Saturday, January 25, 2020
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !

அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !

-

ஹாலிவுட்டின் திரைப்படக் கலைஞரானா ரிச்சர்டு ஹெச். பெர்ரி தனது ஃபேஸ்புக் கணக்கை இந்த வாரம் அழித்து விட்டார். அன்றாடம் சில ஆயிரம் பேராவது பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக ஃபேஸ்புக் கணக்கை அழிப்பது வழக்கம். ஆனால் ரிச்சரிடின் அழிப்பு அவ்வாறல்ல.

ரிச்சர்டு ஹெச். பெர்ரி

“குற்றங்களோடு பயணிக்கும் ஃபேஸ்புக் தனது பயனர்கள் நலன் குறித்து அக்கறைப்பட்டதே இல்லை” என்கிறார் அவர். ஃபேஸ்புக் பயனர்களது அந்தரங்க விவரங்கள் பாதுகாப்பாக இல்லை என்பது கடந்த சில வருடங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் “கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா” எனப்படும் அரசியல் தகவல் நிறுவனம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 2016 தேர்தலுக்கு பணியாற்றியதும், அதற்கென ஃபேஸ்புக் பயனர்கள் சுமார் ஐந்து கோடி பேர்களது விவரங்களை கைப்பற்ற முடிந்ததும் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் உலகெங்கிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

#DeleteFacebook எனப்படும் ஹேஷ்டாக் டிவிட்டரில் தென்படுவது மட்டும் கடந்த புதன்கிழமையில், இருமணிநேரத்திற்குள் பத்தாயிரத்தை தாண்டியது. செவ்வாயன்று இந்த ஹேஷ்டாக் 40,398 முறை குறிப்பிடப்பட்டிருப்பதாக டிவிட்டர் ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த எண்ணிக்கை எல்லா சமூகவலைத்தளங்களிலும் இலட்சங்களை தாண்டி கோடிகளை நோக்கி பயணித்து வருகிறது.

“இந்த இரண்டு நாளில் மிகக் கடினமான முடிவை எடுத்து விட்டேன். ஃபேஸ்புக் என்னுடைய அறங்காவலர் பணிகளுக்கு உதவியிருக்கிறது; அங்கேதான் துடிப்பான இளைஞர்கள் உள்ளனர். என்னை மதிக்கும் ஆராதிக்கும் நண்பர்கள் உள்ளனர். ஆனால் இன்று என் ஃபேஸ்புக் கணக்கை அழித்து விட்டேன். என்னுடைய அமெரிக்காவை விரும்புகிறேன். சில விசயங்கள் பணத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியமானதென நம்புகிறேன்” என்று டவிட்டரில் சோகத்துடன் பகிர்கிறார், செர் எனும் அமெரிக்க பெண்.

வாட்ஸ் அப்பின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்சன், கடந்த செவ்வாயன்று “இதுதான் சரியான நேரம். பேஸ்புக் கணக்கை அழித்து விடுங்கள்” என தனது டிவிட்டர் கணக்கை பின்பற்றும் பல்லாயிரக்கணக்கானோரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். வாட்ஸ் அப் நிறுவனத்தை 2014 -ம் ஆண்டில் 19 பில்லியன் டாலர் விலையில் வாங்கியதுஃபேஸ்புக் நிறுவனம் .

சரி, இன்று உலகமே காறித்துப்பும் வண்ணம் ஃபேஸ்புக் அப்படி என்ன குற்றம் செய்தது?

முதலில் டொனால்ட் டிரம்பிற்காக வேலை பார்த்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் ஏதோ ஒரு உப்புமா கம்பெனி அல்ல. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம் இது. அப்பேற்பட்ட அப்பாடக்கரான இந்த அரசியல் தகவல் ஆலோசனை நிறுவனத்தைதான் இப்போது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் குற்றமிழைத்தற்காக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கின் ஐந்து கோடி பயனர்களின் தகவலை எடுத்து குடியரசுக் கட்சியின் தேர்தல் வேலைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். டிரம்பிற்காக இந்த நிறுவனம் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5000 விவரப் புள்ளிகளை வைத்திருந்து வேலை பார்த்திருக்கிறது. அதன்படி இந்த அமெரிக்கர்கள் டிரம்பை ஆதரிப்பதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

