பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்திற்கான விரைவுப் பாதை! 

பாகம் 1 : பெகாசஸ் மூலம் கண்காணித்தது யார் ?

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக இந்திய ‘ஜனநாயகத்தின் தூண்களாக’ சித்தரிக்கப்பட்டவை அனைத்தும் ரகசியமாகக் கண்காணிக்கப் பட்டிருக்கின்றன என்ற செய்தி நாடாளுமன்றம் முதல் சமூக வலைத்தளங்கள் வரையில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

இந்தியப் பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எதிர்கட்சி அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என அந்த உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படாத பிரிவினர் என யாரும் இல்லை எனலாம்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.. என்னும் நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்னும் இந்த உளவு மென்பொருள் இந்தியாவிற்கு புதிதல்ல. கடந்த 2019-ம் ஆண்டு பேராசிரியரும் சமூகச் செயற்பாட்டாளருமான தோழர் ஆனந்த் தெல்தும்ப்டே, பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் மூலமாக தமது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தன்னை தொடர்பு கொண்டு தெரிவித்ததை வெளிப்படையாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களும் இதனை தெரிவித்தனர்.

இத்தகைய கண்காணிப்பை பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களும், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளும் கண்டித்தன. ஆனாலும் உளவு பார்க்கப்பட்டது குறித்து எவ்வித விசாரணையையும் மோடி அரசு நடத்தவில்லை. தனது நாட்டு குடிமக்களின் கைப்பேசி இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படுவது தெரிந்ததும், பிரதமர் கொந்தளித்திருக்க வேண்டாமா ? ஆனால் கமுக்கமாக அமைதி காத்தது ஒன்றிய அரசு.

அதனைத் தொடர்ந்து, இந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பல்வேறு நாடுகளிலிருந்து அடுத்தடுத்து வரத் துவங்கின. அல்ஜசீரா எனும் சர்வதேச செய்தி நிறுவனம், தனது பத்திரிகையாளர்களின் கைப்பேசிகளும் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டதைக் கண்டறிந்தது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !
♦ பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

இவையெல்லாம் வெளிவந்த போதும், பெகாசஸ் உளவு மென்பொருளின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்., அதனை மறுத்தது. தாம் அந்த மென்பொருளை தகுதியான அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்கோ, தனிநபர்களுக்கோ அதனை தாங்கள் விற்பனை செய்வதில்லை எனவும் கூறி வந்தது.

இந்நிலையில், தி வயர் இணையதளம், சர்வதேச ஊடகங்களான தி கார்டியன் உள்ளிட்ட பல ஊடகங்களோடு ஒன்றிணைந்து, “தி ஃபர்பிட்டன் ஸ்டோரீஸ்” எனும் புலனாய்வு ஊடகத்துடன் கூட்டாகச் சேர்ந்த இந்த பெகாசஸ் மென்பொருளின் மூலம் கண்காணிக்கப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்ததை ஒட்டி, அதனை ஆய்வு செய்தது. அப்பட்டியலைக் கொண்டு அப்படி கண்காணிக்கப்பட்டவர்களை வகை பிரித்து, அவர்களில் சாத்தியமானவர்களிடமிருந்து அவர்களது கைப்பேசிகளைப் பெற்று அவற்றை மின்னணு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியது.

இந்த ஆய்வின் அடிப்படையில், தி வயர் இணையதளம் கடந்த வாரத்தில் இருந்து, பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப் பட்டவர்களின் பட்டியலையும் அவர்கள் கண்காணிக்கப்பட்ட காலகட்டத்தையும், அக்காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் ஒருசேர அம்பலப்படுத்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பாஜக, அதன் சித்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்., இன்னபிற சங்க பரிவார அமைப்புகள், பாஜகவின் அடிமைக் கட்சிகள் அமைப்புகள் ஆகியவற்றைத் தவிர, பிற அனைத்து எதிர்கட்சிகளும் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும், இந்த ரகசிய கண்காணிப்பை ஜனநாயகத்திற்கு விரோதமானதாகக் கூறி கண்டித்துள்ளனர்.

