காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

வேவு பார்ப்பதன்மூலம் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை முன்னறிந்து முறியடிக்க முடியும்; நீதித்துறையை - நீதிபதிகளை கட்டுப்படுத்த முடியும். கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கேள்வி கேட்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் அறிவுஜீவிகளை வேட்டையாடவும் முடியும்.

0

பெகாசஸ்” (Pegasus) என்ற உளவு செயலிமூலம் அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகள், நீதித்துறையினர் உள்ளிட்டோரை வேவு பார்த்த மோடி அரசு, தற்போது “காக்னிட்” (Cognyte) என்ற புதிய உளவு செயலியை வாங்கவுள்ளதாகவும் இதற்காக 12 கோடி டாலர் (₹986 கோடி) செலவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 30 அன்று வெளியான பைனான்சியல் டைம்ஸின் அறிக்கையில், இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குழுவை விட நன்கு அறியப்படாத நிறுவனத்தால் விற்கப்படும் புதிய உளவு செயலியை வாங்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இஸ்ரேலிய உளவு செயலி நிறுவனமான ”காக்னிட்”டிடம் இருந்து பெகாசஸுக்கு மாற்றாக உளவு செயலியை வாங்கவுள்ளதாக வர்த்தக தரவுகளை ஆராய்ந்த ‘தி ஹிந்து’ கடந்த ஏப்ரல் 5 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது.

காக்னைட் நிறுவனம் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (META) வெளியிட்ட ”கண்காணிப்பு தொழில் பற்றிய அச்சுறுத்தல் அறிக்கை”யில் (Threat Report on the Surveillance-for-Hire Industry) இடம்பெற்றுள்ள நிறுவனமாகும். இவ்வறிக்கையானது பணம் வாங்கிக்கொண்டு இணையம் வழியாக உளவு வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்தது. ஊடகவியலாளர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாற்றுக்கருத்துடையவர்களின் சமூக வலைதள கணக்குகளில் ஊடுருவுவதன்மூலமோ அல்லது அவர்களின் செல்போன் மடிக்கணினி போன்றவற்றை ஹேக் செய்வதன் மூலமோ இம்மாதிரியான உளவு நிறுவனங்கள் அவர்களை முழுமையாகக் கண்காணிக்கும்.


படிக்க: பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!


மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, காக்னிட் மற்றும் அதன் அப்போதைய தாய் நிறுவனமான வெரின்ட் சிஸ்டம்ஸ் இன்க்., (Verint Systems Inc.) ஆகியவற்றிடமிருந்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (Defence Intelligence Agency DIA) கீழ் வரும் சிக்னல் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (Signal Intelligence Directorate SID) கணினி உபகரணங்களை அரசு வாங்கி வழங்கி வருவதாக தி இந்துவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எஸ்.ஐ.டி-யில் (SID) இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சேவைப் பகுதிகள் (in service areas), வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கணினிகளிலிருந்து உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும் இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் படிக்க அவர்களுக்கு அனுமதி உள்ளது. இவ்வளவு அதிகாரங்களை தன்னகத்தே கொண்ட எஸ்.ஐ.டி-யின் கையில், பெகாசஸ் போன்றதொரு உளவு செயலியான காக்னிட் இருப்பதென்பது மிகப்பெரிய பேராபத்தாகும்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, ”இதற்கு முன்னதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, பெகாசஸ் மற்றும் ’டீம் ஜார்ஜ்’ தலைமையிலான இஸ்ரேலிய ஒப்பந்த ஹேக்கர்களைப் பயன்படுத்தியது மோடி அரசாங்கம். தற்போது இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் தலையிட ஒரு புதிய உளவு செயலியை பயன்படுத்துகிறது” என்று கூறினார்.


படிக்க: பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?


இந்திய அரசு பெகாசஸை பயன்படுத்தியது அம்பலமானபோது முதலில் அதை ஒப்புக்கொள்ள மறுத்தது. பெகாசஸ் நிறுவனமோ இறையாண்மை கொண்ட அரசுகளுக்கு மட்டும்தான் உளவு செயலியை விற்பதாகக் கூறியது. பின்னர், இந்திய அரசு சார்பாக உளவுத்துறை பணியகம் (Intelligence Bureau IB) என்.எஸ்.ஓ குழுவிடமிருந்து பெகாசஸ் செயலியை வாங்கியது உறுதியானது. நீதிமன்றத்தில் ”தேசநலன் தொடர்பானது என்பதால்  பெகாசஸ் குறித்து கூற இயலாது” என்று கூறி நீதிமன்றத்தின் துணையோடு உளவு பார்த்ததை நியாயப்படுத்திவிட்டது மோடி – அமித்ஷா கும்பல். ஆனால், 2017-ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் போடப்பட்ட $2 பில்லியன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே பெகாசஸ் வாங்கப்பட்டது என்று ஜெருசலேமில் இருந்து செய்தி வெளியிட்டது நியூயார்க் டைம்ஸ்.

தற்போது நாம் வாழும் டிஜிட்டல் யுகத்தில் காக்னிட், பெகாசஸ் போன்ற உளவு செயலிகள் பாசிஸ்டுகள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பேருதவி புரிகிறது. வேவு பார்ப்பதன்மூலம் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை முன்னறிந்து முறியடிக்க முடியும்; நீதித்துறையை – நீதிபதிகளை கட்டுப்படுத்த முடியும். அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் செல்போன், மடிக்கணினி போன்றவற்றில் போலியான ஆவணங்களை இந்த உளவு செயலிகளின்மூலம் உள்நுழைத்து அவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம், எல்கர் பரிஷத் வழக்கில் வேட்டையாடியதுபோல, வேட்டையாடவும் முடியும்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க