அதே நேரம் வெளிப்படையாக இந்த சதித்திட்டம் வெளியாகாதவாறு அவர்கள் திட்டம் வகுத்திருக்கிறார்கள். அதன்படிதான் இன்று டொனால்ட் டிரம்பின் தேர்தல் வல்லுனராக பார்ஸ்கேல், இந்த ஊழலுக்கும் டிரம்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் விவரங்களை சில டிஜிட்டல் விளம்பரம், டிவி விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுத்தியதாக இவர் கூறுகிறார். ஆர்.என்.சி எனப்படும் நிறுவனத்தைத்தான் டிஜிட்டல் பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தியதாக டிரம்பின் எடுபிடி கூறுகிறார்.

ஆனால் டிரம்ப் முகாம் கேம்பிரிட்ஜ் நிறுவனத்திற்கு அளித்த கட்டணத் தொகையை அமெரிக்க தேர்தல் கமிஷன் வெளிப்படையாகவே பதிவு செய்து வெளியிட்டிருக்கிறது.

மொத்தம் ஐந்து மில்லியன் டாலரை 2016 தேர்தலின் போது கொடுத்திருக்கிறார்கள். முள்ளை விழுங்கியவன் அதை மலரென்று துப்புகிறான்.

ஆனால் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான மாட் அஸ்கோவிஸ்கி, “ஆர்.என்.சி நிறுவனம் வாக்காளர் விவரங்களைத்தான் அளித்தது, நாங்கள்தான் அந்த விவரங்களின் புலனாய்வு மதிப்பீட்டின் முன்னணியில் இருந்தோம்” என உண்மையை போட்டு உடைக்கிறார்.

மேலும் கேம்பிரிட்ஜ் அனலாட்டிகா நிறுவனம்தான் டிரம்பின் அறிக்கைகள் ஏற்படுத்திய விளைவுகள், வாக்காளரை மாற்றும் ஏற்ற இறக்க அணுகுமுறைகள் என துல்லியமாக வேலை செய்திருக்கிறது. இதை சட்டப்படி மாற்றிப் பேசுவதால் டிரம்ப் முகாம் இதை பயன்படுத்தவில்லை என்று ஆகாது. ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தொடர்ந்து தாக்குவதை கேம்பிரிட்ஜ் நிறுவனம் பரபரப்பாய் செய்தது.

ஹிலாரி கிளிண்டனது ஊழல்கள், கிளிண்டன் டிரஸ்ட் ஊழல், மெயில் ஹேக்கிங் விவரங்களை விளம்பரம் செய்வது என 2016 தேர்தலின் கடைசி மாதத்தில் கேம்பிரிட்ஜ் நிறுவனம் தீயாய் வேலை செய்தது. அதன்படி அமெரிக்க மக்களிடம் இந்த கருத்தை எப்படி எப்போது கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு ஃபேஸ்புக் விவரங்களை பயன்படுத்தியது. அம்மாதத்தில் மட்டும் இந்நிறுவம் 8,50,000 டாலரை கட்டணமாக டிரம்பிடம் இருந்து வாங்கியிருக்கிறது.

ஆகவே நேரடியாக இந்நிறுவனம் அதிபர் டிரம்பிற்கு வேலைபார்ப்பது இல்லை என்றாலும், அவருக்காக திரைமறைவில் திருட்டு வேலைகளை செய்து வந்தது ஊரறிந்த உண்மை.

கேம்பிரிட்ஜ் நிறுவனத்தில் வேலை பார்த்தவரும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான 28 வயது கிரிஸ்டோபர் வைல் தற்போது அந்த நிறுவனத்தின் மோசடிகளை வெளியுலகிற்கு அறிவிக்கும் வேலையை மனமுவந்து செய்கிறார். அவரால்தான் ஃபேஸ்புக் விவரங்கள் எப்படி சேகரிக்கப்பட்டு டிரம்பிற்கு பயன்பட்டன என்பது தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமானது ஃபேஸ்புக்கின் அனுமதி, விருப்பம் இல்லாமல் யாரோ ஒருவர் இந்த கோடிக்கணக்கான விவரங்களை எடுக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.

