♦ கேரள மாநிலம் அட்டப்பாடி – மஞ்சக்காந்தி வனப்பகுதியில் மணிவாசகம், சிறீமதி, கார்த்தி, சுரேஷ் ஆகிய மாவோயிஸ்ட் போராளிகள் படுகொலை !

♦ போலி மோதல் படுகொலையில் மக்கள் போராளிகளைக் கொன்ற சி.பி.எம்.-ன் பினராயி விஜயன் அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!

க்.28,2019 திங்கட்கிழமை அதிகாலை, கேரள மாநிலம் அட்டபாடி – மஞ்சக்காந்தி வனப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த கேரள அரசின் தண்டர்போல்ட் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் சுட்டதாகவும், தண்டர்போல்ட் படையினர் திருப்பிச் சுட்டதில் ஒரு பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டதாகவும், மறுநாள் (29.10.2019) சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்த பாலக்காடு மாவட்ட ஆர்.டி.ஓ. சென்றதாகவும், அப்போது மீண்டும் மாவோயிஸ்டுகள் சுட்டதால், காவல்துறையும் திருப்பிச் சுட்டதாகவும், அந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட் இறந்ததாகவும் கேரள அரசும், பத்திரிக்கை செய்திகளும் சொல்கிறது.

முதலில் இருவர், பின்பு மூவர், தற்போது நால்வர் என செய்திகளைப் பிரித்து கேரள அரசு வெளியிடுவதே மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இரண்டாம் நாள் அதே இடத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்வது அப்பட்டமான பொய் என செய்திகளைக் கேட்கும்போதே தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வழக்கறிஞர்கள் உட்பட யாரையும் கேரள அரசு அனுமதிக்காதது, நடந்தது  போலி மோதல் படுகொலை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் மீது வழக்கு இருந்தது, அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள், அவர்களை கைது செய்ய, உயிருடன் பிடித்து, விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் நிறுத்த என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன? என்ற கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல், மாவோயிஸ்டு என்றாலே சுட்டுக் கொன்றுவிடலாம் என்பதே கேரள சிபிஎம் அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் நிலையாக உள்ளது.

மார்ச் – 06 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு ஜே.பி.ஜலீல். (கோப்புப் படம்)

மாவோயிஸ்டுகள் மக்கள் – அரசியல் போராளிகள் என்று பினராயி அரசுக்குத் தெரியாதா? மாவோயிஸ்டுகளை அரசு பயங்கரவாதத்தால் கொன்று குவிக்கும் சி.பி.எம். கட்சிக்கு, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சி.பி.எம். ஊழியர்களைக் கொல்கிறது, கேரள ஆர்.எஸ்.எஸ். – சி.பி.எம். தொண்டர்களைக் கொல்கிறது, இது சட்ட விரோதம் என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசத்தை எதிர்ப்போம் என்று சொல்லும் தகுதி சி.பி.எம். கட்சிக்கு இல்லை என்பதையே இப்போலி மோதல் படுகொலை நிரூபிக்கிறது.

படிக்க:
அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

மாவோயிஸ்ட் அமைப்பில் இருப்பதாலே ஒருவரைக் கைது செய்ய முடியாது. வழக்கு இருந்தால்தான் கைது செய்ய முடியும். அவ்வாறு தவறாக கைது செய்ததற்கு அரசு இழப்பீடு தரவேண்டும் என கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு  இருந்த போதிலும், மாவோயிஸ்டு என்றால் சுட்டு விடலாம் என்பதுதான் அரசு, காவல்துறை, நீதித்துறையின் அணுகுமுறையாக உள்ளது. இத்தகைய  அணுகுமுறை அரசியல் சட்டம் சொல்லும் வாழ்வுரிமை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி  என அனைத்தையும் என்கவுண்டர் செய்கிறது. ”போலீசு என்கவுண்டர்களுக்கு கொலை வழக்கு பதிய வேண்டும்” என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு எப்போதும்  எந்த அரசாலும் பின்பற்றப்படுவதில்லை.

பினராயி விஜயன்.

ஆயுதங்கள் வைத்திருந்தார்கள், தாக்க முயன்றார்கள் என்று சொல்லி தனது குற்றத்தை கேரள அரசு நியாயப்படுத்துகிறது. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சனாதன் சன்ஸ்தா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகள் அளிக்கிறார்கள்; அரசியல் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும், சக இந்திய குடிமக்களைக் கலவரம் செய்து கொல்வதற்கும், பெண்களை வல்லுறவு செய்வதற்கும், கவுரி லங்கேஷ், கல்புர்க்கி போன்றோரைக் கொல்வதற்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள். கேரளா உள்ளிட்ட எந்த மாநில போலீசுத்துறையும் அவர்கள் மீது எங்கேயும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

கொல்லப்பட்டவர்கள் யாரும் அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் காட்டிலிருந்து வந்து எந்தத் தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனாலும்   அவர்களின் அரசியல் கருத்துக்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். மாவோயிஸ்ட் போராளிகள் தொடர்ந்து எதிரி நாட்டு இராணுவ வீரர்களை விட மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இத்தகைய அநீதியை கட்சிகளும் ஊடகங்களும் கண்டிக்க முன்வராதது இந்தியாவில் ஜனநாயகத்திற்கான வெளி மென்மேலும் சுருங்கி  பாசிசம் நெருங்கி வருவதைக் காட்டுகிறது.

தாங்கள் சட்டத்தின் ஆட்சி நடத்தி வருவதாகவும், மாவோயிஸ்டு அமைப்பினர் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதுதான், மாவோயிஸ்டுகள் மீது அரசு கூறும் குற்றச்சாட்டு. ஆனால், போலி மோதல் கொலை சம்பவங்களில் மட்டுமின்றி, தனது எல்லா நடவடிக்கைகளிலும் அரசும், போலீசும் தொடர்ந்து சட்டத்தை மீறி வருகின்றன. ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று யார் கூச்சல் போடுகிறார்களோ அவர்கள்தான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் கொலையாளிகளாக இருக்கின்றனர்.

எனவே, மக்கள் போராளிகள் மீது  கேரள அரசு நடத்திய  அப்பட்டமான படுகொலையை, மாபெரும் மனித உரிமை மீறலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாவோயிஸ்டுகளைக் கொலை செய்த தண்டர்போல்ட் சிறப்புப் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அனைத்து ஜனநாயக சக்திகளும் கேரள சி.பி.எம். அரசைக் கண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறது.

வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
384, கிழக்கு 8-வது தெரு,
கே.கே.நகர், மதுரை-625 020.
தொடர்புக்கு: 98653 48163