இப்படி இந்தியா முழுவதும் கண்டனங்கள் பெருகி வந்த நிலையிலும், நாடாளுமன்றத்தில் அன்றாடம் அமளி நடக்கும் நிலையிலும், மிகவும் பொறுமையாக “இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு” என்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார் பாஜக அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்ச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

அஷ்வினி வைஷ்ணவ் முதல் நமது ‘ஆட்டுக்குட்டி’ புகழ் அண்ணாமலை வரை பாஜகவினர் அனைவரும் ஒரே விசயத்தையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். “மத்திய அரசின் மீது ஆதாரமில்லாமல் பழி போடுகிறார்கள், இவர்கள் சொல்வதற்கு எந்த ஆதரவும் இல்லை” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

பெகாசஸ் மூலம் கண்காணித்தது யார் ?

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டவர்கள் அனைவரையும் யார் உளவு பார்த்தார்கள் என்பது குறித்து இதுவரை யாரும் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

என்.எஸ்.ஓ நிறுவனம் எந்தெந்த நாட்டிற்கு இந்த உளவு மென்பொருளை விற்பனை செய்தது என்ற தகவலை அந்நிறுவனமே வெளியிட்டாலோ, அல்லது என்.எஸ்.. நிறுவனத்தின் விற்பனை ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை யாரேனும் கசியவிட்டாலோ மட்டுமே இதுகுறித்து ஆதாரப் பூர்வமாக தெரியவரும்.

சாட்சி இல்லாத கொலை வழக்குகளில், குற்றம் நடந்திருப்பதற்கான காரண காரியங்களில் இருந்து அந்தக் குற்றத்தை செய்திருக்கக் கூடியதாக சந்தேகிக்கத்தக்க நபரை இலக்குவைத்து விசாரணையைக் கொண்டு செல்வதுதான் அடிப்படையானது. அத்தகைய நபர் குற்றம் இழைப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என்பதுதான் கிரிமினல் வழக்கு விசாரணையின் துவக்கப் புள்ளி.

அதே போல, பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பலரும் திருட்டுத்தனமாக கண்காணிக்கப்பட்ட விவகாரத்தில், அக்குற்றத்தைச் செய்வதற்கான அவசியம் யாருக்கு இருக்கிறது என்பதில் இருந்துதான் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர்களை நோக்கி விசாரணையை முன்னெடுக்க முடியும்.

தற்போது உளவு பார்க்கப்பட்டவர்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதற்கான அவசியம் மோடி அரசிற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் இருக்கிறது என்பதையே உளவு பார்க்கப் பட்டவர்களுக்கும் மோடி அரசுக்கும் இடையே இதுநாள் வரை நீடித்த உறவு நிரூபிக்கிறது.

கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் :

அதானிக்கும் அம்பானிக்கும் ஒன்றிய பாஜக அரசு அள்ளிக் கொடுத்ததை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள், பசுக் கொலைகள் முதல் லவ் ஜிகாத் வரை நடைபெற்ற இந்துத்துவ கிரிமினல் நடவடிக்கைளில், சங்க பரிவாரக் கும்பல் மற்றும் பாஜகவின் பங்கினை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள்தான் முக்கியமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு, அதானிக்கு 500 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகை வழங்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான விதியை ஒன்றிய மோடி அரசு மாற்றம் செய்தது. அச்சமயத்தில் அதனை ‘தி எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ எனும் அரசியல், பொருளாதார இதழின் ஆசிரியர் பரஞ்ஜோய் குகா தாகுர்த்தா, தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் அவரது எண் பெகாசஸ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

அதே போல, அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஆண்டில் 16,000 மடங்கு அதிகரித்திருப்பதை அம்பலப்படுத்திய ரோகிணி சிங் எனும் பத்திரிகையாளரின் எண்ணும் இந்த பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

