்கிறது என்பதை நான் உறுதி செய்வேன். ஜெய் ஹிந்த், ஜெய் கிசான்” என்று பதிவிட்டுள்ளார்.


படிக்க: தனித்தியங்கும் தமிழ்நாடு | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க


விவசாய சங்கங்கள் ஒரு படி மேலே போய் தங்களுக்கே உரித்தான வர்க்க உணர்வுடன் “குல்விந்தர் கவுருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்” என எச்சரித்து பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளனர். இதனால் என்ன செய்வதென அறியாது பாசிசக் கும்பல் திணறி வருகிறது.

இந்த நிகழ்வு நமக்கு எதை உணர்த்துகிறது? 5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அப்படியெனில், கூட்டணியாக 293 தொகுதிகளில் வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளதற்கு என்ன அர்த்தம்? என்னதான் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தனது அடியாட்படைகளை வைத்து முறைகேடுகளையும் வெறுப்பு-பொய் பிரச்சாரத்தையும் பயன்படுத்தி, தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், மக்கள் ஒருபோதும் இந்த பாசிசக் கும்பலை ஏற்க போவதில்லை என்பதையே இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

தற்போது கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் விழுந்த அடி என்பது ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிஸ்டின் கன்னத்திலும் விழுந்த அடியாகும். குல்விந்தர் கவுருக்கான ஆதரவு என்பது மோடி-அமித்ஷா கும்பலை எதிர்க்கும் ஒவ்வொரு சாமானியனின் ஆதரவுமாகும். ஆக, பெரும்பான்மை மக்களின் மனநிலைக்கு எதிராக மீண்டும் ஆட்சியதிகாரத்தில் வந்து அமர்ந்திருக்கும் பாசிசக் கும்பலுக்கு விழுந்திருக்கும் இந்த அடி என்பது முடிவல்ல, தொடக்கம்!


சிவா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க