பெகாசஸ் : நம்முடனே பயணிக்கும் உளவாளி – பின்னணி என்ன ?

பாகம் 1 : பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!

ரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கும் ஒரு பெயர் பெகசாஸ். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சிகள் “பெகாசஸ்” மீது கேள்வி எழுப்பி பலத்த சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளனர்.

பெகாசஸ் திட்டத்தை புலனாய்வு செய்த சர்வதேச ஊடக கூட்டமைப்பானது (International Media Consortium) பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் சுமார் 50,000 தொலைப்பேசி எண்கள் உளவு பார்க்கப்படுகின்றன என்று கூறியுள்ளது. இஸ்ரேலில் உள்ள மென்பொருள் நிறுவனமான NSO “பெகாசஸ் ஸ்பைவேர்” மென்பொருளை உருவாக்கியது.

இந்த மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பணியிலிருக்கும் நீதிபதி, 40-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் என இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!

இந்த பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் என்ன செய்கிறது? எப்படி தொலைபேசியை உளவு பார்க்கிறது. அப்படி பார்த்த தகவலை என்ன செய்கிறது?

பெகாசஸ் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

ஸ்பைவேர் எனப்படுவது தீங்கிழைக்கக் கூடிய உளவு மென்பொருளாகும். இதனை கணினி அல்லது அலைபேசியில் நிறுவி நமது தகவல்களை சேகரித்து, சேகரித்த தகவலை அந்த பயனாளரின் அனுமதி இல்லாமல் மற்றொரு மூன்றாம் நபருக்கு அனுப்புவதுதான் ஸ்பைவேரின் வேலை.

NSO அமைப்பால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் சக்தி வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொலைபேசியில் ஊடுருவி அதாவது ஸ்மார்ட்போன்களான – அன்ட்ரய்டு அல்லது ஐபோனில் ஊடுறுவி அவற்றையே கண்காணிக்கும் கருவியாகவும் மாற்றுகிறது.

இஸ்ரேலிய அமைப்பான NSO இந்த மென்பொருளை சந்தையில் ஒரு கண்காணிக்கும் கருவியாக விற்கிறது. இதன் மூலம் குற்றவாளிகளையும், தீவிரவாத அமைப்புகளையும் கண்காணித்து பின் தொடர்ந்து பிடிக்க உதவும் என்கிறது. அது மட்டுமல்லாது இந்த மென்பொருளை அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மட்டும்தான் விற்பனை செய்ததாகக் கூறுகிறது.

பெகாசஸ் மென்பொருளானது குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து கண்காணிக்க உதவுகிறது. இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமத் தொகையே பல கோடி கட்டுவதோடு, கண்காணிக்கும் ஒவ்வொரு நபருக்கும் பல கோடி ரூபாய் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கிறது பெகாசஸ் நிறுவனம். அதன் காரணமாகவே, இந்த மென்பொருள் வெகுஜன கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்படவில்லை.

ஒரு பெகாசஸ் உரிமம் பெற்று பல ஸ்மார்ட்போன்களை வேவு பார்க்க முடியும். 2016-ஆம் ஆண்டின் விலைப்பட்டியிலின் படி, பெகாசஸ் உளவுச் சேவையை ஒரு நாடு வாங்குவதற்கான முதற்கட்ட கட்டணம் சுமார் ரூ. 3.5 கோடியாகும். அதன் பின்னர் கண்காணிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு 10 எண்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 கோடியை கட்டணமாக வசூலிக்கிறது பெகாசஸ் நிறுவனம்.

பெகாசஸ் எப்படி செயல்படுகிறது?

பெகாசஸ் அன்டராய்டு மற்றும் ஐ.ஒ.ஸ் ஆகிய கைப்பேசி இயங்குதளங்களில் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத, தீங்கு விளைவிக்கக் கூடிய தவறுகள் மற்றும் பிழைகளையும்,  வாட்சப் செயலியிலிருக்கும் இதுபோன்ற பிழைகளையும் பயன்படுத்தி கைப்பேசிக்குள் நுழைகிறது. கைப்பேசியில் ஏதேனும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவப்பட்டு இருந்தாலும் கூட அவற்றின் கண்களில் மண்ணைத் தூவி உள்ளே நுழையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பெகாசஸ் ஸ்பைவேர்.