இவை இரண்டும் சிறு உதாரணங்கள்தான். இதைப் போன்றே மோடி அரசின் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளையும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலையும் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மட்டுமே கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அமித்ஷா கும்பலுக்கு ‘சொம்படிக்கும்’ பத்திரிகையாளர்களான நாவிகா குமார், அர்னாப் கோஷ்வாமி போன்றவர்கள் கண்காணிக்கப்படவில்லை. ஆகவே இங்கு பிரபலமான பத்திரிகையாளகள் என்ற வகையில் உளவு பார்க்கப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மட்டும்தான் கண்காணிக்கப்பட்டுள்ளார்களே தவிர, பொதுப்படையாக பத்திரிகையாளர்கள் என்ற வகையில் அனைவரும் கண்காணிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
♦ வளம் கொழிக்கும் இணைய உளவுத் தொழில்

மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்குதல் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான உளவு :

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளங்களை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசின் செயல்பாடுகளையும், மோடியின் இந்துத்துவ பாசிசத் திட்டங்களையும் அம்பலப்படுத்திய சமூகச் செயற்பாட்டாளர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் தள்ள இந்த உளவு மென்பொருளை பயன்படுத்தியுள்ளது மோடி அரசு. ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ் எனத் துவங்கி, தமிழகத்தின் திருமுருகன் காந்தி, இராமகிருஷ்ணன் ஆகியோர் வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.

பீமா கொரேகான் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட 16 சமூகச் செயற்பாட்டாளர்களில் 8 பேரின் கைப்பேசிகள் இந்த உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் என்ற வகையில், எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோரும் கண்காணிக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜியின் உறவினரான அபிஷேக் பேனர்ஜியையும் உளவு பார்த்துள்ளனர். தேர்தல் நிலைப்பாட்டாளரும், மோடி எதிர்ப்பாளருமான பிரஷாந்த் கிஷோரின் கைப்பேசியையும் கண்காணித்துள்ளனர்.

பெகாசஸ் விவகாரம் அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்னால், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தமது கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், அபிஷேக் பேனர்ஜி யார் யாருடன் பேசினார் என்ற ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், “மாநில அரசு தான் அவர்கள் கையில் உள்ளது, ஆனால் மத்திய அரசு நமது கையில் இருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

சுவேந்து அதிகாரியின் இந்த வாக்குமூலம், பாஜக உளவு பார்த்திருக்கிறது என்பதை உறுதிபடுத்துகிறது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் குமாரசாமியின் உதவியாளர்களின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டது தற்போது வெளியிடப்பட்ட பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அம்பலமாகியுள்ளது.

குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு மட்டுமே இருந்தது. அந்த வகையில் இந்த உளவு நடவடிக்கையை அவர்களைத் தவிர வேறு யாரால் மேற்கொண்டிருக்க முடியும் ?

உச்சநீதிமன்றமும் தப்பவில்லை :

அடுத்ததாக நீதித்துறை எடுத்துக்கொண்டால், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்த சமயத்தில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த நீதிமன்ற பெண் ஊழியரின் கைப்பேசியும், அவரது உறவினர்கள் 11 பேரின் கைப்பேசியும் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் குடியரசுத் தலைவருக்கு நிகரான மதிப்பு கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருக்கும்போதே ரஞ்சன் கோகாயின் கைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது.

இது தவிர இன்னும் சில நீதிபதிகளின் எண்ணும் அந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியது நினைவிருக்கலாம்.

அத்தகைய மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய், தலைமை நீதிபதியாக அமர்ந்த பின்னர் கூறிய தீர்ப்புகளுக்கும், பதவிக் காலம் முடிந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவிக்கும் பின்னால் இருக்கும் ரகசியத்தை தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பெகாசஸ் கண்காணிப்புப் பட்டியலில் அவரது பெயரும் இருப்பது எடுத்துக் காட்டுகிறது.

