Saturday, July 20, 2024
முகப்புசெய்திஇந்தியாபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

"1984 நாவலில் சொல்லப்பட்ட பெரிய அண்ணன் கண்காணிக்கும் ஆர்வெலியன் அரசு நோக்கி நாம் மெதுவாக சென்றுகொண்டிருக்கிறோம்" என ஓய்வு பெற்ற நீதிபதியான பி. என். ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

-

ஸ்ரேலிய உளவு மென்பொருள் பெகாசஸை பயன்படுத்தி இந்தியாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.

“நான் கடுமையான எச்சரிக்கைக்கு உள்ளாகியிருக்கிறேன். வரக்கூடிய செய்திகள் உண்மையெனில், ‘1984’ நாவலில் சொல்லப்பட்ட பெரிய அண்ணன் கண்காணிக்கும் ஆர்வெலியன் அரசு நோக்கி நாம் மெதுவாக சென்றுகொண்டிருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதியான பி. என். ஸ்ரீகிருஷ்ணா, வல்லுநர்களைக் கொண்ட தரவு பாதுகாப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர்.

Justice-Srikrishna
ஓய்வு பெற்ற நீதிபதி பி. என். ஸ்ரீகிருஷ்ணா.

இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான வழியில் இது போன்ற கண்காணிப்புகள் நடக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “குடிமக்களின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தெளிவான தாக்குதல் இது என்பதற்கு எதிரான பொதுமக்களின் கருத்தை உருவாக்குங்கள்” என தெரிவித்துள்ளார்.

தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையா என கேள்வி எழுந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 31-ம் நாள் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான ஸ்ரீகிருஷ்ணாவை தரவு பாதுகாப்பு கமிட்டியின் தலைவராக நியமித்தது. வல்லுநர்கள், அதிகாரிகளைக் கொண்ட இந்த கமிட்டி பொது மக்களின் கருத்துக்களை அறிந்து, தனது அறிக்கையை 2018-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி அளித்தது. கூடவே தரவு பாதுகாப்பு சட்டம் ஒன்றையும் அது பரிந்துரைத்தது. அந்தச் சட்டம் இன்னும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் கொண்டு வரப்படவில்லை.

அரசாங்கங்கள் அல்லது பிற அமைப்புகள் குடிமக்களை உளவு பார்ப்பதை தடுப்பதிலும் தரவு பாதுகாப்பு முக்கியத்துவமான தாக்கத்தை செலுத்தும் என்பதால், “புட்டசாமி தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது போல, அனைத்து கண்காணிப்புகளும் அரசியலமைப்பு பாகம்-3ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே செய்யப்படுகின்றன  என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

படிக்க :
♦ செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?
♦ வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !

ஆகஸ்டு 2017-ம் ஆண்டு மத்திய அரசுக்கும் மற்றொருவருக்குமான வழக்கு ஒன்றில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒருமித்த தீர்ப்பாக, தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை என உத்தரவிட்டார் நீதிபதி கே. எஸ். புட்டசாமி.

அரசின் சட்டவிரோத அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட கண்காணிப்புகளை வெளிக்கொண்டுவர, அதை வெளிக்கொண்டுவருபவர்களை பாதுகாப்பது உதவுமா என்ற கேள்விக்கு, “எந்த சட்டம் இயற்றினாலும் அதை அமலாக்கும் நபர்களின் விருப்பம் அதை வலுவாக்குகிறது. அரசின் தவறுகளை வெளிக் கொண்டுவரும்போது, அதை வெளிக்கொண்டுவருபவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்” என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பதிலளித்துள்ளார்.

தனிஉரிமை பாதுகாப்பு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பும் விவாதங்களும் நடந்துவந்தபோதிலும், அதையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பெரிய அண்ணனாக தனக்கு எதிரானவர்கள் எனக் கருதுவோரை உளவு பார்த்து வருகிறது மத்திய அரசு. இதை தற்போது அம்பலமான பெகாசஸ் உளவு விவகாரம் உறுதிபடுத்தியுள்ளது.


அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க