இந்த பெகாசஸ் மென்பொருள் ஒரு கைப்பேசியில் உள் நுழைவதற்கான வழிமுறையை படிப்படியாக மேம்படுத்தி வந்திருக்கிறது. முதலில், 2016-ம் ஆண்டு காலகட்டங்களில், வெளியில் இருந்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலமாக அனுப்பப்படும் மோசடியான இணைப்பின் (Malicious link) சுட்டியை அழுத்தினாலே அது கைப்பேசிக்குள் நுழைந்துவிடும்.

இத்தகைய உள்நுழையும் வசதியை 2019-ம் ஆண்டில் மேலும் எளிமைப்படுத்தியது. 2019-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர், சீரோ க்ளிக் எனப்படும் வசதியைக் கொண்டிருந்தது. அதாவது எவ்விதமான சுட்டியையும் நீங்கள் அழுத்தாமலேயே உங்களது கைபேசிக்குள் நுழைந்துவிடும் தன்மை கொண்டது.

இதன் காரணமாக, இந்த ஸ்பைவேரால் கண்காணிக்கப்படும் இலக்குகள், அவ்வளவு எளிதாக தாம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்க முடியாது. அதன்பின் அடுத்த ஓரண்டிலே வாட்ஸ்அப் நிறுவனம் பெகாசஸ் ஸ்பைவேர் சுமார் 1,400 ஆன்டராய்டு தொலைபேசிகளில்ல் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பட்டார்கள் கண்காணிக்கிறது என்று புதிய குற்றச்சாட்டை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்காவில் இது தொடர்பாக என்.எஸ்.ஓ நிறுவனம் மீது வாட்சப் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

பெகாசஸ் என்ன செய்யும்?

தொலைபேசியில் ஒரு முறை பெகாசஸ் நிறுவப்பட்டால் தொடர்பில் இருக்கும் இருவருக்குமான செய்தி பரிமாற்றத்தை இடைமறித்து உங்கள் தொலைபேசியில் இருக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல், தொடர்பு எண்கள், காலேண்டர், பாஸ்வோர்ட், அழைப்பு பற்றிய தகவல், ப்ரௌசெர் தரவுகள், தேடுப்பொறி வரலாறு போன்ற அனைத்தும் திருடப்பட்டு தங்களின் அனுமதியின்றி வேறுவொரு மூன்றாம் நபருக்கு அனுப்பிவிடும்.

நீங்கள் பேசுவதையும் பதிவு செய்யும், மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்க்கும், ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை குறியீட்டையும் எடுத்து அனுப்பும். இப்படி பல்வேறு உளவு வேலைகளை உங்களின் அனுமதியின்றி செய்யும் ஆற்றல் இந்த பெகாசஸுக்கு உள்ளது.

பெகாசஸின் வரலாறு:

2016-ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த செக்கியூரிட்டி அமைப்பான சிட்டிசன் லேப் ஆய்வகம் தான் பெகாசசை முதன்முதலில் எதிர் கொண்டது. அந்நாட்டின் மனித உரிமைச் செயல்பட்டாளர் அஹமது மன்சூரின் தொலைபேசியில் தான் பெகாசஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர், 2018-ம் ஆண்டில் சிட்டிசன் லேப் வெளியிட்ட அறிக்கையில் சுமார் 45 நாடுகள் பெகாசஸ் மென்பொருளை NSO விடமிருந்து வாங்கி பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தது. அதில் இந்தியாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !
♦ பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

2021-ஆம் ஆண்டில் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கை செய்த ஆய்வில் வெளியான தகவலின் படி பல அரசாங்கங்கள் இந்த மென்பொருளை வாங்கி உளவு வேலையை பார்க்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

கேள்வி என்னவென்றால் இதை போன்ற மென்பொருளை தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் தன் நாட்டு மக்களிடமும், முக்கியமாக அரசு பணியில் உள்ள நீதிபதி, ஊடகவியளர்கள், செயற்பட்டார்கள் மீது பயன்படுத்துவதன் நோக்கம் தான் என்ன?

இது பற்றி அரசு இன்னும் தெளிவான எந்த பதிலும் தராமல் காலம் தாழ்த்துவது ஏன்?

(தொடரும்)

பாகம் 2 : பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

சிந்துஜா
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க