அரசு உயரதிகாரிகள் :

அடுத்ததாக அரசுத்துறை உயரதிகாரிகள் கண்காணிக்கப்பட்டது பற்றி பார்க்கலாம். கடந்த 2018-ம் ஆண்டு, ரஃபேல் ஊழல் பிரச்சினை உச்சத்தை தொட்ட சமயத்தில், அக்டோபர் 23-ம் தேதி நள்ளிரவில் சிபிஐ தலைவர் பதவியிலிருந்து மோடியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மாவின் எண் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் எண்களும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் இருந்து உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. ரஃபேல் ஊழல் நாயகன் அனில் அம்பானியின் எண்ணும் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, மோடியுடன் முரண்பட்ட சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானாவின் கைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. இவை தவிர இன்னும் எண்ணற்ற அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் தேசிய அளவில் முக்கியப் பொருப்பில் இருக்கும் அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகச் சொல்லப்படும், நீதித்துறை, அரசு அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடகங்கள் என அனைத்திலும் பெகாசஸ் உளவு மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், இந்திய நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அத்தனைத் துறையும் இந்த பெகாசஸ் உளவு பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் உளவு வளையத்தில் பாஜக அமைச்சர்களும் வி.எச்.பி தலைவரும்:

பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்திட்டமான கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தினை எதிர்ப்பவர்களே கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பதாக மட்டும் இதனை சுருக்கிவிட முடியாது.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் கலவரத்தை முன்னின்று நடத்திய விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளுக்கு முன் நின்று அவற்றை வழிநடத்திய பிரவின் தொகாடியா கண்காணிக்கப்பட்டிருக்கிறார். பாஜக அமைச்சர்களான அஷ்வனி வைஷ்ணவ், ப்ரகலாத் சிங் பட்டேல் ஆகியோரின் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

ஆகவே பாஜக அரசு இந்த வேலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் வாதிடலாம். அவர்களுக்கு ஒரு சில கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்துவோம்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோடி அமித்ஷா கும்பலுக்கும், வி.எச்.பி.யின் பிரவின் தொகாடியாவுக்கும் இடையிலான அதிகார மோதல் உச்சத்திற்கு வந்த நிலையில், உயிருக்குப் பயந்து ஓடிய தொகாடியா தலைமறைவாகி விமான நிலையம் அருகே மயக்கநிலையில் கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சொந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, வெளியில் இருப்பவராக இருந்தாலும் சரி எதிர்ப்பு என்பது மனதளவிலும் கூட யாருக்கும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பாசிஸ்ட்டுகள் !

மோடி ஆட்சியில் அமர்ந்து இரண்டு மாதங்களே முழுமையாக முடிந்திருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலையில், நிதின் கட்காரி வீட்டில் உளவுக் கருவிகள் கண்டெடுக்கப்பட்ட செய்தி வெளிவந்தது நினைவிருக்கலாம். மோடிஜியின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்.- அமைப்பின் முக்கிய ‘தலைக்கட்டான’ நிதின் கட்காரி வீட்டிலேயே உளவு வேலை நடந்திருக்கிறது எனில், அஷ்வனி வைஷ்ணவ், ப்ரகலாத் சிங் படேல் ஆகியோர் எல்லாம் மோடி அமித்ஷாவிற்கு எம்மாத்திரம் ?

படிக்க :
♦ 2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்
♦ செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

இதுவரையிலான கண்காணிப்புகளின் பின்னணி யாரை குற்றவாளியாகக் காட்டுகிறது ?

முந்தைய தலைப்புகளில் நாம் குறிப்பிட்டவை அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட சிறு உதாரணங்களே. அரசு இயந்திரத்தின் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்களில் மோடி அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். கூட்டணியுடன் முரண்டு பிடிக்கக் கூடியவர்கள் அனைவரும் பெகாசஸ் மென்பொருளால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத் திட்டத்தை முழுமையிலிருந்து அம்பலப்படுத்திய சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டிருக்கின்றனர். இனி வரப்போகும் பட்டியலில் இன்னும் எத்தனை இராணுவ அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் இருக்கக்கூடும் என்பது தெரியவில்லை.

