ஸ்ரேலிய உளவு மென்பொருளை பயன்படுத்தி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1400-க்கும் மேற்பட்ட வாட்சப் பயனாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களும் இஸ்ரேலிய உளவு மென்பொருளின் உளவுக்கு ஆளானதாகவும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இதில், சத்தீஸ்கரில் களப்பணியாற்றும் செயல்பாட்டாளர்களும் பீமா கொரேகான் சம்பவத்தில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்களுமே அதிகமாக உள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் லேப் -உடன் இணைந்து இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்திய ஊடகங்களிடம் பேசிய சிட்டிசன் லேப்-ஐச் சேர்ந்தவர்கள், பொதுவாக இதுபோன்ற உளவு மென்பொருட்களை அரசாங்கங்கள்தான் வாங்குவது வழக்கம் என தெரிவித்துள்ளனர். செயல்பாட்டாளர் பெலா பாட்டியா, “இந்திய அரசாங்கம் இதில் தொடர்புள்ளதாக” சிட்டிசன் லேப் பிரதிநிதிகள் கூறியதாக சொல்கிறார்.

ஆனால், இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அந்த அமைப்பு தயாராக இல்லை. அதுபோல, இந்திய அரசாங்கமும் உளவு பார்த்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

சிட்டிசன் லேப், உளவு பார்க்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, அந்தத் தகவலைக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், இந்த விவகாரம் வெளியான பின், பலர் தாங்கள் உளவு பார்க்கப்பட்ட விசயத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

படிக்க:
மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
♦ வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

***

ஆனந்த் தெல்தும்டே (பீமா கொரேகான் கலவரத்தில் குற்றம்சாட்டவர்; மக்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர், கல்வியாளர்) :

டந்த ஒரு வாரத்துக்கு முன் சிட்டிசன் லேப்-ஐச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஜான் ஸ்கார் ரெயில்டன், தன்னை தொடர்புகொண்டு வாட்சப் தகவல்கள் உளவுபார்க்கப்பட்டதாகத் தெரிவித்ததாகச் சொல்கிறார் ஆனந்த் தெல்தும்டே. கடந்த மே மாதம் இந்த உளவு மென்பொருள் தாக்குதலை நிறுத்திவிட்டதாகவும் அவர் அளித்த தகவல் கூறியிருக்கிறது.

ஆனந்த் தெல்தும்டே
ஆனந்த் தெல்தும்டே

“இதிலிருந்து தப்பிக்க நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. லட்சக்கணக்கான தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. முன்பு, இதற்கெல்லாம் பெரிய வழிமுறைகள் இருந்ததாக முன்பு கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது அப்படியே இல்லை.

நாட்டின் பேரில் அரசாங்கம் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டுள்ளது. அவர்கள் யாருக்கும் எதையும் செய்யலாம். அது நீங்களாகவும் இருக்கலாம். இந்த நாடு போய்விட்டது, இந்த நாட்டை கேடுகெட்ட நாடாக அறிவித்துவிடலாம்” என்கிற ஆனந்த் தெல்தும்டே.

“பீமா கொரேகான் வழக்கில் நான் தேவையில்லாமல் இலக்காக்கப்பட்டேன். அத்தனை கடிதங்களும் ஜோடிக்கப்பட்டவை. அனைவரும் தேவையில்லாமல் இலக்காக்கப்பட்டவர்கள். அதுவே ஒரு அத்துமீறல்தான்.

அவர்கள்தான் கிரிமினல்கள். ஒரு அரசே கிரிமினலாக மாறினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார்.

படிக்க:
என் கைது ஜனநாயக மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதல் : ஆனந்த் தெல்தும்டே
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு

பெலா பாட்டியா (மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் சத்தீஸ்கரின் பாஸ்தரைச் சேர்ந்த வழக்கறிஞர்) :

த்தீஸ்கரில் வசிக்கும் பெலா பாட்டியாவுக்கும் மற்றவர்களைப் போல, தன்னுடைய மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டது குறித்து எதுவும் தெரியாது.

Bela Bhatia
பெலா பாட்டியா

“விசாரணையில் நம்முடைய அரசாங்கத்துக்கு இதில் தொடர்பிருப்பது தெளிவாகத் தெரிவதாக அவர்கள் தெரிவித்தார்கள். ‘இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என அவர்கள் கேட்டனர். இது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, ஏனெனில் கடந்த சில வருடங்களாக இதுபோன்ற கண்காணிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாக நான் தெரிவித்தேன்., அரசாங்கம் இத்தகைய அதிநவீன கண்காணிப்பு முறையை நாடியது ஏன் என்பதுதான் எங்களுக்குத் தெரியாத விசயமாக உள்ளது” என்கிறார் பெலா பாட்டியா.

தனியுரிமை அடிப்படை உரிமை என 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தபோதும்கூட அரசாங்கம் செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் அவர். மில்லியன்கணக்கான வாட்சப் பயனாளர்கள் இருக்கும் நாட்டில் இது கவலைக்குரியதாக உள்ளது” எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“இந்த உளவு மென்பொருளின் தன்மையே, உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் அது கண்காணிக்கும் என்பதுதான். உங்கள் பாக்கெட்டுக்குள்ளேயே ஒரு உளவாளியை வைத்திருப்பதைப் போலத்தான். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும்போது, அதன் மூலம் உங்கள் அறையை பார்க்க முடியும், கேட்க முடியும்; அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியும். உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட விசயங்களை, பொருளாதார நிலையை அதனால் உளவு பார்க்க முடியும்” என உளவு மென்பொருள் குறித்த சிறு தகவலையும் பெலா பாட்டியா பகிர்ந்துகொண்டார்.