மேலே படத்தில் இருப்பவர்தான் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அலெக்சாந்தர் நிக்ஸ். இவரை தற்போது கேம்பிரிட்ஜ் நிறுவனம் நீக்கியிருக்கிறது. காரணம், கடந்த செவ்வாயன்று ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சி நடத்திய இரகசிய ஸ்டிங் நடவடிக்கை மூலம் இவரது ஊழல் பேச்சுக்கள் வெளியே வந்தன.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த ஊழல் விவகாரத்தில் யாரெல்லாம் குற்றவாளிகள் என்று பார்த்தால் அதற்கு முடிவே இருக்காது. தற்போதுதான் விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இது குறித்து ஒரு விரிவான தொடர் வெளியிடுகிறோம்.

புதிய கலாச்சாரத்தின் செயற்கை நுண்ணறிவு புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் விசயங்களை இப்போது உண்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் மட்டும் சுமார் 20 முதல் 25 கோடி ஃபேஸ்புக் பயனர்கள் இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா வருகிறது.
இந்தியாவிலும் பாஜக, காங்கிரசு போன்ற தேசிய கட்சிகள் கேம்பிரிட்ஜ் நிறுவனத்தை பயன்படுத்திய செய்திகள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. அதனாலேயே மோடி அரசு கேம்பிரிட்ஜ் அனலாட்டிகா நிறுவனத்தின் இணைய தளத்தை தடை செய்திருக்கிறது.

அமெரிக்காவின் டிரம்போ, இந்தியாவின் மோடியோ ஃபேஸ்புக்கின் டிஜிட்டல் ஊழல் மூலம் மட்டுமே அதிபராகவோ பிரதமராகவோ முடியும். அதற்குத்தான் ஃபேஸ்புக் விழுந்து விழுந்து வேலை செய்து வருகிறது. ஃபேஸ்புக்கின் பிரபலம், அதன் ஈர்ப்பு காரணமாக சாதாரண மக்கள் அதன் வலையில் விழுவதோடு அதன் வடிவமைப்பிலேயே வளர்கிறார்கள், முடிவுகளை எடுக்கிறார்கள்.

தற்போதைக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கன்பர்க் ஒரு மன்னிப்பை கேட்டிருப்பதோடு, இனிமேல் இது போன்ற தவறுகள் நடவாமல் இருப்போம் என ஒரு சடங்குத்தனமான பாவமன்னிப்பை கோரியிருக்கிறார். ஆனால் மக்களின் அந்தரங்க விவரங்களை எடுத்து அதிபர் தேர்தலுக்கு பயன்படுத்தும் வேலையை செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை?

ஃபேஸ்புக்கின் விவரங்கள் பலருக்கும் போகும் என்ற நிலையில் பிரபலங்கள், துறை சார்ந்த நட்சத்திரங்கள் வேண்டுமானால் விலகலாம், அல்லது விலகாமல் இருக்கலாம். சாதாராண மக்களைப் பொறுத்த வரை அவர்களது நட்பு, அலுவலகம், சொந்தபந்தம் என ஃபேஸ்புக்கையே நம்பியிருப்பவர்கள் அவ்வளவு சுலபமாக விலக முடியாது. விலக மாட்டார்கள். இதுதான் ஃபேஸ்புக்கின் பலம்.

சமூக வலைத்தளங்களின் வர்த்தகம், விளம்பரம் போன்றவற்றின் பின்னே இத்தகைய டேட்டா பரிமாற்றம் இல்லாமல் இருக்கவே முடியாது. நமது மின்னஞ்சல், யூடியூப், சமூக வலைத்தளங்கள் அனைத்தும் நமக்கு சேவை செய்யவில்லை. நம்மை வைத்து அவர்கள் தொழில் செய்கிறார்கள். கூடுதலாக நமது கருத்தக்களையும் வடிவமைக்கிறார்கள்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க