மேலே நாம் கண்ட உதாரணங்களில் இருந்து பார்க்கையில், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கின்ற பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களில், ‘குறிப்பான வகையினர்’ மட்டுமே கண்காணிக்கப் பட்டிருக்கிறார்கள். மேற்கண்ட உதாரணங்கள் மட்டுமல்லாமல், அன்றாடம் தி வயர் இணையதளத்தில் பெகாசஸ் குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் இந்த வாதத்திற்கு வலுச் சேர்க்கின்றன.

உளவு பார்க்கப்பட்ட அந்த ‘குறிப்பான வகையினர்’ அனைவரையும் கீழ்கண்ட இரண்டு வகைகளுக்குள் பொருத்திவிட முடியும்.

1. மொத்த அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை சங்கபரிவாரத்தின் கார்ப்பரேட் இந்துராஷ்டிர செயல்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான பாஜகவின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள்.

2. மோடி அமித்ஷாவுக்கு தனிப்பட்ட ரீதியில் குடைச்சலாக இருந்தவர்கள்

உளவு வேலையை யார் செய்திருப்பார்கள் என்ற தர்க்கரீதியான முடிவுக்கு வருவதற்கு பொதுவான தர்க்கத்திலிருந்தும் இவ்விவகாரத்தைப் பார்க்கலாம்.

என்.எஸ்.. நிறுவனம், இந்த உளவு மென்பொருளை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாகக் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் வாயிலிருந்து கிடைத்திருக்கும் ஒரே ஒரு உருப்படியான தகவல் இதுமட்டும்தான்.

அந்த வகையில், ஏதேனும் ஒரு அரசாங்கம் தான் இந்தக் கண்காணிப்பை நடத்தியிருக்க முடியும். எனில் இந்தியாவில் உளவு பார்க்கப்பட்ட அத்தனை பேரையும் ஒரு அரசாங்கம் தான் கண்காணித்திருக்கிறது என்பது உறுதி. அது இந்திய அரசாங்கமா, வேறு ஏதேனும் நாட்டினுடைய அரசாங்கமா என்பதுதான் துவக்கத்தில் இருந்தே எஞ்சி நிற்கும் கேள்வி.

இவர்களை எல்லாம், வெளிநாட்டு அரசாங்கம் கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன ? ஒரு வேளை வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்தியாவை கண்காணிக்க உளவு பார்க்க வேண்டுமெனில், அவர்கள் யாருடைய கைப்பேசிகளில் இந்த உளவு வேலையைச் செய்திருக்க வேண்டும். மோடி, அமித்ஷாவின் கைப்பேசியில் தானே செய்திருக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இவ்விருவரின் கண்ணசைவில் தானே நடத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு, மொராக்கோவிலிருந்து செயல்பட்ட பெகாசஸ் இயங்குமுனை, பிரான்ஸ் அதிபர் மாக்ரோனின் கைப்பேசியை கண்காணித்தது, இந்தப் பட்டியலில் அம்பலமாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நடவடிக்கையை மொராக்கோ வேவு பார்க்க பிரான்ஸ் அதிபரின் கைப்பேசி தான் கண்காணிக்கப்பட்டிருக்கிறதே தவிர அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அல்லது பத்திரிகையாளர்களின் கைப்பேசிகள் உளவு பார்க்கப்படவில்லை.

ஆகவே வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்தக் கண்காணிப்பைச் செய்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெளிவாகிறது. எனில் எஞ்சி இருப்பது மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் தான். இந்தக் கண்காணிப்பை மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம்தான் செய்திருக்கக்கூடும் என்ற வாதத்திற்கு மேலும் பல நிகழ்வுகள் வலுச் சேர்க்கின்றன.

அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)


சரண்

செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க