ஆய்வு அமைப்பு சொன்னபடி, மொபைல் போனை மாற்றியிருக்கிறார் அவர்.

சுப்ரான்சு சௌத்ரி (பி.பி.சி. முன்னாள் பத்திரிகையாளர், தற்போது சத்தீஸ்கரில் பணியாற்றுகிறார்) :

CGnet Swara என்ற பெயரில் மொபைல் செய்தி குழு ஒன்றை 2009-ம் ஆண்டு தொடங்கியது முதல் சத்தீஸ்கரில் பணியாற்றுகிறார் சுப்ரான்சு சோதாரி. கடந்த செப்டம்பர் மாதம் சிட்டிசன் லேப் இவரிடன் உளவு பார்க்கப்படும் தகவலைக் கூறியுள்ளது.

Shubhranshu-Choudhary
சுப்ரான்சு சௌத்ரி

“ஆய்வு தொடர்புடைய நபர் இந்த உளவு மென்பொருள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என்றும் இது விலை அதிகமானது என்பதால் அரசாங்கத்தால்தான் வாங்க முடியும் என்றும் சொன்னார்” என்கிறார் சுப்ரான்சு.

“காஷ்மீரில் பணியாற்றும்போது, போன் உரையாடல்கள் பதிவு செய்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வாட்சப் -ஐக் கூட இப்படி பதிவு செய்ய முடியும் என எங்களுக்குத் தெரியவில்லை. நாம் இப்போது மேலும் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.

சித்தாந்த் சிபல் (Wion செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்) :

Wion தொலைக்காட்சியில் பாதுகாப்புத் துறை தொடர்பான செய்திகளை அளிப்பவர். அக்டோபர் 30-ம் தேதி இந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய பத்திரிகையாளர்கள் பலர் இந்த உளவு தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

தற்போது பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருக்கும் சிபல், வாட்சப் உளவு குறித்த தகவல் உண்மை எனக் கூறியுள்ளார் .

ராஜீவ் சர்மா (பத்தி எழுத்தாளர்) :

திறனாய்வாளர் மற்றும் பத்தி எழுத்தாளர் ராஜீவ் சர்மா, பொதுத் தேர்தல் நடந்த கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை கண்காணிக்கப்பட்டதாக சிட்டிசன் லேப் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்ததையும் சர்மா கூறுகிறார். மொபைலை மாற்றும்படி அவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

படிக்க:
அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !
♦ அமெரிக்க தேர்தலில் ரசியத் தலையீடும் – கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் கூட்டும் !

“நான் மொபைல் எண்ணையோ அல்லது மொபைலையோ மாற்றவில்லை. என்னிடம் மறைக்க எதுவுமே இல்லை. இந்த நாட்டுக்கு எதிராகவோ, சமூகத்துக்கு எதிராகவோ அல்லது சட்டவிரோத செயல்கள் எதையும் செய்யவில்லை. எதற்காக என்னுடைய மொபைலை மாற்ற வேண்டும்?” என கேட்கிற அவர், “என்னை யாராவது கண்காணித்தால், அவர் அதைச் செய்யட்டும். நான் எதற்காக வளைய வேண்டும்?” என்கிறார்.

“மார்ச் முதல் மே வரை நான் நிறைய வீடியோ நேர்காணல்களை அளித்தேன். அதை டிவிட்டரில் பகிர்ந்தும் கொண்டேன். நான் சொன்னது அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், நான் சொன்னது அவர்களின் காதுகளுக்கு இசையாக ஒலித்திருக்காது” என்கிறார் சர்மா. தேர்தல் குறித்த தன்னுடைய கருத்து, தன்னை இலக்காக்கியிருக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

அசோக் சுக்லா (உரிமை செயல்பாட்டாளர்; அதானி குழுமத்துக்கு எதிராக வழக்காடுகிறார்) :

த்தீஸ்கர் பச்சாவ் அந்தோலன் என்ற பொதுமக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் அசோக் சுக்லா. வாட்சப் நிறுவனத்திலிருந்து மற்ற செயல்பாட்டாளர்களுக்கு வந்த செய்தியைப் போன்றே தனக்கும் வந்ததாக தெரிவிக்கிறார் சுக்லா.

“மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். கடந்த எட்டு ஆண்டுகளாக சத்தீஸ்கரின் நிலக்கரி சுரங்கங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள அதானிகளுக்கு எதிராக ஒரு வழக்கில் நான் வாதாடிக்கொண்டிருக்கிறேன். அதுபோல, மனித உரிமை மீறல்கள், பழங்குடிகளின் இடப்பெயர்வுக்கு எதிராகவும் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, சந்தேகத்துக்குரிய சர்வதேச வாட்சப் அழைப்புகள் தனக்கு வந்ததாகவும் அவர் கூறுகிறார். அரசாங்கத்தை மட்டுமல்லாது, அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் தகவலை பல மாதங்கள் கழித்து சொன்ன வாட்சப் நிறுவனத்தையும் அவர் கடுமையாக சாடுகிறார்.

இதுவரை ஒருசிலர் தாமாக முன்வந்து மோடி அரசாங்கம் தங்களை உளவு பார்த்ததை சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பட்டியல் மேலும் நீளும் என எதிர்ப்பார்க்கலாம். வழக்கமாக சங்கப் பரிவாரங்கள் யாரையெல்லாம் ‘ஆண்டி -இந்தியன்’ என சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்கள் நிச்சயம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள் என யூகிக்கலாம். இன்னமும் இது யாரோ செய்த வேலை, எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என மோடி அரசாங்கம் மழுப்பினால், யார்தான் அதை நம்புவார்கள்?

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க